லெபனானுடன் 'போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை' என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
முன்னதாக, லெபனானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தியதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம், நெதன்யாகுவின் காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இந்தக் காணொளியில், நெதன்யாகு வடக்கு இஸ்ரேல் மக்களிடம் உரையாற்றுவது காணப்படுகிறது.
அவர், "லெபனானில் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் ஹெஸ்பொலா மீது முழு பலத்துடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம், உங்கள் பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்று கூறினார்.
முன்னதாக, பிரதமரின் அலுவலகம் நெதன்யாகுவின் மற்றோர் அறிக்கையை வெளியிட்டது. "நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு லெபனான் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், லெபனானுடன் கூடிய விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நான் உத்தரவிட்டேன்," என நெதன்யாகு கூறினார்.
"ஹெஸ்பொலா ஆயுதங்களைக் கைவிடுவதிலும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அமைதியான உறவுகளை ஏற்படுத்துவதிலும் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்" என்று கூறி, 'பெய்ரூட்டை ஆயுதமற்றதாக்க வேண்டும்' என்ற லெபனான் பிரதமரின் அழைப்பையும் அவர் பாராட்டினார்.