செங்கல்பட்டில் 'ராக்கெட் போன்ற பொருளை' தூக்கி எறிந்த மாணவர் பலி - தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது ஏன்?

செங்கல்பட்டில் 'ராக்கெட் லாஞ்சரை' தூக்கி எறிந்த மாணவர் பலி - தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது ஏன்?

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, உயிரிழந்த மாணவர் இமான்ஷூ யாதவ்
    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயுத பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு மலையேற்றம் சென்ற கல்லூரி மாணவர், வெடிக்காத ராக்கெட் போன்ற பொருளை தூக்கி எறிந்ததால் உயிரிழந்தார் என காவல்துறை கூறியுள்ளது.

மக்கள் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள் இருந்தும் மாணவர்கள் அனுமதியின்றி சென்றதாக கூறும் காவல் ஆய்வாளர் ரவி காயமடைந்த மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

”வெடிக்காத வெடிப்பொருட்களை அப்புறப்படுத்த ராணுவத்தில் தனிக்குழு உள்ளது" என்றார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார்.

என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் ஆயுத பயிற்சி மையத்தில் இந்திய ராணுவத்தினர், மத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றின் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இங்கு தமிழக காவல்துறையினரும் கமாண்டோ படை வீரர்களும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி கல்லூரி மாணவர்களான இமான்ஷூ யாதவ் உள்ளிட்ட 6 பேர் பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு மாலை 5.30 மணியளவில் சென்றுள்ளனர்.

மாணவர்கள் அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற நிலையில், அங்கு ஆயுதப்படை பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் போன்ற பொருளை மாணவர் இமான்ஷூ யாதவ் தூக்கி எறிந்ததாகவும் அருகில் இருந்த பாறைமீது பட்ட அது வெடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தின் போது உடனிருந்த மாணவர்களில் 4 பேர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆயுத பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு அனுமதி இல்லாமல் நுழைந்ததாக மாணவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
சிங்கபெருமாள் கோயில் காவல்நிலையம்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சிங்கபெருமாள் கோயில் காவல்நிலையம்

காவல்துறை சொல்வது என்ன?

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் மாணவர்கள் அத்துமீறி நுழைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என சிங்க பெருமாள் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''அங்கு யாரும் செல்லக்கூடாது என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது. அதனை மீறி மாணவர்கள் அங்கு சென்றுள்ளனர்'' என்றார்.

காயமடைந்து சிகிச்சையில் உள்ள மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

"பொதுமக்கள் அந்த பகுதிக்குள் செல்லாமல் இருக்க தற்காலிகமாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

ஆயுதப்பயிற்சியின் போது வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது'' என்று பதிலளித்தார்.

அனுமந்தபுரம் மலைப்பகுதி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட அனுமந்தபுரம் மலைப்பகுதி

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றது எப்படி?

பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் 4ம் ஆண்டு பயின்று வரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த அந்த மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளனர்.

அவர்கள் அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு 'மலையேற்றம்' செல்வதற்காக திட்டமிட்டு ஏப்ரல் 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு 'கூகுள் மேப்' மூலம் அந்த பகுதிக்குள் 3 இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.

மலைப்பகுதியின் கீழ் வாகனத்தை நிறுத்திவிட்டு, அனுமந்தபுரம் மலை மீது ஏறியுள்ளனர் என காயமடைந்த மாணவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக காவல்துறை கூறுகிறது

இதனை உறுதிபடுத்த பிபிசி தமிழ் மாணவர்களை பல்வேறு வழிகளில் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார்.

பட மூலாதாரம், X/MajorMadhankumar

படக்குறிப்பு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சொல்வது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

''அனுமந்தபுரம் பயிற்சி மையம் ஆயுத பயிற்சி மேற்கொள்வதற்கான ஒரு பிரத்யேக இடம், இங்கு பொதுவாக ராணுவ பயிற்சியின்போது மிஷின் துப்பாக்கிகள் முதல், சிறிய வகை ராக்கெட் லாஞ்சர்கள் வரை பயன்படுத்தி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மேற்கொள்கின்றனர்'' என்றார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார்.

"அவ்வாறு செயலிழக்காமல் உள்ள ராக்கெட் உள்ளிட்ட வெடிபொருட்களை கண்டறிந்து செயலிழக்க செய்ய ராணுவத்தில் தனிக்குழு உள்ளது. அவை மிகவும் ஆபத்தான பணி"

''வெடிக்காத ராக்கெட் மணல் பரப்புகளில் 3 அடி ஆழம் வரை சென்று சிக்கிக்கொள்ளும், பெரும்பாலும் அந்த இடங்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்ற அவர் ''சில நேரங்களில் அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் அப்படியே விட்டு விடுவதும் உண்டு'' என்றார்.

"இதனால்தான் அந்த பகுதி ஆபத்து நிறைந்த பகுதி. மக்கள் யாரும் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

''வெடிக்காமல் இருக்கும் ராக்கெட்களை நாம் தொடாமல் இருக்கும் வரை நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதில் உள்ள 'இம்பாக்ட் ஃபியூஸ்' ( ராக்கெட்டின் முன்பகுதியில் இருப்பது) ஒரு இலக்கு மீது மோதும்போதுதான் அது வெடிக்கும். அதன்படி அந்த மாணவர் அதனை கையிலெடுத்து வீசியிருந்தால் மட்டுமே அது வெடித்திருக்கும்" என்று அவர் கூறினார்.

பிரச்னைகளை பேசுவோம்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.
 வெடிபொருட்கள் சிதறிக்கிடக்கின்றன

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் சிதறிக்கிடக்கின்றன

இந்த பயிற்சி மையத்தில் இருந்து அடிக்கடி துப்பாக்கி சத்தங்களும், குண்டு சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருக்கும் என்கிறார் அனுமந்தபுரத்தில் வசிக்கும் கதிரேசன்.

''வழக்கமாக இந்தப் பகுதியில் அருகில் ஊர் மக்கள் ஆடு, மாடு மேய்க்க செல்வது வழக்கம். ஆயுத பயிற்சி மேற்கொள்ளும் நாட்களில் தண்டோரா மூலம் காவல்துறை அதற்கான அறிவிப்பை வழங்குவார்கள். அப்போது மக்கள் அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்வார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு