இந்த விமானம் கடற்கரையில் இருப்பது ஏன்? பயணிகள் ஏன் தண்ணீரில் நடந்து வருகிறார்கள்?

பட மூலாதாரம், Aussom
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாமர்த்தியமாகத் கடற்கரையில் தரையிறக்கிய தனது விமானியைச் சோமாலியாவிலுள்ள ஒரு விமான நிறுவனம் பாராட்டியுள்ளது.
ஐந்து பணியாளர்கள், 50 பயணிகளுடன் இருந்த இந்த விமானம், தலைநகர் மொகாடிஷுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாகத் தரையிறங்கிய நிலையில், அனைவரும் உயிருடன் தப்பினர்.
மொகாடிஷுவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட ஃபோக்கர் 50 (Fokker 50) விமானம், மேலெழும்பிய சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டதைக் கண்டறிந்த பணியாளர்கள், விமானத்தைத் திரும்பக் கொண்டுவர முடிவு செய்ததாகச் சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏ) தெரிவித்தது.
விமானம் ஓடுபாதையில் இறங்கிய போதிலும், ஓடுபாதையைக் கடந்து சென்று அருகிலுள்ள கடற்கரையில் நின்றது என்று சிஏஏ இயக்குனர் அஹ்மத் மாகாலின் ஹசன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Starsky Aviation
விமானத்தில் ஏற்பட்ட பிரச்னை என்னவென்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் நின்ற விமானத்திலிருந்து பயணிகள் இறங்கி நடந்து செல்லும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோக்களில் காணப்பட்டன. விமானத்தில் இருந்த யாரும் காயமடையவில்லை என்று செய்திகள் வெளியாகின.
சோமாலியாவில் உள்ள ஆப்ரிக்க ஒன்றியத்தின் பணி குழு, மீட்பு பணிகளுக்கு உதவ ஐ.நா மற்றும் ஆப்ரிக்க ஒன்றிய படைகள் "விரைவாக அனுப்பப்பட்டன" என்று தெரிவித்தது. சம்பவ இடத்தில் சோமாலியா போக்குவரத்து அமைச்சரும் இருந்ததாக எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.

பட மூலாதாரம், Starsky Aviation
"பயணிகள், பணியாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அவசரத் தரையிறக்கத்திற்குக் காரணமான தொழில்நுட்பக் கோளாறு என்ன என்பது குறித்து விசாரணை தொடர்கிறது," என்று ஸ்டார்ஸ்கை பிரதிநிதி ஹசன் முகமது அதேன் தெரிவித்தார்.
"விமானத்தில் இருந்த ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்றுவதில் விமானி சமயோசிதமாகவும், நிதானத்துடனும் எடுத்த முடிவு முக்கியப் பங்கு வகித்தது. நிலைமையை அவர் சாமர்த்தியமாகக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது," என்று அதேன் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












