நெதன்யாகு மரணமா? 'உயிருடன் இருந்தால்' என்ற இரானின் கூற்றை தொடர்ந்து அவரே வெளியிட்ட வீடியோ

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், @netanyahu

படக்குறிப்பு, மார்ச் 13 அன்று எக்ஸ் தளத்தில் வெளியான பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடியோ செய்திக்கு பிறகு, அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. அந்த வீடியோவில் நெதன்யாகுவிற்கு ஆறு விரல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருந்தால், அவரைப் பின்தொடர்ந்து கொல்வோம்" என்று இரான் புரட்சிகர காவல் படை(ஐஆர்ஜிசி) கூறியுள்ளது. நெதன்யாகுவை 'குழந்தைகளைக் கொல்பவர்' என்று இரான் புரட்சிகர காவல் படை வர்ணித்துள்ளது.

இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ, ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவில் உள்ள இரான் தூதரகம் ஒரு சமூக ஊடகப் பதிவில், "நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது முக்கியமல்ல. மினாபை சேர்ந்த ஒரு சிறுமியின் ஒரு முடி நெதன்யாகுவின் முழு இருப்பை விட அதிக மதிப்புடையது," என்று எழுதியுள்ளது.

இந்த விவகாரத்தில், 'பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருந்தால்' என்று ஐஆர்ஜிசி கூறியுள்ளது ஏன்? பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கூற்று அல்லது வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்வியும் எழுகிறது.

எவ்வாறாயினும், பல செய்திகளின்படி, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் 'நெதன்யாகுவின் மரணம்' குறித்த செய்தியைப் போலிச் செய்தி என்று மறுத்துள்ளது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், @netanyahu

இந்த நிலையில், நெதன்யாகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு காணொளியைப் பதிவிட்டார். அந்த வீடியோவில் அவர் காபி அருந்தியவாறே, தனது இரு கைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கேமராவை நோக்கி அவர் உயர்த்திக் காட்டுகிறார்.

இந்தக் காணொளியில், நெதன்யாகுவின் ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் இருப்பதைக் காண முடிகிறது. இந்தக் கட்டுரையில், அவர் தனது இரு கைகளையும் இவ்வாறு காட்டியதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

ஐஆர்ஜிசி கூறியது என்ன?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகுவை 'குழந்தைகளைக் கொல்பவர்' என்று ஐஆர்ஜிசி விமர்சித்துள்ளது. (கோப்புப் படம்)

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் ஆகியவற்றுக்கு இடையிலான போரின் தொடக்கத்திலேயே, தெற்கு இரான் நகரமான மினாப்பில் உள்ள பெண்கள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் இரான் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் மாணவிகளைத் தவிர, பள்ளி ஊழியர்களும் அடங்குவர்.

இரான் நாட்டில் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்பட்டது. கொல்லப்பட்ட சிறுமிகளின் இறுதிச் சடங்கில் பெருமளவிலான இரான் மக்கள் பங்கேற்றனர்.

இரான் அரசு ஊடக செய்தியின்படி, ஐஆர்ஜிசி ஒரு அறிக்கையில், "சீயோனிசக் குற்றவாளி பிரதமரின் அறியப்படாத முடிவு, மற்றும் அவர் தனது குடும்பத்துடன் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. இது ஒரு நெருக்கடியையும் சீயோனிஸ்டுகளின் தள்ளாடும் நிலையையும் வெளிப்படுத்துகிறது," என்று கூறியுள்ளது.

"குழந்தைகளைக் கொன்ற அந்த குற்றவாளி உயிருடன் இருந்தால், நாங்கள் முழு பலத்துடன் பின்தொடர்ந்து அவரைத் தேடிக் கொல்வோம்," என ஐஆர்ஜிசி மேலும் கூறியது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் பள்ளித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான கூட்டுக் கல்லறையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டன. இந்தப் புகைப்படம் 2026 மார்ச் 3 அன்று மினாபில் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக எடுக்கப்பட்டது.

மரணம் குறித்த தகவல் எப்படி சொல்லப்பட்டது?

நெதன்யாகு கொல்லப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஐஆர்ஜிசி-யின் இந்த மிரட்டல் வந்துள்ளது.

அதேநேரத்தில், இஸ்ரேலில் உள்ள தங்களது இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மூன்று அமெரிக்க தளங்கள் 52-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் ஐஆர்ஜிசி கூறியுள்ளது.

மார்ச் 13 அன்று பெஞ்சமின் நெதன்யாகுவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டது, அதில் அவர் இரான் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தார். சமூக ஊடகங்களில் பல பயனர்கள் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கூறி, நெதன்யாகு இறந்துவிட்டதாக வாதிட்டனர்.

இருப்பினும், துருக்கியின் அரசு செய்தி நிறுவனமான அனடோலுவிடம் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்ற கூற்றைப் போலிச் செய்தி என்று கூறியுள்ளது. நெதன்யாகு முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் தொடர்பான தகவல்கள் குறித்து அமெரிக்காவின் பழமைவாத அரசியல் விமர்சகர் கேண்டிஸ் ஓவன்ஸ், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உடல்நிலை குறித்து ஏதோ ஒன்றை மறைக்க முயற்சி நடக்கிறது," என்று கூறியுள்ளார்.

'அதிகாரிகள் மவுனமாக இருக்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது' என்பது அவரது குற்றச்சாட்டு.

ஓவன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்க அரசு இந்த விஷயத்தை நேரடியாகத் தீர்க்க வேண்டும், ஆனால் அவர்கள் மவுனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உண்மையில் என்ன நடக்கிறது?" என்று பதிவிட்டுள்ளார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், @YairNetanyahu

படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனுடைய சமூக ஊடகச் செயல்பாட்டையும் பயனர்கள் வதந்தியுடன் தொடர்புபடுத்தியுள்ளனர் (சித்தரிப்ப் படம்)

தனது தந்தையும் இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் என பரவிய தகவல்களுக்கு மத்தியில், யாயர் நெதன்யாகுவின் எக்ஸ் கணக்கு பேசுபொருளாகியுள்ளது.

ஆங்கில நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஒரு செய்திப்படி, நெதன்யாகுவின் மகன் யாயர் நெதன்யாகு மற்றும் அவரது எக்ஸ் பக்கம் குறித்துப் பல யூகங்கள் முன்வைக்கப்பட்டன. மார்ச் 9-க்குப் பிறகு அவர் எந்தப் பதிவும் செய்யவில்லை என்றும், அதற்குக் காரணம் 'குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சோகமான நிகழ்வு' என்றும் பல சமூக ஊடகப் பயனர்கள் வாதிட்டனர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, "எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்பாட் ஆன 'க்ரோக்', இந்த அனைத்துத் தகவல்களையும் வதந்திகளையும் தவறு என்று கூறியுள்ளது. நெதன்யாகுவின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்ட வீடியோ எந்த வகையிலும் திருத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது. அதன் கருத்துப்படி, கேமரா கோணம் காரணமாக அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிந்தது வெறும் பார்வைப் பிழை மட்டுமே."

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் தொடர்ந்து இஸ்ரேலியப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆங்கில நாளிதழான 'தி சண்டே கார்டியன்' செய்தியின்படி, நெதன்யாகு தொடர்பான ஒரு செய்தி பின்னர் நீக்கப்பட்டதாகவும், இது இஸ்ரேலியத் தலைவருக்கு ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதோ என்ற யூகங்களை ஏற்படுத்தியதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் தெரிவித்தன.

இதன் ஸ்கிரீன்ஷாட் என சொல்லப்படும் படம் வேகமாகப் பரவத் தொடங்கியதும், இரான் உடனான மோதலில் நெதன்யாகுவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்று பல பயனர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

'தி சண்டே கார்டியன்' படி, "வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பிரேமை (Frame) மிக நுணுக்கமாகப் பார்க்கும்போது, கையின் நிலை, 'மோஷன் பிளர்' (இயக்கத்தால் ஏற்படும் மங்கல்) மற்றும் கேமரா கோணங்கள் காரணமாகச் சில விசித்திரமான காட்சிகள் உருவாகலாம், அதன் காரணமாகவே நெதன்யாகுவிற்கு ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்."

நெதன்யாகு எங்கே?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், நெதன்யாகு மரணமா? ஐஆர்ஜிசி மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிபுணர்களின் கருத்துப்படி, போரின் போது செய்திகளை விரைவாகப் பெற வேண்டும் என்ற அவசரம் பல நேரங்களில் வதந்திகளுக்கு வித்திடுகிறது (கோப்புப் படம்)

புவிசார் அரசியல் மோதல்களின் போது தவறான தகவல்கள் பெரும்பாலும் வேகமாகப் பரவுகின்றன, குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ முன்னேற்றங்கள் குறித்து உடனுக்குடன் செய்திகளைப் பெற மக்கள் முயற்சிக்கும் போது இவ்வாறு நடப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

பயனர்கள் ஒரு தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் அதைப் பகிரும் போது, சமூக ஊடகத் தளங்கள் அத்தகைய தகவல்கள் பரவுவதை மேலும் துரிதப்படுத்துகின்றன.

மறுபுறம், பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்த தகவல்கள் வேகமாகப் பரவினாலும், அவர் மாயமாகிவிட்டார் அல்லது இஸ்ரேலை விட்டு வெளியேறிவிட்டார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

சமூக ஊடகங்களில் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் பொது அறிக்கைகள், இஸ்ரேல் பிரதமர் தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றி வருவதைக் காட்டுகின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு