You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் உயரதிகாரிகள் மாற்றம் உணர்த்துவது என்ன? முன்னாள் அதிகாரிகள் கருத்து
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் உட்பட அரசின் உயரதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.
நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதால் இது போன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன என முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி ரங்கராஜன் தெரிவிக்கையில், தேர்தலில் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாறுதலுக்கு உட்பட்டது ஏன் என்பதே புரியாத புதிராக உள்ளது என ஓய்வு பெற்ற கூடுதல் டிஜிபி ரவி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் புகாரும் - அதிகாரிகள் மாற்றமும்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் தங்களின் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை ஏப்ரல் 21 மாலை 5 மணியுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறி அவர்களை மாற்றம் செய்ய அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தொடர் புகார்களை வழங்கி வருகின்றன.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக தலைமை செயலாளர் மாற்றப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
'நடுநிலையை பொறுத்தே மாறுதல் ஏற்படுகிறது'
தேர்தல் சமயங்களில் அதிகாரிகள் மாற்றப்படுவது அவர்கள் நடுநிலையோடு செயல்பட முடியாததை உணர்த்துகிறது என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''அதிகாரிகள் மீது புகார்கள் வந்தாலோ அல்லது அவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்தாலோ அவர்களின் நடுநிலைமைத்தன்மையை ஆராய்ந்த பிறகே தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்'' என்றார் அவர்.
மேலும் அதிகாரிகளின் மாற்றம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அதிகாரிகள் ஏன் மாற்றப்படுகிறார்கள் என்ற காரணம் தேர்தல் ஆணையத்திடம் மட்டும்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
"தலைமை பொறுப்பில் உள்ள உயரதிகாரிகள் மாற்றப்படும் போது அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு வித அச்ச உணர்வையும் மனசோர்வையும் இவை ஏற்படுத்துகிறது. எனவே புகாரின் மீது முகாந்திரம் இருந்தால் மட்டுமே அவர்கள் மாற்றப்பட வேண்டும்" என்றார் மூத்த பத்திரிகையாளர் எஸ் பி லட்சுமணன்
முன்னாள் அதிகாரி கூறுவது என்ன?
''அதிகாரிகள் ஓர் அரசியல் கட்சி சார்புடையவர்கள் என்று சொல்வது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடக்கக்கூடியது" என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரங்கசாமி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''தேர்தல் சமயங்களில் பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மாற்றப்படுவது அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரம். அதிகாரிகள் மாற்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நேர்மையான தேர்தலை நடத்த யாரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற முடிவெடுக்கும் முழு உரிமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நடக்கிறது" என்றார் அவர்.
மேலும் பேசிய அவர், ''அதிகாரிகள் ஒரு கட்சி தொடர்புடையவர்கள் என்று சொல்வது பொதுவான கருத்தாக இருக்கலாம், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு உள்ளது" என்றார்.
''தேர்தல் கள பணிகளில் மாவட்ட ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளர் மற்றும் மற்ற அதிகாரிகள் போல் தலைமை செயலாளருக்கு நேரடி தொடர்பு ஏதும் இல்லை." என்றார் அவர்.
"அதே சமயம் மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அவர்கள் மாற்றப்படுவதால் அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்று பொருளல்ல" என்று அவர் கூறினார்.
'புரியாத புதிர்'
''தேர்தல் கால புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றம் நடைபெறுவதாக இருந்தாலும் தேர்தலில் தொடர்பில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றப்பட்டது முரணாக உள்ளது" என்கிறார் முன்னாள் கூடுதல் டிஜிபி ரவி ஐபிஎஸ்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களோடு தொடர்பில் இருப்பார்கள் என்ற எண்ணத்திலும், பெறப்படும் புகார்களின் அடிப்படையிலும் அவர்கள் மாற்றப்படுகிறார்கள்" என்றார்.
"தலைமை செயலாளர் தினசரி அடிப்படையில் முதலமைச்சருடன் தொடர்பில் இருப்பவர். அதனால் அவரை மாற்றியிருக்கலாம், ஆனால் முன்னாள் முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த ஒருவரை தலைமை செயலாளராக நியமனம் செய்யும் போது, அந்த நியமனத்தில் சந்தேகம் எழுவது இயல்பு" என்றார் அவர்.
"தேர்தல் பணிகளில் சம்மந்தமில்லாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றப்பட்டதற்கான காரணம் ஏன் என்று தெரியவில்லை" என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு