நேரலை, மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

    மோதி

    பட மூலாதாரம், X/Narendra Modi

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக அமைத்துள்ள கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "திமுக கூட்டணி இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை. அதிமுக கூட்டணி தான் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. அதிமுக முதல் வெற்றி பெற்றது தென் மாவட்டத்தில் தான். வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைக்க தென் மாவட்ட மக்கள் உறுதுணையாக இருப்பார்கள். மோதி பிரதமராக ஆன உடன் இந்தியாவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் தரவில்லை என அவதூறான பிரசாரம் மேற்கொள்கிறார்கள். அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை திமுக முடக்கிவிட்டது." என்றார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, ''வெற்றிவேல், அனைவருக்கும் வணக்கம்'' என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். அதன் பிறகு தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்,

    "பாண்டிய நாடு, வீரம் விளையும் மண். இந்த நிலத்திலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்து கோன் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் பங்களிப்பை நினைவுகூர்கிறேன்," என்றார்.

    "இங்கு வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றேன். அதே நேரம் எனது இதயம் கணத்தது. திமுக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், இறுதியில் வாய்மையே வெல்லும், முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்." என்று தெரிவித்தார்.

    இந்தத் தேர்தல் மாநிலத்துக்கு ஒரு திருப்புமுனை தேர்தல் என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்ட மோதி, ''திமுக வெளியேற்றப்பட்டாக வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை மக்கள் அறிவார்கள்'' என்றும் கூறினார்.

    "2021-இல் 25 ஆண்டுகள் கழித்து திமுக முதல் முறையாக பெரும்பான்மை ஆட்சி அமைத்தது, ஆனால் அவர்கள் சரியான ஆட்சி வழங்கவில்லை. வாரிசு அரசியலை முன்னெடுத்தார்கள். ஏழைகளுக்கு பணியாற்ற மாட்டார்கள். மற்றவர்களையும் பணியாற்ற விடமாட்டார்கள். காங்கிரசும்-திமுகவும் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு திட்டங்களை கொண்டு வரவில்லை. ரயில்வே திட்டங்களுக்கு திமுக-காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பாஜக ஆட்சியில் 8 மடங்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்டிஏ ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவோம். திமுக பல ஊழல்களைச் செய்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸை 60 ஆண்டுகளாக விலக்கி வைத்தது. காங்கிரஸிடமிருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான்." என்றும் பேசினார்.

  2. காமனெயி மரணத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

    இரான், ரஷ்யா, புதின்

    இரான் அதி உயர் தலைவர் அலி காமனெயி மறைவுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்ததாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதில், "காமனெயி மரணம் மனித நெறிமுறை, சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிய கொடூரமான கொலை" என்று அவர் விவரித்தார்.

  3. திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோதி

    மோதி, மதுரை, பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி

    பட மூலாதாரம், ANI/DD

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி இன்று மதுரைக்கு வந்திருந்தார்.

    இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோதி சென்றார்.

    மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோதி கலந்து கொள்கிறார்.

  4. "இரான் உடனான போரில் டிரம்ப் தங்களை கைவிடலாம்" - இஸ்ரேலிய வல்லுநர்கள் கவலை

    டிரம்ப், அமெரிக்கா, இஸ்ரேல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இரானுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போரை டிரம்ப் கைவிடலாம் என சில இஸ்ரேலிய பத்திரிகையாளர்களும் பாதுகாப்பு வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் நீண்ட போருக்கு தயாராகியுள்ள நிலையில் டிரம்பிடம் அத்தகைய பொறுமையை எதிர்பார்க்க முடியாது என அவர்கள் நம்புகின்றனர்.

    அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வேறுபாடுகள் விரைவில் எழலாம் என பாதுகாப்பு வல்லுநர் யோவ் லிமோர் 'இஸ்ரேல் ஹேடம்' செய்தித்தாளில் வெளிவந்துள்ள கட்டுரையில் எச்சரித்துள்ளார்.

    "இந்தப் போரை பல நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது அதற்கு மேலும் தொடர இஸ்ரேல் தயாராக உள்ளது. ஆனால் டிரம்பிடம் அவ்வளவு பொறுமை இருக்கிறதா என்பதில் தெளிவில்லை." எனத் தெரிவித்தார்.

    மூத்த செய்தியாளர் நஹும் பார்னியா யெடியோத் அஹ்ரோனோத் செய்தித்தாளில், "அமெரிக்காவுக்கு இந்தப் போர் ஒரு 'தேர்வு', ஆனால் இஸ்ரேலுக்கோ இது 'அவசியம்,'" என எழுதியுள்ளார்.

    தற்போது வரை டிரம்ப் முழு ஆதரவு வழங்கி வந்தாலும் அமெரிக்க பொதுக் கருத்து இஸ்ரேலுக்கு எதிராக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    எனினும் 'என் 12' என்கிற இணையதளத்தின்படி, "இது வெறும் தொடக்கம் தான், இந்த நடவடிக்கை பல நாட்களுக்குத் தொடரும்." என இஸ்ரேலிய தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

  5. இரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து சென்னையில் போராட்டம்

    இரான், இஸ்ரேல், அமெரிக்கா

    இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட ராணுவ தாக்குதல்களில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். இதனை இரானின் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தின.

    இந்தச் சூழலில் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இரான், இஸ்ரேல், அமெரிக்கா

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் புது கல்லூரி அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களுடன் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

  6. சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

    விமானங்கள் ரத்து

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    மத்திய கிழக்கில் நீடிக்கும் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு இன்று மாலை முதல் நாளை மதியம் வரையிலான 28 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    துபை, அபுதாபி, சார்ஜா, தோஹா, மஸ்கட், பஹ்ரைன் உள்ளிட்டவற்றுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சனிக்கிழமை திடீரென தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்றம் நிலவிவருகிறது. இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த செய்தியை, இரானிய அரசு ஊடகங்களும் உறுதிப்படுத்தின.

    இந்நிலையில், இரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வெளியை மூடிவிட்டன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து, இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை துபை, அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படவிருந்த 16 விமானங்கள், நாளை அதிகாலையில் இருந்து மதியம் வரை இயக்கப்பட வேண்டிய 12 விமானங்கள் என மொத்தம் 28 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரத்து செய்யப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், இரான் வான்வெளியை கடக்க வேண்டிய நிலை இருக்கிறது. இரான் வான்வெளி மூடப்பட்டுள்ளதன் காரணமாக, மாற்றுப் பாதைகளில் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பவதால், அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம் அல்லது விமானம் ரத்து செய்யப்படலாம்.

    எனவே, மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவற்றை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணங்களை அமைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  7. வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு

    மு.க. ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை இரானுக்கு எதிரான "பெரிய இராணுவ நடவடிக்கை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.

    இதையடுத்து, இரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அவசர உதவி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக, இரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சௌதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

    தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி, புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:

    011-24193300 (தொலைபேசி)

    92895 16712 (மொபைல் எண், வாட்ஸ்ஆப்)

    அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

    இந்தியாவுக்குள் – 1800 309 3793

    வெளிநாடு – +91 80 6900 9900 (மிஸ்டு கால்)

    தொடர்புக்கு – +91 80 6900 9901

  8. விசா நீட்டிப்பு: இந்தியாவில் உள்ள வெளிநாட்டவருக்கு புதிய அறிவுறுத்தல்

    வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

    மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர் விசா நீட்டிப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம் என்று ஞாயிற்றுக்கிழமை இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    பயண ரத்து அல்லது பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டினருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

    எந்தவொரு வெளிநாட்டினருக்கும் தனது விசாவை நீட்டிக்க அல்லது தங்குவதை முறைப்படுத்த உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  9. துபை விமான நிலையத்தில் என்ன நடந்தது? பி.வி.சிந்து பதிவு

    பி.வி. சிந்து

    பட மூலாதாரம், Getty Images

    இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், இந்திய பேட்மிண்டன் வீராங்கனையுமான பி.வி. சிந்து சனிக்கிழமை துபை விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டார், அதன் பிறகு அவர் தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளார்.

    வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் மதிப்புமிக்க அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அவர் பங்கேற்கவிருந்தார், ஆனால் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    பி.வி. சிந்து சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "இந்த கடினமான நேரம் இன்னும் முடிவடையவில்லை, ஒவ்வொரு மணி நேரமும் நிலைமை மேலும் பயமுறுத்துகிறது." என பதிவிட்டிருந்தார்.

    "சில மணி நேரத்திற்கு முன்பு, விமான நிலையத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. புகை மற்றும் இடிபாடுகளுக்கு மிக அருகில் இருந்ததால் எனது பயிற்சியாளர் உடனடியாக ஓட வேண்டியிருந்தது. அது எங்கள் அனைவருக்கும் மிகவும் மன அழுத்தம் மற்றும் பயமுறுத்தும் தருணமாக இருந்தது."

    மேலும் அவர், "நாங்கள் அனைவரும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளோம். துபை விமான நிலைய ஊழியர்கள் மற்றும் துபை அதிகாரிகளின் கடின உழைப்புக்கு நன்றி. எங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் அவர்களின் மகத்தான ஆதரவு மற்றும் தொடர்ச்சியான உதவிக்கு துபை உள்ள இந்திய உயர் ஆணையரகத்திற்கு சிறப்பு நன்றி." என தெரிவித்துள்ளார்.

  10. திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் & மமகவுக்கு தலா 2 தொகுதிகள்

    இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் (கோப்புப் படம்)

    வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இன்று நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதை உறுதி செய்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த தேர்தலில் போட்டியிட்டதைப் போலவே இம்முறையும் 3 தொகுதிகள் கேட்டோம். ஆனால், திமுக தரப்பில், 11 கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் அது கடினம் என்று சொன்னார்கள். அதனால் 2 தொகுதிகளுக்கு உடன்படிக்கை செய்திருக்கிறோம்" என்று கூறினார். தாங்கள் ஏணிச் சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதேபோல், மனிதநேய மக்கள் கட்சிக்கும் திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. செய்தியாளர்களை சந்தித்த அந்தக் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூட்டணி ஒப்பந்தத்தை செய்தியாளர்களிடம் காட்டி அதை உறுதி செய்தார். அந்தக் கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

  11. இரான்: பெண்கள் பள்ளி மீதான தாக்குதலில் 53 பேர் பலி,

    இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளன

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளன

    பிப்ரவரி 28 அன்று பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக இரானின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-விடம் (IRNA) தெரிவித்தார்.

    இந்தத் தாக்குதல் இரானின் தெற்கு ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் மாவட்டத்தில் அமைந்துள்ள பெண் குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாஜாரே தயேபே பெண்கள் பள்ளி மீதான இத்தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆளுநர் முகமது ராத்மெஹ்ர் தெரிவித்தார்.

    இரானுக்குள் நுழைய சர்வதேச செய்தி நிறுவனங்களுக்குப் பெரும்பாலும் விசா மறுக்கப்படுவதால், அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்களைத் திரட்டும் திறன் அவர்களுக்குக் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, பிபிசி நிறுவனத்தால் இந்தத் தகவலைத் தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை.மேலும், ஏற்கனவே நடந்த ஒரு சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, இரானில் இணையச் சேவை "ஏறக்குறைய முழுமையாக" முடக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையை ஒரு "பெரிய இராணுவ நடவடிக்கை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்துள்ளார், மேலும் இரான் அரசுப் படைகள் சரணடைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

  12. மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் - ஏர் இந்தியா புதிய அறிவிப்பு

    ஏர் இந்தியா - இரான் தாக்குதல்

    பட மூலாதாரம், ANI

    இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

    ஏர் இந்தியா தனது பதிவில், "மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இடங்களுக்கான ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தங்கள் குழுக்கள் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    "உங்கள் விமானத்தின் சமீபத்திய நிலையை அறிய, https://airindia.com/in/en/manage/flight-status.html என்ற இணையதளத்தில் சென்று சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு, எங்கள் 24x7 அழைப்பு மையத்தை +91 1169329333, +91 1169329999 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்."

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “பெரிய ராணுவ நடவடிக்கை” என்று விவரித்து, இரான் அரசுப் படைகளிடம் ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர், இரானுக்கு எதிராக முன்னெச்சரிக்கை தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

    இரானின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன.

  13. வளைகுடா நாடுகளிடம் இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

    இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி

    பட மூலாதாரம், EPA

    தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையின்படி, அனைத்து ராணுவ வழிகளையும் இரான் பயன்படுத்தும் என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

    சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் போன்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை அராக்ச்சி தொடர்பு கொண்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

    இரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க, "தற்காப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் கீழ் தனது அனைத்து தற்காப்பு மற்றும் ராணுவத் திறன்களையும்" பயன்படுத்தும் என்று அந்த நாடுகளிடம் இரான் கூறியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "இரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் வசதிகளையும் நிலப்பரப்புகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது அந்தந்த நாடுகளின் பொறுப்பு" என்பதையும் அராக்ச்சி அந்த நாடுகளுக்கு நினைவூட்டியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

  14. ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக ரஞ்சி சாம்பியன்

    ஜம்மு காஷ்மீர் - ரஞ்சி கோப்பை

    பட மூலாதாரம், X/@OmarAbdullah

    ரஞ்சி கோப்பை வரலாற்றில், ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பையை வென்றது.

    ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது, பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகா 293 ரன்களுக்கு ஆல்-அவுட் அனது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 291 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜம்மு காஷ்மீர் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்தமாக 633 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஜம்மு காஷ்மீர் அணி விளையாடிய முதல் ரஞ்சி கோப்பை ஃபைனலும் இதுதான்.

    ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தங்களது அணியை உற்சாகப்படுத்த ஹூப்ளிக்கு வருகை தந்தார். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, அணியைப் பாராட்டியுள்ளார். "அவர்கள் சாதித்துவிட்டார்கள். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எனது வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  15. 'ஆப்கன் தாலிபன் தாக்குதல்களில் இந்தியாவின் பங்களிப்பும் உள்ளது" - பாகிஸ்தான்

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், HELMUT FOHRINGER / various sources / AFP via Getty Images

    ஆப்கன் தாலிபன் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 'இந்தியாவின் பங்களிப்பும்' இருந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கன் தாலிபன்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'துல்லியமான நடவடிக்கை' எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானின் நல்லெண்ணம் மற்றும் பொறுப்பான அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுடன், ஆப்கன் மண்ணிலிருந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தன. இதில் தாலிபன் ஆட்சியின் ஆதரவும் இந்தியாவின் வெளிப்படையான ஆதரவும் அடங்கும்," என கூறப்பட்டுள்ளது.

    "பாகிஸ்தான் மீது மீண்டும்மீண்டும் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களில் 'ஃபித்னா-அல்-கவாரிஜ்' 'ஃபித்னா-அல்-ஹிந்துஸ்தான்' ஆகியவை ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளில் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டதுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அவர்களின் உதவித் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டன."

    பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு தாலிபன் ஆட்சியின் 'தேவையற்ற மற்றும் தூண்டுதல் நடவடிக்கைகள்' காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "தாலிபன் ஆட்சி மீண்டும் தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அல்லது ஏதேனும் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்க முயன்றாலோ, அதற்கு உறுதியான மற்றும் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் தனது தற்காப்பிற்காகவும், குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது" என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  16. ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தை எதிர்க்கும் டிரம்ப்- காரணம் என்ன?

    ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தை எதிர்க்கும் டிரம்ப்- காரணம் என்ன?

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் (Anthropic) ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து மத்திய அரசு முகமைகளுக்கும் தான் உத்தரவிடப்போவதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அன்று தெரிவித்தார்.

    "நமக்கு அவர்கள் தேவையில்லை, நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை, மீண்டும் அவர்களுடன் நாம் இணைந்து செயல்பட மாட்டோம்," என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க ராணுவத்திற்கு தனது ஏஐ கருவிகளைத் தடையின்றி அணுக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால், ஆந்த்ரோபிக் நிறுவனம் வெள்ளை மாளிகையுடனான ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    இதைத் தொடர்ந்து, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், “ஆந்த்ரோபிக்கை ஒரு ‘சப்ளை செயின் ரிஸ்க்’ (விநியோகச் சங்கிலிக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய ஒன்று)” என்று தான் கருதுவதாகக் கூறினார்.

    இந்த அங்கீகாரத்தைப் பெற்றவுடன், இத்தகைய முத்திரை பகிரங்கமாக வழங்கப்பட்ட முதல் அமெரிக்க நிறுவனம் என்ற நிலையை ஆந்த்ரோபிக் அடையும்.

    எந்தவொரு 'சப்ளை செயின் ரிஸ்க்' அங்கீகாரத்தையும் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்போவதாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தத

  17. எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை- அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கூறியது என்ன?

    எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை- முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கூறியது என்ன?

    பட மூலாதாரம், Alex Kent/Getty

    படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்

    எப்ஸ்டீன் வழக்கில் தான் "எதையும் பார்க்கவில்லை" என்றும் "தவறு ஏதும் செய்யவில்லை" என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்

    பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரத்தில், சமீபத்தில் வெளியான கோப்புகளில் பில் கிளிண்டன் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து நியூயார்க்கில் அவரிடம் ஒரு நாள் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் முன்னாள் அதிபரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

    அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பில் கிளிண்டன் ஒரு குளியல் தொட்டியில் இருக்கும் ஒரு புகைப்படமும் அந்தக் கோப்புகளில் அடங்கும்.

    அவரது மனைவியும் முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளருமான ஹிலாரி கிளிண்டன், எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தனக்கும் ‘எதுவும் தெரியாது’ என்று குழுவிடம் தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, இவரது பதில் வந்துள்ளது.

    இந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றிருப்பது தவறான செயல்களில் ஈடுபட்டதைக் குறிக்காது, மேலும் எப்ஸ்டீன் வழக்கில் இதுவரை முன்வந்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கிளிண்டன் தம்பதியினர் மீது எந்தவிதமான தவறான நடத்தை குறித்தும் குற்றம் சாட்டவில்லை.

    எப்ஸ்டீன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றித் தனக்கு "சிறிதளவாவது சந்தேகம்" இருந்திருந்தால், தான் அவருடனான உறவைத் துண்டித்திருப்பேன் என்றும் அவரது விமானத்தில் ஒருபோதும் பயணித்திருக்க மாட்டேன் என்றும் பில் கிளிண்டன் கூறினார்.

    "நானே அவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.

  18. பொலிவியாவில் ராணுவச் சரக்கு விமானம் விபத்து- குறைந்தது 11 பேர் உயிரிழப்பு

    பொலிவியாவில் ராணுவச் சரக்கு விமானம் விபத்து- குறைந்தது 11 பேர் உயிரிழப்பு

    பட மூலாதாரம், Bloomberg via Getty Images

    படக்குறிப்பு, விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    பொலிவியாவின் தீயணைப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, பொலிவியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான எல் ஆல்டோவில் (El Alto) ஒரு ராணுவச் சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இந்த விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து பயணப்பட்டு எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) உள்ளூர் நேரப்படி மாலை 06:20 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகப் பொலிவியாவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    விபத்திற்குப் பிறகு, விமான நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி அருகில் உள்ள நெடுஞ்சாலைக்குச் சென்று, அங்கிருந்த வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

  19. 'மகிழ்ச்சி அளிக்கவில்லை' - இரான் அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப்

    பட மூலாதாரம், AFP via Getty Images

    இரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் இரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

    "நாங்கள் பெற வேண்டியதை அவர்கள் எங்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே எனக்கு இதில் ஆர்வமும் இல்லை," என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஒப்பந்தம் ஏதுமின்றி முறிந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் குறித்த தனது கருத்தை டிரம்ப் கூறினார்.

    இரானுக்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார், ஆனால் “சில சமயங்களில் நான் அதைச் செய்ய வேண்டிய நிலை வரும்" என்று கூறினார்.

    இரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்த கவலை, வெள்ளிக்கிழமை அன்று பல நாடுகள் இப்பகுதியில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்க வழிவகுத்தது.

    பிரிட்டன் தற்காலிகமாக தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து பணியாளர்களைத் திரும்பப் பெற்றது மற்றும் இஸ்ரேலுக்கு "அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்தையும்" தவிர்க்குமாறு பயண வழிகாட்டுதலை வெளியிட்டது.

    சீனா, இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள், நிலைமை மோசமடையக்கூடும் என்பதால் தங்கள் குடிமக்களை இரானை விட்டு விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தின. ஜெர்மனி இஸ்ரேலுக்கான பயணத்திற்கு எதிரான அறிவுறுத்தல்களை அவசரமாக வழங்கியது.

    இதற்கிடையில், இரானில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகமும், அதன் அவசரகால பணியாளர்கள் தவிர்த்து சில பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறியது.

    இரான் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

  20. வணக்கம் நேயர்களே!

    இன்று (28-02-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குவது சிராஜ்.

Trending Now