செல்ல நாய் நக்கியதால் இவரது இரு கை, கால்களையும் அகற்றும் நிலை வந்ததா? மருத்துவர் விளக்கம்

- எழுதியவர், ஜோஷ் சாண்டிஃபோர்டு, வுல்வர்ஹாம்ப்டன்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில வாசகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய படங்கள் உள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த மஞ்சித் சங்கா மருத்துவமனையில் 32 வாரங்கள் கழித்த பிறகு, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்து, வீடு திரும்பியுள்ளார்.
56 வயதான அவர் உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என மருத்துவர்கள் நினைத்த போதிலும், அவர் சில தினங்களுக்கு முன்பு பர்மிங்ஹாமில் உள்ள மோஸ்லி ஹால் வார்டு 9-ல் இருந்து வீடு திரும்பினார். வுல்வர்ஹாம்ப்டன்/ஸ்டாஃபோர்ட்ஷையர் எல்லையில் உள்ள பென்னில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒரு சிறிய வெட்டு அல்லது சிராய்ப்பின் மீது அவரது நாய் நக்கியது போன்ற ஒரு சாதாரண விஷயம் அவரது செப்சிஸுக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
அவர் குணமடைந்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கும் நிலையில், செப்சிஸ் "யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்" என்று அவர் நம்புவதால், இப்போது மற்றவர்களுக்கு அதன் ஆபத்து குறித்து எச்சரிக்க விரும்புகிறார்.
"இந்த அனுபவத்தை விளக்குவது கடினம்," என்று அவர் கூறினார். "குறுகிய காலத்தில் உங்கள் கால்களையும் கைகளையும் இழப்பது என்பது மிகப் பெரிய விஷயம்."
"இது மிகவும் தீவிரமானது மற்றும் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது."

செப்சிஸ் என்பது ஒரு அரிய, ஆனால் தீவிரமான மருத்துவ நிலை. நோய் மற்றும் தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், உடலின் சொந்த திசுக்கள் மற்றும் உறுப்புகளையே தாக்கத் தொடங்கும்போது இது நிகழ்கிறது.
இது உயிருக்கு ஆபத்தானது மற்றும் இதைக் கண்டறிவது கடினம் என்று தேசிய சுகாதார சேவை (NHS) கூறுகிறது. அதே சமயம், பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 செப்சிஸ் தொடர்பான இறப்புகள் ஏற்படுவதாக யுகே செப்சிஸ் டிரஸ்ட் கூறுகிறது.
பெரியவர்களில், அறிகுறிகளில் தெளிவற்ற பேச்சு, தீவிர நடுக்கம் அல்லது தசை வலி, கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் தோல் நிறமாற்றம் அல்லது புள்ளிகளுடன் காணப்படுதல் ஆகியவை அடங்கும். ஆனால் இவை மட்டுமே அறிகுறிகள் அல்ல.

பட மூலாதாரம், Kam Sangha
தனது உடல்நலக் குறைவு ஏற்படும் முன் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்து வந்த மஞ்சித் சங்கா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் உடல்நிலை சரியில்லாமல் வீட்டுக்குத் திரும்பினார்.
அடுத்த நாள் காலையில், அவர் நினைவு இழந்த நிலையில் இருந்தார். அவரது கைகளும் கால்களும் பனிக்கட்டி போல் குளிர்ந்து போயிருந்தன, அவரது உதடுகள் ஊதா நிறமாக மாறியிருந்தன மற்றும் அவர் சுவாசிக்க சிரமப்பட்டார்.
பாதிக்கப்பட்டவருக்கு " மனம் தெளிவின்றி இருக்கும்," என்று அவரது கணவர் காம் சங்கா கூறினார். "24 மணி நேரத்துக்குள் இது எப்படி நடக்கும் என்று நீங்கள் யோசிப்பீர்கள்?" என்று அதன் தீவிரத்தை அவர் விளக்குகிறார்.
மேலும் தொடர்ந்த அவர், "ஒரு சனிக்கிழமை அவர் நாயுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார், ஞாயிறு வேலைக்குச் சென்றார், திங்கள் இரவு அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்." என்று கூறினார்.

வுல்வர்ஹாம்ப்டனில் உள்ள நியூ கிராஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது மஞ்சித் சங்காவின் இதயம் ஆறு முறை நின்றது.
பின்னர் அண்டை ஊரான டட்லியில் உள்ள ரசல்ஸ் ஹால் மருத்துவமனையில் இருந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், நோயின் பரவல் காரணமாக அவரது முழங்காலுக்குக் கீழே இரு கால்களையும், அதேபோல் இரு கைகளையும் அகற்ற வேண்டியிருந்தது.
முன்னாள் மருந்தக ஊழியரான இவர் தனது மண்ணீரலையும் இழந்தார், நிமோனியாவுடன் போராடினார் மற்றும் பித்தப்பைக் கற்களும் உருவானது. இதற்கு மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
"என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் விளக்கினார். "முதல் ஒரு மாதம் எனக்கு எதுவும் நினைவில் இல்லை." என்கிறார் மஞ்சித்.

பட மூலாதாரம், Kam Sangha
ஸ்க்ரூஃபிக்ஸ் நிறுவனத்தில் விநியோக ஊழியராகப் பணிபுரியும் 60 வயதான காம் சங்கா, தனது மனைவிக்கு ஆதரவாக ஏழு மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை, மேலும் அவர் தனது மனைவியை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.
"அவர் மிகவும் வலிமையானவர்," என்று அவர் மேலும் கூறினார்.
"ஒவ்வொரு நாளும் 'அவர் இன்று போய்விடுவார்' என்பது போலவே இருந்தது, ஆனால் அவர் கடந்து வந்த விஷயங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் நாங்கள் நினைத்தது தவறு என்று அவர் நிரூபித்தார்."என்கிறார் காம் சங்கா.
இந்தத் தம்பதியினர் தங்களது 37-வது திருமண ஆண்டு விழாவையும், கிறிஸ்துமஸ் சமயத்தில் வந்த மஞ்சித் சங்காவின் பிறந்தநாளையும் மருத்துவமனையிலேயே கழித்தனர்.

பட மூலாதாரம், Kam Sangha
ரோபோடிக் கைகள் உட்பட மேம்பட்ட செயற்கை உறுப்புகளுக்காக இந்தத் தம்பதியினர் இப்போது நிதி திரட்டி வருகின்றனர், இதற்குப் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகும் என்று அவர்கள் கூறினர்.
இதுவரை அவர்கள் GoFundMe இணையப்பக்கம் மற்றும் ஸ்க்ரூஃபிக்ஸ் மூலம் நிதி திரட்டியதன் மூலம் 22,000 பவுண்டுகள் திரட்டியுள்ளனர். மஞ்சித் சங்கா தனது மருந்தகப் பணியுடன் வார இறுதி ஷிப்டுகளில் ஸ்க்ரூஃபிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார்.
தன் முன்னால் ஒரு கடினமான பாதை இருப்பதை அவர் அறிந்திருந்தாலும், தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தீர்மானமாக இருப்பதாக அவர் கூறினார்.
"நான் நடக்க விரும்புகிறேன்," என கூறும் மஞ்சித் . "நான் எனது செயற்கை உறுப்புகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன்." என்கிறார்.
"நான் நாற்காலியிலும் படுக்கையிலும் போதுமான அளவு அமர்ந்திருந்து விட்டேன். இப்போது நடப்பதற்கான நேரம் வந்துவிட்டது." என்கிறார் மஞ்சித்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












