ஐரோப்பிய டி20 அணியை அஸ்வின், டிராவிட் வாங்குவது ஏன்?

ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் டிராவிட் (வலது) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்
    • எழுதியவர், திமோதி ஆபிரகாம்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் ஓர் அணியை வாங்கியுள்ளனர்

ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆறு அணிகள் கொண்ட தொடரில், கிளாஸ்கோவை (Glasgow) மையமாகக் கொண்ட அணியை வாங்குவதற்கு ஓர் இந்திய குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் அஸ்வினும் டிராவிடும் இடம்பெற்றுள்ளதாக பிபிசி ஸ்போர்ட் அறிகிறது.

மேலும், ரோட்டர்டாமை சேர்ந்த நெதர்லாந்தின் இரண்டாவது அணியை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ், ஹென்றி கிளாசன் மற்றும் ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் தலைமையிலான ஒரு முதலீட்டாளர் குழுவிற்கு விற்க ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தயாராகி வருகிறது.

இந்த இரண்டு அணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதம் ஆம்ஸ்டர்டாம், பெல்ஃபாஸ்ட் மற்றும் எடின்பரோ ஆகிய அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்போது டப்ளின் அணி மட்டுமே விற்கப்படாமல் உள்ளது. எனினும், அந்த அணியை வாங்க 'தி ஹண்ட்ரட்' தொடரில் உள்ள குறைந்தது இரண்டு அணிகளின் உரிமையாளர்கள் உட்பட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அஸ்வின் விளையாடுவாரா?

அஸ்வின் இந்தத் தொடரில் முதலீட்டாளராக இணைந்திருப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அவர் ஒரு வீரராகவும் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இது தொடரின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பெரிய பலமாக அமையும்.

39 வயதான அஸ்வின், 2024 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக் தொடர்களில் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக்கில் (BBL) சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அந்தத் தொடரில் விளையாடும் முதல் இந்திய சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெறவிருந்த நேரத்தில், கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பயிற்சியின் போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார்.

அஸ்வின் இந்தியாவுக்காக 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி, ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

டிராவிட்டின் ஸ்காட்லாந்து தொடர்பு

ராகுல் டிராவிட் கிளாஸ்கோ அணியைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கும் ஸ்காட்லாந்து கிரிக்கெட்டிற்கும் உள்ள வரலாற்று ரீதியான தொடர்பு ஒரு முக்கிய காரணமாகும்.

2003-ம் ஆண்டு ஸ்காட்லாந்து அணி உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்றபோது, டிராவிட் அந்த அணிக்காக ஒரு சீசன் விளையாடினார். அப்போது 11 போட்டிகளில் விளையாடி 3 சதங்களுடன் 600 ரன்கள் குவித்தார்.

53 வயதான டிராவிட், நவம்பர் 2021 முதல் ஜூன் 2024 வரை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இந்தியாவுக்காக 164 டெஸ்ட் மற்றும் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சர்வதேச அளவில் 48 சதங்களுடன் சுமார் 25,000 ரன்கள் சேர்த்துள்ளார்.

ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி, ஐபிஎல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பின்னணி

இந்தத் தொடர் அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் 'ரூல்ஸ் ஸ்போர்ட் டெக்' (Rules Sport Tech) என்ற இந்திய நிறுவனம் இதன் இணை உரிமையாளர்களாக உள்ளனர்.

இந்த அணிகள் அனைத்தும் 10 ஆண்டு காலத்திற்கு 15 மில்லியன் டாலர் மதிப்பிற்கு விற்கப்பட்டுள்ளன.

முதல் சீசன் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தின் பாகிஸ்தான் தொடர் இதே காலகட்டத்தில் நடப்பதால், ஹாரி புரூக் போன்ற முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்க முடியாது.

இருப்பினும், 'தி ஹண்ட்ரட்' தொடரில் விளையாடும் மற்ற இங்கிலாந்து வீரர்கள் தடையின்மை சான்றிதழ் பெற்று இதில் விளையாட வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 15-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து தொடங்குகிறது.

இங்கிலாந்து வாரியத்தின் நேரடி ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் இதில் பங்கேற்க விரும்பினால், வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு