இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் இந்த அரபு நாடுகள் அச்சம் ஏன்?

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்' நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரான் உச்ச தலைவர் காமனெயி அலுவலகம் மற்றும் டெஹ்ரானில் உள்ள அதிபர் அலுவலகம் ஆகியவையும் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார்.
தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானின் இஸ்ஃபஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய ஐந்து நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன - அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.
அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் தாயகமான பஹ்ரைன் தலைநகரில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரிலும் தாக்குதல்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டன.
இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கையில், அதன் சிதைவுகள் விழுந்து ஒருவர் பலியாகியிருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க தளங்கள் மீது இரான் புதிய தாக்குதல் நடத்துவதாக தகவல்
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை அறிவித்துள்ளதாக இரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இரானைச் சேர்ந்த 'பல மூத்த அதிகாரிகள்' தங்களது தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இரானிய அரசாங்க உறுப்பினர்கள் கூடியிருந்த மூன்று தளங்கள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"மதிப்புமிக்க மற்றும் விரிவான" இலக்குகளின் பட்டியலை உருவாக்க இஸ்ரேலிய ராணுவம் (ஐடிஎஃப்) அமெரிக்க இராணுவத்துடன் 'நெருக்கமான ஒத்துழைப்பில்' உள்ளது. தேவைக்கேற்ப இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளது" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அதேநேரத்தில், என்.பி.சி. செய்திகளில் நேரலையில் இருந்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இரான் "ஒன்று அல்லது இரண்டு தளபதிகளை இழந்திருக்கலாம்" என்றார். இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, தமக்குத் தெரிந்தவரை "உயிருடன்" இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
துபையில் புகை மூட்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபையில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் ஹோட்டலுக்கு அருகில் புகை மூட்டம் தோன்றியதை நேரில் பார்த்த ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகைப்படம் கிடைத்துள்ளது.
துபை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரான் எதை குறிவைக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் நாட்டில் அமெரிக்க இராணுவ இருப்பு உள்ளது.
ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய எமிரேட்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, இனிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் புதிய அலையை இடைமறித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாம் ஜுமேராவில் 'சம்பவத்திற்கு'ப் பிறகு நான்கு பேர் காயமடைந்தனர் - துபாய் அதிகாரிகள்
துபை அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் "பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது" என்று கூறுகிறது.
அவசரகால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன, அதன் விளைவாக ஏற்பட்ட தீ இப்போது "கட்டுப்பாட்டில் உள்ளது" என்று அலுவலகம் தெரிவித்துள்ளது. நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அது கூறுகிறது.
துபை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்ததை அடுத்து, அப்பகுதியில் புகைமூட்டமாக இருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்துடன் கூடிய முந்தைய நேரில் கண்ட சாட்சி அறிக்கையைத் தொடர்ந்து இது நடந்தது.
பாம் ஜுமேரா என்பது அதன் ஆடம்பர ஹோட்டல்களுக்கு பெயர் பெற்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் - உள்ளூர் ஊடகங்கள்
குவைத் சர்வதேச விமான நிலையத்தை டிரோன் குறிவைத்ததாகவும், இதனால் ஒரு முனையம் சற்று சேதடைந்ததாகவும், குறைந்த அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளதாக குவைத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குனா தெரிவித்துள்ளது.
சம்பவத்தை கையாண்டு, தளத்தைப் பாதுகாத்து, அதிகாரிகள் உடனடியாக அவசரகால நடைமுறைகளை செயல்படுத்தியதாக குனாவிடம் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறுகிறார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்றும் அவர் கூறியதாக குனா தெரிவிக்கிறது.
தாக்குதலுக்கான மூல காரணத்தை அதிகாரிகள் கூறவில்லை, ஆனால் இன்று முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் பிராந்தியம் முழுவதும் இலக்குகளைத் தாக்கி வருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் சனிக்கிழமை நியூயார்க்கில் கூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை பஹ்ரைன், கொலம்பியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
"மத்திய கிழக்கில் இன்றைய இராணுவ நடவடிக்கையை" ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் கண்டித்ததைத் தொடர்ந்து இந்த கூட்டம் நடக்கிறது.
இந்த நடவடிக்கைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், "போர்களை உடனடியாக நிறுத்த" அழைப்பு விடுத்ததாகவும் அவர் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.
இரானிய உச்ச தலைவரின் அலுவலகம் தாக்கப்பட்டதாக தகவல்
ஜியார் கோல்
பிபிசி பாரசீகம்
டெஹ்ரானிலும் இரான் முழுவதும் பல நகரங்களிலும் ஏராளமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இரான் உச்ச தலைவர் காமனெயி அலுவலகம் மற்றும் டெஹ்ரானில் உள்ள அதிபர் அலுவலகம் ஆகியவையும் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கெர்மன்ஷா, கும், இஸ்ஃபஹான், தப்ரிஸ், கராஜ் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் இரானின் தெற்கில் உள்ள கெனாரக்கில் உள்ள இரானிய கடற்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள சிறிய நகரமான கம்யாரானில் இருந்து எங்களுக்குக் கிடைத்த ஒரு வீடியோ, ஒரு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளம் குண்டுவீச்சுக்கு இலக்கானதை காட்டுகிறது.
தாக்குதல்களுக்கு முன்னதாக இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளை காலி செய்யுமாறு இரானிய பொதுமக்களை இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்திருந்தது.
முன்னாள்அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் வசிக்கும் டெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள ஒரு வீடு தாக்கப்பட்டதாக டெஹ்ரானில் இருந்து வரும் படங்கள் காட்டுகின்றன. முன்னாள் அதிபர் காயமடைந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இரானிய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் படைகள் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
'தாக்குதல் கடுமையாக இருந்தது'
மெர்லின் தாமஸ் மற்றும் பால் பிரவுன்
டெஹ்ரானில் இருந்து வெளிவந்துள்ள, பல சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் தலைநகருக்கு மேலே பெரிய புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டுகின்றன.
ஒரு பரபரப்பான சந்திப்பில் படமாக்கப்பட்ட ஒரு வீடியோ, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் வானத்தைப் பார்க்கும் போது போக்குவரத்து மெதுவாக இருப்பதைக் காட்டுகிறது. காட்சிகளில், "அவர்கள் கடுமையாகத் தாக்கினர். அவை எங்கே மோதின? அவர்கள் அது காமனெயி வீடு என்று கூறுகிறார்கள்." என்று ஒருவர் கூறுவதைக் கேட்க முடியும்.
இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி ஹொசைனி காமனெயி அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். அந்த கட்டடம் நேரடியாகத் தாக்குதலுக்கு இலக்கானதா என்பது அந்த வீடியோ கோணத்தில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை.
அதே பகுதியில் இருந்து வெளியான, மற்றொரு சரிபார்க்கப்பட்ட புகைப்படம் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் சிறிய மளிகைக் கடைகளுக்கு மேலே அடர்த்தியான, இருண்ட புகை எழுவதைக் காட்டுகிறது. நாட்டின் பிற இடங்களிலும் தாக்குதல் நடந்திருப்பது பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.
'இரானின் பதிலடி தாக்குதல்'
"சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது" என்று இஸ்ரேல் ராணுவம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவ அறிக்கையில், "இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
"இந்த நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தவும், தேவையான இடங்களில் தாக்குதல் நடத்தவும் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு என்பது காற்று புகாத அமைப்பு அல்ல, எனவே பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரானிய ஏவுகணைகள் இடைமறிப்பு - ஒருவர் பலி
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "தங்கள் நாடு இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு தாக்குதலுக்கு" உள்ளாகியுள்ளது என்று கூறுகிறது.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை அதிக செயல்திறனுடன் கையாண்டன மற்றும் பல ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தன," என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அபுதாபியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததால், பொருள் சேதம் ஏற்பட்டதாகவும், ஆசிய நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. அவர் பெயர் குறிப்பிடவில்லை.
இந்தத் தாக்குதலை "பதற்றத்தை தூண்டும்" மற்றும் "கோழைத்தனமான செயல்" என்று கண்டிக்கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் "பதிலடி கொடுக்க அதன் முழு உரிமையையும் கொண்டுள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அபுதாபியின் தெற்கே உள்ள அல் தஃப்ரா விமானத் தளத்தில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையுடன் அமெரிக்க விமானப்படை இணைந்து செயல்படுகிறது.

ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக கத்தார் தகவல்
டேவிட் கிரிட்டன்
பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு
கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டன.
"நாட்டின் எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக"
கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் அமைப்பு, இரானிய ஏவுகணையை இடைமறித்ததாக கத்தார் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில் உள்ளது.

பட மூலாதாரம், Reuters
'மோதல் இன்னும் மோசமடையக்கூடும்'
ஃபிராங் கார்ட்னர்
பாதுகாப்பு செய்தியாளர்
வளைகுடா அறிக்கைகள் வெடிப்புகள், சைரன்கள், வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புகை மூட்டங்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இரான் எப்போதுமே அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பதிலடி தாக்குதல் தொடுக்கப்படும் என்று எச்சரித்து வந்துள்ளது. சற்று தாமதத்திற்குப் பிறகே, அமெரிக்காவின் வளைகுடா அரபு நட்பு நாடுகள் மீது ஏவுகணை தாக்குதலை இரான் தொடுத்துள்ளது.
"இது மிகவும் பயங்கரமாக இருக்கிறது", என்று பஹ்ரைனில் வசிக்கும் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் கூறினார். பேட்ரியாட் ஏவுகணை பேட்டரி ஒன்று, வரும் ஏவுகணையை தலைக்கு மேல் இடைமறிப்பதைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் பிரபலமான இடமான துபையை உள்ளடக்கிய வளைகுடா நாடுகள் போரை சந்திப்பது இது முதல் முறை அல்ல.
1980-88 இல் இரான்-ஈராக் போர், 1991இல் குவைத் மீதான இராக் படையெடுப்பும் அதன் பின்னரான அமெரிக்க தாக்குதலும், 2003 இல் இராக் படையெடுப்பு மற்றும் கடந்த ஆண்டு இரான் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை குறிவைத்தது என பட்டியல் நீள்கிறது.
ஆனால் இம்முறை மாறுபட்டதாக இருக்கும். இது முன்பு இருந்ததை விட பெரியது மற்றும் ஆபத்தானது.
அதனால்தான் ஓமன், கத்தார் மற்றும் சௌதி அரேபியாவின் தலைவர்கள் முன்னதாக டிரம்ப் நிர்வாகத்தை தங்கள் பெரிய அண்டை நாட்டை கடல் கடந்து தாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
இந்த மோதல் இன்னும் மோசமாகலாம்.

பட மூலாதாரம், Getty Images
இரானிய அரசு வீழக் கூடும் என்று அரபு நட்பு நாடுகள் அச்சம்
பார்பரா பிளெட் அஷர்
தோஹாவில் இருந்து...
தோஹாவில் வெடிப்புச் சத்தங்களை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவை பிராந்தியம் முழுவதும் பதிவாகி வருகின்றன.
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகியவை தங்கள் பிரதேசத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறிப்பதாகக் கூறுகின்றன.
அந்த நாடுகளில் சில பதிலடி கொடுக்கும் உரிமையை வைத்திருப்பதாகக் கூறியுள்ளன, ஆனால் அவர்கள் நிச்சயமாக இதனை மிகவும் கவனமாக கையாள்வார்கள்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தம் செய்த பிராந்திய தலைவர்கள் இந்த நிலை ஏற்படாமல் தடுக்கவே மிகவும் கடுமையாக பாடுபட்டார்கள்.
டிரம்ப் நிர்வாகம் அதன் அரபு நட்பு நாடுகளை விட இஸ்ரேலிடமிருந்தே ஆலோசனையைப் பெற்றது என்பது இப்போது தெளிவாகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கி போருக்குள் தள்ளும் என்று அரேபியர்கள் கவலைப்படுகிறார்கள்.
இரான் தங்கள் மண்ணில் உள்ள அமெரிக்க இலக்குகளை மட்டுமல்ல, எரிவாயு மற்றும் எண்ணெய் வசதிகள் போன்ற உள் கட்டமைப்பையும் தாக்கக் கூடும் அல்லது எண்ணெய் கப்பல்கள் பயன்படுத்தும் ஹோர்முஸ் நீரிணையை மூடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
குறிப்பாக டிரம்ப் இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆட்சி மாற்றம் என்று தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இரானிய அரசு வீழ்ச்சியடையக் கூடும், அது தங்களது எல்லைக்குள் அகதிகள் மற்றும் ஆயுதங்களின் ஓட்டத்திற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்காவின் அரபு நட்பு நாடுகள் கவலைப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












