பெட்ரோலை தண்ணீர் பாட்டில்களில் சேமித்து வைப்பதில் உள்ள ஆபத்து என்ன?

பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல், டீசல் வாங்கலாமா? விதிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், முக்கிய கடல் வர்த்தக பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் செல்லும் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

இதனால், கச்சா எண்ணெய், உர விநியோகம் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை 60 ரூபாயும், வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பரவலாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகலாம் என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

மேலும், பல ஹோட்டல்கள் தங்களின் மெனுக்களில் உள்ள பல்வேறு உணவுகளை நீக்கியுள்ளன, சிறு உணவகங்கள் தங்கள் சேவையை தொடர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றன.

எனினும், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

 பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல், டீசல் வாங்கலாமா? விதிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம், அவற்றின் விலை உயரலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவவே கடந்த இரு தினங்களாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் தேவையை விடவும் அதிகமான பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன் ஒன்றில், பெட்ரோலை ஒருவர் வாங்கிச் செல்வதை பார்க்க முடிந்தது.

மக்கள் இரவு நேரத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் டீசலை பிளாஸ்டிக் கேன்களில் வாங்கிச் செல்கின்றனர்.

பெட்ரோல், டீசலை தேவையைவிட அதிகமாக வாங்கலாமா? இப்படி பிளாஸ்டிக் கேன்களில் வாங்குவது பாதுகாப்பானதா?

பெட்ரோல், டீசல்

பட மூலாதாரம், Getty Images

பிளாஸ்டிக் கேன்களில் வாங்கலாமா?

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி இதுகுறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், "பொதுவாக, ஜெனரேட்டர், விவசாய தேவை போன்றவற்றுக்கு டீசல் 20 லிட்டர் வரைக்கும் வாங்குகின்றனர். ஆனால், பெட்ரோலை பிளாஸ்டிக் கேன்கள், தண்ணீர் கேன்களில் வாங்குவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், டீசலை விட பெட்ரோல் எளிதில் தீப்பற்றும் அபாயம் வாய்ந்த எரிபொருள்.

கேன்களில் அதை அடைத்து வைக்கும்போது தீப்பற்றுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். பெட்ரோலை வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் தீப்பற்றினாலே பெட்ரோலும் பற்றிவிடும் அபாயம் உள்ளது. கேன்களில் வாங்கும்போது, அது கசிவதற்கான அபாயமும் உள்ளது. எனவே அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என்றார்.

பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) விதிமுறைகளின்படி, எரிபொருளை நேரடியாக வாகனங்களில் செலுத்த வேண்டும் அல்லது உரிய உரிமங்களின் அடிப்படையில் 200 லிட்டர் கண்டெய்னர்களில் மட்டுமே வழங்க வேண்டும் என முரளி கூறுகிறார்.

பெட்ரோலை பிளாஸ்டிக் கேன்களில் வழங்கக்கூடாது என்பதை போலீஸாரும் அறிவுறுத்தி வருவதாகவும் பெட்ரோல் பங்க்குகளில் அதுகுறித்த எச்சரிக்கை பலகையை வைக்குமாறு தொடர்ந்து கூறிவருவதாகவும் முரளி தெரிவித்தார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகர், "பெட்ரோல், டீசல் வாங்குவதில் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் என்பது அத்தியாவசிய பொருள் என்பதால் அதை பதுக்கக் கூடாது." என தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடா?

அகில இந்திய அளவில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் முரளி தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் 21 நாட்களுக்கு வழக்கம்போல இருப்பு உள்ளது. விற்பனையாளர்கள் கேட்கும் அளவும் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இது வீண் வதந்தியே. வாகனங்களை முழுவதும் நிரப்பிக்கொள்ளலாமே தவிர கூடுதல் எரிபொருளை வாங்குவதற்கான தேவை இல்லை. அதை அதிக விலைக்கு விற்பது, பதுக்குவது போன்றவை கூடாது." என்றார்.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 7,000 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன எனக் கூறும் முரளி, ஒருநாளைக்கு அவற்றில் கிட்டத்தட்ட 4,000 லிட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு