"பழம் நழுவி பாலில்" - திமுகவுடன் கூட்டணி பற்றி பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன?

திமுக, தேமுதிக, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

பட மூலாதாரம், @mkstalin/X

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 19) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திமுக- தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், " 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அக்கட்சி தலைமை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை எழுப்பிய நிலையில், திமுகவுடனான கூட்டணியை தேமுதிக இன்று உறுதி செய்துள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன?

திமுக, தேமுதிக, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

பட மூலாதாரம், @mkstalin/X

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் முதலமைச்சரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "முதல்முறையாக தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இன்று முதலமைச்சரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்துவிட்டோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்" எனக் கூறினார்.

'இந்தக் கூட்டணி 2016இல் அமைந்திருக்க வேண்டியது. பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி அப்போது கூறியிருந்தார், அது இப்போது நிகழ்ந்திருக்கிறது' என அவர் கூறினார்.

தேமுதிக நிர்வாகிகளும் திமுக கூட்டணியை விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த், "இந்தக் கூட்டணியில் தேமுதிக எத்தனை இடத்தில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது, ஒரு குழு அமைக்கப்பட்டு, அது இரண்டு கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பிறகு, முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்றும் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முதலமைச்சர் கூறியது என்ன?

திமுக- தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதி மீது மாறாத அன்பு கொண்டவர் என விஜயகாந்த்தை குறிப்பிட்டுள்ளார். "எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

தேமுதிகவை "தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்" என தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

'கேப்டனின் ஆன்மா மன்னிக்காது'- பாஜக விமர்சனம்

திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேமுதிக இணைந்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் தள பக்கத்தின் பதிவில், "தன் வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக."

" திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது" என்று பாஜக தெரிவித்துள்ளது.

திமுக, தேமுதிக, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
படக்குறிப்பு, திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா விஜயகாந்த்

வைகோ கூறியது என்ன?

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது குறித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "திமுக கூட்டணிக்கு தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஏற்கனவே வலுவாக இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, இன்னும் வலுப்பெற்றுள்ளது" என்று கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என நான் முன்னரே கூறியிருந்த நிலையில், இப்போது அந்த வெற்றி இன்னும் உறுதியாகியுள்ளது. இந்தக் கூட்டணியைப் பார்த்து அதிமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

தேமுதிகவின் தேர்தல் வரலாறு

திமுக, தேமுதிக, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

பட மூலாதாரம், X/Premalatha Vijayakanth

  • 2005 செப்டம்பர் மாதம் மதுரையில் பிரமாண்ட மாநாட்டில் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த்
  • 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளை பெற்றது. விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
  • 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றது தேமுதிக.
  • 2011-இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது.
  • 2016-இல் மக்கள் நலக் கூட்டணியில் 2.6% வாக்குகளை தேமுதிக பெற்றது.
  • 2021-இல் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து 0.4% வாக்குகளை தேமுதிக பெற்றது.
  • 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 2.6% வாக்குகளை பெற்றிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு