பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2025 விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2025-ஆம் ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார்.

"முதலில் எனக்கு இந்த விருது வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி. 2025 மிகவும் சிறப்பான ஆண்டு, இந்தியாவின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடிந்தததில் எனக்கு மகிழ்ச்சி," எனத் தெரிவித்தார் ஸ்மிருதி மந்தனா.

ஸ்மிருதி மந்தனாவின் தாயார் ஸ்மிதா மந்தனா பேசுகையில், "சிறு வயதிலிருந்தே அவள் மிகவும் நிதானமாக இருப்பாள். எப்போதும் கிரிக்கெட்டின் மீதே கவனம் செலுத்துவாள். அவள் உலக கோப்பையை வென்றபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெண் என்னவாக இருக்க விரும்புகிறாளோ அவ்வாறே இருக்கட்டும் என அனைத்து அம்மாக்களிடம் கூற விரும்புகிறேன். உங்களின் மகள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறாளோ அதைச் செய்ய அனுமதியுங்கள்." எனக் கூறினார்.

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா

இந்த விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர்.

இந்த விருது 2025-இல் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு நாட்டில் அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.

இது தவிர வேறு பல விருதுகளும் வழங்கப்பட்டன.

ரூபா ஜா
படக்குறிப்பு, ரூபா ஜா

'குரல் எழுப்புவதற்குமான இடம் இருக்க வேண்டும்' - ரூபா ஜா

விருது நிகழ்வின்போது கலெக்டிவ் நியூஸ்ரூமின் தலைமைச் செயல் அதிகாரி ரூபா ஜா கூறுகையில், "இன்று உலகம் அசௌகரியமான உண்மைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிகாரமிக்க ஆண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்க மறுத்து இந்த அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலில் இத்தகைய மேடைகள் ஏன் அவசியம் என நமக்கு நினைவூட்டப்படுகிறது."

"பெண்கள் குறைத்து மதிப்பிடப்படாமல் கொண்டாடப்படுவதற்கும் அமைதியாக்கப்படாமல் உரக்க குரல் எழுப்புவதற்குமான இடம் இருக்க வேண்டும். அதற்காகதான் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது. இந்தக் கதைகளை ஆழம் மற்றும் மரியாதை உடன் நாம் தொடர்ந்து கூறுவோம்." என்றார்.

பிபிசி

வளர்ந்துவரும் விளையாட்டு வீராங்கனை விருது

சதுரங்க வீராங்கனையான திவ்யா தேஷ்முக் 2025-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் வளர்ந்து வரும் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"உங்களுக்கு எட்டும் தூரத்துக்கு அப்பாலும் கனவு காணுங்கள். இந்தியாவின் நான்கு பெண்கள் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவர் என்பது சிறப்பான உணர்வு. இது மேலும் பல இளம் பெண் வீராங்கனை விளையாட்டை கையில் எடுக்க ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்." என திவ்யா தேஷ்முக் தெரிவித்தார்.

அஞ்சலி பக்வத்
படக்குறிப்பு, அஞ்சலி பகவத்

வாழ்நாள் சாதனையாளர் விருது

2025-ஆம் ஆண்டிற்கான பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதை துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அஞ்சலி பகவத் பெற்றுள்ளார். இவர் மத்திய கேல் ரத்னா விருதும் வென்றுள்ளார்.

விருது தொடர்பாக பேசிய அவர், "துப்பாக்கி சுடுதல் தான் எனது வாழ்க்கை, நான் களத்தில் இல்லையென்றால் ஏதோ ஒன்று இல்லாமல் இருப்பது போலத் தோன்றும். அர்ப்பணிப்பும் உறுதிப்பாடும் எனக்கு உதவியது. பல பெண்களுக்கான தடையை என்னால் உடைக்க முடிந்தது. இந்திய துப்பாக்கி சுடுதல் ஒரு உச்சத்தை எட்டியுள்ளது, கடின உழைப்புக்கு எந்த மாற்றும் கிடையாது.

"இந்தக் விருதை பெறுவது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. 40 ஆண்டுகளாக இந்த இலக்கை துரத்தி வருகிறேன். இன்று நிதானித்து எனது பயணத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வைக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டைத் தொடர்வது என முடிவெடுப்பது மிகவும் கடினமானதாகவும் செலவு மிகுந்ததாகவும் உள்ளது. இந்தக் விருது என்னுடையது மட்டுமல்ல. எனக்காகவும் எனது அணியினருக்காகவும் நான் இதைச் செய்ய முடியும் என நம்பிக்கை வைத்த எனது பயிற்சியாளர்களுக்குமானது. நாங்கள் அடுத்த தலைமுறைக்கான வழியை ஏற்படுத்தினோம். கடின உழைப்புக்கு எந்த மாற்றும் இல்லையென்றாலும் இந்த செயல்முறையை ரசியுங்கள்." என்றார்.

2025 ஆம் ஆண்டிற்கான பிபிசி பாரா-விளையாட்டு வீராங்கனை விருதை பாரா தடகள வீராங்கனை பிரீத்தி பால் பெற்றுள்ளார்.

"எல்லாவற்றுடனும் சவால் வரவே செய்யும். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், தோல்வி கூட நிறைய கற்றுக் கொடுக்கும். பிபிசிக்கு மிகவும் நன்றி. இந்த விருது என்னுடையது அல்ல, ஒட்டுமொத்த அணியினுடையது." எனத் தெரிவித்தார் பிரீத்தி பால்.

பிபிசியின் ஸ்டார் பெர்ஃபார்மர் விருது

இந்த ஆண்டின் பிபிசியின் ஸ்டார் பெர்ஃபார்மராக தேர்வானவர்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் இடம்பெற்றுள்ளது.

2025-இல் ஸ்டார் பெர்ஃபார்மராக தேர்வானவர்கள்

  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
  • இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணி
  • இந்திய மகளிர் கபடி அணி
  • சிம்ரன் ஷர்மா
  • ஏக்தா பயான்
  • தீப்தி ஜீவான்ஜி
  • ப்ரீத்தி பால்
இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணி

உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கௌர், "இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சார்பாக நான் பிபிசிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம். களத்தில் எங்களின் முயற்சியை அங்கீகரித்ததற்கு நன்றி." எனத் தெரிவித்தார்.

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில், "பிபிசி மற்றும் மொத்த குழுவிற்கும் என நன்றி. 2025 மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த அற்புதமான பெண்கள் குழு விருது பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்." என்றார்.

பிபிசியின் ஸ்டார் பெர்ஃபார்மர் விருது

ராஜிவ் சுக்லா கூறியது என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சார்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா விருதைப் பெற்றுக் கொண்டார்.

"நமது மகளிர் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், பிசிசிஐ-யில் நாங்கள் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவித்து வருகிறோம். அவர்களின் ஊதியம் நிகராக உள்ளது. அவர்களின் போட்டிகளையும் அதிகரித்துள்ளோம். மகளிர் கிரிக்கெட்டைப் பார்க்கத் தொடங்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். நாம் அதைச் செய்யத் தொடங்கும்போது, மகளிர் கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக இருக்கும்." என ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

லியாண்டர் பேஸ் கூறியது என்ன?

"இன்றைய இயக்கம், பெண்கள் எவ்வாறு முன்னணியில் நின்று வழிநடத்த முடியும் என்பதைப் பற்றியது. எனது டென்னிஸ் விளையாட்டு பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் சம வாய்ப்பு இருக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது. விளையாட்டின் ஒட்டுமொத்த இயக்கமும் சமூகத்தை ஒன்றாக கொண்டு வர வேண்டும் என்பதே," எனத் தெரிவித்தார் லியாண்டர் பேஸ்.

பாணி தேவி

2025ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'Changemaker' விருது வென்றவர்கள் பட்டியல்

  • இந்திய மகளிர் ஐஸ் ஹாக்கி அணி
  • ராஜ்பீர் கெளர்
  • சவிதா புனியா
  • பாணி தேவி
 பிபிசி

பிபிசி தலைமை செயல் அதிகாரி கூறியது என்ன?

கடந்த ஆண்டு இந்திய விளையாட்டு வீராங்கனைகளுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது என நிகழ்ச்சியில் பேசிய பிபிசி செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் தலைமை செயல் அதிகாரி ஜோனதன் முன்ரோ கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. பார்வையற்றோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியுடன் அவர்களும் இணைந்தனர்."

"இந்த ஆண்டு விருதுகளின் மையக்கரு அனைவரும் விளையாட முடியும் என்பதே. உடல், சமூகம் மற்றும் கலாசாரம் சார்ந்த தடைகளைக் கடந்து விளையாட்டுத் துறையில் சாதிக்கும் பெண்களின் மீது கவனம் செலுத்துகிறது." என்றார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, ISWOTY கருப்பொருளை விளக்கிய ஜோனதன் முன்ரோ

இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

இந்திய விளையாட்டு வீராங்கனை விருது என்பது இந்திய விளையாட்டில் பெண்களின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான பிபிசி இந்திய மொழிகளின் முன்னெடுப்பு ஆகும்.

பாரம்பரியமாகவே, விளையாட்டு வீரர்களுக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் நிலையில், இந்திய விளையாட்டு வீராங்கனைகள் மீதான வெளிச்சத்தை அதிகரிக்க இந்த தளம் முயல்கிறது. அங்கீகாரத்திற்கு அப்பால், இந்திய விளையாட்டு வீராங்கனை விருது விளையாட்டில் பாலின பிரதிநிதித்துவம் மற்றும் சமத்துவம் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை வளர்க்கிறது.

இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது (ISWOTY) 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

2020-ஆம் ஆண்டுக்கான விருதை உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பி வென்றார். 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றார். 2024-ஆம் ஆண்டுக்கான விருதை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வென்றார்.

தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை பிரீதம் சிவாச் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் முந்தைய ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்றுள்ளனர்.

டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர் பிபிசி இந்தியாவின் பாரா மகளிர் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றுள்ளனர்.

கிரிக்கெட் வீராங்கனை ஷாஃபாலி வர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் வில் வித்தை வீராங்கனை ஷீதல் தேவி ஆகியோர் பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு