You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் மீது தாக்குதல் - இரான் அதிஉயர் தலைவரின் பிரதிநிதி கூறியது என்ன?
ஹோர்முஸ் நீரிணையை இரான் ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருப்பதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதப் படைகள் அப்பகுதியைக் கட்டுப்படுத்தும் வகையில் ஹோர்மூஸ் நீரிணை "அதன் முந்தைய நிலைக்கு" திரும்பும் என்று இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) வெளியிட்ட அறிக்கையை அதனுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை, இரானிய மாணவர் செய்தி முகமை மற்றும் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) ஆகியவை மேற்கோள் காட்டுகின்றன.
"முன்னதாக, சில கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்வதை நாம் கண்டோம். ஆனால், இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாக எவ்வளவு கப்பல்கள் கடந்து போயின என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று அவை தெரிவித்தன.
'அமெரிக்காவின் முற்றுகை என்று சொல்லப்படுவது கடற் கொள்ளைக்குச் சமமானது' என்று ஐஆர்ஜிசி அறிக்கை கூறுகிறது. அமெரிக்கா தனது துறைமுகங்களை முற்றுகையிடுவதைத் தொடர்ந்தால், நீரிணையை மூடிவிடுவோம் என்று இரான் முன்னதாகவே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
இரானிய துப்பாக்கிப் படகுகளால் (Gunboats) எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ஐக்கிய ராஜ்ஜியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவிக்கிறது
ஹோர்மூஸ் நீரிணையில் இருந்த ஒரு எண்ணெய் கப்பல் மீது, இரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிப் படகுகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக யுகேஎம்டிஓ தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஓமனுக்கு வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எண்ணெய் கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என யுகேஎம்டிஓ மேலும் கூறுகிறது.
இதேபோல், நீரிணையை கடக்க முயன்றபோது குறைந்தது இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மூன்று வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
கப்பல்கள் மீது 'துப்பாக்கிச் சூடு'
கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் இணையதளமான மரைன் டிராஃபிக்கின் சமீபத்திய தரவுகள் படி, பல கப்பல்கள் தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
மினர்வா எவ்ரோபி (Minerva Evropi) என்ற பெயருடைய ஒரு கப்பல், புறப்பட்ட இடத்தையே நோக்கித் திரும்பும் வகையில் திசைமாறியிருப்பதாகத் தெரிகிறது.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுவிட்டதாக இரானிய கடற்படையிடமிருந்து சில வர்த்தகக் கப்பல்களுக்கு வானொலிச் செய்தி வந்ததாகவும் கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. எந்தக் கப்பல்களும் அனுமதிக்கப்படாது என எண்ணெய்க் கப்பல்களிடம் இரானிய கடற்படை கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியக் கொடியின்கீழ் சென்ற இரு கப்பல்களான சரக்குக் கப்பல் ஜாக் ஆர்னவ் (JAG ARNAV) மற்றும் எண்ணெய் டேங்கர் சன்மார் ஹெரால்டு (SANMAR HERA) ஆகியவற்றுக்கு, ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய இரானின் ஐஆர்ஜிசி அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் பயணப் பாதைகளை மாற்றிக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாக பிபிசி வெரிஃபை கூறுகிறது.
பிபிசி பெர்சியன் (BBC Persian) தகவலின்படி, எண்ணெய் கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் இணையதளமான 'டேங்கர் டிராக்கர்', அங்கே "துப்பாக்கிச் சூடும்" நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது.
'டேங்கர் டிராக்கர்ஸ்' தளத்தின் கூற்றுப்படி ஹோர்மூஸ் நீரிணைக்கு மேற்கே பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இந்தியக் கப்பல்களை, IRGC கடற்படையினர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இரான் அதிஉயர் தலைவரின் பிரதிநிதி கூறியது என்ன?
ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தது பற்றி இந்தியாவில் உள்ள இரான் அதி உயர் தலைவரின் பிரதிநிதி முனைவர் அப்துல் மஜித் ஹகிம் எலாஹி எதிர்வினையாற்றி உள்ளார்.
"இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுவானது. இந்தச் சம்பவம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் அனைத்தும் நன்றாக உள்ளது என நம்புகிறோம். இந்த விவகாரம் தீர்க்கப்படும்," என ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களுக்கு இந்தப் போர் வேண்டாம். எங்களுக்கு அமைதி வேண்டும். எங்கள் பிராந்தியத்தில் அமைதி நிலவ எதிர்தரப்பும் அமைதியைப் பின்பற்றும் என நம்புகிறோம்." என்றும் தெரிவித்தார்.
இரான் தூதரை அழைத்த வெளியுறவு அமைச்சகம்
இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, "சனிக்கிழமை மாலை, புது தில்லியில் உள்ள இரான் தூதர், வெளியுறவுச் செயலாளருடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்டார். அச்சந்திப்பின் போது, இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து வெளியுறவுச் செயலாளர் தனது கவலையைத் தெரிவித்தார்." என கூறப்பட்டுள்ளது.
மேலும்,"வர்த்தகக் கப்பல்கள் மற்றும் கடற்பணியாளர்களின் பாதுகாப்பிற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக வெளியுறவுச் செயலாளர் குறிப்பிட்டார். இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த பல கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவர, இரான் முன்னதாகவே உதவியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவின் கவலைகளை இரான் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும், இந்தியா நோக்கி வரும் கப்பல்களுக்கான பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை கூடிய விரைவில் மீண்டும் தொடங்குமாறும் வெளியுறவுச் செயலாளர் அத்தூதரிடம் கேட்டுக்கொண்டார்." எனவும் வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
அதி உயர் தலைவர் பெயரில் செய்தி
இதற்கிடையே, இரான் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பெயரில் எழுத்துப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது. இரான் ஊடகங்கள் அதை செய்தியாக வெளியிட்டுள்ளன. அதில், எதிரிகளை புதிய தோல்வியின் கசப்பை சுவைக்க வைக்க இரானிய கடற்படை தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக எந்த தெளிவுபடுத்தலும் அந்த அறிக்கையில் இல்லை.
மார்ச் தொடக்கத்தில் அதி உயர் தலைவராக பதவியேற்றதிலிருந்து இதுவரை மொஜ்தபா காமனெயி பொதுவெளிக்கு வரவில்லை. அவர் பெயரில் தொடர்ந்து எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மட்டுமே வருகின்றன.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17), இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், போர் நிறுத்தக் காலம் முடியும் வரை அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஹோர்மூஸ் நீரிணையை திறந்ததற்காக இரானுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர், "இரான் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டு, போக்குவரத்திற்குத் தயாராக உள்ளது என்று சற்று முன்பு அறிவித்துள்ளது. நன்றி!" என்று எழுதினார்.
இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, ஹோர்மூஸில் 'அமெரிக்க கடற்படை முற்றுகை' தொடரும் என்று அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார்.
ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்களின் தரவுகள்
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சென்றதை மரைன் டிராஃபிக் (MarineTraffic) என்ற கண்காணிப்புத் தளத்தின் தரவுகள் காட்டுகின்றன.
எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு மற்றும் இரசாயனப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் உட்பட பல கப்பல்கள், இந்த முக்கிய கடல்வழிப் பாதையில் பயணித்ததாக அந்தத் தளம் குறிப்பிடுகிறது.
இரான் வான்வெளியை பகுதியளவு மீண்டும் திறக்கிறது - அரசு ஊடகங்கள்
இரானின் வான்வெளி சர்வதேச விமானப் போக்குவரத்திற்காக பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 07:00 மணி முதல் நாட்டின் வான்வெளியும் பல விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் விமானங்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும் என்றும் அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று ஐஆர்என்ஏ செய்தி கூறுகிறது.
நாட்டின் கிழக்குப் பகுதிக்கு மேலுள்ள வான்வழிப் பாதைகள் சர்வதேச விமானப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தி கூறுகிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இரான் வான்வெளி மூடப்பட்டிருந்தது.
டிரம்ப் கூறியது என்ன?
இதனிடையே ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இரான் தொடர்பாக பேசினார்.
இரானுடன் "மிக நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று அவர் கூறினார். மேலும் ஈரான் "கடந்த 47 ஆண்டுகளாகச் செய்வது போலவே சற்று தந்திரமாக" நடந்து கொள்வதாக அவர் விமர்சித்தார்.
இரானியத் தலைவர்கள் "ஹோர்மூஸ் நீரிணையை மூட விரும்புகிறார்கள்", என கூறிய டிரம்ப், அவர்கள் "நம்மை மிரட்டுவதை" அமெரிக்கா அனுமதிக்காது என்றார்.
இரான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
டிரம்பின் கூற்று மீதான சந்தேகம்
நிக் பீக்
பிபிசி செய்தியாளர்
நீரிணையை மூடுவதற்கான இரானின் சமீபத்திய முடிவு, ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற டிரம்பின் கூற்று மீது சந்தேகத்தை எழுப்புகிறது. ஹோர்மூஸ் நீரிணையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
அரசு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட இரானின் சமீபத்திய செய்தி என்னவென்றால், அமெரிக்கர்கள் தங்கள் தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால், நீரிணை மீண்டும் ஒருமுறை மூடப்பட்டுள்ளது என்பதாகும்.
இதன் மூலம், இரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களை அமெரிக்கா இன்னும் தடுத்து வருவதையே தெஹ்ரான் குறிப்பிடுகிறது.
நீரிணை இரானிய ராணுவத்தின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சில நாட்களுக்கு முந்தைய நிலைக்கு நாம் மீண்டும் திரும்புவோம் என்று இரானியர்கள் இப்போது கூறுகின்றனர்.
வெள்ளை மாளிகையிலிருந்து இதற்கு இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை. வாஷிங்டன் டி.சி. இந்தச் செய்தியை அறியும்போது அது நிச்சயமாக வெளிவரும்.
இருப்பினும், அதிபர் டிரம்ப் நேற்று (இந்திய நேரப்படி ஏப்ரல் 17) அறிவித்தபடி - "நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டு, வணிகம் மற்றும் முழுமையான போக்குவரத்துக்குத் தயாராக உள்ளது" என்ற நிலை இப்போது நிச்சயமாக இல்லை.
அதே நேரத்தில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பை கைவிடுவது உட்பட தனது அனைத்து கோரிக்கைகளுக்கும் இரான் ஏற்கனவே கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டுவிட்டதாக அவர் கூறினார் - ஆனால் இரான் இதை மறுத்துள்ளது.
தெஹ்ரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இரானின் இந்தச் சமீபத்திய நடவடிக்கையைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் வரும் அதிரடியான ஊடகச் செய்திகள், திரைமறைவில் நடக்கும் அமைதியான ராஜதந்திர முன்னேற்றங்களை மறைக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்வது கடினம்.
கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடந்த முதல் நீண்ட கட்டப் பேச்சுவார்த்தை எந்த ஒப்பந்தமும் இன்றி முடிந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்ற சில நம்பிக்கைகள் இன்னும் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு