இலங்கையில் பெட்ரோல், டீசல் பெற கியூஆர் முறை - எப்படி செயல்படும்?

இலங்கை, கியூஆர் முறை, எரிபொருள் விநியோகம், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், பிபிசி சிங்கள மொழி சேவை
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை இலங்கை அரசு தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் குறியீடு, எரிபொருள் பெறுவதற்கு செல்லுபடியாகும் (வாகனம் மற்றும் தொலைபேசி எண் மாறவில்லை என்றால்), மேலும் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கியூஆர் குறியீட்டை எவ்வாறு பெறுவது?

முந்தைய பதிவாளர்களின் வாகன உரிமை அல்லது தொலைபேசி எண் மாறவில்லை என்றால், https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தில் இருந்து கியூஆர் குறியீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஒருவரிடம் ஏற்கெனவே பயன்படுத்திய கியூஆர் குறியீடு இருந்தால், அதை மீண்டும் பயன்படுத்தலாம். வாகன உரிமை அல்லது தொலைபேசி எண் மாறியிருந்தால், நீங்கள் https://fuelpass.gov.lk இல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் கியூஆர் குறியீட்டைப் பதிவு செய்யாத வாகனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், "தங்கள் வாகனம் அல்லது தொலைபேசி எண்களை மாற்றியவர்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை விரைவில் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் கூறுகிறார்.

அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம், "அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரச்னைகள் தொடர்பாக அன்றைய தினமே தீர்வுகள் வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை, கியூஆர் முறை, எரிபொருள் விநியோகம், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

வாரத்திற்கு எவ்வளவு எரிபொருள் கிடைக்கும்?

எரிசக்தி அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கியூஆர் முறையூடாக வாரத்திற்கு பேருந்துகளுக்கு 60 லிட்டர், மோட்டார் சைக்கிள்களுக்கு 5 லிட்டர், வேன்களுக்கு 40 லிட்டர் மற்றும் கார்களுக்கு 15 லிட்டர் என்ற வரம்புடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கூடுதலாக, மோட்டார் லாரிகளுக்கு 200 லிட்டர், நில வாகனங்களுக்கு (Land vehicles) 25 லிட்டர், மோட்டார் முச்சக்கர வண்டிகளுக்கு 15 லிட்டர், விசேட தேவைக்கான வாகனங்களுக்கு 40 லிட்டர் மற்றும் குவாட்ரிசைக்கிள்களுக்கு (Quadricycles) 05 லிட்டர் என ஒரு வார காலத்திற்கு எரிபொருள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனியார் பயணிகள் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை எரிபொருள் வழங்கும் என்றும் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கியூஆர் பற்றி அமைச்சரவைப் பேச்சாளர் என்ன கூறினார்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதாலும், நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பை கவனமாகப் பேண வேண்டியிருப்பதால் இத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, கியூஆர் முறையூடாக எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

"கியூஆர் முறை என்பது இருப்பதைப் பகிர்ந்தளிப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, நுகர்வைக் குறைப்பதற்காக அல்ல. இது வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பும் தேவையைக் குறைத்ததே தவிர, எரிபொருள் நுகர்வு புள்ளிவிபரங்கள் நுகர்வு குறைந்ததைக் காட்டவில்லை" என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு