'மகளுக்கு திருமணம் ஆகக்கூடாது என்பதற்காக சிவப்பு ஊசி கொடுத்தார்' - பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை

திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு சிவப்பு ஊசி செலுத்திய இளைஞர் - பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
    • எழுதியவர், அமரேந்திர யார்லகடா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(குறிப்பு: இக்கட்டுரையின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு, கோபத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது ரத்தத்தை இளைஞர் ஒருவர் செலுத்தியதாக தெலங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, ஹைதரபாத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்த தங்களது 20களில் உள்ள இளம் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

அவர்கள் இருவரும் உறவினர்கள். அந்த இளைஞர் தனது தந்தை இறந்த பிறகு தாயுடன் வசித்து வருகிறார்.

"இளைஞரின் பெற்றோருக்கு எய்ட்ஸ் இருந்ததால், திருமணப் பேச்சுவார்த்தையின் போது அந்த இளைஞருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாங்கள் திருமணத்தை ரத்து செய்தோம்," என்று இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ரத்து செய்யப்பட்டதால் அந்த இளைஞர் வெறுப்பை வளர்த்து வந்ததாக புறநகர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் துணை ஆய்வாளர் விஜய் பாஸ்கர் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

"அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இளைஞர் தனது ரத்தத்தை அந்தப் பெண்ணுக்குச் செலுத்தியது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்தப் பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்றும், பிறகு தானே அவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் நினைத்துள்ளார்," என்று உதவி ஆய்வாளர் கூறினார்.

'வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த நபர்'

இந்தச் சம்பவம் மார்ச் 11-ஆம் தேதி நடந்ததாக அந்த இளம் பெண்ணின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

"அன்று மாலை, நாங்கள் பூ விற்பனை செய்வதற்காக சந்தைக்குச் சென்றிருந்தோம். அந்த நேரத்தில், என் மகள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞர், மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் கேட்டார், ஆனால் என் மகள் மறுத்துவிட்டார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு நிற திரவம் கொண்ட ஊசியை என் மகளுக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்தினார்" என்று அந்த இளம்பெண்ணின் தந்தை தனது புகாரில் கூறியுள்ளார்.

அந்த இளம்பெண் பயத்தின் காரணமாக இந்த விவகாரத்தை தனது குடும்பத்தினரிடம் மறைத்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவர் விசாரித்தபோது, அந்தப் பெண் உண்மையைக் கூறியதாக அவரது தந்தை காவல்துறையிடம் தெரிவித்தார்.

"எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தி, தனது மகளைக் கொலை செய்ய முயன்ற அந்த இளைஞர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவரது தந்தை அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

'தனக்கு எச்.ஐ.வி இருப்பது குறித்து அறிந்திருந்த இளைஞர்'

மார்ச் 13-ஆம் தேதி மாலை பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரைக் கைது செய்ததாக விஜயபாஸ்கர் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரிந்தும், அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்ததாக துணை ஆய்வாளர் கூறினார்.

அந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது சமீபத்திய ரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இல்லை என்று வந்துள்ளதாகவும், இரண்டு மாதங்களில் செய்யப்படும் இரண்டாவது பரிசோதனை தெளிவான முடிவை வழங்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக துணை ஆய்வாளர் கூறினார்.

இந்த முழு விவகாரம் குறித்துப் பேசுவதற்காக பிபிசி அந்த இளம்பெண்ணின் தந்தையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பிபிசி அந்த இளைஞரின் தாயாரிடமும் பேச மூன்று முறை செல்போன் மூலம் முயற்சித்தது. ஆனால் அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரின் வீடும் பூட்டப்பட்டிருந்தது.

திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு சிவப்பு ஊசி செலுத்திய இளைஞர் - பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

'சில சமயங்களில் உடனடியாகத் தெரியாமல் போகலாம்'

தொற்று நோய்கள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டுத் துறை மருத்துவர் பாட்டீல் பிரதீக் யஷ்வந்த் பிபிசியிடம் பேசுகையில், அந்த இளம்பெண்ணுக்கு தற்போதைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று முடிவு வந்திருந்தாலும், அவர் படிப்படியாகப் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

''எச்.ஐ.வி பாதிப்புள்ள ஒருவரின் ரத்தம் மற்றொருவருக்கு நேரடியாகச் செலுத்தப்படும்போது, அந்த வைரஸ் பரவுவதற்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது. முதல் முறை பரிசோதனை செய்யும்போது பி.சி.ஆர் மற்றும் சீரோலாஜிக்கல் சோதனைகளில் தொற்று கண்டறியப்படாமல் போகலாம். எனவே, பிற்காலத்தில் வெவ்வேறு கட்டங்களாக இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்." என்று அவர் கூறினார்.

"சில நேரங்களில் எச்.ஐ.வி பாதிப்புள்ள ஒருவர் சிகிச்சையில் இருக்கும்போது, அவரது உடலில் வைரஸ் அளவு குறைவாக இருக்கலாம். அதன் அர்த்தம் வைரஸ் முற்றிலும் நீங்கிவிட்டது என்பதல்ல. அவர்கள் மூலமும் வைரஸ் பரவக்கூடும், ஆனால் தொற்று ஏற்படும் அபாயம் சற்று குறைவாக இருக்கலாம்," என்று மருத்துவர் பாட்டீல் பிரதீக் விளக்கினார்.

"ரத்த அணுக்களில் வைரஸ் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பரிசோதனையில் தொற்று உறுதியாகத் தெரிய சிறிது காலம் ஆகலாம். அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து, அவ்வப்போது பரிசோதனைகளைச் செய்து முடிவுகளைச் சரிபார்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

''தனக்குக் கிடைக்காதது வேறொருவருக்கு கிடைக்கக்கூடாது என்ற சுயநலத்தையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. சுயநலம் கொண்ட ஒரு நபர் இப்படித்தான் நடந்துகொள்வார்,'' என்று ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் பேராசிரியர் மீனா ஹரிஹரன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு