அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் இரான் தலைநகர் டெஹ்ரானில் 'கருப்பு மழை'

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டெஹ்ரானில் கருப்பு மழை
    • எழுதியவர், மார்க் பாயிண்டிங், அலெக்ஸ் முர்ரே, கேய்லின் டெவ்லின் மற்றும் பார்பரா மெட்ஸ்லர்
    • பதவி, பிபிசி வெரிஃபை
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதல்கள் குடியிருப்புவாசிகளுக்கு தீவிரமான உடல்நல ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், திங்கட்கிழமை டெஹ்ரான் முழுவதும் எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களால் அவற்றிலிருந்து புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பிப்ரவரி 28-ஆம் தேதி இரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து அதன் தலைநகரில் குறைந்தது நான்கு எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாங்கள் உறுதிசெய்திருக்கிறோம்.

நகரின் சில பகுதிகளில் புகை மற்றும் மாசுபாட்டால் சூரியன் மறைக்கப்பட்டதாகவும் தீப்புகையின் கடும் வாசனையை உணர முடிவதாகவும் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். வெளியாகும் சில மாசுபாடுகள் "முன்பு இல்லாத அளவுக்கு" இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இரான் தலைநகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் எண்ணெய் வளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அந்நகரில் சுமார் ஒரு கோடி பேரும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல லட்சக்கணக்கானோரும் வசிக்கின்றனர்.

டெஹ்ரானில் கடந்த சனிக்கிழமை இரவில் வான்வழி தாக்குதல்களுக்கு இலக்கான இரண்டு பெரிய எண்ணெய் கிடங்குகளிலிருந்து தீப்பிழம்பு எழுந்ததை மார்ச் 9-ஆம் தேதி எடுக்கப்பட்டு பிபிசி வெரிஃபையால் ஆய்வு செய்யப்பட்ட சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

இரான் தலைநகரின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள டெஹ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புகை எழுவதை அப்படங்கள் காட்டுகின்றன. சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு பிறகு சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளி, சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இரவு வானில் பெரிய தீப்பிழம்புகள் எழுவதை காட்டுகின்றன.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டெஹ்ரானில் கருப்பு மழை

பட மூலாதாரம், EPA

வார இறுதியில் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்ட இந்த எண்ணெய் கிடங்குகளிலிருந்து மேகமூட்டமும் புகைமூட்டமும் எழுவது, அவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட சேதங்களின் அளவை கண்டறிய இயலவில்லை என்பதையே காட்டுகின்றன.

ஆனால், ஷாஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட படங்கள், அவசரசேவை பணியாளர்கள் எரிந்துபோன எண்ணெய் டேங்கர்கள், கரும்புகை பூசப்பட்ட கட்டடங்கள் மற்றும் எரியும் நெருப்பை ஆய்வு செய்வதை காட்டுகின்றன.

கடந்த மார்ச் 7 அன்று எக்ஸ் தளத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்ட பதிவில், டெஹ்ரானுக்கு அருகே உள்ள "எரிபொருள் கிடங்குகளை" தாக்கியதாக தெரிவித்துள்ளது, அதில் டெஹ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தைக் காட்டும் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அடையாளம் கண்ட மூன்று இடங்களுடன் இந்த எரிபொருள் கிடங்கின் இருப்பிட தகவல்களையும் பிபிசி வெரிஃபை இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அலுவலகத்துக்கு வழங்கி அவற்றின் கருத்தைக் கேட்டது. அதற்கு அமெரிக்க பாதுகாப்பு அலுவலகம் பதில் தெரிவிக்காத நிலையில், "அந்த தளங்களில் நாங்கள் தாக்குதல்கள் நடத்தவில்லை" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து தெளிவுபடுத்துமாறு நாங்கள் கேட்டுள்ளோம்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களால், குறிப்பிடத்தக்க அளவு காற்று மாசுபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது, ஏனெனில் அவற்றில் பெரும் அளவில் ரசாயனங்கள் உள்ளன.

எண்ணெய் முழுமையாக எரியாதபோது, போதுமான ஆக்சிஜன் இல்லாத போது, கார்பன் டையாக்சைடு மற்றும் நீருக்கு பதிலாக கார்பன் மோனாக்சைடு மற்றும் புகைக்கரித் துகள்கள் வெளியேற்றப்படலாம்.

சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளை வெளியேற்றலாம், அவை மழைநீரில் கரையும்போது அமிலங்களை உருவாக்கலாம். அதேபோன்று, மற்ற நச்சு ஹைட்ரோகார்பன்களான உலோக கலவைகள் மற்றும் எண்ணெய் துளிகளும் வெளியாகலாம்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டெஹ்ரானில் கருப்பு மழை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காற்று மாசுபாடு எவ்வளவு மோசமானது?

டெஹ்ரானை சேர்ந்த 20 வயதுகளில் உள்ள பெண் ஒருவர், எண்ணெய் வளங்கள் மீதான தாக்குதல்களால் உருவாகும் "புகையின் நாற்றத்தை" தன்னால் உணர முடிவதாக கூறுகிறார்.

"என்னால் சூரியனை பார்க்க முடியவில்லை. அது மிகவும் மோசமான புகையாக உள்ளது. இன்னும் அது இருக்கிறது," என சனிக்கிழமை பிபிசி பாரசீக சேவையிடம் அவர் தெரிவித்தார்.

கள அடிப்படையிலான அளவீடுகள் இல்லாததால், காற்று மாசுபாட்டை துல்லியமாக அளவிடுவது சவாலானது. காற்று, மேகங்கள் மற்றும் மற்ற காரணிகளால் செயற்கைக்கோள் தரவுகளை விளக்குவதும் கடினமானது.

சேதப்படுத்தப்பட்ட எண்ணெய் தளங்களிலிருந்து வெளியாவதாக கருதப்படும் ரசாயனங்களின் கலவைகளை வைத்துப் பார்க்கும்போது காற்று மாசுபாடு ஆபத்தானது மற்றும் தீவிரமானது என்பதில் விஞ்ஞானிகளுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பெய்ஜிங் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் காணப்பட்ட புகையை விட இது மிகவும் வித்தியாசமானது என கருதுகின்றனர்.

"இரானில் நடப்பவை நிச்சயமாக முன்னெப்போதும் நடந்திராதது, ஏனெனில் அவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்கள் மற்றும் அவற்றின் மீது ஏவுகணைகளை செலுத்தியதன் மூலம் வெளியாகிறது," என ரீடிங் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிஞர் முனைவர் அக்‌ஷய் டியோரஸ் தெரிவித்தார்.

பெரும்பாலான மோதல்கள் தூசு மற்றும் துகள் மாசுபாட்டை ஏற்படுத்தும் - ஆனால், இந்த விவகாரத்தில் பலவித ரசாயனங்களின் கலவை என்பது "நிச்சயம் வழக்கத்திற்கு மாறானது", என அவர் தெரிவித்தார்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் வளிமண்டல வேதியியல் மற்றும் காற்றுத்தர பிரிவின் பேராசிரியராக உள்ள எலோய்ஸ் மராய்ஸ் இதை ஒப்புக்கொள்கிறார்.

"சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் வெடிப்பது போன்ற மிகமிக கடுமையான தொழில்துறை விபத்துகளின் போதுதான் இத்தகைய மாசுபாடு ஏற்படும்" என அவர் தெரிவித்தார்.

'கருப்பு மழை' என்பது என்ன? இது எதனால் ஏற்படுகிறது?

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாங்கள் "கருப்பு மழையை" எதிர்கொண்டதாக டெஹ்ரான் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மாசு காரணிகளுடன் கலந்து கருப்பாக பொழியும் மாசுபட்ட மழைப்பொழிவை குறிக்கும் வழக்கமான வார்த்தையே 'கருப்பு மழை'.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், டெஹ்ரானில் கருப்பு மழை

பட மூலாதாரம், Getty Images

மழைப்பொழிவின் மூலம் மாசு காரணிகள் காற்றின் மூலம் "அடித்துச் செல்லப்படுவது" வழக்கமானது, ஆனால் கருப்பு மழை என்பது அரிதானது. அதிகளவிலான புகைக்கரித் துகள்கள் மற்றும் மற்ற மாசு காரணிகளின் விளைவே இது என, பிபிசி வெரிஃபையிடம் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

"இதில் மழைத்துளிகள் பஞ்சு அல்லது காந்தம் போன்று செயல்பட்டு, அவை விழும்போது காற்றில் உள்ள அனைத்தையும் சேகரித்து பொழியும், அதனால்தான் குடியிருப்புவாசிகள் அதனை 'கருப்பு மழை' என்ம விவரிக்கின்றனர்," என அக்‌ஷய் டியோரஸ் தெரிவித்தார்.

சில பெரிய துகள்கள் மழையே இல்லாமல் காற்றின் மூலம் அடித்துச் செல்லப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது.

இதன் தாக்கம் என்னவாக இருக்கக்கூடும்?

சுகாதாரத்தின் மீது இந்த மோதல் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் "பெரும் கவலைகளை" வெளிப்படுத்தியுள்ளார்.

எண்ணெய் வளங்களை சேதப்படுத்துவது, "உணவு, தண்ணீர் மற்றும் காற்று மாசுபடுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது - இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நல பிரச்னை உள்ளவர்கள் மீது தீவிரமான சுகாதார தாக்கங்களை உருவாக்கலாம்" என டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்தார்.

"இத்தகைய மிகவும் தீவிரமான துகள்களுக்கு ஆட்படுவது, நுரையீரல்களுக்கு உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்," என லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் தொற்றுநோயியல் துறை பேராசிரியரான அன்னா ஹேன்செல் தெரிவித்தார்.

"ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகும் இது, சுவாச அமைப்பு மற்றும் அதிகரிக்கும் புற்றுநோய் ஆபத்து போன்ற நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம்."

மோதல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் இயக்குநர் டௌக் வெய்ர், "டெஹ்ரானில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு அடர்த்தியான மக்கள்தொகை உள்ள பகுதிகளில் இத்தகைய தாக்குதல்களை முன்பு கண்டதில்லை என்பதுதான்," என குறிப்பிட்டுள்ளார்.

"இந்த எண்ணெய் வயல்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் மிக தொலைவில் உள்ளன. இந்த கருப்பு மழையால் டெஹ்ரானில் உள்ள மக்கள் எண்ணெய் மட்டுமல்லாமல் பலவித மாசுபாடுகளுக்கு ஆட்பட்டுள்ளனர்," என தெரிவித்தார்.

வியாழக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசும் என்றும் பிபிசி வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இது, மாசு காரணிகள் கலைந்து செல்வதற்கும் அடித்துச் செல்வதற்கும் உதவி செய்யும்.

ஆனால், இது மாசு காரணிகளால் ஏற்படும் ஆபத்துகள் மறைந்துவிட்டதாக அர்த்தமில்லை. அவை ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நுழையலாம் அல்லது நிலத்திலேயே தங்கி, அவை உலர்ந்தபின்னர், மீண்டும் காற்றில் பரவலாம்.

கூடுதல் தகவல்கள்: கோன்சே ஹபிபியாஸாத், பால் பிரௌன், ரோல்லோ காலின்ஸ், ஷயன் சர்தரிஸடே, ஃபரிதா எல்சேபாய் மற்றும் டேனியல் வெய்ன்ரைட்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு