காணொளி: 'அறையில் பேசுவதை பொதுவெளியில் பேசக்கூடாது' - செல்வப்பெருந்தகை
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் விவாதப் பொருளாகி வருகின்றன. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை செல்வப்பெருந்தகை சந்திக்க உள்ளார்.
அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சியினர் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார், " கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை பேசும். இதைப்பற்றி பொது வெளியில் பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் மாநிலத் தலைமையும் சொல்கிறது. பொது வெளியில் பேசுவதற்கு இதில் என்ன இருக்கிறது, இவ்வளவு காலம் பேசாமல் தேர்தல் நடக்கும்போது ஏன் பேச வேண்டும்?" என்றார்.
அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் என்ன செய்வது எனக் கூறிய செல்வப்பெருந்தகை, "எங்களது தேவையை அகில இந்திய தலைமையிடம் தெரிவிப்போம். எனக்குப் பேசத் தெரியும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது." என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கன் தாகூர் மற்றும் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவிக்கும் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "இன்று அது விஷயமாக தான் அழைத்திருக்கிறார்கள், இன்று பேசப் போகிறோம், ஆலோசனை செய்வோம். ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக யார் நடந்தாலும் தவறுதான்." என்று குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



