திமுக எங்களை நிர்பந்திக்கவுமில்லை, நாங்கள் அடிபணியவுமில்லை - முத்தரசன்
தொகுதி பங்கீட்டில் திமுக எங்களை நிர்பந்திக்கவுமில்லை, நாங்கள் அடிபணியவுமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை வழங்கியதை விட ஒரு தொகுதி குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன். சிபிஐ (CPI) ஒரு தொகுதி குறைவாக வாங்கியது தொடர்பாக பல இடங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது, எங்களை நிர்பந்திக்க திமுக, பாஜக அல்ல அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல என்று தெரிவித்தார்.
திமுக தலைமையில் அமைந்திருப்பது கொள்கை கூட்டணி, தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் நீண்ட காலம் தொடர்ந்தது இல்லை, ஆனால் திமுக கூட்டணி கொள்கை பிடிப்போடு செயல்படுவதால் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எங்களுக்கு தொகுதிகள் பிரச்னை அல்ல பொது எதிரியான ஆர்.எஸ்.எஸ் ஐ விரட்டியப்பதே எங்களுக்கு முக்கியம். சிலர் அதற்கு துணை போய்விட்டனர் இவர்களை அனுமதிப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்தானது என்றார் அவர்.
இந்த பொறுப்புணர்வு எங்களுக்கு இருப்பதால் தொகுதி குறைவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார்.