You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் ஆடு திருட்டில் தொடங்கிய மோதல் 48 உயிர்களை பறித்தது ஏன்?
- எழுதியவர், ரியாஸ் சொஹைல்
- பதவி, பிபிசி உருது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ஒரே ஒரு அறை கொண்ட மதரசாவில் சுமார் இரண்டு டஜன் குழந்தைகள் குர்ஆன் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மதரஸாவை ஒட்டியே பள்ளியின் இரண்டு கட்டடங்கள் உள்ளன. அதில் ஒன்று இடிந்து போய் கிடக்கிறது, மற்றொன்று ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போயுள்ளது.
இங்கு நிலவும் இந்த அமைதிக்குக் காரணம், இரு உள்ளூர் சமூகங்களுக்கு இடையே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மோதலாகும். இது இங்கிருக்கும் பள்ளிகளையும் பாதித்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகார்பூர் மாவட்டத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக 'ஜுனேஜோ' மற்றும் 'கல்கோரா' சமூகங்களுக்கு இடையே நிலவிய மோதலில் மொத்தம் 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் காலகட்டத்தில், இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் பகுதிகளில் மற்றவர்கள் நுழைய முடியாதபடி 'தடை செய்யப்பட்ட பகுதி' ஆக மாற்றியிருந்தனர். இந்தப் பூசல் இங்கிருந்த பள்ளிகளையும் பாதித்து, இறுதியில் அவை பாழடைந்தன.
கடந்த மாதம், இந்த இரு தரப்பினரும் ஒரு 'ஜிர்கா' (பழங்குடியின பஞ்சாயத்து) மூலம் தங்கள் பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர். இருப்பினும், நீதிமன்றங்கள் மற்றும் சட்டத் தடைகள் இருக்கும் நிலையில் ஜிர்கா நடத்தியது குறித்துக் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்த இந்த சண்டையும் பதற்றமும், இந்தச் சமூகங்கள் மற்றும் இங்கு வசிக்கும் மற்ற மக்களின் வாழ்க்கையை எவ்வளவு வேதனையடையச் செய்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி அண்மையில் சிந்து மாகாணத்தின் உட்பகுதிகளுக்குப் பயணம் செய்தது.
ஆடு திருட்டு புகாரில் தொடங்கிய மோதல்
ஜலால்பூர் என்பது சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமம். அங்கு குர்பான் அலி ஜுனேஜோவை நாங்கள் சந்தித்தோம்.
ஜுனேஜோ மற்றும் கல்கோரா சமூகங்களுக்கு இடையிலான இந்த மோதலில், தனது ஒரு சகோதரர் மற்றும் இரண்டு மருமகன்கள், அருகில் உள்ள 'கச்சா' (நதிக்கரை பகுதி) பகுதியில் கால்நடைகளை மேய்க்கச் சென்றபோது கொல்லப்பட்டதாகக் குர்பான் தெரிவித்தார்.
தனது சகோதரர் உட்படத் தனது சமூகத்தைச் சேர்ந்த 23 பேர் இந்தப் பகையினால் பலியாகிவிட்டதாக அவர் கூறுகிறார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆடு திருட்டு சம்பவத்தில்தான் இந்தப் பகை தொடங்கியதாகக் குர்பான் விவரிக்கிறார்.
இந்த திருட்டு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கல்கோரா சமூகத்தைச் சேர்ந்தவர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், இரு சமூகத்தினரும் ஆடு திருடியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்.
பின்னர் சமாதானத்திற்காக நடந்த ஜிர்காவின் போது, ஆட்டின் உரிமையாளர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மூன்று பேரை மன்னித்துவிட்டார், ஆனால் ஒரு நபரை மன்னிக்க மறுத்துவிட்டார்.
குர்பான் ஜுனேஜோவை பொருத்தவரை இந்த விவகாரம் காலப்போக்கில் வளர்ந்து, பின்னர் ஆயுதமேந்திய மோதலாக மாறியது. இதனால் அந்தப் பகுதியில் வணிகம் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பல உயிர்களும் பறிபோயின.
இருப்பினும், இப்போது ஜிர்கா மூலம் சமரசம் ஏற்பட்ட பிறகு, இதனால் நன்மை உண்டாகும் என்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் குர்பான் ஜுனேஜோ நம்புகிறார்.
ஜலால்பூர் கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே பிபிசி குழுவினர் ஒரு பழைய காவல் நிலையத்தைப் பார்த்தனர். அது நீண்ட காலமாக வெறிச்சோடிக்கிடப்பதாகவும், போலீசார் அங்கிருந்து மாறிச் சென்றுவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு போலீஸ் சோதனைச் சாவடியைக் கண்டோம்.
நவீன ஆயுதங்களும் பதுங்கு குழிகளும்
ஜலால்பூரிலிருந்து நாங்கள் 'கச்சா' பகுதிக்குள் இன்னும் உள்ளே சென்றோம். நதிக்கு அருகிலுள்ள நிலத்தின் இருபுறமும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோதுமைப் பயிர் விளைந்து நின்றது, சில இடங்களில் அறுவடை நடந்து கொண்டிருந்தது.
இந்தப் பகுதியைச் சென்றடைய முறையான தார் சாலை இல்லை. எனவே மழையினால் பயணம் கடினமாக இருந்தது. எங்கள் வாகனம் பல இடங்களில் சேற்றில் சிக்கிக் கொண்டது. சுமார் 15 கிலோமீட்டர் பயணம் செய்து கல்கோரா சமூகத்தின் கிராமமான 'மீரல் கல்கோரா'வை அடைந்தோம்.
கிராமத்தின் ஒரு பெரிய பொதுக் கூடத்தை அடைந்தவுடன், சுவரில் ஆர்பிஜி மோட்டார், எல்எம்ஜி மற்றும் எஸ்எம்ஜி போன்ற நவீன ஆயுதங்கள் தொங்குவதைக் கண்டோம்.
தங்கள் கிராமத்தில் உள்ள நான்கு பொதுக் கூடங்களிலும் இதேபோன்ற ஆயுதங்கள் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தனது தந்தை உட்படத் தனது சமூகத்தைச் சேர்ந்த 28 பேர் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளதாக ஹபீஸ் கல்கோரா கூறுகிறார்.
மண் மூட்டைகளால் செய்யப்பட்ட மறைவிடத்தை அவர் எங்களுக்குக் காட்டினார். தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இங்கு 24 மணி நேரமும் காவல் காக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இப்போது சமரசம் ஏற்பட்டுவிட்டதால், முன்பு போலக் கடுமையான காவல் இல்லை என்கிறார் அவர்.
சமரசம் ஏற்படுவதற்கு முன்பு கிராமத்தைச் சுற்றிலும் இது போன்ற மறைவிடங்கள் இருந்தன.
அவரும் இந்த மோதல் தொடங்கக் காரணம் ஆடு திருட்டுச் சம்பவம் தான் என்கிறார். ஆனால் திருடன் ஜுனேஜோ சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், திருட்டுச் சம்பவத்தின் போது அவர் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
பதற்றமான நாட்களில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புக்காக மாதம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டபோது, மோதல் உச்சத்தில் இருந்தபோது இந்தச் செலவு 50 லட்சம் (பாகிஸ்தான் ரூபாய்) வரை சென்றதாகக் கூறினார்.
இது போன்ற நவீன ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்று கேட்டதற்கு, எல்லாம் 'தொடர்புகள்' மூலம்தான் நடக்கும் என்றார்.
"நான் உங்களை அணுகுவது போல, நீங்கள் என்னை அணுகுவது போல."
சமரசத்திற்குப் பிறகு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் குறையும் என்று அவர் நம்புகிறார்.
பதற்றம் காரணமாக இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் சிரமம் இருந்ததாகவும், உள்ளூர் ஆண்கள் பகல் இரவாகக் காவல் காக்க வேண்டியிருந்ததாகவும் ஹபீஸ் கல்கோரா தெரிவித்தார்.
"இப்போது இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதில் இருந்து, நிலைமை முன்பை விடச் சிறப்பாக உள்ளது."
இது சிந்து மாகாணப் பகுதி என்றாலும், கண்ணில் பட்ட ஒவ்வொருவரின் தோளிலும் ஏதோ ஒரு வகை ஆயுதம் இருப்பதை பிபிசி குழு கவனித்தது.
கிராம மக்கள் நிம்மதியாக வெளியே செல்ல முடியாது, ஏனென்றால் கிராமத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து ஆண்கள் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்போது எதிர்த் தரப்பினர் தவிர, போலீஸ் கைது செய்வார்கள் என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது.
சமூகத் தலைவர்களின் செல்வாக்கு
ஷிகார்பூர் உள்ளிட்ட வடக்கு சிந்து மாகாணத்தின் பல பகுதிகளில், அரசியல் மற்றும் நிர்வாக பாதுகாப்பின் காரணமாகச் சமூகத் தலைவர்கள் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளனர்.
இங்கு நில எல்லைப் பிரச்னை, கால்நடைத் திருட்டு மற்றும் பிற பழங்குடியில் காதலித்துத் திருமணம் செய்துகொள்வது போன்றவற்றால் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.
சமூகத் தலைவர்களின் செல்வாக்கு காரணமாக, மக்கள் பிணக்குகளைத் தீர்க்க உள்ளூர் பழங்குடியின மரபுகள் மற்றும் 'ஜிர்கா' போன்ற முறைசாரா நீதி அமைப்புகளையே நம்பியிருப்பதாகப் பல உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
கல்கோரா மற்றும் ஜுனேஜோ சமூகங்களின் ஒப்பந்தமும் ஒரு ஜிர்கா மூலமே சாத்தியமானது.
இந்த ஜிர்காவில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திய உயிர் மற்றும் சொத்து இழப்புகளுக்காக மொத்தம் 14 கோடியே 91 லட்சம் ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துபவர் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த காலத்தில் ஏன் இது போன்ற ஒப்பந்தம் ஏற்படவில்லை என்று ஹபீஸ் கல்கோராவிடம் பிபிசி கேட்டது.
"அது சமூகத் தலைவர்களுக்குத்தான் தெரியும். இப்போது அரசின் அழுத்தமும், எங்கள் தலைவர்களின் முயற்சியும் இருந்ததால் இணைந்து முடிவெடுக்கப்பட்டது" என்றார்.
ஜிர்கா இல்லையென்றால் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
"நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக வழக்குகளை விசாரிப்பதில்லை என்பதால்தான் ஜிர்காக்கள் நடக்கின்றன. எட்டாண்டுகள் ஆகியும் வழக்குகள் நகர்வதில்லை."
இந்த முடிவின் சாட்சியாகவும் மத்தியஸ்தராகவும் இருந்தவர் கௌஸ் பக்ஷ் மெஹர். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிந்து மாகாணச் சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
இரு சமூகங்களுக்கும் இடையே இவ்வளவு நீண்ட காலம் மோதல் நீடித்தும், ஏன் முன்பே இது தீர்க்கப்படவில்லை என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், "முன்பு நிர்வாகக் குறைபாடு இருந்தது, அதனால் இந்த மோதலுக்கான ஜிர்கா நடைபெறவில்லை. ஒரு கொலையின் போது அரசு நிர்வாகம் கடுமை காட்டி, கைது செய்து, நீதிமன்றங்கள் மூலம் விரைவாகத் தண்டனை கிடைத்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது" என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி செய்தார்கள், ஆனால் உள்ளூர் நிர்வாகம் உதவாததால் அது நிறைவேறவில்லை என்று அவர் கூறினார்.
"இப்போது நிர்வாகம் கடுமை காட்டியதால், மக்கள் நேர்வழிக்கு வருகிறார்கள்."
'பழங்குடியின மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் கொள்கை'
ஷிகார்பூர் உட்பட வடக்கு சிந்துவின் பல பகுதிகள் மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
மோதல்களைத் தீர்க்கச் சக்கரின் சர்க்யூட் ஹவுஸில் மூன்று நாட்கள் 'பெரிய ஜிர்கா' நடத்தப்பட்டது. இதில் கடந்த காலத்தில் நிர்வாகத்தால் கொள்ளையர்கள் என அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்ட சிலரும் கலந்து கொண்டனர். பின்னர் சிந்து அரசின் 'சரணடைதல் கொள்கையின்' கீழ் அவர்கள் சரணடைந்தனர்.
பழங்குடியின மோதல்களை தீர்ப்பதும் 'சரணடைதல் கொள்கையின்' ஒரு பகுதிதான் என்று ஷிகார்பூர் எஸ்எஸ்பி கலீம் மாலிக் கூறுகிறார்.
ஏனெனில் பல கொள்ளையர்கள் பழங்குடியினப் பகையினாலேயே கொள்ளையர்களாக மாறினர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
"இந்த மக்களின் முடிவுகளால் பகை முடிவுக்கு வருவது நன்மையைத் தருகிறது, அதன் பிறகு அரசு அங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியும்."
அவரைப் பொறுத்தவரை, முன்பு இத்தகைய முயற்சிகள் தனிப்பட்ட ரீதியில் இருந்தன, ஆனால் இப்போது இது ஒரு முறையான அரசுக் கொள்கையாக உள்ளது. இதில் போலீஸ், நீதித்துறை மற்றும் அரசியல் தலைமை 'ஒரே நேர்க்கோட்டில்' உள்ளனர்.
"இங்குள்ள ஜிர்கா முறை அல்லது தீர்ப்பு வழங்கும் முறை சிந்து கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இப்போது இதைப் பயன்படுத்தி உள்ளூர் பழங்குடித் தலைவர்கள் மக்களை ஒருமித்த கருத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அனைத்துத் தலைவர்களும் இந்த முடிவுகளுக்கு ஆதரவாக இருந்தால் அது நல்ல விஷயம். சில குற்றவாளிகள் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்கள் மீது மிகவும் கடுமையான கொள்கை பின்பற்றப்படும்."
பாகிஸ்தானின் பின்தங்கிய மாவட்டங்களில் ஜிர்கா முறை பொதுவானது. ஜிர்கா என்பது வழக்கமாக செல்வாக்கு மிக்க பெரியவர்கள், பழங்குடித் தலைவர்கள் அல்லது உள்ளூர் முக்கியஸ்தர்களின் ஒரு முறைசாரா தளமாகும்.
இங்குப் பிணக்குகளைத் தீர்க்க இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு அவர்களுக்கு இடையே சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
பொதுவாக இரு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படும். பின்னர் பெரியவர்கள் அதைப் பற்றி ஆலோசித்து, அதன் பிறகு அபராதம், தியத் (ரத்தப் பணம்), மன்னிப்பு அல்லது எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான உத்தரவாதம் போன்ற முடிவுகளை அறிவிப்பார்கள்.
கொலை அல்லது பழங்குடியினப் பகை வழக்குகளில் பொருளாதார அபராதம், ரத்தப் பணம் அல்லது ஒருவருக்கொருவர் உத்தரவாதம் அளிக்கும் முடிவுகளும் ஜிர்காவில் எடுக்கப்படலாம்.
அரசின் நிறுவனங்கள் பலவீனமாக இருக்கும் இடங்களில் ஜிர்கா உடனடித் தீர்வை வழங்குகிறது என்று அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மறுபுறம், இந்த முறை நீதிமன்ற வரம்பிற்கு வெளியே, சட்டப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜிர்காவிற்குத் தடையும் 'தனியார் நீதிமன்றங்கள்' குறித்த கேள்விகளும்
சிந்து உயர் நீதிமன்றத்தின் சுகுர் பெஞ்ச் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜிர்கா நடத்துவதற்குத் தடை விதித்ததுடன், அதை 'தனியார் நீதிமன்றம்' என்று அறிவித்தது.
இந்த வழக்கின் மனுதாரரான வழக்கறிஞர் ஷபீர் ஷா, சிந்துவில் ஜிர்கா முறையைச் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, அரசியலமைப்பில் தனியார் நீதிமன்றங்களுக்கு இடமில்லாதபோது, இந்த 'நீதிமன்றங்கள்' ஏன் நடக்கின்றன? கொலை வழக்குகளின் தீர்ப்புகளை இத்தகைய தளங்கள் எப்படி வழங்க முடியும்?
"எங்கு ஜிர்கா நடந்தாலும் அல்லது தனியார் நீதிமன்றம் அமைக்கப்பட்டாலும், போலீசார் அதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் மற்றும் அவர்களே வாதியாக மாற வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது."
சமீபத்தில் நடத்தப்பட்ட ஜிர்காக்கள் 'நீதிமன்ற அவமதிப்பு' ஆகும் என்று அவர் கூறினார்.
ஜிர்கா மற்றும் இத்தகைய 'பஞ்சாயத்து முறை' சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதிகள் மற்றும் கடமைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது.
சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஜிர்கா குறித்துப் புகார் அளிக்காவிட்டாலும் அவர்களே வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்துச் சர்தார் கௌஸ் பக்ஷ் மெஹர் கூறுகையில், ஜிர்கா இரு தரப்பினரின் விருப்பத்தின் பேரிலேயே நடக்கிறது என்றும், சம்மதம் இருந்தால்தான் முடிவு எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், கொலை போன்ற வழக்குகளை ஜிர்கா எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்டதற்கு, "மக்கள் ஒருவரையொருவர் மன்னித்து விடுகிறார்கள். ஆனால் இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்று தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன், அப்போதுதான் நிரந்தர அமைதி ஏற்படும்" என்றார்.
சுகுரின் சர்க்யூட் ஹவுஸில் நடந்த இந்த மூன்று நாள் பெரிய ஜிர்காவில், போலீஸ் மற்றும் நிர்வாகமும் சமூகத் தலைவர்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
ஜுனேஜோ மற்றும் கல்கோரா சமூகங்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கு முன்பும் ஜிர்கா மூலம் சமரசம் ஏற்பட்டது, ஆனால் அது நீடிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு