தவறாகிப் போன பாகிஸ்தான் முடிவு: இஷான் கிஷன் '2.0' அநாயச ஆட்டத்தால் இந்தியா முழு ஆதிக்கம்

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை, இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
    • பதவி, முன்னாள் கிரிக்கெட் வீரர், தமிழ்நாடு
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் ஓரளவாவது சவால் கொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், 61 ரன் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.

டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ததே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிகம் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் சற்று ஈரப்பதம் கொண்ட இதுபோன்ற ஆடுகளத்தில் அப்படியொரு முடிவு எடுத்ததைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தியா டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் தான் தேர்வு செய்திருக்கும். டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் கூட முதல் இரு போட்டிகளைப் போல் இந்தப் போட்டியிலும் முதலில் பேட்டிங் தான் செய்திருப்போம் என்று கூறியிருந்தார். அப்படியிருக்கும்போது இது பாகிஸ்தான் எடுத்த ஒரு டிஃபன்ஸிவான முடிவு போலவே தெரிகிறது.

அந்த இடத்திலேயே அவர்கள் ஒரு அடி பின்தங்கியதாக நான் உணர்ந்தேன். ஏனெனில், இதுபோன்ற ஆடுகளங்களில் 160 - 170 ரன்கள் அடித்தாலே அதை சேஸ் செய்வது மிகவும் கடினம். இந்தியா அதை சிறப்பாகச் செய்தது.

இந்த உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ்

இஷான் கிஷன் தன்னுடைய திறமையை இந்தப் போட்டியில் நன்றாகக் காட்டினார். டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்றே நான் சொல்வேன். கொஞ்சம் முன்கூட்டியே சொல்வதாகக்கூட இருக்கலாம்... ஆனால், என்னைப் பொருத்தவரை இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்.

முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா அவுட் ஆனார். அது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு. ஆனால், அதன் ரன்ரேட்டை நல்லபடியாக தொடரச் செய்யும் வகையில் இஷான் ஆடினார். 27 பந்துகளில் ஒரு மிகச் சிறந்த அரை சதத்தை அவர் பதிவு செய்தார். 40 பந்துகளில் 77 ரன்கள். சதம் இல்லை தான். ஆனாலும், இது ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்று நான் கூறக் காரணம், இந்தப் போட்டியினுடைய, அவருடைய சூழல்.

இஷான் கிஷன் பெரும் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குள் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆடும் நெருக்கடி நிறைந்த ஆட்டம். அதுவும் பேட்டிங் செய்வதற்குக் கடினமான ஒரு மைதானத்தில், ஆடுகளத்தில். அதிலும் முதல் ஓவரிலேயே நட்சத்திர பேட்டர் டக் அவுட். அப்படியொரு சூழ்நிலையிலிருந்து இப்படியொரு இன்னிங்ஸ் வரும்போதுதான், அவர் எப்படிப்பட்ட பேட்டர் என்பதைக் காட்டும்.

இஷான் கிஷனுடைய இந்த இன்னிங்ஸ் மட்டுமல்ல, அவருடைய சமீபத்திய கம்பேக்குமே அசாத்தியமானது. கடந்த சில ஆண்டுகளாக அவர் இந்திய அணிக்கு விளையாடவில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர் இந்தியாவுக்காக இரட்டைச் சதமே அடித்திருக்கிறார். ஆனால், சமீபத்தில் அவருக்கு சரியாகப் போகவில்லை.

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை, இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறப்பான பேட்டிங்குக்காக இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது வென்றார்

அதேசமயம் இப்படியொரு இடைவெளி ஏற்படும்போது, அது உங்களை இன்னும் சிறந்த வீரராக மாற்றும். இப்போது அவர் ஆடுவதைப் பார்க்கும்போது இஷான் கிஷன் 2.0 என்றே சொல்லலாம். நிதானமாக இருக்கிறார். ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. மனதில் தெளிவு இருக்கிறது. முன்பெல்லாம் அவ்வப்போது பேட்டை சுழற்றப் பார்ப்பார். கிரீஸில் நிலைத்தன்மை இருக்காது. ஆனால், இப்போது அந்த நிலைத்தன்மையைப் பார்க்க முடிகிறது.

ஒரு விக்கெட்டை எடுத்ததும் அடுத்த பந்தை ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஷார்ட்டாக வீசுகிறார். ஆனால், அதை அநாயசமாக அவர் சிக்ஸருக்கு விளாசுகிறார். அதுவே அவர் என்ன மாதிரியான ஃபார்மில், என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்த ஃபார்மட்டில் எந்தவித சூழலிலும் சிறப்பாக ஆடக்கூடிய திறமையை அவர் கொண்டிருக்கிறார். இந்த பிரமதேசா மைதான ஆடுகளத்தில் சயிம் அயூப் பந்து வீசும் போது பந்து எப்படி நின்று வந்தது என்று நன்றாகப் பார்க்க முடிந்தது. பந்து திரும்பவும் செய்தது. இருந்தாலும், இஷான் கிஷன் காத்திருந்து 'பேக் ஃபூட்டில்' ஷாட்கள் ஆடினார். காலை முன் வைத்து 'ஃப்ரன்ட் ஃபூட்' ஷாட் ஆடினால் அது சிரமமாக இருக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அப்படி பின்னால் காத்திருந்து விளையாடி ஸ்கொயர் திசையில் நிறைய ரன்கள் சேர்த்தார்.

அதுமட்டுமல்லாமல், அவரால் எல்லா விதமான ஷாட்களையும் ஆட முடிந்தது. கால்களை நன்கு நகர்த்தி ஆடினார், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார், பேக் ஃபூட்டில் காத்திருந்து ஆடினார், ஆஃப் சைடில் சில அற்புதமான ஷாட்கள் அடித்தார். இதில் முக்கியமான விஷயம், அந்தக் கட்டத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அப்படியிருந்த போதும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

ஒரு மிகப் பெரிய போட்டியில், பெரும் நெருக்கடிக்கு இடையே ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸ் அது. வெகு காலம் அவர் இந்தியாவுக்கு விளையாடவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த அவர் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களுள் ஒருவராக தற்போது உருவெடுத்திருக்கிறார்

துபே ஆட்டம் ஏற்படுத்திய தாக்கம்

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை, இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் துபே

கடினமான ஒரு ஆடுகளத்தில் இந்தியா 175 ரன்கள் எடுத்தபோது, 15 - 20 ரன்கள் அதிகமாக எடுத்திருப்பதாகவே நான் உணர்ந்தேன். அந்த ஸ்கோர் வருவதற்கு ஷிவம் துபே முக்கியமான காரணமாக அமைந்தார். கடைசி கட்டத்தில் அவர் அசத்தலான செயல்பாட்டைக் கொடுத்தார். அந்தக் கட்டத்தில் பாகிஸ்தான் ஸ்பின்னர்களின் கை சற்று ஓங்கியிருந்தபோது துபே அப்படி ஆடாமல் போயிருந்தால் இந்தியா நிச்சயம் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்திருக்கும்.

பிரேமதேசா மைதானத்தில் ஆடுவது இந்தியாவில் ஆடுவது போல் கிடையாது. இந்தியாவில் சிறிய பவுண்டரிகள் இருக்கும். பந்து நன்கு பேட்டுக்கு வரும். ஆனால், பிரேமதேசா மைதானத்தில் அப்படி இல்லை. நான் அங்கு விளையாடியிருக்கிறேன். அந்த பவுண்டரிகள் சற்று பெரிதானவை. ஆடுகளமும் மெதுவானதாக இருக்கும். பந்து எதிர்பார்த்த வேகத்தில் பேட்டை வந்தடையாது. அப்படியொரு இடத்தில் துபே ஆடியிருக்கும் இந்த இன்னிங்ஸ் இன்னும் கூடுதல் ஸ்பெஷலானது.

ஆரம்பத்திலேயே போட்டியை முடித்துவிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள்

175 என்ற இலக்கை அடைவது மிகவும் கடினமான விஷயம். அப்படியொரு சூழ்நிலையில் மிகச் சிறந்த தொடக்கம் பாகிஸ்தான் அணிக்குக் கிடைக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்தப் போட்டிக்கு முன் நான் எழுதியிருந்த பிரிவ்யூ கட்டுரையில் கூட ஓப்பனிங்கும், பாபர் ஆசமின் இன்னிங்ஸும் எவ்வளவு முக்கியம் என்று சொல்லியிருந்தேன். அவர்கள் நன்றாக விளையாடியிருந்தால் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை.

முழுக்க முழுக்க ஸ்பின்னர்கள் மீது கவனம் இருந்த நிலையில், இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டிங்கின் போது பெரிய தாக்கம் ஏற்படுத்தினார்கள். புதிய பந்தில் விக்கெட்டுகள் தேவை எனும்போது அவர்கள் அதை எடுத்துக்கொடுத்தார்கள்.

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை, இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஜஸ்ப்ரித் பும்ரா

சயிம் அயூப் விக்கெட்டை வீழ்த்திய பும்ராவின் அந்தப் பந்து, என்னைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த பந்து. பேட் வருவதற்குள் பந்து அவரை ஏமாற்றிச் சென்றது. சிறந்த ஸ்விங். சிறந்த 'air speed'. எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் பும்ரா விக்கெட் வீழ்த்திக் கொடுத்திருக்கிறார். அதை இந்தப் போட்டியிலும் அவர் செய்தார்.

அதேபோல், ஹர்திக் பாண்டியா முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மிகச் சிறந்த ஃபார்மில் இருந்த ஃபரானை அவர் வெளியேற்றிய பிறகு பாகிஸ்தானால் இந்தப் போட்டியில் மீண்டும் எழுச்சி பெறவே முடியவில்லை.

இந்தியாவுக்குக் கிடைத்ததுபோல் பவர்பிளேவில் ஒரு வேகமான தொடக்கம் கிடைத்திருந்தால் பாகிஸ்தான் நல்ல நிலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அந்த வாய்ப்பே கொடுக்காமல் இரு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பாட்டார்கள். கொழும்புவில் விளக்கு வெளிச்சத்திற்கு கீழே அவர்களுக்கு நல்ல 'மூவ்மென்ட்' கிடைத்தது. அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

நம் தமிழ்நாட்டு வீரர் வருண் சக்கரவர்த்தியும் உலகின் நம்பர் ஒன் பௌலர் எப்படி வீசுவாரோ அப்படி பந்துவீசினார். ஒவ்வொரு 11 பந்துக்கும் அவர் ஒரு விக்கெட் வீழ்த்துகிறார். அப்படியொருவரை இதுபோன்ற மைதானத்தில், இதுபோன்ற ஆடுகளத்தில் எதிர்கொள்வதெல்லாம் எளிதான காரியமே இல்லை.

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை, இஷான் கிஷன்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

52 போட்டிகளில் 43 வெற்றிகள்

இதுவொரு முழுமையான செயல்பாடா என்று கேட்கும்போது, அந்த இடத்தில் எனக்கு ஒரு சிறு கேள்வி எழுகிறது. ஏனெனில், இந்தப் போட்டியில் இந்தியாவின் கேட்சிங் சற்று சுமாராகவே இருந்தது. இந்திய ஃபீல்டர்கள் நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டனர். அதனால், அதில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த ஒரு விஷயம் தவிர்த்துப் பார்க்கும்போது, இதுவொரு முழுமையான செயல்பாடு தான்.

பெரும் எதிர்பார்ப்பும், நெருக்கடியும் இருந்த ஒரு போட்டியில் இந்தியா இப்படியொரு ஆதிக்க வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. அவர்கள் பாகிஸ்தானுக்கு எந்தவொரு வாய்ப்பும் கொடுத்திடவில்லை. சமீப காலத்தில் இந்திய அணி அப்படித்தான் ஆடிவருகிறது.

முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா அவுட்டானதும் பலருக்கும் பதற்றம் ஏற்பட்டிருக்கும். இந்தியா பின்தங்கிவிடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கும். ஆனால், அதன்பிறகு இந்திய அணி எழுச்சி பெற்று தாங்கள் ஏன் இந்த ஃபார்மட்டில் ஒரு மகத்தான அணி என்பதை நிரூபித்தது. இந்த ஃபார்மட்டில் கடைசியாக விளையாடிய 52 போட்டிகளில் 43 போட்டிகளை எப்படி வென்றிருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் போட்டி ஒரு உதாரணமாக அமைந்தது.

ஒருவர் சரியாக ஆடாவிட்டாலும் இன்னொருவர் வந்து தன் பங்கைச் செய்கிறார். டி20 போட்டிகளில் வீரர்களின் சீரான செயல்பாட்டை நாம் அதிகம் பார்க்கமாட்டோம். அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதைத்தான் பார்ப்போம். இந்த அணியில் ஒவ்வொரு வீரரும் அப்படி தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அணி முழுவதும் 'மேட்ச் வின்னர்கள்' நிறைந்திருக்கிறார்கள். அதனால் இந்த அணியில் எல்லோருக்கும் ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. அந்த சுதந்திரத்தை கம்பீரும் கொடுத்திருக்கிறார். அதனால் தான் இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அவர்கள் இதே பாணியிலான கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடினால், எதிரணிகள் மிகவும் கவனமாக இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு