You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாக் நீரிணையில் முட்டிமோதும் இலங்கை - இந்திய மீனவர்கள்: வாழ்வாதாரப் போராட்டமும் தீர்வற்ற நிலையும்
- எழுதியவர், ஆர்.யசிஹரன்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பாக் நீரிணை - இது வெறும் கடல் பரப்பு மட்டுமல்ல, தொப்புள்கொடி உறவுகளால் பிணைக்கப்பட்ட இரு தேசத்து மீனவர்களின் வாழ்வாதாரக் களம்.
ஒருபுறம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தோள்மீது கைபோட்டு உறவு கொண்டாடிய இதே மீனவர்கள், தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடுக்கடலில் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒருபுறம் "எம் வயிற்றுப் பிழைப்புக்காகவே வலைவீசுகிறோம்" என்று கண்ணீர் மல்கும் தமிழக மீனவர்கள்; மறுபுறம் "எமது கடல் வளத்தையும் எதிர்காலத்தையும் அத்துமீறிச் சூறையாடாதீர்கள், சட்டத்தைக் கடுமையாக்குங்கள்" என்று ஆவேசப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்கள்.
இந்த இரண்டு தரப்பு நியாயங்களுக்கும் நடுவே, பாக் நீரிணை ஒரு பதற்றமான களமாகவே காட்சியளிக்கின்றது.
பாக் நீரிணை என்பது என்ன?
இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியே பாக் நீரிணை எனப்படுகிறது.
சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக்கின் பெயர்தான் இந்த நீரிணைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. ‘பவளப் பாறைகள், மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்ல முடியாது. மீன்வளம் மிக்க இப்பகுதியே தற்போது போராட்ட களமாகியிருக்கிறது.
"நிம்மதியாக வலைவீசக் கூட பயமாக இருக்கிறது"
இது குறித்து இந்திய இராமேஸ்வரம் மாவட்ட விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா பிபிசி தமிழுக்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
"இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது மிக நீண்டகால கோரிக்கையாகும். ஆனால் சமீப காலங்களில் கைதுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் மீனவர்களினால் நிம்மதியாகத் தொழிலில் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது," என அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும். " கடந்த 10 வருடங்களாக இரு நாட்டு அரசுகளும் மீனவர் பிரச்னை குறித்து உருப்படியாகப் பேசவில்லை. இந்த மௌனத்தினால் இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் இழுவை மடிவலைகளை எதிர்க்கின்றனர். ஆனால் இந்திய அரசு எமக்கு அந்த முறைக்கே அனுமதி அளித்துள்ளது. இந்த முரண்பாட்டைத் தீர்க்கக் காத்திரமான பேச்சுவார்த்தை அவசியம்" எனக் குறிப்பிட்ட அவர், "வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிப்பவர்களை இலங்கை அரசு தனது சட்டத்தின் படி 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கிறது. இது மனிதநேயமற்ற செயல்," என ஜேசுராஜா தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்படும் படகுகள் ஒவ்வொன்றும் இலங்கை மதிப்பில் 25 லட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை பெறுமதியானவை. அவற்றைத் தடுப்பில் வைத்து சிதைப்பது மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் என்ற தமது துயரங்களை பகிர்ந்துகொண்டார்.
"ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் கச்சத்தீவு விவகாரத்தைப் பேசுவது வழக்கமாகிவிட்டது. கச்சத்தீவை மீட்பது தீர்வாகாது. மாறாக, இரு நாட்டு மீனவர்களும் 'தொப்புள்கொடி உறவுகளாக' இணைந்து மீன்பிடிக்கப் பொதுவான சட்டதிட்டங்களை உருவாக்குவதே வழி," என்கிறார் அவர்.
இலங்கை மீனவர்களின் நிலைப்பாடு என்ன?
மறுபுறம், அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா மீனவர்களின் அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறார்.
"இந்தியா எமது அண்டை நாடு, நாம் உறவினர்கள் தான். ஆனால் தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறல்லவா. ஆகவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நியாயமென ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை என்பது ஒரு தனி இறையாண்மை கொண்ட நாடு. எமது எல்லைக்குள் அத்துமீறுவதை ஏற்க முடியாது," எனக் கூறும் அவர், இலங்கை அரசு மீது ஒரு முக்கியக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்:
"வடக்குக் கடலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய படகுகள் நுழைகின்றன. , அவர்கள் இழுவை மடிவலை முறையில் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இலங்கை அரசாங்கமோ ஒரு சொற்ப அளவிலான மீனவர்களை கைதுசெய்து இலங்கையின் வடக்கு மீனவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
2017-ஆம் ஆண்டு (2018-ல் நடைமுறைக்கு வந்த) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் (திருத்தச்) சட்டத்தின் படி, இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டு மீனவர்களுக்கு 60 இலட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க முடியும். ஆனால் இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என அன்னராசா சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் கடற்படையின் விளக்கம்
இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில், இந்திய மீனவர்களின் ஊடுருவல் என்பது நாட்டின் இறையாண்மை மற்றும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி அச்சுறுத்தல் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2026 இன் முதல் நான்கு மாதங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதே தற்போதைய தீர்வு" என சுட்டிக்காட்டினார்.
" எக்காரணம் கொண்டும் எமது கடல் வளத்தை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தியத் தூதரகம் மற்றும் தமிழக அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதிலும், இழுவை மடி வலைகளின் பயன்பாடு மற்றும் சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க 'சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதே' தற்போதைய ஒரே தீர்வு என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்."
அதன்படி, இந்திய மீனவர்கள் தொடர்பான இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தமிழகம் மற்றும் இந்திய உயர் ஆணையருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். " உள்ளூர் மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்னைக்கு, மோதல்களுக்கு இடமளிக்காமல் விரைவான தீர்வு வழங்கப்படும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் கைது செய்யப்படுகின்ற நிலையில், கள நிலவரம் குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் பிபிசி தமிழுக்கு கூறுகையில், "நாங்கள் இந்திய மீனவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தடைசெய்யப்பட்ட இழுவை மடி வலைகளால் ' (Bottom Trawling) முறையால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" என தெரிவித்தார்.
"இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது செய்வது என்பது, இலங்கையின் கடல் வளத்தையும் எமது நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு தொடர்ச்சியான மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கையாகும்.
2026-ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்துள்ளோம். எமது ரோந்துப் பணிகளின் போது கைது செய்யப்படும் மீனவர்கள் எவ்விதமான வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவதில்லை; அவர்கள் மனிதாபிமான முறையிலேயே கையாளப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
கடல் எல்லைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை அளிப்பதால், இனிவரும் காலங்களிலும் எமது எல்லைக்குள் அத்துமீறுபவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரமாகவே இருக்கும்." என குறிப்பிட்டார்.
தரவுகள் சொல்லும் கசப்பான உண்மை:
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதாகக் கூறி இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தசாப்த காலப் பிரச்சினையாக இருந்தாலும், 2026-ஆம் ஆண்டில் இதன் வேகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் (DFAR) நிர்வாகப் பணிப்பாளர் ஆயிஷா உதயந்தி பத்திரண, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வழங்கிய உத்தியோகபூர்வ ஆவணங்கள், கடந்த ஆண்டு இந்திய மீனவர்கள் சந்தித்த சட்ட நெருக்கடிகளைத் துல்லியமாகக் காட்டுகின்றன.
அதன்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 346 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 282 பேர் விடுவிக்கப்பட்ட போதிலும், 41 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றங்களால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. படகுகளின் நிலையைப் பொறுத்தவரை, தடுத்து வைக்கப்பட்ட 44 விசைப்படகுகளில் ஒரே ஒரு படகு மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 16 படகுகள் ஏற்கனவே முழுமையாக அரசுடமையாக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய 26 படகுகள் மீதான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டின் சராசரியை விட, 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கைது நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. கடற்படை மற்றும் அமைச்சகத் தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் 16 வரையிலான குறுகிய காலப்பகுதியில் மட்டும் மொத்தம் 128 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை 18 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, நேற்று (ஏப்ரல் 16) மன்னார் கடற்பரப்பில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டமையும், அதற்கு முன்னதாக ஏப்ரல் 11 அன்று காரைநகர் அருகே 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டமையும் கள நிலவரத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலையீடு
மீனவர்களின் தொடர் கைதுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு ஜனவரி 21, 2026 அன்று அவசரக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், "தற்போதைய நிலவரப்படி 90 மீனவர்களும், 254 படகுகளும் இலங்கை வசம் சிக்கியுள்ளன. இது கடலோரக் குடும்பங்களில் கடும் பொருளாதாரச் சிதைவையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. தூதரக ரீதியில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அனைவரையும் விடுவிக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தை மிகத் தீவிரமான ஒரு மனித உரிமை மற்றும் பொருளாதாரப் பிரச்னையாக முன்வைத்துள்ளார். தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தைச் சேர்ந்த 90 மீனவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரமான 254 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் சிக்கியுள்ளன என்ற கவலையளிக்கும் தகவலை முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார்.
படகுகள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுவதால் அவை பழுதடைந்து மீனவக் குடும்பங்கள் ஈடுசெய்ய முடியாத பொருளாதாரப் பாதிப்பைச் சந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர் கைதுகளால் கடலோரப் பகுதிகளில் ஒருவிதமான பயம் மற்றும் மன உளைச்சல் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சம்பவங்கள் ஒட்டுமொத்த மீனவச் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர், மத்திய அரசு உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
2016 ஒப்பந்தம்: எங்கே தவறியது இணக்கம்?
இலங்கை கடற்பரப்பில் நிலவும் இழுபறி நிலைக்குத் தீர்வுகாணும் பொருட்டு, 2016 நவம்பர் மாதம் 5ஆம் தேதி டெல்லியில் அமைச்சர்கள் மட்டத்திலான ஒரு முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியத் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானங்கள் ஒரு மைல்கல்லாகக் கருதப்பட்டன:
கூட்டுப் பணிக்குழு : இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய 'கூட்டுப் பணிக்குழு' உருவாக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிப் பிரச்சினைகளை ஆராய இணக்கம் காணப்பட்டது.
அமைச்சர்கள் சந்திப்பு: இரு நாட்டு கடற்றொழில் அமைச்சர்களும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
நேரடித் தொடர்பு : கடலில் தேவையற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, இரு நாட்டு கடலோரக் காவல்படைகளுக்கும் இடையே நேரடித் தொலைபேசித் தொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தடைசெய்யப்பட்ட முறைகள்: வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் 'இழுவை மடி வலை' (Bottom Trawling) முறையை முற்றாகக் கைவிடுவது குறித்தும், இந்திய மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடி முறைக்கு மாற்றுவது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இருப்பினும், அன்று எட்டப்பட்ட இந்த இராஜதந்திரத் தீர்மானங்கள் களத்தில் முழுமையாகச் செயற்படுத்தப்படாததே, 2026-ஆம் ஆண்டிலும் மீனவர் கைதுகளும் படகுகள் அரசுடமையாக்கப்படுவதும் ஒரு தீராத சோகமாகத் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது என இலங்கை வடக்கு மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தேர்தல் அரசியலா? வாழ்வாதார விடியலா?
பாக் நீரிணைப் பிரச்சினை என்பது வெறும் எல்லை மீறல் மட்டுமல்ல; அது இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் சார் சுற்றுச்சூழல் மற்றும் தேசங்களின் இறையாண்மை சார்ந்தது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், மீனவர் விவகாரம் மீண்டும் ஒரு முக்கிய அரசியல் கருவியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சேகரிப்பிலும் கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு குறித்த வாக்குறுதிகள் முழங்கினாலும், நடுக்கடலில் தொடரும் கைதுகளும் அழுகுரல்களும் ஒரு நிரந்தரத் தீர்வை உரக்கக் கோருகின்றன.
2016-ஆம் ஆண்டு எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் காகித அளவிலேயே தங்கிவிட்ட நிலையில், தேர்தல் அரசியல் கடந்த ஒரு மனிதாபிமானத் தீர்வை இரு நாட்டு அரசாங்கங்களும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அத்துமீறல்கள் இல்லாத, அச்சுறுத்தல் இல்லாத ஒரு கடற்பரப்பே பாக்கு நீரிணையின் உண்மையான விடியலாக அமையும். அந்த விடியலுக்காகவே ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இன்றும் நம்பிக்கையுடன் கடலைப் பார்த்துக் காத்திருக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு