இரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, (கோப்புப் படம்)
மேற்கு மற்றும் மத்திய இரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
''விமானப்படை தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டது" என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் 'அமில மழை' பெய்யலாம் என எச்சரிக்கை
பட மூலாதாரம், Getty Images
இரானின் தலைநகரான டெஹ்ரானில் "பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை" தாங்கள் தாக்கியதை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் உறுதிபடுத்தியுள்ளன. அங்கு தற்போதும் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயால் அமில மழை பெய்யலாம் என இரானிய செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.
செம்பிறை அமைப்பின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி பாரசீக மொழி சேவை வெளியிட்டுள்ள செய்தியின்படி, "எண்ணெய் சேமிப்பு வசதிகள் ஏற்பட்டுள்ள வெடிப்பு, காற்று மற்றும் மேகங்களில் அதிக அளவிலான நச்சு ஹைட்ரோகார்பன்ஸ், சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை வெளியிட்டுள்ளது. மழை பெய்தால், வலுவான அமில பண்புகள் மிகவும் ஆபத்தானதாகலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அமில மழை தோல் எரிச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமில மழையில் நனைந்தால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
எந்த வேலையும் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் முடிந்தவரையில் வீட்டிற்குள்ளே இருக்குமாறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேபாள பொதுத் தேர்தல் முடிவுகள்: தேசிய சுதந்திரக் கட்சி முன்னிலை
பட மூலாதாரம், Facebook/AmreshsinghNC
படக்குறிப்பு, தேசிய சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அம்ரேஷ் குமார் சிங்
நேபாளத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் தலைவர் ககன் தாபாவை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) பட்டதாரியான அம்ரேஷ் தோற்கடித்துள்ளார். இவர் தேசிய சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஆவார்.
நேபாள பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய சுதந்திரக் கட்சி 117 இடங்களில் வென்றுள்ள நிலையில் மேலும் 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ககன் தாபா சர்லாஹி-4 தொகுதியை இழந்தார். அவரைத் தோற்கடித்த தேசிய சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அம்ரேஷ் குமார் சிங் ஜேஎன்யூவில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு ககன் தாபா தனது எக்ஸ் தளப் பதிவில் முனைவர் அம்ரேஷ் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். நேபாளத்தில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன.
குவைத்தில் அமெரிக்க ஹெலிகாப்டர் தளத்தை தாக்கியதாக இரான் தகவல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
குவைத்தின் வடக்குப் பகுதியான அல்-அடிரியில் உள்ள அமெரிக்காவின் ஹெலிகாப்டர் தளத்தை டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
"இந்த தாக்குதல் ஹெலிகாப்டர் பழுது நிலையம், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் எரிபொருள் கிடங்குகள் மற்றும் தளத்தின் கட்டளை மையத்திற்கு தீவிர சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு கடும் புகை ஏற்பட்டுள்ளது," என புரட்சிகர காவல்படையின் தெரிவிக்கிறது.
பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, அமெரிக்காவும் குவைத்தும் இதைப்பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இரு தீயணைப்பு வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஆனால் மேலதிக தகவல்கள் வழங்கவில்லை.
இரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்
பட மூலாதாரம், Getty Images
இரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி தான் இந்த முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு பொறுப்பானவர்.
முன்னாள் அதிஉயர் தலைவர் காமனெயி மறைவுக்குப் பிறகு புதிய தலைவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் புதிதாக எந்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை இலக்கு வைப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணியை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா
பட மூலாதாரம், Getty Images
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் ஒற்றை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் எடுத்து 125 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. 25 ரன்கள் என்கிற சிறிய இலக்கை துரத்தி ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை: பட்டியல் பிரிவு இளைஞர் உயிரிழப்பால் சாலைமறியல் - பதற்றம்
சிவகங்கை அருகே காவல்துறை கைது செய்த பட்டியல் பிரிவு இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 6-ம் தேதி இரு இளைஞர்களை தாக்கியதாக கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். இதில், ஆகாஷ் மேலப்பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
காவல்துறையினர் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்ததாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் மானாமதுரை வழிவிடுமுருகன் கோயில் அருகே மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆகாஷை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசாரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரானில் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் - இஸ்ரேல் தகவல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுடன் போரிட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது.
இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள 'பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை' தாக்கியதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) உறுதிப்படுத்தியுள்ளன.
எரிபொருள் டேங்குகளுக்கு எதிரான "அவசியமான தாக்குதல்" இது என்று ஐடிஎஃப் கூறுகிறது.
ராணுவ உள்கட்டமைப்பை இயக்குவதற்கு இரானிய ஆட்சி இந்த எரிபொருள் டேங்குகளை "நேரடியாகவும் தொடர்ச்சியாகவும்" பயன்படுத்துகிறது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
முன்னதாக, தெஹ்ரானில் உள்ள ஓர் எண்ணெய் கிடங்கு குறிவைக்கப்பட்டதாக, ரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், டெஹ்ரானுக்கு மேலே வானத்தில் பெரிய தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதலில் யாராவது தங்கள் உயிரை இழந்தார்களா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய செய்திகள் முக்கிய நிகழ்வுகள் மற்றும் நேரடித் தகவல்களை உடனுக்குடன் இங்கே பெறலாம். இன்று (மார்ச் 8) மதியம் வரை செய்திகளை தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.
மகளிர் தின விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
பட மூலாதாரம், TVK
சர்வதேச மகளிர் தின விழா கூட்டத்தில் தவெக சார்பில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தார்.
''குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், குடும்பத்துக்கு வருடம்தோறும் 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் நகையும் பட்டுச்சேலையும் வழங்கப்படும்,அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்'' உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்துள்ளார்.
'அண்டை நாடுகள் மீதான இரான் தாக்குதல்' - மன்னிப்பு கேட்ட அதிபர்
பட மூலாதாரம், Wana/Reuters
''அண்டை நாடுகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் தலைவர்கள், தளபதிகள் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தனர். தங்கள் தளபதிகள் இல்லாத நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன'' என இரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
''இடைக்கால தலைமைக்குழு எடுத்த முடிவு ஆயுதப்படைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல், அண்டை நாடுகளிடமிருந்து எங்களை தாக்கினால் மட்டுமே அவர்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டும். இதை தூதரக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.''
'இரான் மீது இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்' - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
பட மூலாதாரம், Bonnie Cash/UPI/Bloomberg via Getty Images
"இரான் மீது இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய கருத்துக்ககும் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டதாவது: "இரான் படுதோல்வி அடைந்து வருகிறது. அது தனது அண்டை மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், இனி அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களின் காரணமாகவே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், "மத்திய கிழக்கு நாடுகளைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்பதே அவர்களின் (இரான்) குறிக்கோளாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக இரான் தனது அண்டை மத்திய கிழக்கு நாடுகளிடம் தோல்வியடைந்துள்ளது. அந்த நாடுகள் 'நன்றி அதிபர் டிரம்ப்' என்று கூறின. அதற்கு நான் 'உங்களை வரவேற்கிறேன்' என்று பதிலளித்தேன்."
டிரம்ப் மேலும் எழுதியதாவது, "இரான் மத்திய கிழக்கின் 'தோல்வியாளர்'. அவர்கள் முழுமையாக சரணடையும் வரை அல்லது முற்றிலும் வீழும் வரை அடுத்த பல தசாப்தங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும்" என்றார்.
"இன்று இரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். இரானின் தவறான நடத்தையினால், இதுவரை குறிவைக்கப்படாத இடங்களையும் நபர்களையும் தாக்குவது குறித்து இப்போது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது"
"தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை" என்று மசூத் பெசெஷ்கியன் முன்பு தெரிவித்தார்.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா என்கிற 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் காளீஸ்வரன், கருப்பசாமி ஆகிய இருவரும் சகோதரர்கள்.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 3 பேருமே குற்றாவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இரான் போர்ச் சூழலுக்கு மத்தியில் கத்தார் தனது வான்வெளியை திறக்கிறது
பட மூலாதாரம், Getty Images
இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், வரையறுக்கப்பட்ட விமான சேவைகளைத் தொடங்கப்போவதாக கத்தார் முதன்முறையாக அறிவித்துள்ளது.
மக்கள் பயணிப்பதற்கும் மற்றும் அத்தியாவசிய சரக்கு விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி ஓரளவு மீண்டும் திறக்கப்படும் என்று கத்தாரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஹமத் சர்வதேச விமான நிலையத்தின் கூற்றுப்படி, வரும் நாட்களில் பாதுகாப்பு நிலையை பொறுத்தே கூடுதல் விமானங்களின் இயக்கம் அமையும்.
விமான நிலையத்தின் மீது இரான் நடத்த முயன்ற தாக்குதலை முறியடித்ததாக கத்தார் அதிகாரிகள் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை கத்தார் ஒன்பது டிரோன்களை இடைமறித்து அழித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு டிரோன் மட்டும் ஆளில்லாத பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
வணக்கம் நேயர்களே!
இன்று இரவு வரை நேரலை செய்திகளை தொகுத்து வழங்குவது நந்தகுமார்.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, வீட்டு மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வீட்டு மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை முறையே ரூ.60 மற்றும் ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.913 ஆகவும் சென்னையில் ரூ.928.50 ஆகவும் உள்ளது.
கடந்த 2025 ஏப்ரலில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. 19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லி ரூ.1883 ஆகவும் சென்னையில் ரூ.2043 ஆகவும் உள்ளது.
இந்த விலை உயர்வையொட்டி பாஜக அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதனை "பொதுமக்களுக்கு கிடைத்த அதிர்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச சூழ்நிலையைக் குறிப்பிட்டு பேசிய பாஜக எம்பி பிரவீண் கண்டேல்வால், எதிர்க்கட்சிகள் தேவையற்ற கூச்சலை எழுப்புவதாகத் தெரிவித்தார்.
செய்தி தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் வெளியிட 4 வாரங்களுக்கு தடை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நான்கு வாரங்களுக்கு டிஆர்பி வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது
செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கு வழங்கப்படும் தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளிகளை (டிஆர்பி) நான்கு வாரங்களுக்கு நிறுத்த வேண்டும் என தொலைதொடர்பு பார்வையாளர் ஆய்வு கவுன்சிலுக்கு (பார்க்) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அகில இந்திய வானொலி செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த உத்தரவின்படி, நடைபெற்று வரும் இஸ்ரேல்-இரான் மோதலுக்கு மத்தியில் சில செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊக உள்ளடக்கத்தை காண்பிப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய செய்தி சேகரிப்பு, பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பதற்றத்தை உண்டாக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நான்கு வாரங்கள் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறாருக்கு தடை விதிக்க கர்நாடகா முடிவு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
அதிகரித்த மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்டது யார் என்பதே இந்த விவாதத்தின் கருப்பொருளாக உள்ளது.
கர்நாடக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திர தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "ஒருவரைப் பின்பற்றுவது தான் புகழின் உண்மையான வடிவமாக உள்ளது. 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை விதிக்க கர்நாடகா பரிசீலிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னதாக டிஜிட்டல் உலகின் எதிர்மறை அம்சங்களிலிருந்து சிறாரை பாதுகாப்ப ஆந்திரா இந்த திட்டத்தை முன்மொழிந்திருந்தது. சில நேரங்களில் சிறந்த திட்டங்கள் வேகமாகப் பரவும். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அவர்களை வாழ்த்துகிறோம்." என்றார்.
முன்னதாக, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை விதிக்க அடுத்த 90 நாட்களில் தனது அரசாங்கம் திட்டம் ஒன்றை தொடங்கும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
சமூக ஊடகத் தடை பற்றி பேசிய சித்தராமையா, "சிறார்கள் மொபைல் போன் வைத்துக் கொள்ளலாம், ஆனால் வீட்டிலும் பள்ளியிலும் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும். ஒரு அட்டவணை தயாரித்துவிட்டு உங்களிடம் தெரிவிப்போம்," எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் இரானில் எத்தனை பேர் பலி?
பட மூலாதாரம், UN
படக்குறிப்பு, ஐ.நாவுக்கான இரானின் சிறப்பு தூதர் அமிர் சயீத் இர்வானி
இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது வரை 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இரானின் நிரந்தர தூதர் அமிர் சயீத் இர்வானி தெரிவித்துள்ளார்.
இரானிய செம்பிறை சங்கத்தின்படி, உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என நியூயார்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த இர்வானி கூறினார்.
"ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் இதர பொது உள்கட்டமைப்புகள் "வேண்டுமென்றே" இலக்கு வைக்கப்படுவதாக இர்வானி குற்றம் சாட்டினார்.
பொது உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இரானில், சிறுமிகள் உட்பட 150 பேர் இறந்த பள்ளிகள் மீதான தாக்குதலை விசாரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் இரான் தனது பொதுமக்களை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய செய்திகள் முக்கிய நிகழ்வுகள் மற்றும் நேரடித் தகவல்களை உடனுக்குடன் இங்கே பெறலாம். இன்று (மார்ச் 7) மதியம் வரை செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.