"ஒரு பாதுகாப்பு வளையத்தை தாண்டினால் போதும்" - அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

பாதுகாப்பு அதிகாரி ஒருவர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேக் லாஃபாம்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மற்றொரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவத்தின் மையப்புள்ளியாக தான் இருந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, "இதைவிட ஆபத்தான தொழில் வேறு எதுவும் இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை," என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரகசிய சேவை பாதுகாவலர்களின் ஒரு சிறிய படையே அதிபரை உலகின் மிக பாதுகாப்பான மனிதராக மாற்றியிருந்தாலும், அவரைப் பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது நிரூபணமாகி வருகிறது.

முதலில் 2024 கோடையில் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த கொலை முயற்சியில் ஒரு தோட்டா அவரது காதைத் உரசிச் சென்றது. சரியாக 64 நாட்களுக்குப் பிறகு, புளோரிடா கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு கொலை முயற்சியின் இலக்கானார் டொனால்ட் டிரம்ப்.

இப்போது, நாட்டின் தலைநகரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் விருந்து நிகழ்ச்சியின் கொண்டாட்டங்களை துப்பாக்கிச் சூடு சத்தம் சிதறடித்த சில மணிநேரங்களில், டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு மீண்டும் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் சந்தேக நபரின் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்

பட மூலாதாரம், Truth Social/@realDonaldTrump

படக்குறிப்பு, துப்பாக்கி சூடு சம்பவத்தின் சந்தேக நபரின் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்

சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயதான கோல் டோமஸ் ஆலனின் நோக்கம் மற்றும் சரியான இலக்கு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் அதிபருக்கு இவ்வளவு நெருக்கமாக எப்படி வர முடிந்தது என்பது குறித்து கேள்விகள் குவிந்து வருகின்றன.

வாஷிங்டனின் மிக உயர்மட்ட அரசியல்வாதிகள், தூதர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தை நடத்திய ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனையின் தரம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த விருந்தில் கலந்துகொண்ட பிபிசியின் வட அமெரிக்க முதன்மை செய்தியாளர் கேரி ஓ'டோனக் கூறுகையில், வாஷிங்டன் ஹில்டனைச் சுற்றியுள்ள சாலைகள் மணிக்கணக்கில் மூடப்பட்டிருந்தாலும், அந்த இடத்தில் பாதுகாப்பு "குறிப்பாக பலமாக இல்லை" என்று தெரிவித்தார்.

"வாசலில் நின்றிருந்த நபர், (பாதுகாப்பு அதிகாரி) சுமார் ஆறு அடி தூரத்தில் இருந்து எனது நுழைவுச்சீட்டை மேலோட்டமாக மட்டுமே பார்த்தார்," என்று அவர் எழுதியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சிசிடிவி (CCTV) காட்சிகள், பால்ரூமுக்கு மேலே உள்ள தளத்தில் அமைந்திருந்த இரகசிய சேவை சோதனைச் சாவடியை சந்தேக நபர் தாக்கிவிட்டு உள்ளே நுழைவதைக் காட்டுகின்றன. அவரிடம் ஒரு ஷாட்கன், கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது விருந்தினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படும் காட்சி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது விருந்தினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படும் காட்சி
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவர் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.

சிஎன்என்-இன் உல்ஃப் பிளிட்சர் அந்த நெட்வொர்க்கிடம் கூறுகையில், சந்தேக நபர் "மிக மிக தீவிரமான" ஆயுதத்தைப் பயன்படுத்தி பலமுறை சுடுவதைக் கண்டதாகக் கூறினார்.

பின்னர் அதிபர், ஒரு சட்டை அணியாத மனிதர் தரையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதையும், அவரைச் சுற்றி இரகசிய சேவை அதிகாரிகள் நிற்பதையும் காட்டும் புகைப்படத்தைப் பதிவிட்டார்.

அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் என்பிசி நியூஸிடம் கூறுகையில், அவர் நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைத்தது போல் தெரிவதாகவும், அதில் "அதிபர் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது" என்றும் கூறினார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் அதே கட்டடத்தில் இருந்தபோதிலும், ஒரு ஹோட்டலாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த வாஷிங்டன் ஹில்டனில் கோல் டோமஸ் ஆலன் ஒரு விருந்தினராக தங்கியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன் செய்தியாளர்கள் விருந்துகளில் கலந்து கொண்டவரான வாஷிங்டனுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் கிம் டாரோக், பாதுகாப்பு ஏற்பாடுகளை விமர்சித்தார்.

"நீங்கள் (ஒரு ஹோட்டல் விருந்தினராக) அங்கு இருந்து, இந்த விருந்துக்குள் நுழைய வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இருந்தால், நீங்கள் கடக்க வேண்டியது ஒரே ஒரு பாதுகாப்பு வளையம் தான்... அதன் பிறகு நீங்கள் பால்ரூமிற்குள் வந்துவிடலாம்," என்று அவர் பிபிசியின் 'சண்டே வித் லாரா குயன்ஸ்பெர்க்' நிகழ்ச்சியில் கூறினார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பதிலளித்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பதிலளித்தார்

டொனால்ட் டிரம்ப் பின்னர் கூறுகையில், ஹில்டன் " பாதுகாப்பான கட்டடம் அல்ல" என்று கூறினார், மேலும் இந்தச் சம்பவம் தற்போது கட்டுமானத்தில் உள்ள ஆனால் வழக்குகளுக்கு உள்ளாகியுள்ள புதிய வெள்ளை மாளிகை பால்ரூமின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் சேர்த்துக் கொண்டார்.

"அது உண்மையில் ஒரு பெரிய அறை, மேலும் மிகவும் பாதுகாப்பானது. ட்ரோன் தாக்குதலைத் தாங்கக்கூடியது. குண்டு துளைக்காத கண்ணாடிகளைக் கொண்டது. நமக்கு அந்த பால்ரூம் தேவை," என்று அவர் கூறினார்.

அதிபர் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸை மேடையிலிருந்து அப்புறப்படுத்திய இரகசிய சேவையின் "துணிச்சலை" பாராட்டிய அதிபர், அவர்கள் "சிறந்த முறையில் செயல்பட்டனர்" என்று கூறினார்.

சட்ட அமலாக்கம் மற்றும் அதிபர் பாதுகாப்பில் உள்ள நிபுணர்கள் கூறுகையில், துப்பாக்கி ஏந்திய நபர் பால்ரூமிற்குள் நுழையவில்லை என்பதே பாதுகாப்பு ஏற்பாடுகள் வேலை செய்ததைக் காட்டுகிறது என்றனர்.

முன்னாள் எஃப்பிஐ (FBI) சிறப்பு ஏஜெண்ட் ஜெஃப் குரோகர் பிபிசியிடம் கூறுகையில்: "இதைச் செய்யத்தான் இரகசிய சேவைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது." துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் அவர்கள் "அதிபரைச் சூழ்ந்து கொண்டு", ஒரு "உடல் தடையை" உருவாக்கினர் என்றார்.

முன்னாள் இரகசிய சேவை ஏஜெண்ட் பாரி டொனாடியோவும் பிபிசியிடம் கூறுகையில், அந்த நிகழ்வில் "ஏஜெண்டுகள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரில் எந்தக் குறையும் இல்லை" என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு எவ்வாறு மாறக்கூடும் என்பது குறித்து கருத்து தெரிவித்த சில நிபுணர்கள், டொனால்ட் டிரம்ப் நிகழ்ச்சிகளுக்கு இனி பரந்த எல்லைக் கட்டுப்பாடுகள் போன்ற வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினர்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் ரகசிய சேவை அதிகாரிகள் அதிபரை சுற்றி ஒரு மனித கேடயத்தை அமைத்தனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் ரகசிய சேவை அதிகாரிகள் அதிபரை சுற்றி ஒரு மனித கேடயத்தை அமைத்தனர்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறையின் சமீபத்திய அத்தியாயம் இந்தத் துப்பாக்கிச் சூடு என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டில், அமெரிக்க கேபிடல் காவல்துறை 8,000-க்கும் மேற்பட்ட மிரட்டல்களை விசாரித்துள்ளது, இது 2018-டன் ஒப்பிடும்போது 50% அதிகமாகும்.

கடந்த ஆண்டு யூட்டாவில் சார்லி கர்க் கொல்லப்பட்டது அமெரிக்காவின் கசப்பான அரசியல் பிரிவினையை மேலும் அம்பலப்படுத்தியது. 'டர்னிங் பாயிண்ட் யூஎஸ்ஏ' நிகழ்வில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த பழமைவாத அரசியல் நோக்கர் சுடப்பட்டார், அந்த வன்முறைச் சம்பவம் படம்பிடிக்கப்பட்டு இணையம் முழுவதும் பரவியது.

சில மாதங்களுக்கு முன்பு, மினசோட்டா பிரதிநிதி மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் சுட்டுக் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் செனட்டர் ஜான் ஹாஃப்மேன் மற்றும் அவரது மனைவி யுவெட் ஆகியோரும் பலமுறை சுடப்பட்டு காயமடைந்தனர், ஆனால் உயிர் தப்பினர்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, டிரம்ப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட தருணம்

மேலும் 2022 ஆம் ஆண்டில், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால், சுத்தியலால் தாக்கப்பட்டு மண்டை ஓடு உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், வர்ஜீனியாவில் காங்கிரஸின் பேஸ்பால் போட்டிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, குடியரசுக் கட்சியின் ஸ்டீவ் ஸ்காலிஸ் மற்றும் நான்கு பேர் சுடப்பட்டு காயமடைந்தனர்.

கொலை முயற்சிக்கு உள்ளான அதிபர்களில் ரொனால்ட் ரீகனும் ஒருவர், அவர் 1981 இல் ஜான் ஹின்க்லி ஜூனியரால் சுடப்பட்டு காயமடைந்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரீகனின் நுரையீரல் பாதிக்கப்பட்டது, ஆனால் அவர் உயிர் தப்பினார்.

சனிக்கிழமை இரவு விழா நடந்த அதே வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியேதான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது.

தனது நிகழ்ச்சிகளில் இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடப்பது குறித்து கேட்கப்பட்டபோது, தான் "கொலைகளைப் பற்றிப் படித்துள்ளதாகவும்", ஆபிரகாம் லிங்கன் போன்ற முன்னாள் அதிபர்களும் இலக்கு வைக்கப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.

"அவர்கள் பெரிய பெயர்கள், அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது, ஆனால் நான் [அமெரிக்காவிற்கு] நிறைய செய்துள்ளேன்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு