'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, திருமயம் தாலுகாவில் குவாரி கற்களை ஏற்றிச் செல்லும் லாரி

"திருமயம் தாலுகாவில் உள்ள துலையானூரில் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். ஆனால், நான் கொடுத்த மனுவை கசியவிட்டுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமையன்று குவாரிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்."

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இவ்வாறு பேட்டி கொடுத்திருந்தார்.

அவர் கூறிய அதே வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) வாகனம் மோதி அவர் உயிரிழந்தார். தொடக்கத்தில் விபத்தாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை முடிவில் 'திட்டமிட்ட கொலை' என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் குவாரி உரிமையாளர்கள் இருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

ஜெகபர் அலி இறந்து ஏறக்குறைய ஓராண்டு கடந்துவிட்டது. அவரது குடும்பத்தினரின் நிலை என்ன? சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக ஜெகபர் அலி நடத்திய போராட்டத்திற்குத் தீர்வு கிடைத்ததா? உண்மையை அறிய களத்திற்குச் சென்றது பிபிசி தமிழ்.

புதுக்கோட்டை நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் திருமயம் தாலுகா அமைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன.

திருமயம் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான ஜெகபர் அலி, இதே பகுதியில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக அறியப்பட்ட இவர், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். அது தவிர, சமூக சேவைப் பணிகளில் தீவிரம் காட்டி வந்துள்ளார்.

"திருமயம் தாலுகாவில் அரசுப் புறம்போக்கு நிலங்கள் மற்றும் கண்மாய்களுக்கு அருகில் சிலர் குவாரிகளை நடத்தி வந்தனர். அவை சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவதை ஜெகபர் அலி கண்டறிந்தார்" என்கிறார் அவரது மனைவி மரியம்.

குவாரிகளில் கற்களைப் பெயர்த்தெடுப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் பெரும்பாலான வீட்டுச் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளதாகக் கூறும் மரியம், "வெடி பாதிப்புகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அவர் போராட்டம் நடத்தினார். இதனால் ஒரு குவாரியின் செயல்பாட்டை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்" எனக் கூறுகிறார்.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, கிராமத்திலிருந்து வெளியேறிவிட்டதாக ஜெகபர் அலியின் மனைவி மரியம் கூறுகிறார்.

'மிரட்டல்களை எதிர்கொண்டோம்'

மேற்கொண்டு பேசிய மரியம், "இதனால் பல்வேறு மிரட்டல்களை எனது கணவர் எதிர்கொண்டார். குவாரி அதிபர்களால் ஆபத்து வரலாம் என அவரிடம் கூறினேன். 'அடுத்து வரும் தலைமுறை வீடு கட்டினாலும் இதே விரிசல் விழும். அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது' என அவர் பதில் அளித்தார்" எனக் கூறினார்.

குவாரிகளில் கற்களைப் பெயர்த்து எடுப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் கதவு, ஜன்னல்கள் ஆடுவது, குவாரிகளுக்குள் ஆடு, மாடுகள் விழுந்து இறப்பது, விவசாயம், நீர்நிலைகள் பாதிக்கப்படுவது, முறையற்ற கனரக வாகனங்களால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவது ஆகியவை தொடர்பாக அதிகாரிகளிடம் ஜெகபர் அலி புகார் மனுக்களை கொடுத்து வந்துள்ளார்.

அந்தப் புகார் மனுக்களையும் சட்டவிரோத குவாரிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பிபிசி தமிழிடம் அவரது மனைவி மரியம் பகிர்ந்தார்.

"பூமிக்குள் குறிப்பிட்ட அளவு கற்களை எடுக்க வேண்டும். ஆனால், அளவுக்கு மீறி எடுப்பதை ஆதாரங்களுடன் புகாராக அவர் கொடுத்தார். இது சில குவாரி உரிமையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது" என்கிறார் மரியம்.

குறிப்பாக, திருமயம் தாலுகாவில் உள்ள துலையானூர், லெம்பலக்குடி, பில்லமங்களம் உள்ளிட்ட இடங்களில் குவாரிகளை நடத்துவதற்கு அரசு அனுமதி பெற்ற குவாரிகள், அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் குறித்த பட்டியலை ஜெகபர் அலி சேகரித்து வைத்ததாகவும் மரியம் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் சட்டவிரோத குவாரிகளின் செயல்பாடு தொடர்பாக புகார் மனு ஒன்றை ஜெகபர் அலி கொடுத்துள்ளார்.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, ஜெகபர் அலியின் மரணத்துக்கு காரணமாக குற்றம் சுமத்தப்படும் கல் குவாரி

'எனது உயிருக்கு ஆபத்து'

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துலையானூரில் சட்டவிரோத குவாரிகள் ஏராளமாகச் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு நிறுவனம் (பெயரைக் குறிப்பிட்டு) சுமார் 70 ஆயிரம் டாரஸ் லாரிகளில் கொண்டு செல்லும் அளவுக்கு சக்கை கற்களைப் பதுக்கி வைத்துள்ளது" எனக் கூறினார்.

சக்கை கல் (Crushed Stone) என்பது பாறைகளை வெடிவைத்து தகர்த்த பிறகு கிடைக்கும் கற்களைத் தரம் வாரியாக பிரித்து வைப்பதை இவ்வாறு கூறுகின்றனர்.

"இது சட்டப்படி தவறு என்பதால் கனிமவளத் துறை, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன்" என செய்தியாளர்களிடம் ஜெகபர் அலி தெரிவித்தார்.

ஆனால், தான் கொடுத்த மனுவின் விவரங்கள் தாசில்தார் மூலமாக கசிந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார். "இதனால் பிரச்னை வரும் என்பதால் பதுக்கி வைத்துள்ள சக்கை கற்களை இரவும் பகலும் குவாரிக்குள் கொட்டி வருகின்றனர்" எனக் கூறினார்.

"இதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டால், பத்து நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். இனி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை" எனக் கூறிய ஜெகபர் அலி, "வரும் வெள்ளிக்கிழமையன்று மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.

அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஜெகபர் அலி குறிப்பிட்டார். போராட்டம் நடத்துவதாகக் கூறிய அதே நாளில் விபத்து ஒன்றில் அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, ஜெகபர் அலி நடத்திவந்த ஹாலோபிளாக் நிறுவனம்

'சரக்கு வாகனம் மூலம் இடித்தனர்'

"மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்துவிட்டு வந்த நாளில் இருந்தே அவர் சற்று சோகமாக இருந்தார். இதன் பிறகு எச்சரிக்கையாக இருக்குமாறு அவரது நண்பர்கள் எச்சரித்தனர்" என்கிறார் அவரின் மனைவி மரியம்.

கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதியன்று தனது ஹாலோபிளாக் கம்பெனிக்கு ஜெகபர் அலி சென்றுள்ளார். மதியம் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு சுமார் 2.15 மணியளவில் தனது நிறுவனத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

"அது கிராமம் என்பதால் பெரிதாக வாகனப் போக்குவரத்து இல்லாத பகுதியாக உள்ளது. அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது திட்டமிட்டு இடித்துள்ளனர். அவர் கீழே விழுந்த பிறகு மீண்டும் வாகனத்தை இயக்கி வந்து அவர் மீது ஏற்றியுள்ளனர்" என்றார் மரியம்.

இதையே திருமயம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவிலும் அவர் தெரிவித்துள்ளார். "அந்த இடத்தில் விபத்து ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. வெங்களூரில் உள்ள குவாரி உரிமையாளர்கள்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என முடிவு செய்தோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் விபத்தாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கில் அப்பகுதி மக்களின் போராட்டம் காரணமாகக் கொலை வழக்காக மாற்றி காவல் துறை விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஜெகபர் அலி கொலை வழக்கில் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, அவரது மகன் தினேஷ், வாகன ஓட்டுநர் காசி, முருகானந்தம் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். குவாரி உரிமையாளர்கள் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, ஜெகபர் அலியின் குடும்பத்தினர் தற்போது வருவாய் இன்றி தவிப்பதாகக் கூறுகின்றனர்.

இடம் மாறிய ஜெகபர் அலி குடும்பம்

இந்த விவகாரத்திற்குப் பிறகு வெங்களூர் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டை நகரத்திற்கு அருகில் ஜெகபர் அலியின் குடும்பம் இடம்பெயர்ந்துவிட்டது.

"எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் அவருக்கே இப்படியொரு நிலை ஏற்பட்டதால், எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. ஏதாவது நேர்ந்தால் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் வேறு இடத்தில் குடியேறிவிட்டோம்" என மரியம் தெரிவித்தார்.

ஜெகபர் அலி-மரியம் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். "மூத்த பெண் நீட் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார். இரண்டாவது மகள் 11ஆம் வகுப்பும் மகன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்" என்கிறார் அவர்.

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடியதற்காகத் தனது கணவர் கொல்லப்பட்டாலும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்து எந்த உதவியும் தங்களுக்கு வந்து சேரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

"அமெச்சூர் கபடி கழகத்தில் மாவட்ட செயலாளராக ஜெகபர் அலி இருந்தார். நாங்கள் வறுமையில் தவிப்பதைப் பார்த்து மாதந்தோறும் கபடி கழக நிர்வாகிகள்தான் வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்கின்றனர். அரசாங்கம் எங்களைக் காப்பாற்றவில்லை. கபடிதான் காப்பாற்றி வருகிறது" என மரியம் குறிப்பிட்டார்.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, ஜனவரி 17, 2025 வாகனம் மோதி உயிரிழந்தார் ஜெகபர் அலி (சம்பவம் நடந்த இடம்)

தற்போதைய நிலை என்ன?

இதையடுத்து, ஜெகபர் அலியின் மரணத்திற்குக் காரணமாக காவல் துறையால் அடையாளப்படுத்தப்பட்ட கல் குவாரிக்கு பிபிசி தமிழ் சென்றது. அப்பகுதியில் ஏராளமான கல் குவியல்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்தவித செயல்பாடும் இல்லாமல் குவாரி பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.

குவாரி உரிமையாளர்கள் சிறையில் இருப்பதால் இதுதொடர்பாக அவர்கள் தரப்பில் விளக்கம் பெற முடியவில்லை. இதன்பிறகு திருமயம் தாலுகாவுக்கு உள்பட்ட சில கிராமங்களுக்கு பிபிசி தமிழ் சென்றது.

லெம்பலக்குடி உள்படப் பல கிராமங்களில் இரவு சுமார் எட்டு மணியளவில் ஏராளமான லாரிகள் கடந்து செல்வதைப் பார்க்க முடிந்தது.

ஒவ்வொரு கிராமத்திலும் எதாவது ஒரு பகுதியில் கல் குவாரிகள் இயங்கிக் கொண்டிருந்தன. "ஜெகபர் அலி போராடியதற்கான நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை" எனக் கூறுகிறார், பாப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி முருகன்.

அவரது கூற்றுப்படி, திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன, தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்வதால் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

"லாரிகளில் எம் சாண்ட், பி சாண்ட் மண்ணை ஏற்றிச் செல்வதால் அதன் தூசிகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விவசாயமும் நீர்நிலைகளும் பாதிப்படைந்துள்ளன. மக்கள் எந்த வகையிலும் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என அவர் கூறினார்.

"கல் குவாரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான கிரஷர்கள், வாகனங்கள் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும்" எனக் கூறும் பாண்டி முருகன், "காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கனரக வாகனங்களை இயக்குமாறு அரசு கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இயக்கப்படுவதில்லை" எனத் தெரிவித்தார்.

"சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் மரணத்திற்குப் பிறகு கல் குவாரிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு யாரும் முன்வருவதில்லை. போதிய பாதுகாப்பு கிடைக்காததுதான் பிரதான காரணம்" என்கிறார் பாண்டி முருகன்.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, வெடிச்சத்தத்தால் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுவதாகக் கூறுகிறார் விவசாயி செம்பன்.

'அதிக வெடிச் சத்தம், சுவர்களில் விரிசல்'

ஜெகபர் அலியின் மரணத்திற்குப் பிறகு முறையற்ற குவாரிகளின் செயல்பாடு அதிகரித்துவிட்டதாகக் கூறும் அவர், "பாறைகளைப் பெயர்த்தெடுக்க வெடிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த வெடிச் சத்தத்தால் வீடுகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்கிறார்.

பாறைகளைப் பெயர்த்தெடுக்கும்போது சுமார் 10 முதல் 20 நொடிகளுக்குக் கடுமையான வெடிச்சத்தம் கேட்பதால் நோய்வாய்ப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த பாப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செம்பன், "வெடி வைப்பதால் கற்கள் வந்து விழுகின்றன. எப்போது எங்கு விழும் எனத் தெரியாது. வெடிச் சத்தத்தால் வரும் புகை நெடியால் சிரமம் ஏற்படுகிறது" என்கிறார்.

இவரது வீட்டுக்கு மிக அருகிலேயே கல் குவாரி ஒன்று செயல்படுகிறது. "எந்த நேரத்தில் வெடி வைப்பார்கள் என்றே தெரியாது. ஆட்களைத் தூக்கி வீசும் அளவுக்கு வெடிச்சத்தம் கேட்கும். இதனால் ஏற்படும் அதிர்வால் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.

'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருமயம் தொகுதி எம்.எல்.ஏவும் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை (இயற்கை வளத்துறை) அமைச்சருமான ரகுபதியிடம் இதுதொடர்பாக விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் சென்றது.

"தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருவதால் தற்போது பேச இயலாது" என அவரது உதவியாளர் தெரிவித்தார்.

'அனைத்து குவாரிகளிலும் ஆய்வு' - கனிம வளத்துறை

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் விஜயராகவனை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.

அவர், "ஜெகபர் அலியின் மரணத்திற்குப் பிறகு புகார்கள் எதுவும் வரவில்லை. அவரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் கிரஷர் மூடப்பட்டுவிட்டது. அங்கு எந்தவித செயல்பாடுகளும் இல்லை" என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு கல் குவாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் விஜயராகவன், "குவாரிகளில் கனிமவளத் துறையும் வருவாய்த் துறையும் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறது" என்றார்.

திருமயம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருவதாகக் கூறிய அவர், "விதிமுறைகளை மீறி குவாரிகள் செயல்படுவது தெரிந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

வெடிச்சத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாகக் கேட்டபோது, "பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

அனைத்து குவாரிகளையும் ஆறு மாதங்களில் ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய விஜயராகவன், "அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்தார்.

குவாரிகளை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக கனிம வளத்துறை தரப்பில் கூறப்பட்டாலும் சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் போராட்டத்திற்கு காரணமான அப்பகுதி மக்கள் விரும்பும் தீர்வு கிடைத்ததா எனப் பார்த்தால் அது கேள்விக்குறியாகவே உள்ளதைக் களத்தில் பார்க்க முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு