புனித தீவில் கிடைத்த கூழாங்கல்லில் பதிந்திருந்த 'சிரிக்கும்' உருவம்

புனிதத் தீவு, புதைபடிவம், நார்தம்பர்லேண்ட்

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

    • எழுதியவர், எஸ்மி ஸ்டாலர்ட்
    • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நார்தம்பர்லேண்டில் உள்ள புனிதத் தீவில் 'பாக்சிங் டே' நடைபயணத்தின்போது 64 வயதான கிறிஸ்டின் கிளார்க் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது.

"ஒரு சிறிய கூழாங்கல் என்னைப் பார்த்து 'புன்னகைப்பது' போல் இருந்தது. அது ஒருவரின் செயற்கைப் பல் வரிசையைப் போலவே இருந்தது" என்றார் அவர்.

அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று, புதைபடிவங்களைக் கண்டறியும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிட்டார். அதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகள் வந்து குவிந்தன. அதன் பிறகு, அது உண்மையில் ஒரு பண்டைய கடல்வாழ் உயிரினத்தின் படிவம்தான் என்பதை மற்றவர்களும் உறுதிப்படுத்தினர்.

கிறிஸ்டின் ஒவ்வோர் ஆண்டும் தனது கணவர் ஜெரார்டுடன் நார்தம்பர்லேண்ட் பகுதிக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அங்குள்ள புனிதத் தீவில் தாங்கள் வழக்கமாக கட்டி'ஸ் பீட்ஸ் (Cuddy's beads) எனப்படும் ஒருவகை மணிகளை தேடிச் செல்வதாக அவர் கூறினார்.

சுமார் 150 பேர் மட்டுமே வசிக்கும் இந்த நிலப்பகுதி, ஒரு நாளைக்கு இரண்டு முறை கடல் நீரால் பிரிக்கப்படுகிறது. இது ஆரம்பக்கால ஆங்கிலேய கிறிஸ்தவத்தின் தொட்டில் எனக் கருதப்படுகிறது.

இந்த மணிகள் உண்மையில் கிரினாய்டு எனப்படும் கடல்வாழ் உயிரினத்தின் தண்டுப் பகுதியின் படிமங்களாகும். பிரிட்டனின் வடக்குப் பகுதியின் பாதுகாவலராகக் கருதப்படும் புனித கத்பெர்ட் (St Cuthbert) நினைவாக இதற்கு இந்தப் பெயர் வந்தது.

"கி.பி 670களில் ஒரு துறவியாக இந்தப் புனிதத் தீவிற்கு வந்த அவர், இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். அவரது நினைவிடத்தைச் சுற்றிப் பல அற்புதங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது," என்று இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பின் கண்காணிப்பாளர் முனைவர் பிரான்சிஸ் மெகின்டோஷ் தெரிவித்தார்.

புனிதத் தீவு, புதைபடிவம்

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, கழுத்தணிகலன் செய்யப் பயன்படுத்தப்பட்ட கிரினாய்டு தண்டின் சிறிய புதைபடிவ பாகங்களை கிறிஸ்டின் தேடிக்கொண்டிருந்தார்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, 1300களில் மக்கள் இந்தச் சிறிய புதைபடிவங்களைக் கண்டெடுத்தனர்.

"ஆனால் அவை என்னவென்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. புனித கத்பெர்ட்தான் இவற்றை உருவாக்குகிறார் என்றும், இது அவரது ஆன்மிக செயல்பாட்டின் ஒரு பகுதி என்றும் மக்கள் நினைத்தனர். இவற்றைச் சேகரித்து வைத்தால், தாங்களும் ஆன்மிகத்தில் மேலும் ஆழமாகச் செல்ல முடியும் என்று அவர்கள் நம்பினர்," என முனைவர் மெகின்டோஷ் கூறினார்.

இந்த மரபு இன்றும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 'பாக்சிங் டே' அன்று, கிளார்க் அந்த மணிகளைத் தேடிக் கொண்டிருந்த போது, கடற்கரையில் இருந்த கூழாங்கற்களுக்கு இடையே முற்றிலும் மாறுபட்ட தோற்றமுடைய புதைபடிவம் ஒன்றைக் கண்டார்.

"இந்தப் புதைபடிவம் என்னைப் பார்த்துப் புன்னகைப்பதைக் கண்டேன். நான் கண்டெடுத்த முதல் செட் பற்கள் இதுதான்," என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

புனிதத் தீவு, புதைபடிவம்

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, இந்த புதைபடிவத்தை வாங்க விருப்பப்படும் பலர் அதை கிறிஸ்டினிடம் கேட்கின்றனர். ஆனால் அவர் அதைத் தானே வைத்துக்கொள்ள விரும்புகிறார்

பிபிசி இந்த புதைபடிவத்தை பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையத்திடம் காட்டி உறுதிப்படுத்தியது. அது ஒரு கிரினாய்டு உயிரினத்தின் பெரிய பகுதி என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் காலத்தில் முதன்முதலில் தோன்றிய கடல்வாழ் உயிரினங்கள் கிரினாய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. பூமியின் பழமையான சிக்கலான உயிரினங்களில் ஒன்றான இதன் சில வகைகள் இன்றும் கடலில் வாழ்கின்றன.

இது கடலின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நெகிழ்வான தண்டுப் பகுதியைக் கொண்டுள்ளது. அந்தத் தண்டின் உச்சியில் உள்ள உடற்பகுதியைச் சுற்றி கிளைகள் போன்ற கரங்கள் அமைந்திருக்கும். இது ஒரு விலங்காக இருந்தாலும், அதன் தோற்றத்தின் காரணமாக அதற்கு "கடல் அல்லிகள்" என்ற செல்லப்பெயர் உண்டு.

"இதன் தண்டு 'ஆசிகல்ஸ்' எனப்படும் சிறிய வட்டுகள் போன்ற அமைப்புகளால் ஆனது. கிறிஸ்டின் கண்டெடுத்திருப்பது, அத்தகைய பல வட்டுகள் ஒன்றாக இணைந்த 'காலம்னல்' எனப்படும் ஒரு பகுதியாகும்," என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் ஜான் ஹென்னிசென் விளக்கினார்.

புனிதத் தீவு, புதைபடிவம்

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC News

படக்குறிப்பு, பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையத்தின்படி, ஒரு முழுமையான கிரினாய்டு புதைபடிவம் என்பது ஒப்பீட்டளவில் அரிதான கண்டுபிடிப்பாகும், பெரும்பாலும் இது தண்டிலிருந்து கண்டுபிடிக்கப்படும் ஒற்றை எலும்புக்கூடு ஆகும்

அந்தத் தண்டுப் பகுதி நீளவாக்கில் பிளவுபட்டு, வளைந்த நிலையில் இருந்ததால், அது மிகவும் அசாதாரணமான "வாய் போன்ற" வடிவத்தை ஒத்திருந்தது.

"இது அநேகமாக ஆல்ஸ்டன் எனப்படும் பாறை அமைப்பில் இருந்து வந்திருக்கலாம். இது ஒரு வகை கருமை நிறச் சுண்ணாம்புப் பாறை, இது சுமார் 35 கோடி ஆண்டுகள் பழமையானது," என்று முனைவர் ஹென்னிசென் கூறினார்.

கிரினாய்டுகள் என்பவை எக்கினோடெர்மேட்டா என்ற தொகுதியைச் சேர்ந்தவை. கடல் முள்ளெலிகள், கடல் வெள்ளரிகள் ஆகியவையும் இதே பிரிவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான ஒரு கிரினாய்டு புதைபடிவத்தைக் கண்டெடுப்பது மிகவும் அரிது. பொதுவாக அதன் தண்டுப் பகுதியில் உள்ள தனித்தனி வட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன; இவை 'புனித கத்பெர்ட் மணிகள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நடுவில் துளையுள்ள 'போலோ மின்ட்' மிட்டாய்களைப் போலவே காட்சியளிக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதிகளில் பொதுவாகக் கண்டெடுக்கப்படும் புதைபடிவங்களில் கிரினாய்டு புதைபடிவங்கள் மிகவும் முக்கியமானவை. அங்கு இத்தகைய படிவங்களைக் கண்டெடுப்பது மிகவும் இயல்பானது என்று முனைவர் ஹென்னிசென் கூறுகிறார்.

"இதன் உயிரியல் வடிவம் பொதுவாகச் சுற்றியுள்ள பாறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். நிறங்கள் மாறுபடலாம் அல்லது அதன் கலவை வேறாக இருக்கலாம். சுற்றியுள்ள மட்ஸ்டோன் பாறைகளைப் போலன்றி, இதில் மிகத் தெளிவான மற்றும் நேர்த்தியான கோடுகளைக் காண முடியும்," என்று அவர் இது குறித்து விளக்கினார்.

கிறிஸ்டின் கண்டெடுத்த புதைபடிவத்தை விலைக்கு வாங்கப் பலர் முன்வந்துள்ளனர், ஆனால் தற்போதைக்கு அதைத் தன்னிடமே வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். "இது பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு