காணொளி: 'இடிபாடுகளுக்கு அடியில் என் மகள் இருக்கிறாள்' - இரானில் ஒரு தாயின் கண்ணீர்

காணொளி: 'இடிபாடுகளுக்கு அடியில் என் மகள் இருக்கிறாள்' - இரானில் ஒரு தாயின் கண்ணீர்

"என் மகள் இடிபாடுகளுக்கு அடியில் மூன்று நாட்களாக சிக்கியுள்ளார், அவளுக்கு இருட்டு என்றால் பயம். மர்யம்…"

தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள ரெசலாத் என்ற குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

"குண்டு திடீரென தாக்கியதில் நான் தூக்கியெறியப்பட்டேன். அதன்பின் மற்றொரு தாக்குதல் நடந்தது, நான் சுவரில் மோதி விழுந்தேன்." என்கிறார் அலி.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்குள் இருந்த ஒரு கட்டடத்தில் வசித்து வந்தார் அலி. இது அவருடைய உண்மையான பெயர் அல்ல.

"என்னுடைய கைகள், முதுகு, கால்கள் மற்றும் காதுகளிலிருந்து ரத்தம் வழிந்தது. இப்போது என்னிடம் ஒன்றுமே இல்லை." என கூறுகிறார் அலி.

தாங்கள் "இரானிய பசிஜின் ராணுவ வளாகத்தை" குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறியது. பசிஜ் ஆயுதக் குழுவானது இரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாகும்.

"வழங்கப்பட்ட இடத்தகவல்களின் அடிப்படையில் இரானிய பசிஜ் ஆயுதக்குழுவின் ராணுவ வளாகம் தாக்கப்பட்டது" என்கிறது, ஐடிஎஃப் ஊடக அலுவலகம்.

பிபிசி ஐ முடிந்தவரை காட்சி ஆதாரங்களைச் சேகரித்தது, மேலும் செயற்கைக்கோள் படங்களையும் பகுப்பாய்வு செய்துள்ளது. இந்தக் கட்டடம் பசிஜ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

ஆனால் அன்றைய தினம், அடுத்தடுத்து மூன்று குடியிருப்புக் கட்டடங்களும் தாக்கப்பட்டன. 2,000 பவுண்டுகள் எடை கொண்ட மார்க் 80 வழிகாட்டப்பட்ட குண்டு போன்ற ஒரு ஆயுதத்தால் இது தாக்கப்பட்டிருக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 60 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்த வீடுகளும் வணிக நிறுவனங்களும் கடுமையாக சேதமடைந்தன.

"யார் நலமாக இருக்கிறார்கள், யார் நலமாக இல்லை என்று எனக்குத் தெரியாது. அந்த சந்தின் முடிவில் இருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்." என கூறுகிறார் அலி.

இந்தச் சம்பவங்கள் குறித்து நாங்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையிடம் கேட்டோம். அவர்கள் தாக்குதல்களை உறுதிப்படுத்தினர்… ஆனால், மேலதிக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க பாதுகாப்புத் துறை இதுகுறித்து பதிலளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு