நேரலை, நெல்லையில் கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வணக்கம் நேயர்களே!

    இன்று (17-03-2026) இரவு வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை சுருக்கமாக தொகுத்து தருவது மோகன்.

  2. நெல்லையில் கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் உயிரிழப்பு

    நெல்லையில் கார் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் உயிரிழப்பு

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில், காரிலிருந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    திசையன்விளை அடுத்த பெட்டைக்குளம் - ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இன்று (மார்ச் 17) காலை சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், உள்ளே இருந்தவர்களால் வெளியே வர முடியாமல் போனது.

    தகவலறிந்து வள்ளியூர் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்தச் சம்பவத்தில் காரின் உள்ளே இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், "இது காலையில் நடந்த விபத்து போல் தெரிகிறது. தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும். உயிரிழந்தவர்களின் உடலில் வேறு காயங்கள் எதுவும் தென்படவில்லை" என்று கூறினார்.

    தடய அறிவியல் நிபுணர்கள் காரை ஆய்வு செய்து வருகின்றனர்.

    உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  3. வணக்கம் நேயர்களே!

    இன்று (17-03-2026) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை சுருக்கமாக தொகுத்து தருவது சிராஜ்.

  4. இலங்கையில் ஒவ்வொரு புதன்கிழமைகளும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    இலங்கை, எரிபொருள் தட்டுப்பாடு
    படக்குறிப்பு, இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பு

    நாட்டில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் 18ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றிரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், அரச ஊழியர்கள் பணியாற்றும் ஏனைய நான்கு நாட்களில் எத்தனை ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை, அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

    பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறையும் இந்த தினங்களில் விடுமுறை தினமாக கருதப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியன அத்தியாவசிய சேவைகள் என கருதி, அந்த தினங்களில் விடுமுறை வழங்கப்பட மாட்டாது. அத்துடன், தனியார் துறையினருக்கும் இந்த தினத்தில் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் தனியார் துறையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

    அதேவேளை, மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை அனைத்து அரச நிகழ்வுகளும் நடாத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நடவடிக்கைகளை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடாத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாத போதிலும், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்திய வகையில் வழங்கும் நோக்கில் கியூ.ஆர் நடைமுறை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வரிசையில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்களை கருத்திற் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

    இலங்கையில் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு தேவையான எரிபொருள் களஞ்சியத்தில் உள்ளதாகவும், எதிர்வரும் சில தினங்களில் நான்கு எரிபொருள் நிரப்பிய கப்பல்கள் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். மேலும், நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து, எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக நான்கு குழுக்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினத்திலும் பெரும்பாலானோர் வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது,

  5. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் எண்ணிக்கை

    இரான், ஐக்கிய அரபு அமீரகம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இரானின் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த இருவரும் 5 பொது மக்களும் அடங்குவர். இவர்களில் பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் ஒரு பாலத்தீனரும் அடங்கும்.

    மேலும் 145 பேர் மிதமானது முதல் தீவிரமான காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஸ்வீடன், துருக்கி, நைஜீரியா, இந்தியா, கானா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    இரானின் போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு அமைப்புகள் 304 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,627 டிரோன்களை எதிர்கொண்டுள்ளன.

  6. மேற்கு வங்கம், கேரளாவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக

    மேற்கு வங்கம், கேரளாவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக

    பட மூலாதாரம், Getty Images

    மேற்கு வங்கம், கேரளாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 144 வேட்பாளர்கள் மற்றும் கேரளாவில் 47 வேட்பாளர்களின் பட்டியலைப் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

    மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி 2 இடங்களில் போட்டியிடுகிறார்.நந்திகிராம் மற்றும் பபானிபூரிலிருந்து சுவேந்து அதிகாரி போட்டியிட உள்ளார்.தற்போது, ​​முதல்வர் மம்தா பானர்ஜி பபானிபூரின் எம்.எல்.ஏ.வாக உள்ளார், மேலும் நந்தி கிராமில் சுவேந்து அதிகாரி அவரை தோற்கடித்தார்.இதற்கிடையில், பாஜக மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கேரளாவின் நேமம் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

    மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து தேர்தல் முடிவுகளும் மே 4 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

  7. தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்

    தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்

    பட மூலாதாரம், Getty Images

    கரூர், ஈரோடு, நாகை மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்ட எஸ்.பியாக ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்.பியாக கிரண் ஸ்ருதி, நாகை மாவட்ட எஸ்.பியாக சுர்ஜித் குமார், விருதுநகர் எஸ்.பியாக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  8. ஹோர்முஸ் நீரிணைக்கு உலக நாடுகள் கப்பல் அனுப்ப கோரிய பிறகு டிரம்ப் கூறியது என்ன?

    டிரம்ப், இரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    உலக நாடுகள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க தங்களின் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியிருந்தார்.

    இந்த நிலையில் ''அந்த நாடுகள் உதவவில்லை என்றாலும், நான் அழைப்பு விடுத்த நாடுகளை நினைவு கொள்வேன்'' என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

    ஞாயிறு அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "அமெரிக்கா பல ஆண்டுகளாக ஹோர்முஸை பராமரித்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஹோர்முஸ் தேவையில்லை, ஆனால் பல நாடுகளுக்கு அது தேவை." எனக் கூறியிருந்தார்.

    "தற்போது போர் முடிந்துவிட்டது, இரானின் ராணுவ திறன்கள் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டன. மற்ற நாடுகள் சம்மந்தப்படுவது நல்ல விஷயம்," எனத் தெரிவித்திருந்தார்.

  9. "உயிருடன் தான் இருக்கிறார்" நெதன்யாகுவின் காணொளி பற்றி இஸ்ரேல் தூதர் கூறுவது என்ன?

    இரான், நெதன்யாகு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இரானிய தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

    அதன் பிறகு ஞாயிறு அன்று நெதன்யாகுவின் சமூக ஊடக கணக்கில் அவர் காபி அருந்துவது போன்ற காணொளி பகிரப்பட்டது.

    ஆனால் இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவென் அஸர் இந்த தகவலை மறுத்ததோடு நெதன்யாகு உயிருடன் இருப்பதாக தெரிவித்தார்.

    "பிரதமர் நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார். நான் இஸ்ரேலில் இருந்தபோது பலமுறை அவரை நேரில் சந்தித்தேன். இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டது அல்ல. இந்த விவகாரம் தொடர்பாக நிறைய போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன." என அவர் கூறினார்.

  10. நள்ளிரவில் இரான் தாக்குதல் - வளைகுடா நாடுகளில் என்ன நிலை?

    இரான், வளைகுடா நாடுகள்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    துபை விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் கிடங்கை டிரோன் தாக்கியதால் ஏற்பட்ட புகையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக துபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினர்.

    இந்த மோதல் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி இரான் சுமார் 2,000 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை செலுத்தியுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்

    இவற்றில் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன.

    இரவு முழுவதும் பல டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ள நிலையில், புதிய தாக்குதல்கள் நடந்துள்ளதாக இராக் மற்றும் குவைத் தெரிவித்துள்ளன.

    இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் டெஹ்ரானில் பல இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்ட நிலையில் ஹெஸ்பொல்லா கட்டமைப்பை இலக்கு வைத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருந்தது. இஸ்ரேலில் பல்வேறு இடங்களில் சைரன் சத்தங்களும் ஒலித்தன.

  11. வணக்கம் நேயர்களே!

    இன்று (16-03-2026) இரவு வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை சுருக்கமாக தொகுத்து தருவது மோகன்.

  12. ஒடிசா: கட்டாக் மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் பலி, புவனேஷ்வரிலிருந்து பிபிசி ஹிந்திக்காக சுப்ரதா குமார் பதி

    ஒடிசா: கட்டாக் மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் பலி

    பட மூலாதாரம், CMO ODISHA

    ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பணியில் இருந்த 11 மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இணைந்து நோயாளிகளைக் காப்பாற்றினர். மீட்புப் பணியின் போது, ​​தீ மற்றும் புகை காரணமாக அந்த ஊழியர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மோகன் சரண் மாஜி திங்கள்கிழமை காலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்தத் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், "எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரியின் பேரிடர் சிகிச்சை மையத்தில் (Trauma Care Centre) தீ விபத்து ஏற்பட்டது; இது மின்கசிவு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மையத்துடன் இணைந்திருந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) 23 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்," என்றார்.

    மேலும் அவர், "இந்தச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்; அதன் பிறகு மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்," என்று தெரிவித்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.

  13. ஹோர்முஸ் நீரிணை: டிரம்பின் வேண்டுகோளுக்கு ஜப்பான் பதில்

    ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க உதவி கோரிய டிரம்பின் வேண்டுகோள் குறித்து ஜப்பானிய பிரதமர் சொன்னது என்ன?

    பட மூலாதாரம், Getty Images

    ஹோர்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய உதவி கோரி தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்றும், ஆனால் "எவ்வாறு தகுந்த முறையில் பதிலளிப்பது" என்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் ஜப்பானிய பிரதமர் டகாய்ச்சி திங்களன்று (மார்ச் 16) தெரிவித்தார்.

    முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான இரானின் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் உதவி கோரி டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தனக்கு உதவும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் பெயரிட்டுக் குறிப்பிட்டார்.

    அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள டகாய்ச்சி, அதற்கு முன்னதாக ஜப்பான் "கப்பல்கள் மற்றும் அவற்றின் மாலுமிகளின் உயிரை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறது" என்று கூறினார்.

    ஜப்பானிய சட்டத்தின்படி, கடலில் எந்தவொரு பாதுகாப்பு அல்லது காவல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது "மிகவும் கடினம்" என்று அவர் கூறினார்.

    "தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் நாம் எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

  14. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

    பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

    பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN / AFP via Getty

    மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம், 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

    முதலிரு போட்டிகள் முடிவில் இத்தொடர் 1-1 என்ற நிலையில் இருக்க, தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மிர்பூரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், பாகிஸ்தானுக்கு 291 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. வங்கதேச அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது; தொடக்க வீரர்களான சைஃப் ஹசன் மற்றும் தன்சித் ஹசன் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர்.

    அதிரடியாக விளையாடிய தன்சித் ஹசன் சதம் விளாசினார் (107 ரன்கள்). அவரைத் தவிர, தவ்ஹீத் ஹிரிதோய் 48 ரன்களும், லிட்டன் தாஸ் 41 ரன்களும், சைஃப் ஹசன் 36 ரன்களும் எடுத்தனர்.

    இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சல்மான் அலி ஆகா சதம் அடித்த போதிலும், அவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆகா 98 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.

    சதம் விளாசி அசத்திய வங்கதேசத்தின் தன்சித் ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய நஹீத் ராணா தொடர் நாயகன் விருது வென்றார்.

  15. திட்டக்குடி அருகே ஆவணம் இல்லாததால் ரூ.12 லட்சம் பறிமுதல்

    திட்டக்குடி, 12 லட்ச ரூபாய் பறிமுதல்

    பட மூலாதாரம், bbc

    திட்டக்குடி அருகே ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இறையூர் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டிவந்த காரில் ரூ.12 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. வேல்முருகனிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

  16. திருப்பூர் அருகே ரூ.35 லட்சம் பறிமுதல் - பறக்கும் படை நடவடிக்கை

    திருப்பூர், ரூ.35 லட்சம் பறிமுதல்

    திருப்பூர் அவிநாசி சாலை மேம்பாலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாயை பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் பட்டையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, அதில் இருந்த பங்கஜ் என்பவர் வைத்திருந்த பேக்கில் 35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்த பங்கஜ், ஜவுளி கொள்முதல் செய்வதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் அதற்கான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் அலுவலர்கள் அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர் உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை பெற்று செல்லுமாறு அவரை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

  17. இரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக டிரம்ப் தகவல்

    இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

    பட மூலாதாரம், Getty Images

    இரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பரப்ப இரான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    அதிபருக்கான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' பிரத்யேக விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் இதனை தெரிவித்தார். இரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஆர்வமாக இருப்பதாக டிரம்ப் கூறினார். இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து, "நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம், ஆனால் அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்று நினைக்கிறேன், இருப்பினும் அவர்கள் மிகவும் நெருக்கமாகி வருகின்றனர்" என்றார் டிரம்ப்.

    இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஞாயிற்றுக்கிழமை இரான் "ஒருபோதும் போர் நிறுத்தத்தை நாடவில்லை அல்லது பேச்சுவார்த்தைகளை நாடவில்லை" என்று கூறினார்.

    இரானுக்கு எதிரான வெற்றியை அறிவிக்கத் தயாரா என்று டிரம்பிடம் கேட்டபோது, "அதைச் செய்ய எந்த காரணமும் இல்லை" என்றார். "நாங்கள் இப்போது அவர்களை விட்டுவிட்டால், அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க 10 ஆண்டுகள் ஆகும்" என்றும் அவர் கூறினார்.

    மொஜ்தபா காமனெயிக்கு ஆதரவாக ஒரு சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பது போன்ற படங்கள், "தற்கொலைப் படகுகள்" பற்றிய கூற்றுகள் மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீதான தாக்குதல் பற்றிய தகவல்கள் ஆகியவை இரானால் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    இருப்பினும், இதற்கு அவர் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

  18. வணக்கம் நேயர்களே!

    இன்று (16-03-2026) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை சுருக்கமாக தொகுத்து தருவது பிரதீப் கிருஷ்ணா

Trending Now