வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் எது, எப்படி? தமிழக சட்டமன்ற தேர்தல் பற்றிய முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தல் எப்போது?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி(வியாழக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வேட்பு மனுத் தாக்கல் எப்போது?
தமிழ்நாட்டில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான தொடக்கம்: மார்ச் 30 (திங்கட்கிழமை)
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்: ஏப்ரல் 6 (திங்கட்கிழமை)

பட மூலாதாரம், Pib in tamilnadu twitter page
வேட்பு மனுவை பரிசீலனை செய்ய கடைசி நாள்
வேட்பு மனுவை பரிசீலனை செய்ய கடைசி நாள் ஏப்ரல் 7 (செவ்வாய்க் கிழமை)
வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்
வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9 (வியாழக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன?
தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியமாகும்.
- நடத்தை விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவியல் வழக்குப் பதிவு செய்து சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.
- இந்த விதிகள் அமலில் இருக்கும் போது அரசு எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது.
- அனுமதி பெறாமல் கட்சி கொடிகள், பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்கக் கூடாது.

பட மூலாதாரம், ANI
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எத்தனை?
75,032
தனித்துவமான வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதிக்கு பயணிக்க மூன்று மணிநேரமாகும். அங்கு 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு எப்போது?
- அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
எத்தனை பணியாளர்கள்?
மொத்தமாக 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில்
- வாக்குச்சாவடி பணியாளர்கள்: 15 லட்சம்
- பாதுகாப்பு அதிகாரிகள்: 8.5 லட்சம்
- வாக்குப்பதிவுக்கான மைக்ரோ கண்காணிப்பாளர்கள்: 49,000
- கண்காணிப்பாளர்கள்: 1,444
- வாக்கு எண்ணும் அதிகாரிகள்: 40,000
- பிரிவு அதிகாரிகள்: 21,000
- வாக்கு எண்ணுவதற்கான மைக்ரோ கண்காணிப்பாளர்கள்: 15,000
வாக்குச்சாவடிகளில் செய்யப்படும் வசதிகள்
குடிநீர், கழிவறை, சைகை பலகைகள், ரேம்ப்/சக்கர நாற்காலி உள்ளிட்டவை
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எத்தனை பேர்?
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாத இறுதியில் வெளியிட்டது. அந்த பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், இது சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் குறைவு ஆகும்.
வாக்காளர் பட்டியல் - கூடுதல் விவரம்
23.02.2026 அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை
- மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380
- ஆண்கள்: 2,77,38,925
- பெண்கள்: 2,89,60,838
- மூன்றாம் பாலினத்தவர்: 7,617
- 18-19 வயதுடைய வாக்காளர்கள்: 12.51 லட்சம்
- மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4.63 லட்சம்
- மூத்த குடிமக்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) - 3.99 லட்சம்
- சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 5,36,991 வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
- குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் (சென்னை) விளங்குகிறது. இந்த தொகுதியில் 1,16,896 வாக்காளர்ள் உளள்னர்.
இனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியுமா?
ஆம். வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரையிலும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
வாக்காளர் பட்டியலில் இனி உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தில் அல்லது செல்பேசி செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இணையம் மூலம் செய்ய இயலவில்லை என்றால் உங்கள் பகுதியில் நடக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் அல்லது உங்கள் பகுதியின் தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாக சென்று அதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம்.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரிக்குச் சென்று, அதில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த வழிமுறைகள் அதே இணையத்திலேயே (GUIDELINES FOR FILLING UP THE APPLICATION) தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. Voters Helpline என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
நேரடியாக விண்ணப்பிக்கும் நடைமுறையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6 ஐ வாங்கி உரிய ஆதார ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
முகவரியை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
வீடு மாறிவிட்டால் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
திருத்தத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
பெயரில் இனிஷியல் இல்லை, எழுத்துப்பிழையாகவுள்ளது, பிறந்த தேதி தவறாகவுள்ளது என்றால் அதற்கும் படிவம் 8 ல் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டது என்றால் புதிதாக விண்ணப்பிக்கவும் இதே படிவத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், தங்களால் வாக்குச்சாவடிக்கு வரமுடியாது என்று வீட்டில் வந்து வாக்கு சேகரிக்க வேண்டுமென்று கோருவது என மொத்தம் 4 விதமான விண்ணப்பங்களுக்கும் படிவம் 8 பயன்படுகிறது.
இறந்தவர்களின் பெயர்களை நீக்க என்ன செய்ய வேண்டும்?
இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும், ஒரு வாக்காளரின் பெயர் இருமுறையோ அல்லது வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றிருந்தாலோ அவற்றை நீக்கவும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நிலவரம்
திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சமீபத்தில் இணைந்தார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் (மூன்றில் திமுக சின்னத்தில் போட்டியிடும்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 தேர்தலில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாக களம்கண்டன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்கின்றன.
அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதே கூட்டணியில் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து களம்கண்ட அமமுக இம்முறை அதிமுக கூட்டணியிலேயே இணைந்துள்ளது.
இதுதவிர, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து போட்டியிடுகிறது.
புதிதாக உருவாகியுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது.
'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொண்டர் உருவாக்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நிலவரம் என்ன?
புதுச்சேரியைப் பொறுத்தவரையிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து போட்டியிட்டு ஆட்சியை அமைத்தன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதலமைச்சரானார்.
இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன.
2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலைப் போன்றே தற்போதும் பாஜக , என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்பதாக அறிவித்துள்ளன. தொகுதிப்பங்கீடு குறித்த இறுதியான முடிவு வெளியாகவில்லை.
மறுபுறம், காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












