அவிநாசி தொகுதி நிலவரம்: 'அதிமுக கோட்டையில்' போட்டியிடும் எல்.முருகன் - களம் எப்படி இருக்கிறது?

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

'அதிமுக கோட்டை' என்று வர்ணிக்கப்படும் அவிநாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த தனபாலை இரு முறை தேர்வு செய்த அவிநாசி தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது இந்த தொகுதியை மீண்டும் கவனம் பெறவைத்துள்ளது.

அவரை எதிர்த்து முக்கியமான 3 கட்சிகளிலும் மருத்துவர், ஆசிரியர்கள் என பட்டதாரி இளம்பெண்கள் போட்டியிடுவது இந்த தொகுதியின் மீது பல தரப்பினரிடத்திலும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு கட்சிகளிலும் ஏராளமான வாக்குறுதிகள் தரப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சராகவுள்ள எல்.முருகன் வெற்றி பெறுவாரா என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

ஆனால் அதிமுகவினர் தான் தொகுதியில் அதிகமாக உழைக்கிறார்கள் என்கிறார் எல்.முருகன். இது பற்றி அவரிடம் கேட்டபோது, ஊடகங்களுக்குதான் அதிருப்தி இருக்கிறது என்று பிபிசியிடம் கூறினார் எல்.முருகன்.

கால் நூற்றாண்டாக அதிமுக வசம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி), பெருமளவு கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இறுதியாக வெளியான வாக்காளர் பட்டியலின்படி, இந்தத் தொகுதியில் தற்போது 2,50,346 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1980ஆம் ஆண்டிலிருந்து 2021 வரையிலும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 1996 தேர்தலில் மட்டுமே திமுக வென்றது. 1980-இல் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றதைத் தவிர்த்து, மற்ற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக நேரடியாக நின்று வென்றுள்ளது.

கடந்த 2001-லிருந்து இப்போது வரையிலும் கால் நூற்றாண்டாக இந்தத் தொகுதி, அதிமுக வசம் உள்ளதால் அக்கட்சியின் 'அசைக்க முடியாத கோட்டை' என்றே வர்ணிக்கப்படுகிறது.

கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய 2 தேர்தல்களிலும் முன்னாள் சபாநாயகர் தனபால் இங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை அவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவிநாசி தொகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு அதிமுக கொடுத்துள்ளது.

அதில்தான் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகவுள்ள எல்.முருகன் போட்டியிடுகிறார். இதற்கு முன்பாக கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த முருகன், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய பாஜக தலைமை, பின்னர் முதல் முறை மத்திய இணை அமைச்சராக்கியது. பின்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த பின்னும் மீண்டும் ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி, மீண்டும் மத்திய இணை அமைச்சராக்கியுள்ளது. இப்போதும் மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகன், இந்தத் தொகுதியில் போட்டியிடுவது அவிநாசி தொகுதியை நட்சத்திர அந்தஸ்துள்ள தொகுதியாக மாற்றியுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ''இது கட்சியின் கட்டளை. எப்போதுமே நான் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டவன். அது மட்டுமின்றி மத்திய அமைச்சராக பணி செய்வதை விட, அவிநாசி தொகுதி மக்களின் பிரதிநிதியாகப் பணியாற்றுவதை நான் விரும்புகிறேன். இந்தத் தொகுதிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன்.'' என்றார்.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் குளிர் பதனக்கிடங்கு, நேந்திரன் வாழை மற்றும் முட்டை உற்பத்தி அதிகம் நடப்பதால் அவற்றை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நூற்றுக்கணக்கான குளம், குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்பும் வகையில் 2வது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் போன்றவை இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ளன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறும் எல்.முருகன், ''மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி அமையும்போது, என்னுடைய முதல் முன்னுரிமை அவிநாசி நகரில் பாதாள சாக்கடை அமைப்பதுதான். பாண்டியாறு திட்டத்தை நிறைவேற்றி, அதை பவானி நதியுடன் இணைப்பது. மூன்றாவது அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இரண்டாம் கட்டத் திட்டத்தில் சேர்ப்பது ஆகியவை என்னுடைய முக்கியமான வாக்குறுதிகள்.'' என்று தெரிவித்தார்.

''திமுக இந்தத் திட்டத்தை அவசர கதியில் திறந்துள்ளது. பல இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்காததே அதற்குக் காரணம். அதை சரி செய்வோம். அன்னூர் நகருக்கு ஒரு ரிங் ரோடு அமைக்கப்படும். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். வீடில்லாத மக்களுக்கு வீடு கட்ட பிரதமர் திட்டத்தில் நிதியுதவி அளிக்கப்படும்.'' என்றும் அவர் தெரிவித்தார்.

பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தும் விவசாயிகள்

மத்திய அரசு உதவியுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எல்.முருகனிடம் தாங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார், அத்திக்கடவு–அவிநாசி திட்ட போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி.

''தமிழகத்தில் நீலகிரியில் 388 சதுர கி.மீ. பரப்பளவில் பெய்யும் மழை, பாண்டியாறு, புன்னம்புழா, சோலாதிப்புழா ஆகிய ஆறுகளாக சாலியாற்றில் கலந்து கேரளாவில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. அதை பம்ப் செய்து, பில்லூர் அணைக்குக் கொண்டு வரமுடியும். அதைக் கொண்டு வந்தால் விவசாயம், குடிநீர், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்துக்கும் பயன்படுத்த முடியும். இது 1965ல் திட்டமிடப்பட்ட திட்டம். வரப்போகும் அரசாவது இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.'' என்றார்.

இந்த வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் தருகின்றன என்று கூறிய அவர், "ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. தற்போது பாஜக வேட்பாளர் முருகன் இந்த வாக்குறுதியை 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு அதிகமான நிதி தேவை என்பதால் மத்திய அரசின் உதவியுடன்தான் இதை நிறைவேற்ற முடியும்" என்கிறார்.

''கூடுதல் தண்ணீர் கிடைக்காவிட்டால் அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் வெறும் 4 மாதங்கள் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதற்குதான் பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது மிக அவசியம். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது என்பதால், அந்த கூட்டணி ஆட்சி வந்தால் இந்த திட்டத்தையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.'' என்றார் வெள்ளியங்கிரி.

இதுகுறித்துப் பேசிய 'நல்லது நண்பர்கள்' அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், ''அத்திக்கடவு–அவிநாசி திட்டம் 60 ஆண்டு கோரிக்கை. அதை 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டு நிறைவேற்றியது அதிமுக அரசுதான். முன்னாள் சபாநாயகர் தனபால் மீண்டும் ஜெயிக்க இதுதான் காரணம். அதை இன்னும் முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.'' என்றார்.

ஆனால் இதை விட அத்தியாவசியமான கோரிக்கைகள் சில இருப்பதாக பட்டியலிட்ட அவர், "அவிநாசி தொகுதியின் வழியே தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடக்கின்றன, மத்திய அரசு அறிவித்த தேசிய நெடுஞ்சாலை விபத்து சிகிச்சை மையத்தைக் கொண்டு வர ஆ.ராசா, தனபால் என பலரிடம் வலியுறுத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை" என்றார்.

''அவிநாசி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். புறவழிச்சாலை அமைக்க வேண்டியது மிக அவசரத் தேவை. அதற்கு அளவீடு நடந்தும் திட்டம் வரவில்லை. அதேபோல 3 குடிநீர்த் திட்டங்கள் கொண்டு வரப்பட்டும் அவிநாசி நகர மக்களின் குடிநீர்த் தேவை நிறைவேற்றப்படவில்லை. இங்கே வரவேண்டிய தண்ணீர் திருப்பூருக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது. 4வது திட்டத்திலும் அவிநாசி புறக்கணிக்கப்பட்டுள்ளது.'' என்றார் ரவிக்குமார்.

3 கட்சிகளில் களம் இறங்கியுள்ள 3 பட்டதாரி பெண்கள்

ஆனால், "மத்திய அமைச்சராக இருந்து தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களையும் கொண்டு வராத முருகனால் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து என்ன செய்ய முடியுமென்று" கேட்கிறார் திமுக வேட்பாளர் கோகிலாமணி.

26 வயதே ஆன கோகிலாமணி எம்பிபிஎஸ் முடித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எல்.முருகன் மத்திய அமைச்சராகி தமிழகத்துக்கு குறிப்பாக பட்டியலின மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதுதான் கேள்வி. அவர் ஆர்எஸ்எஸ் கொள்கையை மக்களிடம் திணிப்பவராக மட்டுமே இருக்கிறார். அதேபோல கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக எம்எல்ஏவும் மக்களைச் சந்திக்கவேயில்லை. கடந்த 5 ஆண்டு திமுக அரசின் திட்டங்களால் அவிநாசி அதிமுக கோட்டை என்ற பிம்பம் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக உடைக்கப்படும்.'' என்றார்.

அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் நிறைய குளங்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி அவர் கூறுகையில், ''உண்மையில் இந்த திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 500 குளங்கள், குட்டைகள் விடுபட்டுள்ளன. இரண்டாம் கட்டத் திட்டத்தில் அவற்றை நிறைவேற்ற முதல்வர் உறுதியளித்துள்ளார்.'' என்றார்.

அவிநாசி, அன்னூர் நகரங்களில் மேம்பாலம், புறவழிச்சாலை அமைக்கவும், குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், கூடுதல் மருத்துவமனைகள் அமைக்கவும், விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் கோகிலாமணி, இதுபற்றி முதல்வர் இங்கு வரும்போது அறிவிப்பார் என்றார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவும், எல்.முருகனுக்கு எதிராக இதே கேள்விகளை முன் வைத்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய மேனகா, ''அதிமுக கோட்டையாக இருந்த அவிநாசியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்த போதே, இந்தத் தொகுதியில் அதிமுகவின் நிலை தெரிந்துவிட்டது. அதிமுகவுக்கு வாக்களித்த யாரும் பாஜகவுக்கு வாக்களிக்கத் தயாராகயில்லை. அவர்கள் திமுக, தவெக யாரையும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறை அந்த வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே கிடைக்கும்.'' என்றார்.

ஆங்கில இளங்கலை பட்டதாரியான மேனகா, பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் கல்வி மேம்பாடு குறித்து அதிகமாகப் பேசுகிறார். அதேசமயம், "ஆடு மாடு மேய்த்தலை அரசுப் பணியாக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பாக மாற்றுவோம், பாண்டியாறு–மாயாறு இணைப்புத் திட்டம்" உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளிக்கிறார்.

அத்திக்கடவு–அவிநாசி திட்டத்துக்கு திமுக, அதிமுக இரு கட்சியினரும் உரிமை கொண்டாடும் நிலையில், "அந்த திட்டம் வந்தாலும் தண்ணீர் வரவில்லையே?" என்று கேள்வி எழுப்புகிறார் மேனகா.

"அன்னூர், சேவூர், கைகாட்டி புதூர் என முக்கியமான குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் வந்துள்ளது, நூற்றுக்கணக்கான குளங்கள் காய்ந்து கிடக்கும் காணொளி எங்களிடம் இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

தவெக வேட்பாளர் கமலியும், "அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் தண்ணீரே வருவதில்லை" என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

எம்.ஏ.பிஎட் முடித்துள்ள கமலி, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

"பல பகுதிகளில் பொதுக்கழிப்பிடத்தில் வரும் தண்ணீரை எடுத்துச் சென்று வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பல பகுதிகளில் பொதுக்கழிப்பிடங்களும் இல்லை" என்ற அவர், அதற்கு முன்னுரிமையளித்து வாக்குறுதிகள் அளித்து வருவதாகக் கூறுகிறார்.

கடந்த ஏப்ரல் 14 அன்று பெருமாநல்லூரில் விஜய் பரப்புரைக்குக் கூடிய கூட்டத்தைச் சுட்டிக்காட்டி, "இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் வீழ்த்துவோம். அவிநாசி தொகுதியில் மட்டுமே இதுவரை 51 ஆயிரம் பேர் கட்சி உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் 2 அல்லது 3 வாக்குகளைச் சேகரித்து என்னை வெற்றி பெற வைப்பார்கள்" என்றும் அவர் கூறினார்.

எல்.முருகனை எதிர்த்துப் போட்டியிடும் இந்த 3 பெண் வேட்பாளர்களும் பட்டதாரிகள் என்பதுடன் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் கவனம் பெற்றுள்ளது.

பாஜக போட்டியிடுவதால் அதிமுகவினரிடம் அதிருப்தியா?

அதேபோன்று 'அவிநாசி தொகுதியை, பாஜகவுக்குக் கொடுத்ததும் ஒரு குறிப்பிட்ட அளவில் தேர்தலில் எதிரொலிக்கும்' என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது முன்னாள் சபாநாயகரும், இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தனபால் வெளியிட்ட காணொளியும் முருகனுக்கு எதிரான பரப்புரையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய திமுக வேட்பாளர் கோகிலாமணி, ''என்னுடைய அப்பா திமுகவின் சாதாரணத் தொண்டன். எனக்கு இந்த வாய்ப்பை திமுக தலைமை வழங்கியுள்ளது. தனபால், ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர். அவரைப் புறக்கணித்து, தொகுதியையும் பாஜகவுக்குக் கொடுத்ததில் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்'' என்றார்.

அவிநாசி தொகுதியில் பாஜக போட்டியிடுவதால் அதிமுகவினரிடம் அதிருப்தி உள்ளதாகக் கூறப்படுவது பற்றி மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகனிடம் கேட்டபோது, ''அந்த அதிருப்தி எல்லாமே ஊடகங்களிடம்தான் இருக்கிறது. எங்களை விட அதிமுகவினர்தான் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், மத்திய அரசின் திட்டங்களும் என்னை வெற்றிபெறவைக்கும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு