You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மீண்டும் மூடப்பட்ட ஹோர்மூஸ் - தாக்கப்படும் கப்பல்கள்
ஹோர்மூஸ் நீரிணையை இரான் மீண்டும் மூடிவிட்டதாக இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சில கப்பல்கள் தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹோர்மூஸ் விஷயத்தில் தங்களை மிரட்டி பணியவைக்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இரான் ஹோர்மூஸை மீண்டும் மூட என்ன காரணம்? திடீரென நடந்தது என்ன? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
இரான் அரசு ஊடக செய்தியின்படி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக இரான் தெரிவித்துள்ளது.
படைகள் அப்பகுதியைக் கட்டுப்படுத்தும் வகையில் நீரிணை அதன் முந்தைய நிலைக்கு திரும்பும் என குறிப்பிட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அரசு ஊடகம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அந்த அறிக்கை இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை கடல்கொள்ளை என கூறுகிறது.
முன்னதாக, போர் நிறுத்தம் அமலில் இருக்கும் வரை அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படுவதாக இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை கூறினார்.
எனினும், இரான் முடிவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் என கூறினார். பின்னர், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிஃபாப், முற்றுகை தொடரும் பட்சத்தில் ஹோர்முஸ் தொடர்ந்து திறந்திருக்காது என கூறினார்.
இந்த நிலையில், அரசு ஊடகம் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் இணையதளமான MarineTraffic-ன் சமீபத்திய தரவுகள் படி,
பல கப்பல்கள் தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
Minerva Evropi என்ற பெயருடைய ஒரு கப்பல், புறப்பட்ட இடத்தையே நோக்கித் திரும்பும் வகையில் திசைமாறியிருப்பதாகத் தெரிகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் ஓர் எண்ணெய்க் கப்பல், இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த இரண்டு ஆயுத படகுகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரிட்டனின் Maritime Trade Operations தெரிவித்துள்ளது.
அந்தத் தகவலின்படி, இந்தச் சம்பவம் ஓமனுக்கு வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. மேலும், அந்தக் கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீரிணையை கடக்க முயன்ற போது குறைந்தது இரண்டு வர்த்தகக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக மூன்று வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுவிட்டதாக இரானிய கடற்படையிடமிருந்து சில வர்த்தகக் கப்பல்களுக்கு வானொலிச் செய்தி வந்ததாகவும் கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. எந்தக் கப்பல்களும் அனுமதிக்கப்படாது என எண்ணெய்க் கப்பல்களிடம் இரானிய கடற்படை கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இரான் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பெயரில் எழுத்துப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது. இரான் ஊடகங்கள் அதை செய்தியாக வெளியிட்டுள்ளன. அதில், எதிரிகளை புதிய தோல்வியின் கசப்பை சுவைக்க வைக்க இரானிய கடற்படை தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக எந்த தெளிவுபடுத்தலும் அந்த அறிக்கையில் இல்லை.
மார்ச் தொடக்கத்தில் அதி உயர் தலைவராக பதவியேற்றதிலிருந்து இதுவரை மொஜ்தபா காமனெயி பொதுவெளிக்கு வரவில்லை. அவர் பெயரில் தொடர்ந்து எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மட்டுமே வருகின்றன.
இதற்கிடையே, இரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே 23 கப்பல்களைத் திருப்பி அனுப்பியிருப்பதாக அமெரிக்க Central Command தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க Central Command எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவின்படி, முற்றுகையை அமெரிக்கா இன்னும் அமல்படுத்தி வருகிறது.
மறுபுறம், இரானுக்குள் இணைய முடக்கமும் தொடர்கிறது.
இணைய கண்காணிப்புத் தளமான 'NetBlocks'-ன் தகவலின்படி, இரானில் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட இணைய துண்டிப்பு தற்போது 50-வது நாளை எட்டியுள்ளது.
இது தொடர்பாக NetBlocks எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரான் கடந்த ஏழு வாரங்களாக உலகளாவிய இணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தகைய இணையத் துண்டிப்பு முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இரானில் உள்ள சாதாரணக் குடிமக்கள், இணையத்தை பயன்படுத்த Starlink போன்ற செயற்கைக்கோள் இணையச் சேவையை பயன்படுத்துகின்றனர். இது மிகவும் செலவுமிக்கது. அதேபோல, இரானில் Starlink சேவையைப் பயன்படுத்துவது, இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கக்கூடும். போர் தொடங்கியதிலிருந்து இது தொடர்பாக அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம்வெளியீடு