"எங்கள் நிலை யாருக்கும் நேரக்கூடாது"

வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட பெண்கள்
படக்குறிப்பு, வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட பெண்கள்

வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான காந்திமதி என்ற 37 வயதான பெண் இன்றைய தீர்ப்பை அறிய தர்மபுரி நீதிமன்றம் வந்திருந்தார். தன்னை பாலியல் வல்லுரவுக்குட்படுத்திய அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பியிருந்தாலும் இந்றைய தீர்ப்பை தான் வரவேற்பதாக அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தண்டனை பெற்ற அனைவரும் 10 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பாலியல் வன்முறைக்குள்ளான தானும் தனது உறவினர்களும் சந்தித்த வேதனைகளை குற்றம் செய்தவர்கள் உணர்வார்கள் என்று தான் நம்புவதாகவும் காந்திமதி தெரிவித்தார்.

தானும் தனது கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர்கள் உள்ளிட்ட 17 பெண்கள் பாலியல் வல்லுரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்வத்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்த அவர், சந்தனக் கடத்தலில் ஈடுபடுவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்தே சோதனை என்ற பெயரில் இந்தக் கொடுமை நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

வீடுகளில் இருந்த பொருட்கள் அதிகாரிகளால் சூறையாடப்பட்டதாகவும் தாம் வளர்த்து வந்த ஆடு மாடுகளை காவல்துறையினரும், வனத்துறையினரும் வெட்டி சாப்பிட்டு விட்டு மீதமுள்ள இறைச்சியை கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றதால் கிணறுகள் பாழாகிவிட்டதாகவும் காந்திமதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட காந்திமதி உள்ளிட்ட பெண்களுக்கு தலா 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இழப்பீடு கோரப்போவதாக பாதிக்கப்பட்டோருக்காக பாடுபடும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.