துபையில் இரான் ஏவுகணைகளை படம் பிடித்த 12 பேருக்கு என்ன நேர்ந்தது?

பட மூலாதாரம், Fadel SENNA / AFP via Getty Images
- எழுதியவர், மேட் ஸ்பைவி
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
துபையில், இரானிய ஏவுகணைகள் தாக்கும் காட்சிகளைத் தங்கள் மொபைலில் படம் பிடித்த குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
துபை நகருக்கு மேலே இரானிய ஏவுகணைகள் பறந்ததை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் புகாரில், இணையக் குற்ற சட்டங்களின் கீழ் 60 வயதுடைய பிரிட்டிஷ் நபர் ஒருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் காவலில் வைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உதவி வழங்கி வருவதாகத் தெரிகிறது.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக்கூடிய விஷயங்களை பகிரவோ வெளியிடவோ தடை விதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விதிப்படி அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம்.

பட மூலாதாரம், EPA
21 பேர் மீது குற்றச்சாட்டு
'டிடெய்ன்ட் இன் துபை' (Detained in Dubai) அமைப்பின் தலைமை நிர்வாகி ராதா ஸ்டிர்லிங், "சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இணையக் குற்றச் சட்டங்களின் கீழ் 21 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அந்த பிரிட்டிஷ் நபரின் தொலைபேசியில் துபையில் நடந்த இரானிய ஏவுகணைத் தாக்குதலின் வீடியோவை காவல்துறை கண்டறிந்ததாக அவர் கூறினார்.
பிபிசியிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் கூறினார்.
"நான் குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்தேன். அதைப் படித்தால் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்றே உங்களுக்குத் தெரியாது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இணையக் குற்ற விதிகளின் கீழ் அதிகமான மக்கள் தண்டிக்கப்படுவதை நாங்கள் பார்த்து வருகிறோம்" என்று ஸ்டிர்லிங் கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
கடும் நடவடிக்கை ஏன்?
மேலும், அந்த பிரிட்டிஷ் நபர் தடுத்து வைக்கப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினர் அவருடன் பேச முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு இது பாதுகாப்பான இடம் என்ற பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே, ஏவுகணைகளை வீடியோ எடுப்பவர்கள் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடும் நடவடிக்கை எடுப்பதாக தான் கருதுவதாகவும் ஸ்டிர்லிங் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்டவிரோதமானது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் தகவல்கள் மீது அரசு கடுமையான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது.
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்வேறு சட்டங்கள் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைத் தொடர்ந்து குற்றமாக்கி வருகிறது. மேலும் அரசை விமர்சிப்பவர்களையும் அல்லது விமர்சிப்பதாகக் கருதப்படுபவர்களையும் தண்டித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இணை அமைச்சர் சொன்னது என்ன?
இதுபற்றி பிபிசியின் கிளைவ் மைரி, ஒரு படம் எடுத்ததற்காக எப்படி இவ்வளவு கடுமையான தண்டனையைக் கொடுக்க முடியும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இணை அமைச்சர் லானா நசேபியிடம் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த லானா நசேபி, "அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும் என்றால், தகவல் நம்பகமானதாகவும், அதன் ஆதாரங்கள் உண்மையானதாகவும் இருப்பது அவசியம். இந்தச் சட்டத்திற்கு இதுவே அடிப்படையாகும். இருப்பினும், ஏற்கனவே இந்தச் சட்டத்தை மீறும் சில சம்பவங்கள் நடந்துள்ளதை நான் அறிவேன். இதற்கான முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். இத்தகைய படம் பிடிக்கும் செயல்கள் உங்களை நீங்களே ஆபத்தில் ஆழ்த்திக் கொள்வதற்கு சமமாகும்" என்று கூறினார்.
"இங்குள்ள மக்கள், குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என நாம் வரவேற்கும் அனைவருக்கும் நான் வழங்கும் சிறந்த அறிவுரை என்னவென்றால், நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் என்பதுதான்."

பட மூலாதாரம், Getty Images
ஏன் இந்த சூழ்நிலை?
பல ஆண்டுகளாக, வணிக வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாவிற்காக துபை ஒரு கவர்ச்சிகரமான மற்றும் ஆடம்பரமான இடமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
பிப்ரவரி 28 அன்று இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரில் இரானின் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மோதல் நீடிக்கிறது.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது இரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்கள் ராணுவ இலக்குகளைத் தாண்டி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் வரை விரிவடைந்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக முக்கியமான அடையாளக் கட்டடங்களான பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஃபேர்மான்ட் தி பாம் ஹோட்டல் மற்றும் புர்ஜ் அல் அரப் ஹோட்டல் ஆகியவை இந்தத் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன.
இந்த மோதலால் மத்திய கிழக்கில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












