டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்; இரான் பற்றி விவாதிக்கப்பட்டது என்ன?

இரான், இஸ்ரேல், அமெரிக்கா, டிரம்ப், நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும்
    • எழுதியவர், டேனியல் புஷ்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது, இரான் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகக் கூறினார். இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இரான் மீது தான் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், இரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையிலும் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர்.

இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது மட்டுமின்றி, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களுக்கான அதன் ஆதரவைத் துண்டிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுக்குமாறு நெதன்யாகு டிரம்ப்பை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்குப் பதில் நடவடிக்கையாக தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாக இரான் பரிந்துரைத்துள்ளது, ஆனால் பிற கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

வெள்ளை மாளிகை சந்திப்பிற்கு முன்னதாக, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது நாடு 'அவர்களின் அதிகப்படியான கோரிக்கைகளுக்குப் பணியாது' என்று எச்சரித்தார்.

நெதன்யாகுவின் இந்த பயணம், டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாகும் - இது மற்ற உலகத் தலைவர்களை விட அதிகமாகும்.

இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள்

இரு தலைவர்களும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வழக்கத்திற்கு மாறாக அமைதியான சந்திப்பில் பேசினர். இதில் நெதன்யாகு கேமராக்களின் பார்வையில் படாமல் ஒரு பக்கவாட்டு நுழைவாயில் வழியாக அழைத்து வரப்பட்டார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் அவருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை.

இது தொடர்பாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு "மிகவும் நன்றாக" இருந்தது என்று கூறினார்.

"இரானுடன் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பார்க்க பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தவிர, தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

ஓர் ஒப்பந்தமே தனது "விருப்பம்" என்றும், ஆனால் அப்படி ஒன்றை எட்ட முடியாவிட்டால் "அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் கூறியது என்ன?

பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து தலைவர்கள் விவாதித்ததாகவும், அவர்களது "நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் உறவை" தொடர ஒப்புக்கொண்டதாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிரம்பிற்கு நெருக்கமானவராக இருக்கும் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு இரான் ஒரு இருப்பு ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார், பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறார்.

செவ்வாயன்று வாஷிங்டன் வந்தடைந்த பிறகு, நெதன்யாகு டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரைச் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அவர்கள் இரானுடன் நடத்திய "முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்த சமீபத்திய தகவல்களை" இருவரும் வழங்கியதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் பற்றி டிரம்ப் என்ன கூறினார்?

அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் வேளையில் நெதன்யாகுவின் பயணம் அமைந்துள்ளது. அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் மற்றும் போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்தத் தவறினால் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

செவ்வாயன்று, மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அனுப்புவது குறித்து தான் "யோசித்து" வருவதாக டிரம்ப் கூறினார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட வெகுஜனப் போராட்டங்களுக்கு எதிரான இரான் அரசாங்கத்தின் அடக்குமுறையை நிறுத்துவதற்காக, இரான் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் அச்சுறுத்தியதையடுத்து, கடந்த மாதம் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழு அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டது.

"எங்களிடம் அங்கு சென்று கொண்டிருக்கும் ஒரு கடற்படை உள்ளது, மற்றொன்றும் செல்லக்கூடும்," என்று டிரம்ப் ஆக்ஸியோஸுக்கு (Axios) அளித்த பேட்டியில் கூறினார். "இரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு விரும்புகிறது. ஒரு இராஜதந்திர தீர்வு இன்னும் சாத்தியமே" என்றும் அவர் கூறினார்.

அதேபோல, ஒரு நல்ல ஒப்பந்தம் என்றால் "அணு ஆயுதங்கள் இல்லை, ஏவுகணைகள் இல்லை" என்று பொருள் என டிரம்ப் 'ஃபாக்ஸ் பிசினஸ்' நிறுவனத்திடம் கூறினார்.

இரான், இஸ்ரேல், அமெரிக்கா, டிரம்ப், நெதன்யாகு

பட மூலாதாரம், Iranian Presidency/WANA/Handout via REUTERS

படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "அதிகப்படியான கோரிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம்" என்று எச்சரித்தார்.

இரானின் நிலைப்பாடு

புதனன்று தெஹ்ரானில் இரானின் இஸ்லாமியப் புரட்சியின் 47-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் பேரணியில் பெசெஷ்கியன் ஆற்றிய உரையில், "எங்கள் இரான் ஆக்கிரமிப்புக்கு முன்னால் பணியாது, ஆனால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்ட அண்டை நாடுகளுடன் முழு பலத்துடன் உரையாடலைத் தொடர்கிறோம்" எனக் கூறினார்.

தனது நாடு "அணு ஆயுதங்களைப் பெற முயலவில்லை" என்பதையும் இரான் அதிபர் மீண்டும் வலியுறுத்தினார். "இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் மற்றும் எந்தவொரு சரிபார்ப்புக்கும் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமையை தங்கள் நாடு கொண்டுள்ளது என்று இஸ்ரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

டிரம்புடனான உறவை பயன்படுத்துவாரா நெதன்யாகு?

இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்புக் கவலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு பரந்த அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு, டிரம்புடனான தனது உறவைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்தில் உள்ள தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் அழுத்தத்தில் நெதன்யாகு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இரான் உடனான ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அவசரத்தில், இரானின் ஏவுகணைத் திட்டம் அல்லது சில குழுக்களுக்கான அதன் ஆதரவு அல்லது அதன் அணுசக்தி திட்டத்தின் சில பகுதிகளை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்வார் என்று இஸ்ரேல் கவலைப்படுகிறது," என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு சேவைப் பள்ளியின் பேராசிரியர் டேனியல் பைமன் கூறினார்.

"டிரம்பின் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட முடிவை விட ஒரு ஒப்பந்தத்தையே அதிகம் விரும்புகிறது என்பது இஸ்ரேலின் கவலையாக உள்ளது" என பைமன் கூறுகிறார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 12 நாள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, இரான் தலைவர்கள் இப்போது பலவீனமான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்போது இரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.

"இரான் ஆட்சி இன்று உண்மையிலேயே பலவீனமாக உள்ளது," என்று கடற்படை முதுகலை பள்ளியின் பேராசிரியரும் மத்திய கிழக்கு அரசியல் நிபுணருமான முகமது ஹபீஸ் கூறுகிறார்.

"அமெரிக்காவும் இஸ்ரேலும் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக உணர்கிறார்கள். இரான் பின்தங்கிய நிலையில் உள்ளது, அவர்களால் இந்த அதிகபட்ச கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்." என்று ஹபீஸ் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெரிய மோதலை டிரம்ப் விரும்புவாரா?

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இரான் உடனான ஒபாமா காலத்து அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் மற்றும் இரானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த தடைகளை மீண்டும் அமல்படுத்தினார். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான போருக்கு முன்னதாக ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக கடந்த ஆண்டு நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது.

சமீபத்திய வாரங்களில் கடுமையான உரையாடல்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளால் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்ட முடியாவிட்டால் கூட, இரானுடன் ஒரு நேரடி ராணுவ மோதலைத் தவிர்க்க டிரம்ப் விரும்பலாம் என்று முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தேர்தல் ஆண்டிற்குள் நுழையும் போது இரானுடன் ஒரு பெரிய ராணுவ மோதலை டிரம்ப் விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. இரான் மக்களுக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன்" என்று இராக் மற்றும் துருக்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஜெஃப்ரி கூறினார்.

அடுத்த கட்டத்தில் காஸா ஒப்பந்தம்

காஸாவில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை அமல்படுத்துமாறு டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த பயணமும் அமைந்துள்ளது. புதனன்று, டிரம்பின் 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) உறுப்பினராக கையெழுத்திடுவதற்காக நெதன்யாகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "வரலாற்றில் அதிபர் டிரம்ப்பை விடச் சிறந்த நண்பர் இஸ்ரேலுக்கு இருந்ததில்லை" என்றார்.

"அதிபர் டிரம்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஸா அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், மத்திய கிழக்கில் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் எங்களது கூட்டாளியான இஸ்ரேலுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறினார்.

இஸ்ரேலுக்குள் 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலால் தொடங்கிய இரண்டு ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர, கடந்த அக்டோபரில் இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 71,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரையொருவர் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் செய்ததாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸாவிலிருந்து இஸ்ரேலிய ராணுவப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல் மற்றும் கடலோரப் பகுதியின் புனரமைப்பு ஆகியவற்றைக் கோரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதில் இரு தரப்பினரும் அதிக முன்னேற்றம் அடையவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு