பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்கும் சௌதி - மத்திய கிழக்கு மோதல் நேரத்தில் இது கவனம் பெறுவது ஏன்?

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் செளதி இளவரசர்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், உமைர் சலிமி
    • பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியியல் வைப்புகளை திருப்பிச் செலுத்திய பிறகு, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்த சௌதி அரேபியாவிடமிருந்து மூன்று பில்லியன் டாலர் டெபாசிட்களை பாகிஸ்தான் பெறும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது ஔரங்கசீப், பாகிஸ்தானுக்குக் கூடுதலாக மூன்று பில்லியன் டாலர் டெபாசிட்களை வழங்க சௌதி அரேபியா உறுதியளித்துள்ளதை உறுதிப்படுத்தினார். இந்த டெபாசிட்கள் அடுத்த வாரத்துக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சௌதி அரேபியாவின் ஏற்கெனவே உள்ள ஐந்து பில்லியன் டாலர் டெபாசிட்கள் இனி ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் அடிப்படையில் இருக்காது என்றும், மாறாக அவை 2028 வரை, நீட்டிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

ஏப்ரல் தொடக்கத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதியியல் டெபாசிட்களைத் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்ததுடன், அதை ஒரு சாதாரண நிதிப் பரிமாற்றம் என்று குறிப்பிட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு சௌதி நிதி அமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜதான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்த நாள், சனிக்கிழமையன்று, பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஷா அப்துல் அஜீஸ் விமான தளத்திற்கு வந்துள்ளதாகச் சௌதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் விமானப்படையின் போர் மற்றும் உதவி விமானங்கள் அடங்கும்.

பாகிஸ்தான் நிதி அமைச்சர் வேறு என்ன சொன்னார்?

வாஷிங்டனில் பாகிஸ்தான் நிதி அமைச்சர் மற்றும் ஸ்டேட் வங்கி கவர்னர், சௌதி நிதி அமைச்சர் முகமது பின் அப்துல்லாவுடன்.

பட மூலாதாரம், Financegovpk

படக்குறிப்பு, வாஷிங்டனில் பாகிஸ்தான் நிதி அமைச்சர் மற்றும் ஸ்டேட் வங்கி கவர்னர், சௌதி நிதி அமைச்சர் முகமது பின் அப்துல்லாவுடன்.

முகமது ஔரங்கசீப் இந்த அறிவிப்பை வாஷிங்டன் டிசியில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 'வசந்தகால கூட்டங்கள் 2026' சந்தர்ப்பத்தில் ஊடகங்களிடம் பேசும்போது வெளியிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானுக்கான சௌதி அரேபியாவின் பொருளாதார உதவி மற்றும் அரசின் நிதி உத்தி குறித்துப் பல முக்கிய விஷயங்களை முகமது ஔரங்கசீப் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாகிஸ்தான் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிதியுதவி பாகிஸ்தானின் வெளிநாட்டு நிதித் தேவைகளுக்கு மிகவும் முக்கியமான நேரத்தில் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் முகமது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார். இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த உதவும் என்றார் அவர்.

ஐஎம்எஃப் உதவியுடன் செயல்படும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில், பாகிஸ்தான் அரசு அந்நியச் செலாவணி கையிருப்பைத் தொடர்ந்து பராமரிக்கும் என்று அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பை அடைவதே அரசின் இலக்காகும், இது சுமார் 3.3 மாத இறக்குமதிக்குச் சமமானதாகும்.

கடந்த வாரம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான யூரோ பாண்டுகளை பாகிஸ்தான் வெற்றிகரமாக திரும்ப செலுத்தியுள்ளது என்றும், இதை அவர் ஒரு சாதாரண நிகழ்வு (non-event) என்றும் குறிப்பிட்டார்.

எதிர்கால வெளிநாட்டுக் நிலுவைத் தொகைகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் சரியான நேரத்தில் முடிக்க அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.

வாஷிங்டனில் நடந்த சந்திப்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய ஔரங்கசீப், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் கவர்னர் மற்றும் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதருடன் இணைந்து சௌதி நிதி அமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜதானுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சௌதி அரேபியாவின் தலைமைக்கு, குறிப்பாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நிதி அமைச்சர் முகமது பின் அப்துல்லா அல்-ஜதான் மற்றும் துணை நிதி அமைச்சர் ஆகியோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சௌதி அரேபியா பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து அளித்து வரும் உதவி மற்றும் கூட்டாண்மைக்கான அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

சௌதி அரேபியாவிடமிருந்து சரியான நேரத்தில் கிடைத்த நிதியுதவி, வர்த்தக ரீதியான அம்சங்கள் உட்பட பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு ஒரு முக்கியமான நேர்மறையான உந்துதலை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் கருவூலத்தின் மீதான அழுத்தம்

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் செளதி இளவரசர்

பட மூலாதாரம், Reuters

ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தரவுகளின்படி, ஏப்ரல் 3, 2026 நிலவரப்படி பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 21 பில்லியன் டாலராக இருந்தது. இதில் 16 பில்லியன் டாலர் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானிடமும், ஐந்து பில்லியன் டாலர் வணிக வங்கிகளிடமும் உள்ளன.

மத்திய வங்கியிடம் உள்ள 16 பில்லியன் டாலரில், 12 பில்லியன் டாலர் சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் டெபாசிட்கள் ஆகும். இவை பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்த வைக்கப்பட்டிருந்தன.

இந்த டெபாசிட்களில் இரண்டு பில்லியன் டாலர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வைத்திருந்தது. இது தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு ஒன்றரை பில்லியன் டாலர் கடனும் வழங்கியிருந்தது. இதில் 45 கோடி டாலர் கடன் கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் வழங்கப்பட்டது. இவ்வாறு பாகிஸ்தான் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்தக் கடன் சுமார் மூன்றரை பில்லியன் டாலராக இருந்தது.

பத்திரிகையாளர் ஷெபாஸ் ரானா கூறுகையில், சௌதி அரேபியாவிடமிருந்து மூன்று பில்லியன் டாலர் கடன் கிடைப்பதன் முக்கியத்துவத்தை, இது கிடைக்காவிட்டால் ஒருவேளை ஐஎம்எஃப் போர்டிடமிருந்து அடுத்த தவணை கடனைப் பெறுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதன் மூலம் உணரலாம் என்கிறார்.

பிபிசி உருதுவிடம் பேசுகையில் அவர், செப்டம்பர் 2027-க்கு முன் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானில் வைக்கப்பட்டுள்ள தனது மூன்றரை பில்லியன் டாலர் டெபாசிட்களைத் திரும்பப் பெறமாட்டேன் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐஎம்எஃப்-க்கு வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் யுஏஇ அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது, இதனால் கையிருப்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. அதை நிரப்புவதற்காகச் சௌதி அரேபியா பாகிஸ்தானுக்குப் பணம் கொடுத்துள்ளது என்றார்.

சௌதி டெபாசிட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் இறக்குமதி அழுத்தத்திற்கு உள்ளாகும் என்ற பயம் இப்போது நீங்கியுள்ளது என்றும், ரூபாயின் மீது கூடுதல் சுமை விழாது என்றும் ஷெபாஸ் ரானா கூறுகிறார்.

நடப்பு மாதத்தில் பாகிஸ்தான் மொத்தமாக சுமார் ஐந்து பில்லியன் டாலர் செலுத்த வேண்டியிருந்தது, இதில் 1.3 பில்லியன் டாலர் யூரோ பாண்டுகள் செலுத்துதலும் அடங்கும்.

அவரைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மூன்றரை பில்லியன் டாலர்களைத் திருப்பிச் செலுத்தும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. 450 மில்லியன் டாலர் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது, இந்த வாரம் மேலும் இரண்டு பில்லியன் டாலர் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கின் மோதலால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, ஏனெனில் நாடு தனது மொத்த எரிசக்தி இறக்குமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்தப் பிராந்தியத்திலிருந்தே பெறுகிறது.

மறுபுறம், இஸ்லாமாபாத் அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

மத்திய கிழக்கின் மோதல் காரணமாகப் பாகிஸ்தானின் பொருளாதார நிலை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச நாணய நிதியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

அடுத்த நிதி ஆண்டுக்கான பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகித மதிப்பீட்டை ஐஎம்எஃப் 3.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது, அதே நேரத்தில் நாட்டில் பணவீக்கம் 8.4 சதவிகிதமாக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் ஏன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது?

ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் லோகோ (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் லோகோ (கோப்புப் படம்)

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2018-ல் பாகிஸ்தானுக்கு இரண்டு பில்லியன் டாலர் டெபாசிட்களை வழங்கியது, அவை கடந்த எட்டு ஆண்டுகளாகப் பாகிஸ்தானிடம் உள்ளன மற்றும் பலமுறை புதுப்பிக்கப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில் இதை ஆண்டு அடிப்படையில் புதுப்பிப்பதற்குப் பதிலாக, குறுகிய கால அடிப்படையில் செய்வதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்புக்கொண்டது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பிலிருந்து இரண்டு பில்லியன் டாலர் இரண்டு மாதங்களுக்குப் புதுப்பிக்கப்பட்டது. அவற்றின் கால அவகாசம் ஏப்ரலில் முடிவடைகிறது, இப்போது அதைப் பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இரண்டு பில்லியன் டாலர் டெபாசிட்களைத் திருப்பிச் செலுத்தும் பாகிஸ்தானின் முடிவு மத்திய கிழக்கில் இரான் மற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் பாதித்திருந்தது.

இந்த டெபாசிட்களுக்கான அதிக வட்டி விகிதங்களைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்குப் புதுப்பிக்கவும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது, ஆனால் அது நடக்கவில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு