ரமலான்: தினசரி நோன்பு திறக்கையில் பேரீச்சம்பழத்தை முதலில் உண்பது ஏன் சிறந்தது?

ரமலான், நோன்பு, பேரீச்சம்பழம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆரோக்கியத்திற்குத் தேவையான பல அம்சங்களைப் பூர்த்தி செய்ய பேரீச்சம்பழம் உண்மையிலேயே சிறந்த உணவு
    • எழுதியவர், கேட் போவி
    • பதவி, க்ளோபல் ஹெல்த்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகெங்கிலும் உள்ள பல கோடி இஸ்லாமியர்கள் இந்த ரமலான் மாதத்தில் சூரியன் மறையும் போது ஒரு பொதுவான விஷயத்தைச் செய்வார்கள். அது பேரீச்சம்பழத்தை உண்டு நோன்பு திறப்பதாகும்.

ஒரு மாதம் முழுவதும் நோன்பு, பிரார்த்தனை மற்றும் ஆன்மிக சிந்தனைகளில் ஈடுபடும் இந்த காலத்தில், ஆரோக்கியமான இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை எதையும் உண்ணாமல் அல்லது பருகாமல் இருப்பார்கள்.

இது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றைப் பின்பற்றுவதாகும்.

நோன்பு திறப்பதற்குப் பேரீச்சம்பழங்கள் நபிகள் நாயகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் இந்த பழத்தில் உள்ள நன்மைகளும், நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைவதற்குக் காரணமாகிறது.

'தனித்துவமான' ஊட்டச்சத்து நன்மைகள்

பேரீச்சம்பழங்களின் ஊட்டச்சத்து அமைப்பு, நீண்ட நேரம் நோன்பு இருந்த பிறகு உண்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவாக அவற்றை மாற்றுகிறது.

"நீங்கள் நோன்பு திறக்கும்போது, உங்கள் உடல் குளுக்கோஸை உற்பத்தி செய்ய முயற்சிக்கும். ஏனெனில் அதுதான் உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கான ஆதாரமாகும்" என்று பிரிட்டனைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஷெஹ்னாஸ் பஷீர் கூறுகிறார். இவரும் ரமலான் நோன்பு கடைபிடிக்கிறார்.

பேரீச்சம்பழத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, மற்ற உணவுகளை விட மிக விரைவாக உங்கள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகிறது. மற்ற உணவுகளை உடல் உடைத்து ஆற்றலாக மாற்ற அதிக நேரம் எடுக்கும்.

"பேரீச்சம்பழங்கள் மிகவும் தனித்துவமானவை, ஏனெனில் அவற்றில் எளிய சர்க்கரைகள் உள்ளன, அதே சமயம் அவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளன" என்கிறார் பஷீர்.

ஏனென்றால், பேரீச்சம்பழம் நாள் முழுவதும் ஆற்றலை மெதுவாக வெளியிடுகிறது. நீண்ட நேரம் சாப்பிட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது.

இவற்றில் வைட்டமின் பி6, ஏ, கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது குறுகிய காலத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற உதவுகிறது.

நீர்ச்சத்துடன் இருத்தல்

உலர்ந்த பழங்களாக இருப்பினும், பேரீச்சம்பழங்கள் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கவும் உதவும்.

அவற்றில் இயற்கையாகவே பொட்டாசியம் எனும் எலக்ட்ரோலைட் உள்ளது. இது தண்ணீருக்கு ஒரு காந்தம் போல செயல்பட்டு, திரவத்தை உடலின் செல்களுக்குள் இழுக்க உதவுகிறது.

"பலர் பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரைச் சேர்த்து நோன்பு திறப்பார்கள், இது ஆற்றல் மற்றும் நீர்ச்சத்திற்கு மிகவும் சிறந்தது" என்று கூறும் பஷீர், "பெரும்பாலும் அதையும் தாண்டி கூடுதலாக எலக்ட்ரோலைட்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை" என்றும் கூறுகிறார்.

ரமலான், நோன்பு, பேரீச்சம்பழம்

பட மூலாதாரம், Shehnaz Bashir

படக்குறிப்பு, இஃப்தாரில் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க பேரீச்சம்பழம் உதவும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பஷீர்

அதிகமாக உண்ணுதல்

சிலர் ரமலான் காலத்தில் உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் இஃப்தார் என்று அழைக்கப்படும் மாலை உணவின் போது நீங்கள் அதிகமாக சாப்பிட்டால், நோன்பு இருப்பது உங்கள் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும்.

பாரம்பரியமாக, இஸ்லாமியர்கள் இஃப்தார் உணவை உண்ணத் தொடங்குவதற்கு முன்பாக ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பேரீச்சம்பழங்களை உண்டு, அதன் பிறகு உடனடியாக மாலை நேரத் தொழுகையை முடிப்பார்கள்.

உடல் நார்ச்சத்துள்ள பேரீச்சம்பழங்களைச் செரிக்கத் தொடங்கும்போது, அதிகமாக உண்ண வேண்டும் என்ற உந்துதல் குறையக்கூடும்.

"உடலில் ஏதோ உணவு சேர்ந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்வதற்கும், செரிமான செயல்முறை தொடங்குவதற்கும் இது உங்கள் உடலுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று பஷீர் கூறுகிறார்.

ரமலான், நோன்பு, பேரீச்சம்பழம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேரீச்சம்பழம் சாப்பிடுவது ரமலானின் போது உணவை ஜீரணிக்க மற்றும் செயலாக்க உங்கள் உடலுக்கு உதவும்

செரிமானம்

மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்றவை நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்களிடையே காணப்படும் பொதுவான பிரச்னைகளாகும். ஏனென்றால், நாள் முழுவதும் அவ்வப்போது உண்பதும் பருகுவதும் வழக்கமாக குடல் இயக்கத்தைத் தூண்ட உதவுகிறது. நீண்ட நேர நோன்பின் போது இது இல்லாததே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.

பேரீச்சம்பழங்கள் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும், இது குடல்கள் வழியாக மலம் எளிதாக நகர உதவுகிறது.

ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து அவசியம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

"சில நேரங்களில் ரமலான் காலத்தில்... நாம் எளிய கார்போஹைட்ரேட்டுகளை விரும்பக்கூடும், ஆனால் நாம் முன்கூட்டியே உணவுத் திட்டமிடல் மற்றும் தயாரிப்புகளைச் செய்திருந்தால், நமது உணவில் நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய முடியும்" என்று பஷீர் கூறுகிறார்.

உங்கள் உணவில் பருப்புகள் மற்றும் விதைகளைத் தூவுவது, அதிகமான நார்ச்சத்தை உட்கொள்வதற்கு மற்றொரு எளிய வழியாகும்.

பேரீச்சம்பழங்களை உண்ண பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

ரமலான் தவிர, மத காரணங்களுக்காக அன்றி ஆரோக்கியத்திற்காகக் கடைபிடிக்கப்படும் 'இரண்டு உணவுக்கு நடுவே அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல்' (intermittent fasting) எனும் முறையும் தற்போது பிரபலமடைந்துள்ளது.

"இது நாம் ரமலானில் நோன்பு இருக்கும் முறைக்கு கிட்டத்தட்ட சமமானது" என்று பஷீர் கூறுகிறார்.

உங்களுக்குப் பேரீச்சம்பழம் பிடிக்கவில்லை என்றால், அவற்றில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

"அவை அனைத்தும் வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டவை. சில மெல்லக்கூடியவை, சில மிகவும் மென்மையானவை, சிலவற்றிற்கு தடிமனான தோல் இருக்கும், சிலவற்றிற்கு மெல்லிய தோல் இருக்கும்" என்று பஷீர் விளக்குகிறார்.

அதுவும் பலனளிக்கவில்லை என்றால், அவற்றை அரைத்து ஸ்மூதியாக (Smoothie) குடியுங்கள்.

"பேரீச்சம்பழம் மற்றும் பாலை ஒன்றாகச் சேர்த்து, சிறிது தயிர் மற்றும் பருப்புகளுடன் கலந்து, அரைத்துக் குடிப்பது ஒரு மாற்று வழியாகும்" என்று கூறிய பஷீர்,

"ஆரோக்கியத்திற்குத் தேவையான பல அம்சங்களைப் பூர்த்தி செய்ய இது உண்மையிலேயே சிறந்த உணவு" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு