'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்

தான்யா நாதன்

பட மூலாதாரம், Thanya Nathan

படக்குறிப்பு, 24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார்.
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்."

24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே ஆண்டில் கேரள நீதித்துறை சேவை தேர்வெழுதி, அதில் மாற்றுத்திறனாளிகள் போட்டியாளர்களுக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், கேரளாவில் சிவில் நீதிபதியாகும் (இளநிலை பிரிவு - Junior division) முதல் முழு பார்வை மாற்றுத்திறன் கொண்ட நபராக தான்யா உள்ளார்.

"நான் நீதிபதியாவது என்பது சாத்தியமில்லாத, கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் (பார்வையற்றவர்கள்) தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2025ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் பார்வையற்றவர்கள் நீதிபதி தேர்வெழுத அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு தான் என் திருப்புமுனை." என்கிறார் தான்யா நாதன்.

உத்வேகம் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு

2025ம் ஆண்டு மார்ச் மாதம் பார்வையற்ற நபர்களும் நீதிபதியாகலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை சேவைகள் தேர்வில் இருந்த விதிமுறைகளை ரத்து செய்து, நீதிபதிகள் ஜேபி பர்டிவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

மத்திய பிரதேச நீதித்துறை தேர்வு விதிமுறை 6(ஏ)-வின்படி, நீதித்துறை நியமன நடவடிக்கைகளில் பார்வையற்றோர் பங்குபெறுவது தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதாக லைவ் லா இணைய தளம் கூறுகிறது. இதன்மூலம், நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

"மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது. இதனை உறுதியான நடவடிக்கை மூலம் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்." என உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதன்பின் நேர்காணல் என மூன்று அடுக்கு தேர்வு முறைகளை கொண்ட கடினமான செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது சிவில் நீதிபதி தேர்வு முறை. இந்த தேர்வில் தான்யா அவ்வளவு எளிதில் வெற்றி பெறவில்லை.

"படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பது சவாலாக இருந்தது. சட்டம் போன்ற துறைகளில் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி புத்தகங்களாகவோ எங்களுக்கு கிடைப்பதில்லை. தேர்வுக்கு தயாராவதில் இதுதான் எனக்கு பிரச்னையாக இருந்தது." என கூறுகிறார் தான்யா நாதன்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது." என கூறியிருந்தது உச்ச நீதிமன்றம்

பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தன.

எனவே, பழைய சட்டங்கள் குறித்த குறிப்புகள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பது தனக்கு சவாலாக இருந்ததாக தான்யா குறிப்பிடுகிறார்.

படிப்பதில் சிரமங்கள்

"எனக்கு தேவையான குறிப்புகளை மற்றவர்களை போன்று நான் உடனேயே படித்துவிட முடியாது. முதலில் குறிப்புகளை டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி வடிவமாகவோ மாற்றிதான் படிக்க வேண்டும். என்னுடைய செல்போனில் எழுத்துகளை ஒலி வடிவில் மாற்றித்தரும் செயலியையே நான் அதிகம் சார்ந்திருக்கிறேன். இவையெல்லாம் அதிக நேரம் எடுக்கும் செயல்முறை. நீங்கள் தேர்வை எழுத வேண்டும் என நினைத்தால் இந்த வழிமுறைகளை செய்துதான் ஆக வேண்டும், ஏனெனில் அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி."

அவரின் தாய் பபிதா - தந்தை ஜெகந்நாதன் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவருடைய மூத்த சகோதரியும் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

தான்யா சோர்ந்துபோகும் நாட்களில், "பரவாயில்லை, இதுவும் சரியாகிவிடும்," என்றே தன்னுடைய பெற்றோர் கூறுவார்கள் என்கிறார்.

தானும் அத்தகைய சமயங்களில் சிறிது காலம் அமைதியாக இருந்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சிப்பேன் என்கிறார் தான்யா.

பள்ளி, கல்லூரி நாட்களில் எவ்வித கேலியையோ அல்லது பெரிய புறக்கணிப்புகளையோ தான் சந்தித்ததில்லை என்கிறார் அவர். ஏழாம் வகுப்பு வரை கண்ணூரின் தர்மசாலாவில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்தார், பின்னர் 12ம் வகுப்பு வரை அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியில் படித்தார். பின்பு, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்று, 2024ம் ஆண்டில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார்.

தான்யா நாதன்

பட மூலாதாரம், Thanya Nathan

"நீதித்துறையை தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சட்ட ரீதியான அறிவு நிச்சயமாக ஒரு பலம். விவாதம் நடத்துவதோ அல்லது குரலை உயர்த்துவதோ இத்துறைக்கு முக்கியம் அல்ல. உங்களின் கருத்துகளை தெளிவாக சொல்வதுதான் முக்கியம் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. விளிம்புநிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு சட்ட அறிவு நிச்சயம் வேண்டும். உங்களின் உரிமைகளை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் எந்தவித தாக்குதலுக்கு ஆளாகும்போதும் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்."

சிறப்புப் பள்ளியில் படித்தது முக்கிய காலகட்டம் என்று கூறும் அவர், அங்குதான் பிரெய்லியில் படிப்பது உள்ளிட்ட மற்ற சமூக திறன்களை கற்றுக்கொண்டதாக கூறினார்.

"என்னுடைய சிறுவயது எல்லோரை போலவேதான் இருந்தது, ஒரு வித்தியாசம் எனக்கு பார்வை ரீதியான சவால் இருந்ததுதான். என்னைப் போன்றவர்கள் இந்த உலகத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும். அதற்கு என் குடும்பம், நண்பர்கள், என்னுடைய சீனியர் சுனில் குமார் போன்றோர் எனக்கு உறுதுணையாக இருந்துவருகின்றனர். என் சீனியர் சுனில் குமார் எனக்கு தந்தை போன்றவர். ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லித் தருவார்."

தான்யாவின் மூத்த வழக்கறிஞர் சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆரம்பத்தில் அவர் எப்படி பணியாற்றுவார் என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால், ஒரு வாரத்திற்குள்ளேயே தான்யா தன் திறமையை வெளிப்படுத்தினார். தான்யாவின் வாதங்களை நீதிபதிகள் அடிக்கடி பாராட்டுவார்கள். ஒரு வழக்கை தாக்கல் செய்வது, வாதிடுவது என எல்லா பணிகளையும் தனியாக பார்ப்பார்." என்றார்.

தான்யா நீதிமன்றத்தில் தனக்கென உதவியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எனினும், தனக்காக கிளார்க் ஒருவரை நியமித்துள்ளார், அவர் தான்யாவுக்காக தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளில் உதவுகிறார்.

நீதித்துறையில் சவால்கள்

பாகுபாட்டுடன் அணுகுபவர்களையோ அல்லது அவர்களின் கருத்துகளையோ தான்யா நாதன் பொருட்படுத்துவதில்லை.

"நான் எல்எல்பி படிப்பை படிக்க முடியுமா என சிலர் கேட்பார்கள். என்னால் வழக்கறிஞராக வேலை பார்க்க முடியுமா என கேள்வி கேட்பார்கள். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை."

பிரெய்லி புத்தகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரெய்லி புத்தகம் (சித்தரிப்புப் படம்)

நீதித்துறையில் பார்வை சவால் கொண்டவராக அவருக்கான வாய்ப்புகள் எப்படி இருந்தன?

"நிச்சயமாக சமவாய்ப்பு என்பது இல்லை. ஆனால், சிலவற்றை செயல்படுத்துவதன் மூலம் இதனை மாற்ற முடியும். குறிப்பாக, கேரளாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்." என்கிறார் தான்யா.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கண்ணூரில் உள்ள தலிபரம்பா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்தார் தான்யா. எனவே, அவர் இந்த தேர்வுக்காக தனியே பயிற்சி பெறவில்லை. வழக்கறிஞராக பயிற்சி பெறுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இன்னும் ஓராண்டு காலம் அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டும்.

"வழக்கறிஞராக பணியை தொடங்கியபோது என் மனதில் நிறைய நிச்சயமற்ற விஷயங்கள் இருந்தன. எனக்கு வேலை செய்வதற்கான சௌகரியமான சூழல் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் கால்பதித்த உடனேயே மறைந்துவிட்டது. முதல் நாள் நீதிமன்றம் சென்றபோது நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். சிவில் வழக்கில்தான் வாதாடினேன். என்னுடைய வாதத்தை நீதிபதி பாராட்டினார். மற்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கமளித்தனர். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டனர். நான் எப்போதெல்லாம் வாதிடுகிறேனோ அப்போதெல்லாம் நீதிபதிகள் என்னை மனதார பாராட்டினர். அந்த ஊக்கம் தான் தொடர்ந்து என்னை முன்னேறச் செய்தது." என கூறுகிறார் தான்யா.

பார்வை மாற்றுத்திறன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

என்ன மாற வேண்டும்?

பார்வை சவால் உட்பட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நீதிமன்றங்கள் அணுகக்கூடிய விதத்தில் இருக்கின்றதா என கேட்டதற்கு, "நீதிமன்றங்களில் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கின்றன. எங்களின் ஊன்றுகோல் உதவியுடன் நாங்கள் நீதிமன்றங்களின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். ஆனால், உடலியல் ரீதியான சவால்களை கொண்டிருப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் முழுவதும் அணுகக் கூடியதாக இல்லை. மாடிப்படிகள் அவர்களுக்கு தடைகளாக இருக்கின்றன, மேலும் சில இடங்களில் சாய்வு நடைபாதை (ramp) இருப்பதில்லை. இவையெல்லாம் மாற வேண்டும்." என கூறினார்.

தான்யாவுக்கு வழக்குகள் தொடர்பாக மலையாள மொழியில் உள்ள பழைய ஆவணங்கள் பிரெய்லி அல்லது டிஜிட்டல் வடிவில் இல்லாததால், அவரால் அவற்றை அணுகுவதில் சிரமங்கள் இருப்பதாக கூறுகிறார் வழக்கறிஞர் சுனில் குமார். எனவே, அவற்றை டிஜிட்டல்மயப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விஷயங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் தான் சமவாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் தான்யா வலியுறுத்துகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்க்ரைப் உதவி மூலம் தனி அறையில் தேர்வு எழுதியுள்ளார் தான்யா. மாற்றுத்திறன் உடையவர்கள் இத்தகைய தேர்வெழுதுவதற்கான தற்போதைய நடைமுறைகள் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"ஸ்க்ரைப் நியமித்தல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக சமீப காலங்களில் உச்ச நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளன." என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"நம்முடைய இலக்கை அடைவதற்கு தொடர்ந்து கடினமாக உழைக்கும்போது அதற்கு பலன் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் தயங்கக்கூடாது. உச்ச நீதிமன்றம் நமக்கான வழியை திறந்துவிட்டுள்ளது, இனி, நாம்தான் நீதித்துறைக்குள் நுழைவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்."

கடந்த 2009ம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி கிராமத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் கொண்ட டி.டி. சக்கரவர்த்தி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 4 வயதில் உடல்நலக் குறைபாட்டால் பார்வையை இழந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

அதேபோன்று, 2018ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த பிரம்மானந்த சர்மா என்பவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தன்னுடைய 22வது வயதில் கிளைகோமா நோயால் பார்வையை இழந்தவர் என ஊடக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், முழு பார்வை மாற்றுத்திறன் கொண்டவரான தான்யா, இளம் வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு