'ஊர் பெயரால் பள்ளி, கல்லூரி, வங்கிகளில் அவமானம்' - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்தில் பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பொதுவாக நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது பெயர், படிப்பு, வேலை, இதைத் தாண்டி வரக்கூடிய அடுத்த கேள்வி 'எந்த ஊர்?'.

ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலை தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என்கிற குக்கிராம மக்கள்.

அதற்குக் காரணம், நிலப்பட்டாவில் 'அச்சந்தவிழ்த்தான்' என்றிருந்தாலும் சொத்து வரி ரசீது முதல் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை எனப் பல்வேறு அரசு ஆவணங்களில், அவர்களுடைய குக்கிராமத்தின் பெயர் 'பரச்சேரி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பிற கிராம மக்களும் இந்த ஊரை 'பரச்சேரி' என்றே அழைக்கிறார்கள்.

"சாதி அடையாளத்தின் அடிப்படையில் இருக்கும் ஊரின் பெயரால் நாங்கள் பல அவமானங்களை எதிர்கொள்கிறோம். முதலில் எங்களிடம் நன்றாகப் பேசுவார்கள், ஆனால் ஊர் பெயரைக் கேட்டதும் எதிரில் இருப்பவர்களின் முகம் சட்டென மாறிவிடும். அவர்கள் பார்வையே எங்களை கூனிக்குறுகச் செய்துவிடும்" என்கிறார் சமூக ஆர்வலரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவருமான குமார்.

தங்களது கிராமத்தின் பெயரை 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலை தாங்கள் புறக்கணிக்கப் போவதாக இக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், "இந்த குக்கிராமத்தின் பெயரை மாற்றுவதற்கான முறையான முன்மொழிவு ஏற்கெனவே தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்" என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' மக்களின் கோரிக்கை தொடர்பாக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், 'தேர்தலைப் புறக்கணிப்போம்' என்ற தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

'ஊர்ப் பெயர் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது'

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஊராட்சி அச்சந்தவிழ்த்தான், அதற்கு உட்பட்ட ஒரு சிறிய குக்கிராமம்தான் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்'.

அச்சந்தவிழ்த்தான் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அதிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

நிலப்பட்டாவில் 'அச்சந்தவிழ்த்தான்' என்றிருந்தாலும் மற்ற அரசு ஆவணங்களில் மட்டுமின்றி, சுற்றியுள்ள பிற கிராம மக்கள்கூட 'பரச்சேரி' என்ற பெயரில்தான் இந்த குக்கிராமத்தை அழைக்கிறார்கள் என்பதை அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்றபோது நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.

"சுற்றியுள்ள கிராம மக்கள் இதை சாதிய அடையாளத்துடன் 'பரச்சேரி' என அழைக்கிறார்கள். அரசு ஆவணங்களிலும் அதே பெயர் பதியப்பட்டுள்ளது. அதை மாற்ற நாங்கள் பல வருடங்களாகப் போராடி வருகிறோம்" என்கிறார் குமார்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கற்பகவள்ளி, "எங்கு சென்றாலும் இந்தப் பெயர் எங்களைத் துரத்துகிறது. அது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது" என்று கூறுகிறார்.

"ஒருமுறை மகளிர் குழு சார்பாக வங்கிக்கு பணம் போடச் சென்றபோது, அங்கு புது மேலாளர் வந்திருந்தார். அவர் எங்களிடம் ஊர் விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் வந்து 'இவர்கள் பரச்சேரியை சேர்ந்தவர்கள்' என கத்திச் சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது" எனக் கூறுகிறார் கற்பகவள்ளி.

"ஏன் இப்படிச் சொன்னீர்கள் என அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு உங்கள் ஊரின் பெயர் வங்கியின் பதிவுகளில் அப்படித்தானே உள்ளது என்கிறார்." என்றார் கற்பகவள்ளி.

இந்த ஊரின் பெயர் காரணமாக கல்லூரியில் படிக்கும் தனது மகனும் பல அவமானங்களை எதிர்கொள்வதாக கற்பகவள்ளி கூறுகிறார்.

"ஒரு கல்லூரி நிகழ்வில் என் மகன் ஏதோ தவறு செய்துவிட, அதற்கு ஆசிரியர் என் மகனைப் பார்த்து சாதிய அடையாளத்துடன் கூடிய ஊர்ப் பெயரை தொடர்புபடுத்திப் பேசி அசிங்கப்படுத்தியுள்ளார். இதை என் மகன் என்னிடம் சொல்லி அழுதான். சாதி அடையாளமுள்ள இந்த ஊரின் பெயர் எங்களுக்கு வேண்டாம்" என்கிறார் அவர்.

'பள்ளி மாணவர்கள் சந்திக்கும் பாகுபாடுகள்'

இந்த கிராமத்தின் பெயர் காரணமாக பணியிடங்கள், வங்கி, கல்லூரி, பள்ளிகள் போன்ற பல்வேறு இடங்களில் தாங்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக இக்கிராம மக்கள் கூறுகிறார்கள்.

"பள்ளியில் பிற கிராம மாணவர்கள் எங்களை சாதி அடையாளமுள்ள ஊர்ப் பெயரை குறிப்பிட்டே அழைப்பார்கள். ஆசிரியர்களிடம் சொன்னால், அதுதானே உங்கள் ஊர்ப் பெயர், இதிலென்ன இருக்கிறது எனச் சொல்வார்கள்" என்கிறார் வனஜா.

வனஜா, அச்சந்தவிழ்த்தான் அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

"ஒருமுறை, நான் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுப்பாடம் குறித்துத் தெரிந்துகொள்ள, என் வகுப்பு மாணவிக்கு அழைத்தேன். அவளது அம்மாதான் முதலில் பேசினார். எந்த ஊர் என என்னிடம் கேட்டார், 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' எனச் சொன்னேன். உடனே அவர், 'பரச்சேரியா?' எனக் கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு, எனது வகுப்புத் தோழியிடம் தொலைபேசியைக் கொடுத்தார்."

"நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, 'ஏன் பரச்சேரியைச் சேர்ந்த பெண்ணுக்கு நம் வீட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்தாய்?' என்று அவர் கத்துவது தெளிவாகக் கேட்டது. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை" என வேதனையுடன் விவரித்தார் வனஜா.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கணேசன் ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த கிராமத்தின் பெயர் அடுத்த தலைமுறையையும் பாதிப்பதாக அவர் கூறுகிறார்.

"நான் படிக்கும் காலத்திலேயே எனது ஊர் பெயரை என்னால் எங்கும் சொல்ல முடியாது. இப்போது என் மகனும் அவன் படிக்கும் பள்ளியில் அதே பிரச்னையை எதிர்கொள்கிறான். அடுத்த தலைமுறையாவது இத்தகைய அவமானங்களை எதிர்கொள்ளக் கூடாது" என்கிறார் கணேசன்.

ஆவணங்களில் உள்ள வெவ்வேறு பெயர்கள்

"சுமார் 15 ஆண்டுகளாக எங்கள் ஊர்ப் பெயரை மாற்ற கோரிக்கை வைத்து வருகிறோம். எங்கள் சாதியை அடையாளப்படுத்தக்கூடிய வகையில் 'பரச்சேரி' அல்லது 'பரக்குடி' என்று அழைக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் பல்வேறு அரசு ஆவணங்களிலும் அதே பெயர்தான் இடம்பெறுகிறது" என்கிறார் சமூக ஆர்வலரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவருமான குமார்.

சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் முதல், வங்கிக் கணக்குப் பதிவுகள், ஆதார் மற்றும் பான் அட்டைகள் போன்ற ஆவணங்களில் 'பரச்சேரி' என்ற பெயர் காணப்படுகிறது.

அதேநேரம், நிலப் பட்டா பதிவேடுகளில் இக்கிராமம் அதிகாரப்பூர்வமாக 'அச்சந்தவிழ்த்தான்' என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அச்சந்தவிழ்த்தான் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், "எனது அதிகாரத்திற்கு உட்பட்ட பணிகளிலும், அது தொடர்பான ஆவணங்களிலும் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என்றே குறிப்பிடப்படுகிறது" என்று கூறுகிறார்.

"ஆனால், சில அதிகாரிகள் வேண்டுமென்றே 'பரச்சேரி' எனக் குறிப்பிடுவார்கள், கேட்டால் அரசிதழில் மாற்றம் கொண்டு வந்தால் தானே அதிகாரபூர்வமாக மாற்ற முடியும் என்கிறார்கள்" என்று கூறுகிறார் குமார்.

கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கான சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அரசாணை வெளியிட்டது. புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஊர்ப் பெயர்களை மாற்றுவதில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"அனைத்து ஆவணங்களிலும் அதிகாரப்பூர்வமாக இந்தப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது" என்கிறார் அச்சந்தவிழ்த்தான் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன்.

ஆனால், "நாங்கள் பல ஆண்டுகளாக கிராமத்தின் பெயரை மாற்றப் போராடி வருகிறோம். கடந்த ஆண்டு போடப்பட்ட வழக்கையும் இந்தத் தேர்தலையும் காரணம் காட்டுவது என்ன நியாயம்?" எனக் கேள்வியெழுப்புகிறார் குமார்.

தாசில்தார், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசுத் தரப்புகளுக்கும் மனுக்களை அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால்தான் தேர்தலை புறக்கணிக்கத் தாங்கள் முடிவெடுத்ததாக அவர் கூறுகிறார்.

"வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என்று நாங்களே ஒரு பலகையையும் ஊரின் நுழைவாயிலில் வைத்துவிட்டோம், அரசு எங்கள் கோரிக்கையைக் கேட்க வேண்டும் என்றுதான் தேர்தல் நேரத்தில் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்ற எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம்" என்கிறார் குமார்.

பெயர் மாற்றம் தொடர்பான கிராம மக்களின் கோரிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ராவிடம் கேட்டபோது, "அச்சந்தவிழ்த்தான் வருவாய் கிராமத்தில் உள்ள குக்கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. அப்பகுதிக்கு மறுபெயரிடுவதற்கான முறையான முன்மொழிவு ஏற்கனவே உள்ளாட்சித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு