ஹோர்மூஸில் இரான் வைத்த கண்ணிவெடிகள் எவ்வளவு ஆபத்தானவை? அகற்றுவது ஏன் கடினம்?

ஹோர்மூஸ் நீரிணை வழியாக உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் 20 சதவீதப் பகுதி கடந்து செல்கிறது.

பட மூலாதாரம், IAN FORSYTH/GETTY IMAGES

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் 20 சதவீதம் கடந்து செல்கிறது.
    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் போரில் கடலுக்கடியில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் குறித்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் ஏதேனும் ஒரு இரானியப் படகு கண்ணிவெடிகளைப் பதிப்பதைப் பார்த்தால், அதை உடனடியாக சுட்டு அழிக்குமாறு அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

உலகின் எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் 20 சதவீதப் பங்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்கிறது. தற்போது இரான் அதனை ஏறக்குறைய மூடிவிட்டது.

அதே சமயம் தனது ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்த நீரிணையை மீண்டும் திறக்க போவது குறித்தும், அங்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கண்ணிவெடிகளை அகற்ற போவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

கடலில் பதிக்கப்படும் கண்ணிவெடிகள் என்றால் என்ன, அவை எப்படிச் செயல்படுகின்றன மற்றும் அவற்றை அகற்றுவது ஏன் மிகவும் கடினமான காரியம்?

இவை எவ்வளவு ஆபத்தானவை? போரில் இவற்றின் முக்கியத்துவம் என்ன மற்றும் இதன் வரலாறு என்ன?

16 பிப்ரவரி 2026 அன்று ஐஆர்ஜிசி நடத்திய கடற்படைப் பயிற்சியின் புகைப்படம்.

பட மூலாதாரம், Press Office of Islamic Revolutionary Guard Corps / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, 16 பிப்ரவரி 2026 அன்று ஐஆர்ஜிசி நடத்திய கடற்படைப் பயிற்சியின் புகைப்படம். இந்தப் பயிற்சி பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

கடல்சார் கண்ணிவெடிகள் என்றால் என்ன?

கடல்சார் கண்ணிவெடிகள் அல்லது 'சீ மைன்ஸ்' என்பது தண்ணீருக்கு அடியில் வைக்கப்படும் வெடிபொருட்கள் ஆகும். இவை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களை அழிக்கும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன.

எதிரி நாட்டுப் படகுகள் அல்லது கப்பல்கள் ஒரு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவோ அல்லது அவற்றை அங்கேயே முடக்கவோ இவை பயன்படுத்தப்படுகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடல்சார் கண்ணிவெடிகள் என்பவை மிகவும் பழமையான தொழில்நுட்பமாகும். 14-ஆம் நூற்றாண்டில் சீனாவில்தான் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக இவை முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்காவில் அந்நாட்டுப் புரட்சியின் போதுதான் கடல்சார் கண்ணிவெடிகள் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பீப்பாய்கள் கடலில் மிதக்க விடப்பட்டன, அவை கப்பல்கள் மீது மோதும்போது வெடித்துச் சிதறின.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் தவிர, கொரியா, ஃபாக்லாந்து தீவுகள் மற்றும் வளைகுடாப் போரிலும் இவை பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்புத் துறை நிபுணர் ராகுல் பேடி, கடல்சார் கண்ணிவெடிகள் தானாகவே வெடிக்கக் கூடியவை என்கிறார்.

"இவை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வெடிபொருட்கள். இவற்றை 'புத்திசாலி கண்ணிவெடிகள்' என்றும் அழைக்கலாம். ஏனெனில், இவை ஒரு எண்ணெய் டேங்கர் கப்பல், போர் கப்பல் அல்லது வணிகக் கப்பல் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கண்டறிந்து தாக்கக்கூடியவை. இவை முன்கூட்டியே புரோகிராம் செய்யப்படுகின்றன, அதன் அடிப்படையிலேயே இவை கப்பல்களை அடையாளம் கண்டு இலக்கு வைக்கின்றன," என்று அவர் விளக்குகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது, 1842-இல் வட கடலில் ஜெர்மன் வீரர்கள் கடல்சார் கண்ணிவெடிகளுடன் இருக்கும் காட்சி.

பட மூலாதாரம், Roger Viollet via Getty Images

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின் போது, 1842-இல் வட கடலில் ஜெர்மன் வீரர்கள் கடல்சார் கண்ணிவெடிகளுடன் இருக்கும் காட்சி.

கடல்சார் கண்ணிவெடிகள் எத்தனை வகைப்படும்?

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கடல்சார் கண்ணிவெடிகளும் காலப்போக்கில் பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. 'பாதுகாப்பு மற்றும் சட்டத்திற்கான ராபர்ட் ஸ்ட்ராஸ் மையத்தின்' கூற்றுப்படி, இக்கண்ணிவெடிகள் மூன்று வகைப்படுகின்றன:

நேரடித் தொடர்பு கண்ணிவெடிகள் : ஒரு கப்பல் இவற்றின் மீது நேரடியாக மோதும்போது அல்லது மிக அருகில் வரும்போது இவை வெடிக்கின்றன. இவற்றை நிறுவுவது மிகவும் எளிதானது.

தாக்கக் கண்ணிவெடிகள் : இவை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டவை. இவை வெடிப்பதற்கு கப்பலுடன் நேரடித் தொடர்பு தேவையில்லை. சென்சார்கள் மூலம் கப்பலில் இருந்து வரும் காந்தப்புலம், ஒலி, அழுத்தம், அதிர்வு அல்லது நீருக்கு அடியிலான மின்னணு சிக்னல்களைக் கண்டறிந்து இவை செயல்படுகின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட கண்ணிவெடிகள் : இவை மூன்றாவது வகையைச் சேர்ந்தவை. இவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுபவை.

கடலில் இவை பதிக்கப்படும் முறைகள்:

மிதக்கும் கண்ணிவெடிகள் : இவை தண்ணீரில் விடப்படுகின்றன. இவை நீரோட்டத்தின் திசையிலேயே மிதந்து செல்லும்.

நங்கூரமிடப்பட்ட கண்ணிவெடிகள்: இவை பெரிய அளவிலான 'நேரடித் தொடர்பு' கண்ணிவெடிகள் ஆகும். இவை நங்கூரம் மூலம் பிணைக்கப்பட்டு, நீர்ப்பரப்பிற்குச் சற்று கீழே மிதந்து கொண்டிருக்கும். ஒரு கப்பல் இவற்றின் மீது மோதும்போது வெடித்துச் சிதறும்.

தரைமட்ட கண்ணிவெடிகள்: இவை கடல் தளத்தில் வைக்கப்படும் 'தாக்கக் கண்ணிவெடிகள்' ஆகும். இவை பல்வேறு சென்சார்களின் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி கப்பல்களை அடையாளம் கண்டு வெடிக்கும்.

லிம்பெட் கண்ணிவெடிகள் : இவை சிறிய அளவிலான வெடிபொருட்கள். இவற்றை கப்பலின் அடிப்பகுதியான 'ஹல்' பகுதியில் ஒட்டிவிட முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெடிக்கும் வகையில் இதில் 'டைமர்' பொருத்தப்பட்டிருக்கும்.

ஹோர்மூஸில் இரான் கண்ணிவெடிகளின் உண்மை என்ன?

அமெரிக்காவின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணையில் இரான் பல கடல்சார் கண்ணிவெடிகளைப் பதித்துள்ளது.

இவற்றில் 'நேரடித் தொடர்பு' மற்றும் 'தாக்கக் கண்ணிவெடிகள்' ஆகிய இரு வகைகளும் அடங்கும். அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி இவற்றை மிக விரைவாகப் பதிக்க முடியும்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தப் போரின் போது மார்ச் மாத நடுப்பகுதியில் இரான் சுமார் ஒரு டஜன் கண்ணிவெடிகளை இப்பகுதியில் பதித்துள்ளது.

ராகுல் பேடி இது குறித்து, "தற்போது ஹோர்மூஸ் நீரிணையின் உண்மையான நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. அங்குள்ள சூழல் குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்கக் கப்பல்கள் எங்கே இருக்கின்றன, இரானியக் கப்பல்களின் கட்டுப்பாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. எனவே, அங்குள்ள உண்மையான நிலவரத்தை அறிவது கடினமாக உள்ளது," என்கிறார்.

அவர் மேலும், "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்கா கூறுவது போல இரான் அங்கு அதிகமான கடல்சார் கண்ணிவெடிகளைப் பதித்திருந்தால், அந்த நீரிணையையே இரான் ஒரு போர் ஆயுதமாக மாற்றிவிட்டது என்றுதான் அர்த்தம். இதுவே இரானின் பலமாகவும் மாறியுள்ளது. ஏனெனில், கடலில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவது மிகவும் கடினமான காரியம். அதற்கு நீண்ட காலமும் எடுக்கும். ஒரு வகையில், இரான் இவற்றைத் தனது 'வியூக ரீதியிலான ஆயுதமாக' மாற்றிக்கொண்டுள்ளது," என விளக்குகிறார்.

கண்ணிவெடிகளை அகற்றுவது ஏன் கடினமான காரியம்?

அமெரிக்காவின் 'மைன் ஸ்வீப்பர்' ரகக் கப்பல்கள் இந்தக் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால், நிபுணர்களின் கருத்துப்படி, இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அகற்றுவது என்பது அதிக நேரத்தைச் செலவிடக்கூடிய மற்றும் மிகவும் கடினமான ஒரு பணியாகும்.

கடல்சார் கண்ணிவெடிகளைப் பதிப்பது மிகவும் எளிது, ஆனால் அவற்றை அகற்றுவது கடினம். இவை நீர்ப்பரப்பிற்கு மேலோ, நீருக்குள்ளோ அல்லது கடலின் அடிப்பகுதியிலோ இருக்கலாம்.

ஒருவேளை அவை மிதக்கும் நிலையில் இருந்தால், கடல் நீரோட்டத்தின் காரணமாகத் தொடர்ந்து தங்கள் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும்.

ஒரு பகுதியை ஒருமுறை சுத்தம் செய்துவிட்டாலும் கூட, அந்த இடம் மீண்டும் அபாயகரமானதாக மாற வாய்ப்புள்ளது.

சில சமயங்களில் இரான் நாட்டுக்கே தனது கண்ணிவெடிகள் எங்கு இருக்கின்றன என்பது தெரியாமல் போகலாம். ஏனெனில், அவை அவசர அவசரமாகப் பதிக்கப்பட்டிருக்கலாம்.

அல்லது ஒவ்வொரு கண்ணிவெடியின் இருப்பிடமும் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது சில கண்ணிவெடிகள் வேண்டுமென்றே நீரோட்டத்தில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம்.

ராகுல் பேடி இது குறித்து, "கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது மிகவும் சிக்கலான பணி, இதற்கு நீண்ட காலம் எடுக்கும். இது இரான் நாட்டுக்கும் தெரியும். ஹோர்மூஸில் எத்தனை கண்ணிவெடிகள் உள்ளன என்பது பற்றி யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இப்பகுதியில் கண்ணிவெடிகளைப் பதித்திருப்பதாகக் கூறுவதன் மூலம், இரான் தற்போது ஒரு 'உளவியல் ரீதியான மேலாதிக்கத்தை' ஏற்படுத்தியுள்ளது," என்கிறார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, கண்ணிவெடிகளை அகற்ற இரண்டு வழிகள் உள்ளன.

மைன் ஸ்வீப்பிங் : கப்பல்கள் நீரில் சிறப்பு கம்பிகள் அல்லது கருவிகளை இழுத்துச் செல்கின்றன. இவை கண்ணிவெடிகளின் பிணைப்புகளைத் துண்டிக்கும். பின்னர் அவை நீர்ப்பரப்பிற்கு மேலே வந்தவுடன் அழிக்கப்படும்.

மைன் ஹண்டிங் : இதில் சோனார் கருவிகள் மூலம் கண்ணிவெடிகள் தேடிக் கண்டுபிடிக்கப்படும். பின்னர் ரோபோக்கள் அல்லது டிரோன்கள் மூலம் அவை அழிக்கப்படும். சில நேரங்களில் இதற்காக மூழ்காளர்களின் (Divers) உதவியும் நாடப்படும்.

இந்தியாவின் நிலை என்ன?

பாதுகாப்புத் துறை நிபுணர் ராகுல் பேடியின் கூற்றுப்படி, இந்தியா இதுவரை கடல்சார் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியதில்லை.

அவர் கூறுகையில், "இந்தியாவிடம் சோவியத் காலத்தைச் சேர்ந்த அல்லது ரஷ்யத் தயாரிப்பான பத்து, பன்னிரண்டு 'மைன் ஸ்வீப்பர்' (கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள்) இருந்தன. ஆனால், இன்றைய தேதியில் இந்தியாவிடம் ஒரு மைன் ஸ்வீப்பர் கப்பல் கூட இல்லை," என்கிறார்.

"கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இதற்கான ஒப்பந்தங்களை வழங்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. தென் கொரியா மற்றும் இத்தாலியுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை."

"மைன் ஸ்வீப்பர் என்பது ஒரு சிறப்பு ரகக் கப்பலாகும். கண்ணிவெடிகளைக் கண்டறிவதற்காகவே இதன் கருவிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன. இவற்றை அகற்றுவதற்கும் இதற்கெனத் தனித்துவமான உபகரணங்கள் உள்ளன," என்று அவர் விளக்குகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு