You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடகு: மலையேற்றத்தின் போது காணாமல் போன கேரள பெண் காட்டிற்குள் 4 நாள் உயிர் பிழைத்தது எப்படி?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையேற்றப் பாதையில் வழிதவறி 4 நாட்களாகக் காணாமல் போயிருந்த தொழில்நுட்ப வல்லுநர் சரண்யா ஜி.எஸ், இப்போது தனது அடுத்த மலையேற்றத்திற்குச் செல்லத் தயங்குகிறார்.
அடுத்த மாதம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதிக்கு மலையேற்றப் பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.
அவருக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் தயக்கத்தின் பின்னணியில், தனக்குப் பிடித்தமான செயலுக்குத் தனது குடும்பத்தினரிடம் எதிர்காலத்தில் ஒப்புதல் பெறுவது குறித்த சிக்கல் மட்டுமல்லாது, பல தனிப்பட்ட விஷயங்களும் தொடர்புடையதாக உள்ளன.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயதான மென்பொருள் பொறியாளர் சரண்யா பிபிசி ஹிந்தி சேவையிடம் கூறுகையில், "தற்போதைய பிரச்னை என்னவென்றால், மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்குகிறார்கள். இது அசௌகரியமாக உள்ளது. மக்கள் என்னை கவனிப்பதை எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.
கூர்க் மாவட்டம், மடிக்கேரியில் இரண்டரை மணிநேர மலையேற்றத்தின் போது சரண்யாவுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்குப் பிறகு, மலையேற்றப் பாதை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் இறுதி செய்யப்படுவதை உறுதி செய்யும் வரை, அடுத்த நான்கு நாட்களுக்கு மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு வனத்துறை தடை விதித்தது.
மடிக்கேரி பிரிவின் துணை வனப் பாதுகாவலர் அபிஷேக் வி, பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, "இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, தெளிவான மலையேற்றப் பாதை அடையாளங்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம்" என்றார்.
"உள்ளூர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலையேற்றக் குழுக்களுடன் இணைந்து செல்லும் புதிய முறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.
என்ன நடந்தது?
ஏப்ரல் 2ஆம் தேதி மலையேற்றத்திற்காக சரண்யா 'ஆரண்ய விஹார்' இணையதளத்தில் உரிய விதிகளின்படி பதிவு செய்திருந்தார்.
அபிஷேக் கூறுகையில், "அவர் சோதனைச் சாவடிக்குத் தனியாக வந்தார். சில வனத்துறைப் பணியாளர்கள் உள்பட 10 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி அவரை நாங்கள் அனுப்பி வைத்தோம். மலையேற்றம் காலை 8.30 மணியளவில் தொடங்கியது."
"இது மிகவும் குறுகிய மற்றும் எளிமையான மலையேற்றப் பாதை. அனைவரும் மதியம் 12.30 மணியளவில் திரும்பிவிட்டனர். ஆனால் அவர் (சரண்யா) மட்டும் திரும்பவில்லை" என்றார்.
அபிஷேக்கின் கூற்றுப்படி, "சரண்யா தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரை அழைத்த போதுதான், அவர் வழிதவறிவிட்டார் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது."
இந்தத் தகவல் வனத்துறையினருக்குக் கிடைத்ததும், அவர்கள் ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளனர். தேடுதல் குழுவில் கர்நாடக காவல்துறையின் நக்சல் எதிர்ப்புப் படையும் சேர்க்கப்பட்டது. அந்த மீட்புக் குழுவில் சுமார் 70-80 பேர் இருந்ததாக அபிஷேக் தெரிவித்தார்.
சரண்யாவுக்கு இது முதல் மலையேற்ற அனுபவம் அல்ல.
கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில், கர்நாடகாவின் குத்ரேமுக், சிக்மகளூரு, பிரம்மகிரி மலைகள் மற்றும் மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள ஹரிஹர் கோட்டை எனப் பல்வேறு இடங்களுக்கு அவர் மலையேற்றம் சென்றுள்ளார்.
இந்த அனுபவம் குறித்துப் பேசியபோது, "காலை 10:45 மணியளவில் நாங்கள் கீழே இறங்கத் தொடங்கினோம். எனக்கு முன்னால் இரண்டு பேரும், பின்னால் சிலரும் இருந்தனர். அவர்களுக்காகக் காத்திருக்க நான் நின்றேன். அவர்கள் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார்கள்" என்றார் சரண்யா.
அபிஷேக் கூறுகையில், "நாங்கள் பின்னர் அவரிடம் பேசியபோது, அவர் எதையோ பார்ப்பதற்காக உள்ளே சென்றதாகவும், அவர் திரும்பி வந்தபோது மற்றவர்கள் முன்னால் சென்றுவிட்டதாகவும் தெரிய வந்தது" என்றார்.
அவர்கள் பாறையில் அமர்ந்திருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை என்று சரண்யா கூறினார்.
மேலும், "நான் கூகுள் மேப்பை பயன்படுத்தினேன், அது என்னை இடதுபுறம் திரும்பி நேராகச் செல்லும்படி காட்டியது. ஆனால் என்னால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் வழிதவறிவிட்டேன்" என்று அவர் கூறினார்.
ஏழு மணிநேரம் நீடித்த பயணம்
சரண்யா கூறுகையில், "மாலை 6:45 மணி வரை நான் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தேன். காலை 10:45 முதல் மாலை 6:45 வரை தொடர்ந்து நடந்தேன். அப்போது முழுவதும் நான் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரை அழைக்க முயன்றேன், ஆனால் எந்த எண்ணையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மதியம் சுமார் 2:45 மணியளவில் பேட்டரி தீர்ந்துவிட்டதால் எனது போன் அணைந்துவிட்டது" என்றார்.
அவர் கடைசியாக மேற்கொண்ட அழைப்பு அந்த விடுதியின் உரிமையாளருக்குத்தான். அவர் சரண்யாவை அழைத்துச் செல்வதற்காக சோதனைச் சாவடியில் காத்துக் கொண்டிருந்தார்.
"நான் வழிதவறிவிட்டதாகவும், சோதனைச் சாவடியில் தகவல் தெரிவிக்குமாறும் அவரிடம் கூறினேன். அவருக்கு அது புரிந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிப்பதற்காக எனது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்ப முயன்றேன், ஆனால் அதை அனுப்புவதற்கு முன்பே போன் ஆஃப் ஆகிவிட்டது" என்றார் சரண்யா.
மாலை 6:45 மணிக்கு, ஒரு சிறிய ஓடையையும் பாறைகள் நிறைந்த பகுதியையும் சரண்யா கண்டுள்ளார். "இருட்டில் நடப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்தேன். பாறைகள் மீது தங்குவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை."
அதற்குள், சரண்யா காலையில் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரே ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிட்டிருந்தார். தன்னிடம் இருந்த 500 மில்லிலிட்டர் தண்ணீர் பாட்டிலையும் குடித்து முடித்திருந்தார்.
"நான் பயப்படவில்லை. சரிவில் சறுக்கி ஒரு பாறை மீது விழுந்தபோது மட்டும் பதற்றமாக உணர்ந்தேன்" என்றார்.
அந்தத் தருணத்திலேயே தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டார். "நம்பிக்கையை இழந்து பீதியடைவதற்கான நேரம் இதுவல்ல என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். நான் இயல்பாகவே மிகவும் அமைதியான நபர் கிடையாது" என்று சரண்யா கூறினார்.
பாறைகள் நிறைந்த நிலப்பரப்பை அடைந்தவுடன், அவர் சுமார் 50 நிமிடங்கள் தூங்கிவிட்டார். "நான் சுமார் 7:50 மணி வரை தூங்கினேன். பிறகு விழித்துக்கொண்டேன். சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் சில சத்தங்கள் கேட்டன. அங்கு யானைச் சாணமோ அல்லது காட்டுப் பூனையின் கால்தடங்களோ இல்லை," என்றார்.
"முழுப் பகுதியையும் பார்க்கவும், மற்றவர்களின் கண்ணில் படுவதற்காகவும் நான் மீண்டும் மலை உச்சிக்குச் செல்லவில்லை" என்பது மட்டுமே அவரது ஒரே வருத்தமாக இருந்தது.
காலில் தசைப்பிடிப்பு
வெள்ளிக்கிழமை காலை அவர் மலை உச்சிக்கு ஏற முயன்றார், ஆனால் "எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. என்னால் மேலே ஏற முடியவில்லை. அங்கேயே தங்கி என்னால் முடிந்த அளவு தண்ணீர் குடிக்க முடிவு செய்தேன். ஒவ்வொரு நாளும் அந்த ஓடையில் இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தேன். உடல் எடையைக் குறைக்க நான் விரதம் இருந்து பழகியவள் என்பதால், உணவு உண்ணாமல் இருப்பது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை" என்றார்.
டிரோன்கள் பறப்பதைப் பார்க்க முடியும் அல்லது மீட்புக் குழுவினரின் குரல் கேட்கும் என்று சரண்யா நம்பினார், ஆனால் அருகில் எங்கும் மனித நடமாட்டத்திற்கான அறிகுறியே தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை அன்றும் அவரால் தூங்க முடியவில்லை. சனிக்கிழமை மழை பெய்தது. அவர் ஒரு பெரிய மரத்தின் அடியில் தங்கியிருந்துள்ளார், இருப்பினும் முற்றிலும் நனைந்துவிட்டார். ஞாயிற்றுக்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மதியம் சுமார் 12:15 மணியளவில், சரண்யா மலை உச்சியை நோக்கி நடக்க முடிவு செய்தார். அப்போது ஓடையின் மறுபுறத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் அதற்குப் பதிலளித்தார். அந்த மரத்தின் அருகிலேயே இருக்குமாறு அவருக்குச் சொல்லப்பட்டது.
பின்னர், அந்த நபர்கள் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் என்பதை அவர் அறிந்து கொண்டார். "அவர்கள் எனக்கு தண்ணீரும் பிஸ்கட்டும் கொடுத்தார்கள்" என்று சரண்யா கூறினார்.
மாலை சுமார் 6:15 மணியளவில் அவர் சோதனைச் சாவடியைச் சென்றடைந்தபோது, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அவரை வரவேற்க அங்கு இருந்தனர். அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியது என்ன?
பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறை அதிகாரிகள், சரண்யா எவ்வாறு காணாமல் போனார் என்பதை அறிந்த பிறகு சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறினர்.
மேலும், "ஒரு வனப்பகுதியில் வழிதவறி முற்றிலும் வேறொரு இடத்திற்குச் சென்றுவிடுவது சாத்தியமே" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகேயுள்ள சேரட் பகுதியிலுள்ள குறும்பச்சி மலைப்பகுதியில் 23 வயது இளைஞரை மீட்ட அனுபவம் காரணமாக, இதுபோன்ற அவசரக் காலங்களில் வனத்துறை அதிகாரிகள் பெரிய தேடுதல் குழுக்களை அனுப்புகின்றனர்.
ஆர். பாபு என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் 1,000 மீட்டர் உயரமுள்ள குறும்பச்சி மலையில் ஏறியிருந்தார்.
அப்போது பாபு ஒரு பாறை இடுக்கில் விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உணவு, தண்ணீர் இன்றி 45 மணிநேரம் அங்கேயே சிக்கித் தவித்தார்.
காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் மீட்புப் பணிகளைத் தொடங்கின.
இறுதியாக, பெங்களூருவில் உள்ள பாராசூட் படைப்பிரிவு சென்டர், வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் படைப்பிரிவு சென்டர் ஆகியவற்றின் சிறப்புக் குழுவினர் கயிறுகளைப் பயன்படுத்தி அவரைப் பாறை இடுக்கிலிருந்து மீட்டனர்.
'என்னைத் தடுக்க முடியாது'
சரண்யா கூறுகையில், "எனது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். நான் இனிமேல் மலையேற்றத்திற்குச் செல்லமாட்டேன் என்று அவர்களிடம் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. என்னைத் தடுக்க முடியாது என்றும், ஆனால் அதுகுறித்து தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு மட்டும் எனது தந்தை கூறினார்," என்றார்.
குழுவினருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என மற்ற மலையேற்ற வீரர்களுக்கு அவர் ஏதேனும் அறிவுரை வழங்க விரும்புகிறாரா எனக் கேள்வி எழுப்பினோம்.
"மலையேறுபவர்களுக்கு அறிவுரை வழங்க நான் ஒன்றும் நிபுணர் அல்ல. இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. இந்த அனுபவத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், நீங்கள் எங்கிருந்து தொடங்கினீர்களோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதுதான்"என்கிறார் சரண்யா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு