இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யாருடைய கை ஓங்கியுள்ளது? முன்னாள் வீரர்கள் மதிப்பீடு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேருக்கு நேர் மோதுகின்றன.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டி கடந்த ஒரு மாதமாகவே விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் மறுத்து, பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு, இறுதியில் பாகிஸ்தான் அரசு முடிவை மாற்றிக் கொண்டு, தனது அணி உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி அளித்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, இரு அணிகளின் மோதலை விட இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான்.
அதன்பின் 'கை குலுக்காமல் இருந்த விவகாரமாகட்டும் அல்லது இந்திய கேப்டன் சூர்யகுமார், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி இப்போது சவாலானதாக இல்லை" என்று கூறிய கருத்தாகட்டும், போட்டியின் முடிவை விட அதிக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தன.
ஒருவேளை இந்திய அணி கேப்டன் சூர்யகுமாரோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ பாகிஸ்தானை தங்களுக்கு 'நிகரான' ஒரு அணியாகக் கருதவில்லை என்றாலும், இரு நாடுகளையும் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் இப்போதும் மைதானத்தில் இந்த இரு அணிகளின் மோதலைக் காணத் திரள்கிறார்கள். ஒளிபரப்பாளர்களும் ரசிகர்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் தவற விடுவதில்லை.
இருப்பினும், போட்டியின் போது 'விளையாட்டு உணர்வு' பராமரிக்கப்படுவது குறித்த கவலைகள் நீடிக்கின்றன.
ஆசியக் கோப்பையின் போது நடந்தவை இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான புதிய யதார்த்தமாக மாறிவிட்டதாக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் அச்சம் தெரிவிக்கிறார்.
'கேம் ஆன்' என்ற நிகழ்ச்சியில் இந்திய-பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே மோசமடைந்து வரும் உறவுகள் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், " நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது என்பதால் பழைய விளையாட்டு உணர்வு மீண்டும் வரும் என்று நான் நினைக்கவில்லை, பிரச்னை என்னவென்றால், அவர்கள் அதை மீண்டும் கொண்டு வர விரும்பவில்லை. அவர்கள் தங்கள் அரசியலை வலுப்படுத்துவதற்காக வேண்டுமென்றே இதை இப்படியே வைத்திருக்கிறார்கள், இனிமேலும் அப்படியே செய்வார்கள்" என்று கூறினார்.
சோயிப் அக்தர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆசியக் கோப்பையின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், "வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட மேலானவை" என்றார்.
போட்டிக்கு முன்னதாக சனிக்கிழமை பிப்ரவரி 14 -ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்த முறை போட்டியின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்குவார்களா என்று சூர்யகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "இதைப் பார்ப்பதற்கு நீங்கள் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும்" என்றார்.
சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது இதே கேள்வி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடமும் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "அதைப் பற்றி நாளை(இன்று) பார்ப்போம்" என்று பதிலளித்தார்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் தாண்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில் ஏட்டளவில் இந்திய அணி மிகவும் வலுவாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கருதுகிறார்.
"இந்திய அணிக்கு சற்று சாதகம் இருப்பதாகத் தெரிகிறது. அவர்களிடம் சூர்யகுமார், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, பும்ரா போன்றவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சிறந்த வீரர்கள், இதுதான் சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் நம்புகிறோம்," என்றார்.
ஆனால், இந்த முறை பாகிஸ்தான் மீண்டு வர வாய்ப்பு இருப்பதாக சோயிப் அக்தர் கூறுகிறார். "இலக்கைத் எட்ட முயற்சிக்கும் போது பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம். 185 ரன்கள் இலக்கையும் எட்டிப் பிடிக்கும் திறன் கொண்டதாக பாகிஸ்தான் தெரிகிறது" என்றார் அவர்.
அதே சமயம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் துபையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'கிரிக்கெட்டில் எந்த அணியையும் எப்போதும் வெல்வதற்கு வாய்ப்புள்ள அணி என்று சொல்ல முடியாது' என்றார்.
"கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது வெறும் இரண்டு புள்ளிகளுக்கான விஷயம் என்று மட்டும் நினைத்து நீங்கள் மைதானத்திற்குள் செல்ல முடியாது. அன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த கால வரலாறு வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அந்த நாளில் சிறப்பாகச் செயல்படுவதுதான் வெற்றியை உறுதிப்படுத்தும். எதிரணிக்கு எதிராக நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டே ஆக வேண்டும்" என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணி எவ்வளவு வலுவானது?

பட மூலாதாரம், AFP via Getty Images
போட்டி கொழும்பில் நடந்தாலும், இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் கருதுகிறார்.
"பாகிஸ்தானுக்கு கொழும்பு சூழல் நன்றாகத் தெரியும், ஏனென்றால் அவர்கள் அங்கே விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்திய அணி எந்தச் சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடத் தெரிந்த அணி" என்றார்.
பாகிஸ்தானின் பேட்டிங் குறித்து கம்ரான் அக்மல் கூறுகையில், "வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் பந்துவீசும்போது அவர்களை யாரால் எதிர்கொள்ள முடியும்? அவர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை எப்போதும் சிரமப்படுத்தும் பந்துவீச்சாளர்கள். நமது பேட்டிங் வரிசையில் உள்ள அனைவரும் அவர்களுக்கு எதிராகத் திணறுவதையே பார்க்க முடிகிறது" என்றார்.
அதே நேரத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் 'ஸ்போர்ட்ஸ் நெக்ஸ்ட்' நிகழ்ச்சியில் பேசுகையில், 'இந்திய-பாகிஸ்தான் போட்டி பற்றி முன்னதாகவே அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் போட்டியின் போது அப்படி எதுவும் இருப்பதில்லை' என்றார்.
"இப்போது நான் இதை பலமுறை சொல்லிவிட்டேன். இந்தியா இப்போது பாகிஸ்தானின் வளர்ந்து வரும் அணியைத் தான் பார்க்கிறது. பாகிஸ்தானின் புதிய வீரர்களைப் பார்த்தால், அவர்கள் அறிமுகமாகும் போது அவர்களுக்கு எந்தச் சிறப்புத் தயாரிப்பும் இல்லாதது போலத் தெரிகிறது."
"ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்க்கும் போது, அது திலக் வர்மாவாக இருந்தாலும் சரி, சாய் சுதர்சனாக இருந்தாலும் சரி, அவர்கள் மிகுந்த தயாரிப்புடன் இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டது." என்றார் அவர்.
இருப்பினும், கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்களின் சாதனையும் மிகச் சிறப்பாக இல்லை என்பது உண்மைதான். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய பேட்ஸ்மேன்கள் சொந்த மைதானங்களிலேயே சுழற்பந்து வீச்சில் திணறினர். நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடர்களை இழந்தது.
பாகிஸ்தானால் சவால் தர முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டில் உத்தி முக்கியமானது, மேலும் கேப்டன் மைதானத்தில் எடுக்கும் முடிவுகளும் முக்கியம். உதாரணமாக, ஆசியக் கோப்பையில் அபிஷேக் சர்மாவின் அதிரடிக்கு எதிராக ஃபஹீம் அஷ்ரஃபை மிதவேகப் பந்துவீசச் செய்ய வைத்தது நல்ல உத்தியாக இருந்தது. இந்த உத்தி பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தரவில்லை என்றாலும், முந்தைய இரண்டு ஒருதலைப்பட்சமான போட்டிகளைப் போலல்லாமல், இறுதிப் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பை உச்சத்தில் வைத்திருந்தது.
பாகிஸ்தானின் தற்போதைய சுழற்பந்து வீச்சுத் தாக்குதல் எந்தவொரு பேட்டிங் வரிசைக்கும் அச்சுறுத்தலாக அமையலாம்.
குறிப்பாக, மர்ம சுழற்பந்து வீச்சாளர் என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக்கிற்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் கூறுகையில், இந்திய அணி முன்னேற்பாடு விஷயத்திலும் வலுவாக இருப்பதாகக் கருதுகிறார்.
"ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சென்ற பிறகும் இந்திய அணியில் எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்கள் சென்றால் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் வந்துவிட்டனர். திலக் வர்மாவும் தன்னை நிரூபித்துவிட்டார். இந்தியாவின் அணி மிகவும் வலுவாக உள்ளது" என்று அவர் கூறினார்.
உலகக் கோப்பையில் இரு அணிகளின் மோதலைப் பார்த்தால், இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் எட்டு முறை மோதியுள்ளன. 2021 உலகக் கோப்பை போட்டியைத் தவிர, மற்ற ஏழு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பாகிஸ்தானின் பேட்டிங் குறித்துப் பேசியுள்ளார்.
'பாகிஸ்தான் பேட்டர்கள் பற்றி நிறையப் பேசப்படுகிறது, ஆனால் அவர்களால் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை' என அவர் கூறுகிறார்.
உமேஷ் யாதவ் கூறுகையில், "பாபர் ஆசம் மற்றும் பிற பேட்டர்கள் பற்றி எவ்வளவு பேசப்படுகிறது. ஆனால் அவர்களின் பேட்டிங் வரிசை திணறுவதையே பார்க்க முடிகிறது. பாகிஸ்தான் அணியின் தரம் மிகவும் குறைந்துவிட்டது" என்றார்.
மறுபுறம், பாகிஸ்தான் அணியை எளிதாக எடைபோட முடியாது என்று இலங்கையின் முன்னாள் கேப்டன் சாமர கப்புகேதர கருதுகிறார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "இந்திய அணி வலுவானது. ஆனால் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு எதிராக விளையாடிய விதத்தைப் பார்த்தால், இது இந்தியாவிற்கு எளிதான போட்டியாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு சிறந்த போட்டியை நாம் காண்போம் என்று நம்புகிறேன்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












