மு.க. ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. முதல்நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், தவெக சார்பில் வி.எஸ். பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பின்படி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து 2011, 2016, 2021 என மூன்று சட்டப்பேரவை தேர்தல்களிலும் இத்தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருந்தார் மு.க.ஸ்டாலின்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக திலகவதியும் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர். திமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
- வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026
- வேட்புமனு பரிசீலனை : 07-04-2026
- வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026
- வாக்குப் பதிவு நாள் : 23-04-2026
- வாக்கு எண்ணிக்கை : 04-05-2026