'தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும்'

பட மூலாதாரம், BBC World Service
அரசு அதிகாரிகளாயிருந்தாலும், யாராயிருந்தாலும், அத்து மீறல்களைச் செய்திருந்தால், தண்டனையை அனுபவிக்கவேண்டியதுதான் என்று , வாச்சாத்தி தீர்ப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்தார் முன்னாள் காவல்துறைத் தலைமை அதிகாரி வால்டர் தேவாரம்.
வாச்சாத்தி பழங்குடியின மக்கள் காவல்துறையினராலும், வனத்துறை அதிகாரிகளாலும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பில் , நீதிமன்றத் தீர்ப்பு சரியானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தீர்ப்பு குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த தேவாரம், நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தபிறகே இத்தீர்ப்பை வழங்கியிருக்கும், ஆனாலும், சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகாலம் கழித்துத்தான் நீதி கிடைக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம் என்றார் அவர்.
ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு கால தாமதம் ஆனதற்கு காரணமே, காவல்துறையினர் உடனடியாக, பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டதுதான் என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், ஒரு சக அரசாங்க துறை மீது புகார் வரும்போது அதை காவல்துறையினர் அலட்சியமாக எடுத்திருக்கலாம் என்றார். ஆனாலும் , எந்த அரசுத் துறையை சார்ந்தவர்களும் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும்போது, தண்டனை பெறவேண்டியதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.