சிங்கவால் குரங்குகள் நகரங்களுக்கு வருவதால் காடுகளுக்கு பாதிப்பா? 40 ஆண்டு ஆய்வு கூறுவது என்ன?

பட மூலாதாரம், CCMB Govindhaswamy Umapathy
மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் சிங்கவால் குரங்குகள், மழைக்காடுகளை விட்டு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குழுக்களாக இடம்பெயர்ந்து வாழப் பழகியிருப்பதை காட்டுயிர் ஆய்வாளர்கள் 40 ஆண்டு கால தொடர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
காடுகள் துண்டாடப்பட்டதால் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்த சிங்கவால் குரங்குகள், ஒரு கூட்டத்துக்கு உள்ளேயே இனப்பெருக்கம் செய்வதால் மரபியல் ரீதியான பாதிப்புகளை அடைந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால் இவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதும், குறிப்பாக பாதுகாக்கப்படாத பகுதிகளான தனியார் தோட்டப் பகுதிகளில் பல மடங்கு அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் தரும் உணவால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதையும், இதனால் அவை மனிதர்கள் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம்பெயரும் அபாயம் இருப்பதையும் காட்டுயிர் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவற்றைப் பாதுகாக்க தமிழக அரசு சமீபத்தில் நிதி ஒதுக்கியிருந்தாலும், சுற்றுலா கட்டுப்பாடு மற்றும் வாழ்விடப் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டியதையும் காட்டுயிர் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிங்கவால் குரங்குகள் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை?

பட மூலாதாரம், CCMB Govindhaswamy Umapathy
காட்டுயிர் ஆய்வாளர்கள் பகிரும் தகவலின்படி, இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட வகையான குரங்குகள் உள்ளன. தமிழகத்தில் 4 வகையான குரங்குகள்தான் முக்கியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
குடியிருப்புகள், சாலையோரங்களில் காணப்படும் சாதாரண குரங்குகள் (Bonnet macaque), காடு மற்றும் காட்டையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் காமன் லங்கூர், நீலகிரி லங்கூர் ஆகியவற்றை மக்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் சோலைக்காடுகள் மற்றும் மழைக்காடுகளில் மட்டுமே வாழும் சிங்கவால் குரங்குகளை (Lion-tailed macaque) மக்கள் பார்த்திருப்பது அரிது.
இவற்றின் முக்கிய உணவு பழங்கள் என்பதுதான், ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கின்ற மழைக்காடுகளை மட்டுமே இவை வாழ்விடங்களாகக் கொண்டிருப்பதற்குப் பிரதான காரணம் என்கின்றனர் காட்டுயிர் ஆய்வாளர்கள்.
சிங்கவால் குரங்குகள் சாப்பிட்டு வெளியிடும் கழிவுகளும், மழைக்காடுகளில் மீண்டும் அந்த மரங்கள் உற்பத்தியாகி, தாவர சுழற்சி நடப்பதற்கான முக்கிய சூழலியல் காரணியாக இருப்பதும் ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. அடர்வனங்களில் பழமரங்கள் அதிகமிருப்பதில் இவை பெரும் பங்காற்றுகின்றன.
தலை மற்றும் பிடரிப்பகுதியில் சிங்கம் போன்ற தோற்றத்துடன் இருப்பதுடன், இதன் வால் சிங்கத்தின் வாலைப்போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றதாக ஒரு கருத்துரு உள்ளது.
தமிழில் சோலைமந்தி என்று அழைக்கப்படும் சிங்கவால் குரங்குகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழக்கூடிய ஓரிட வாழ்வியாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன.
காட்டுயிர் ஆய்வாளர்கள் பகிரும் தகவலின்படி, சிங்கவால் குரங்குகளின் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள்.
அழியும் நிலையிலுள்ள உயிரினங்களின் பட்டியலில் உள்ள காட்டுயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கவால் குரங்கு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி அட்டவணை ஒன்றில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கவால் குரங்குகள் குறித்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த காட்டுயிர் ஆய்வாளர்கள் பலரும் இணைந்து, ஒரு தொடர் ஆய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ELSEVIER-Journal for Nature Conservation இதழில், 'வாழ்விடங்கள் துண்டாடப்படுவதால் சிங்கவால் குரங்குகள் எதிர்கொள்ளும் விளைவுகள்' என்ற தலைப்பில் 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இடம்பெற்றுள்ளன.
கோவை சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON), பாரதியார் பல்கலைக்கழகம், மைசூரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CSIR) ஆகியவற்றைச் சேர்ந்த காட்டுயிர் ஆய்வாளர்கள் சாந்தணு மகோதா, ஹொன்னவள்ளி என்.குமாரா, கோவிந்தசாமி உமாபதி, மிருதுளா சிங், மேகா சிங் ஆகியோர் இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 959 சதுர கி.மீ. உள்வட்டப்பகுதி (CORE AREA), 521 சதுர கி.மீ. வெளிவட்டப்பகுதி (BUFFER AREA) என மொத்தம் 1480 சதுர கி.மீ. பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 220 மீட்டரில் இருந்து 2,515 மீட்டர் உயரம் வரையிலான மலைப்பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 500 மி.மீ.- 4,500 மி.மீ. வரை மழை பெய்யும் மழைக்காடுகளே ஆய்வின் பிரதான பகுதிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று 5 டிகிரி செல்சியஸ் துவங்கி 40 டிகிரி செல்சியஸ் வரையிலான காலநிலையுள்ள பகுதிகளில்தான் சிங்கவால் குரங்குகள் குறித்து 40 ஆண்டுகள் ஆய்வு நடந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 10 துண்டாடப்பட்ட மழைக்காடுகள் தான், சிங்கவால் குரங்குகளின் வாழ்விடங்களாக இருப்பதாகக் குறிப்பிடும் இந்த அறிக்கை, அங்குதான் தொடர் ஆய்வை மேற்கொண்டுள்ளது. துண்டாடப்பட்ட பகுதிகளின் பரப்பு, பாதுகாப்பு நிலை ஆகிய இரு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நெறிமுறைகளை இக்குழுவினர் உருவாக்கி வனத்துறை அனுமதியுடன் இதைச் செய்துள்ளனர்.

பட மூலாதாரம், SACON Honnavalli N.Kumara
சிங்கவால் குரங்குகள் எண்ணிக்கை உயர்வு
கடந்த 1974ஆம் ஆண்டிலேயே இந்த ஆராய்ச்சியை காட்டுயிர் ஆய்வாளர் அஜித்குமார் என்பவர் துவக்கி விட்டதாகத் தெரிவித்தார், காட்டுயிர் ஆய்வாளரான கோவிந்தசாமி உமாபதி.
அப்போதிருந்து 1982 வரை இதைப்பற்றி ஆய்வு செய்த அஜித்குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்காக சென்றபோது அங்கிருந்து அரிய வகை காட்டுயிர் நிபுணர் டேவிட் சிவர்ஸ் அறிவுரையின்படி, இந்தியா வந்த பின்பு 1993ஆம் ஆண்டிலிருந்து சிங்கவால் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தினார் என்கிறார் கோவிந்தசாமி உமாபதி.
பிபிசி தமிழிடம் பேசிய உமாபதி, ''அவருடைய மாணவனாக இருந்த நான், அவரது அறிவுறுத்தலின்படி 1993ஆம் ஆண்டிலிருந்து சிங்கவால் குரங்குகளை காணச் சென்றேன். அப்போதிருந்து அவற்றின் வாழ்விடம், குணாதிசயம், எண்ணிக்கை குறித்து பல்வேறு காட்டுயிர் ஆய்வாளர்களும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அவர் கூறிய இடத்தில் அப்போது 5, 6 என்றிருந்த எண்ணிக்கை, 30 ஆண்டுகளில் 24 ஆக உயர்ந்து, இப்போது எனது மாணவன் சென்று பார்த்தபோது 30–35 என உயர்ந்துள்ளது'' என்றார்.
கோவிந்தராஜ் உமாபதி, ஹைதராபாத் அழிவினப் பட்டியலில் உள்ள உயிரினங்களின் பாதுகாப்பு மையத்திலுள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களின் ஆய்வறிக்கையின்படி, மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை, 40 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2021 பிப்ரவரியில் இருந்து 2024 ஆகஸ்ட் வரையிலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 10 துண்டாடப்பட்ட மழைக்காடுகள் மற்றும் தோட்டப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 37 குழுக்களில் (HERD) தோராயமாக 800 சிங்கவால் குரங்குகள் இருக்கின்றன என்று அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் 460, பாதுகாக்கப்படாத பகுதிகளில் 338 சிங்கவால் குரங்குகள் வாழ்கின்றன.
இந்த 37 குழுக்களில் 29 குழுக்கள், பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குள்ளும், 8 குழுக்கள் பாதுகாக்கப்படாத காட்டுப் பகுதிகளான தோட்டங்களுக்குள்ளும் இருந்ததாகத் தெரிவித்தார் இந்த ஆய்வறிக்கையை முதன்மையாகத் தொகுத்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் ஹொன்னவள்ளி என்.குமாரா. இன்னும் சொல்லப் போனால் மழைக்காடுகள் மற்றும் சோலைகளுக்குள் இருந்த குழுக்களில் இருந்த சிங்கவால் குரங்குகளின் அடர்த்தியைவிட தோட்டங்களில் இருந்த குழுக்களில் எண்ணிக்கை அடர்த்தி அதிகம் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், CCMB Govindhaswamy Umapathy
என்.குமாரா, கோவை சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் முதன்மை விஞ்ஞானியாகவுள்ளார்.
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை நிலையாக இருப்பதாகவும், பாதுகாக்கப்படாத பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் உள்ள முரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய என்.குமாரா, ''பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விட, வெளியிடப் பகுதிகளில் இவற்றின் பெருக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பு பெரும்பாலும் கோடைக் காலத்தில் எடுக்கப்பட்டவை என்பதால், பருவகால மாறுபாட்டை வைத்து இன்னும் சில விஷயங்களை கணிக்க வேண்டியுள்ளது. அத்துடன் இவற்றில் 8 குழுக்கள் இருந்த இடங்களின் நிலப்பரப்பு, ஆய்வுக்குக் கடினமாக இருந்ததால் அவற்றின் வயது பாலின அமைப்பைக் கண்டறியமுடியவில்லை'' என்றார்.
ஒட்டு மொத்தமாகக் கணக்கிடும்போது, மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதுமாக, 2500–3000 சிங்கவால் குரங்குகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று காட்டுயிர் ஆய்வாளர் உமாபதி தெரிவித்தார். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் இந்த ஆய்வு தொடர்ச்சியாக நடந்துள்ளது. இந்த ஆய்வில் கிடைத்துள்ள தரவுகளின்படி, சிங்கவால் குரங்குகள் வாழ்விட நிபுணத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சில பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை மாறாமல் இருந்ததையும், சில பகுதிகளில் பல மடங்கு அதிகரித்ததையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உதாரணமாக, குரங்குமுடியில் உள்ள குழுவில் 1990ஆம் ஆண்டில் 19 குரங்குகளுடன் இருந்த ஒரு குழு, 2021இல் 83 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் அது ஒரு குழுவாகவே இருந்தது.
அதேநேரத்தில் டாடா காஃபி, பன்னிமேடு பகுதிகளிலுள்ள ஒரு குழு பல பத்தாண்டுகளாக முறையே 15 மற்றும் 7 ஆக மாறாமல் இருந்து 2024ஆம் ஆண்டில் 21 மற்றும் 15 என அதிகரித்துள்ளன. ஆனால் ஆண்டிப்பாறை, மானாம்பள்ளி, அக்காமலை, வரகளியாறு ஆகிய வனப்பகுதிகளில் எண்ணிக்கை மாறாமல் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய காட்டுயிர் ஆய்வாளர் உமாபதி, ''வறட்டுப்பாறை என்ற 24 ஹெக்டேர் (59 ஏக்கர்) பரப்பளவுள்ள ஒரு தோட்டப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் குரங்கு, 3 பெண் குரங்குகள், 3 குட்டிகள் என 7 குரங்குகள் இருந்தன. இப்போது பார்த்தபோதும் அதே எண்ணிக்கையிலான குரங்குகள் மட்டுமே இருக்கின்றன. அந்த வாழ்விடத்தின் தாங்குதிறன் அதுதான் என்பது ஆய்வில் தெரிகிறது'' என்றார்.
அதேநேரத்தில் புதுத்தோட்டம் என்ற ஒரு தோட்டப்பகுதியில் 1984ஆம் ஆண்டில் 17 குரங்குகளுடன் இருந்த ஒரு குழு, 1994ஆம் ஆண்டில் பார்த்தபோது 2 குழுக்களாகி 40 குரங்குகளாகி விட்டதாகவும், இந்த 2 குழுக்கள் 2010ஆம் ஆண்டில் 122 என்ற எண்ணிக்கையில் அதிகரித்ததாகவும் அவர் கூறுகிறார். அந்த 2 குழுக்கள் 2015ஆம் ஆண்டில் 4 குழுக்களாகி 2020ஆம் ஆண்டில் 200 ஆகி, 2024ஆம் ஆண்டில் 5 குழுக்களாகி 225 குரங்குகளாக அதிகரித்திருப்பதை தங்கள் குழுவினர் கண்டறிந்துள்ளதாகச் சொல்கிறார் உமாபதி.
புதுத்தோட்டத்தில் இவ்வாறு சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை, இத்தனை மடங்கு அதிகமானதற்கான பின்னணி காரணிகள் தெரியவில்லை என்று குறிப்பிடும் இந்த அறிக்கை, மனித உணவுப் பொருட்களின் நுகர்வு, பயிரிடப்பட்ட பழங்கள் அதிகம் கிடைப்பது, மனித நடமாட்டம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப தகவமைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று குரங்குமுடியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் 78, பனதியார் என்ற பகுதியில் 34 என்ற எண்ணிக்கையில் ஒரே குழுவாக இவை இருந்ததையும் இக்குழுவினர் பார்த்துள்ளனர். புதுத்தோட்டம், பன்னிமேடு, குரங்குமுடி, டாடா காபி ஆகிய தனியார் தோட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படாத பகுதியாக இருந்தாலும் அவற்றை இவை நிரந்தர வாழ்விடமாக மாற்றிக் கொண்டிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை முன்பு காடாக இருந்து, தோட்டங்களாக துண்டாடப்பட்ட பகுதிகளாக இருந்தாலும் அவற்றில் அயனி பலா, வெடிப்பலா மரங்கள் அதிகமிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
"ஒரே பகுதியில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் புதுத்தோட்டத்தில் இருந்து ஒரு குழு வால்பாறை நகரத்திற்கும், மற்றொரு குழு ரொட்டிக்கடைப் பகுதிக்கும் அடிக்கடி வருகிறது. அய்யர்பாடியில் மக்கள் இந்த சிங்கவால் குரங்குகளுக்கு உணவளிப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. இவை இந்த வகையான உணவுக்குப் பழகிவிட்டால், அவை மனித குடியிருப்புப் பகுதிகளுக்கு அதிகமாக நகரும் வாய்ப்பு அதிகம். இது அவற்றின் நடத்தையையும், இனப்பெருக்கத்தையும் கண்டிப்பாக பாதிக்கும்'' என்கிறார் ஹொன்னவள்ளி என்.குமாரா.

பட மூலாதாரம், SACON Honnavalli N.Kumara
'மரபியல் பாதிப்பு'
கடந்த 40 ஆண்டுகளில், சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், 1996இல் இருந்து 2024க்கு இடையில் வயது-பாலின விகிதத்தில் பெரிய மாற்றமில்லை என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அதாவது 1996ஆம் ஆண்டில் 1:2.71 ஆக இருந்த வயது வந்த ஆண், பெண் விகிதாச்சாரம், 2011ஆம் ஆண்டில் 1:4.27 ஆக அதிகரித்து, 2024ஆம் ஆண்டில் 1:3.68 ஆக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
தாய்–குழந்தை விகிதாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றமில்லை என்பதையும் இது பதிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் குழுக்களில், பெண் குரங்குகள் பிரசவத்துக்குப் பின் மீண்டும் கர்ப்பமாகும் கால இடைவெளி மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறும் உமாபதி, அதற்கு அவற்றுக்குக் கிடைக்கும் உணவு வளமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்.
ஒரே வாழ்விடப் பகுதிகளில் குழுக்களாக வாழும் குரங்குகளுக்குள் பல தலைமுறைகளாக இனப்பெருக்கம் நடப்பதால், மரபியல்ரீதியாக அவை ஆரோக்கியமாக இல்லை என்பதையும் தங்கள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் அவர்.
இதுபற்றி விளக்கிய உமாபதி, ''சிங்கவால் குரங்குகளில் பெரும்பாலும் ஒரு குழுவில் ஓர் ஆண்தான் இருக்கும். தீவு போன்ற வாழ்விடத்தில் வெளியே போக முடியாது. சில பகுதிகளில் ஒன்றிரண்டு இருக்கும்போது அவற்றுக்குள் சண்டை நடக்கும். அடர்வனங்களாகவுள்ள மழைக்காடுகளில் ஆண் குரங்குகள் பரவலாக வாழும். அதனால் வெவ்வேறு பெண் குரங்குகளுடன் இணை சேரும். அது மரபணுவை வலுவாக்கும். ஆனால் துண்டாடப்பட்டுள்ள தோட்டப் பகுதிகளில் 1800களின் இறுதியிலிருந்து 20–30 தலைமுறையாக ஒரே பகுதியில் இருப்பதால் அவற்றுக்குள் நடக்கும் இனப்பெருக்கத்தால் இத்தகைய மரபியல் பாதிப்பு ஏற்படுகிறது'' என்றார்.
சிங்கவால் குரங்குகளின் சாணத்தை (Dung) சேகரித்து, அவற்றின் மூலமாக இவை குறித்த மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் ஆய்வுக்குழுவினர் தகவல் பகிர்ந்தனர். இந்த குரங்குகள் பழங்களையே அதிகமாக உட்கொள்ளும் என்பதால், பழமரங்கள் அதிகமுள்ள மழைக்காடுகள் தான் இவற்றின் வாழ்விடங்களாக இருந்தன என்று கூறும் இந்த அறிக்கை, இத்தகைய சோலைக்காடுகளும், மழைக்காடுகளும் தோட்டங்களால் துண்டிக்கப்பட்டு இவற்றின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள முரண்களுக்குக் காரணம் என்கின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சல் வரையறுக்கப்பட்டுள்ளது. மனித நடமாட்டம், சுற்றுலா நடவடிக்கை குறைவாகவுள்ளது. அதற்கு மாறாக துண்டாடப்பட்ட வாழ்விடங்களாகவுள்ள பாதுகாக்கப்படாத தோட்டப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் தோட்ட செயல்பாடு, குடியிருப்பு, வாகன போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் எனப் பலவிதமான மனிதத் தொந்தரவுகள் அதிகரித்து இருப்பதாகக் கூறுகிறது அறிக்கை.
இதற்கேற்ப வால்பாறை–அதிரப்பள்ளி சாலையில் சில குரங்குகள் வாகனம் மோதி உயிரிழந்திருக்கின்றன.

வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதாகக் கூறும் காட்டுயிர் ஆய்வாளர் ஆனந்தகுமார், ''சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை போலவே அவற்றுக்கான அச்சுறுத்தல்களும் மிக அதிகமாகியுள்ளன. இந்த குரங்குகளுக்கு உணவு வழங்குவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சில உணவுகள் மனிதர்களுக்கே சேர்வதில்லை எனும்போது, அந்த குரங்குகளுக்கு பலவிதமான உடல் பாதிப்பு ஏற்படுவது உறுதி. மனித கைகளில் உள்ள பாக்டீரியாக்களாலும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது'' என்றார்.
இயற்கைப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானியான ஆனந்தகுமார், வால்பாறையில் கடந்த பல ஆண்டுகளாக யானைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர்கள் உட்பட பல்வேறு சூழலியல் ஆய்வாளர்கள் பலரும் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள், காட்டுயிர்களுக்கு உணவு அளிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
ஆறுகளின் தாய்மடியாகவுள்ள மழைக்காடுகள் நன்றாக இருப்பதில் சிங்கவால் குரங்குகளின் பங்கு அதிகம் என்பதால் இவற்றைப் பாதுகாப்பது மிக அவசியம் என்கின்றனர் உயிரியலாளர்கள்.
இதை உணர்த்தும் வகையில், சிங்கவால் குரங்குகளின் வாழ்விடங்களாகவுள்ள சிறு வனங்களைப் பாதுகாக்க வேண்டும். துண்டாடப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு இடையே பழமரங்களை நட்டு அவற்றை இணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கியமான பரிந்துரைகளையும் அரசுக்கு அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுபற்றி விளக்கிய உமாபதி, ''இவற்றைப் பாதுகாப்பதில் தொடர் கண்காணிப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக ஒரு குழுவில் ஒரேயொரு ஆண் குரங்கு மட்டும் இருந்தால் அங்கே மற்றொரு ஆண் குரங்கைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தனியார் தோட்டப் பகுதிகளில் பழமரங்களை நட்டு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பவர்களுக்கு ஏதாவது வரிச்சலுகை வழங்கலாம். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள்தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்க உதவும்'' என்றார்.
கடந்த ஆண்டில் தமிழக வனத்துறை சார்பில் சிங்கவால் குரங்குகள், சென்னை முள்ளெலி, கழுதைப்புலி ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. அதில் சிங்கவால் குரங்கு பாதுகாப்புக்காக மட்டும் ரூ.48.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.
"வாழ்விட கண்காணிப்பு, கணக்கெடுப்பு, பாதுகாப்பு இனப்பெருக்க மையங்களை அமைத்தல், இவற்றைப் பாதுகாப்பதற்கான ஆய்வுகள், வன இணைப்பை உறுதி செய்வதற்கான பாலங்கள், பள்ளிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கல்வி திட்டங்கள், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அறிவிப்புப் பலகைகள் மற்றும் முன்னணி வன ஊழியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்" என்று வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












