கைப்பிடி சுழற்றினால் மேலே வரும் காதலி உடல் - 200 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட 'தென்னிந்திய தாஜ்மஹால்'

இந்தக் காதல் கதை 200 ஆண்டுகள் பழமையானது.
    • எழுதியவர், அமரேந்திர யார்லகடா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஷாஜகானின் காதல் கதையில், அவர் மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தற்போதைய ஆந்திராவில் ஒரு பிரிட்டிஷ்காரர் தனது காதலிக்காக ஒரு தேவாலயத்தைக் கட்டியுள்ளார். இந்தக் காதல் கதை 200 ஆண்டுகள் பழமையானது. காதலரின் பெயர் ஜான் பேட்டர். காதலியின் பெயர் அரபெல்லா ராபின்சன்.

அரபெல்லா, ஜான் பேட்டரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே காலமானார்.

'தென்னிந்தியாவின் தாஜ்மஹால்' என்று அழைக்கப்படும் புனித மேரி தேவாலயம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ளது.

அர்ப்பணிப்புக்கும் காதலுக்கும் இடையிலான எல்லையைத் தாண்டிய அரபெல்லா, ஜான் பாட்டரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே காலமானார்.
படக்குறிப்பு, அரபெல்லாவின் கல்லறை

'இது ஒரு தேவாலயம் அல்ல, அன்பின் சான்று'

ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்தில் புனித மேரி தேவாலயம் அமைந்துள்ளது. நான் அங்கு சென்றபோது தேவாலயம் காலியாக இருந்தது.

தேவாலயத்திற்குள் ஒரு பக்கத்தில் அரபெல்லா ராபின்சனின் கல்லறையைக் கண்டேன். இது வெறும் கல்லறை மட்டுமல்ல. அரபெல்லா தன்னுடன் இல்லாவிட்டாலும், அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக காதலன் ஜான் பேட்டரால் கட்டப்பட்ட ஒரு 'காதல் பேழை'.

"இது வெறும் தேவாலயம் மட்டுமல்ல, ஒரு அற்புதமான காதல் கதைக்கான வாழும் சான்று," என்கிறார் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள நோபல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எஸ். ஜான் எர்னஸ்ட்.

இந்தக் கல்லறை அரபெல்லாவுக்காக கட்டப்பட்டது
படக்குறிப்பு, இந்தக் கல்லறை அரபெல்லாவுக்காக அவரது காதலர் ஜான் பேட்டரால் கட்டப்பட்டது.

சிறந்த நண்பர்களா? காதலர்களா?

அரபெல்லாவின் கல்லறைக்கு அருகில் உள்ள சுவரின் மேற்பகுதியில் ஒரு கல்வெட்டு வாசகத்தைக் காணலாம்.

''இது கம்பெனியின் (கிழக்கிந்திய கம்பெனி) கேப்டன் வில்லியம் ராபின்சனின் மகளான அரபெல்லா ராபின்சனுக்கு உரியது. அவர் நவம்பர் 6, 1809 அன்று காலமானார். இது அவரின் என்றும் நன்றியுள்ள நண்பரான மேஜர் ஜெனரல் ஜான் பேட்டர் எழுப்பப்பட்டது."என குறிப்பிடப்பட்டுள்ளது

ஜான் பேட்டரும் அரபெல்லாவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல, காதலர்கள் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

"அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தனர்," என்று வரலாற்றாசிரியர் முகமது சிலார் தனது 'மச்சிலிப்பட்டினம் சர்வஸ்வம்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"கேப்டன் வில்லியம் ராபின்சன் என்ற ராணுவ அதிகாரி மச்சிலிப்பட்டினம் கோட்டையில் பணியாற்றினார். அந்த நேரத்தில், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அரபெல்லாவைக் கண்டதும் ஜான் பேட்டர் காதலில் விழுந்ததாகவும், அவரது காதலை அரபெல்லா ஏற்றுக்கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது," என்று ஜான் எர்னஸ்ட் கூறினார்.

ஜான் பேட்டர் கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டன் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார். இந்த நேரத்தில், அவர் மச்சிலிப்பட்டினம் கோட்டையில் பணியாற்றினார்.

ஜான் பாட்டர் கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டன் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார். இந்த நேரத்தில், அவர் மச்சிலிப்பட்டினம் கோட்டையில் பணியாற்றினார்.

திருமணத்திற்கு சம்மதிக்காத குடும்பத்தினர்

அரபெல்லாவின் தந்தை ராபின்சனும், கிறிஸ்தவ மதகுருமார்களும் அரபெல்லா மற்றும் ஜான் பேட்டரின் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

ராபின்சன் அவர்களின் திருமணத்திற்கு ஏன் சம்மதிக்கவில்லை என்பதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக நோபல் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் ஓய்வு பெற்ற விரிவுரையாளரான எம். ஜோசுவா பிபிசியிடம் தெரிவித்தார்.

"அக்காலத்தில் மதம் மிகவும் கடுமையாக இருந்தது. இருவரும் கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும், அரபெல்லா கத்தோலிக்கராகவும் ஜான் பேட்டர் புராட்டஸ்டன்ட்டாகவும் இருந்தனர். அதனால் தான் ராபின்சன் அவர்களின் திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டார்," என்று ஜோசுவா கூறினார்.

"ஜான் பேட்டர், ராபின்சனின் பதவி உயர்வை எதிர்த்தார் என்றும், அந்த கோபத்தில் அவர் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார் என்றும் மற்றொரு கதை உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு காரணங்களைத் தவிர மற்றொரு காரணமும் இருப்பதாக நோபல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜான் எர்னஸ்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஜான் பேட்டருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்றும், அவரது மனைவி பிரிட்டனில் இருந்தார் என்றும், அதனால்தான் ராபின்சன் சம்மதிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

இந்த விஷயங்கள் 'மச்சிலிப்பட்டினம் சர்வஸ்வம்' புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் கல்லறைகளைப் பட்டியலிடும் 'ஃபைண்ட் கிரேவ்' இணையதளம், ஜான் பேட்டருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது என்றும் மத வேறுபாடுகள் போன்றவற்றை திருமணத்திற்குச் சம்மதிக்காததற்கான காரணங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் கல்லறைகளைப் பட்டியலிடும் 'ஃபைண்ட் கிரேவ்' இணையதளம், ஜான் பாட்டருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது மற்றும் மத வேறுபாடுகள் போன்றவற்றை திருமணத்திற்குச் சம்மதிக்காததற்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளது.
படக்குறிப்பு, மச்சிலிப்பட்டினம் வரலாற்று ஆய்வாளர் சிலார்

பெரியவர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காததால், அரபெல்லா வீட்டை விட்டு வெளியேறி ஜான் பேட்டருடன் வாழத் தொடங்கியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

"அந்தக் காலத்தில், ஒரு பெண் வீட்டை விட்டு சென்றது மச்சிலிப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் மகள் தனது காதலனுடன் சென்றுவிட்டாள்' என்ற கதை பரவியது." என்கிறார் ஜான் எர்னஸ்ட்.

அவர்களுக்கு மகள் இருந்ததாக 'ஃபைண்ட் கிரேவ்' இணையதளத்தில் ஒரு குறிப்பு உள்ளது. இருப்பினும், தெலுங்கு வரலாற்றாசிரியர்கள் தங்களது புத்தகங்களில் இதைக் குறிப்பிடவில்லை.

அவர்களுக்கு 1790-ல் சபிரா என்ற மகள் இருந்ததாக 'ஃபைண்ட் கிரேவ்' இணையதளத்தில் ஒரு குறிப்பு உள்ளது.

40 வயதில் உயிர் இழந்த அரபெல்லா

ஜான் பேட்டர் மற்றும் அரபெல்லா சந்தித்தபோது அவர்களுக்கு என்ன வயது என்பது இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் அநேகமாக பதின்ம வயதில் இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

திருமணம் செய்து கொள்ள முடியாத மனவேதனையுடன், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 1809 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி தனது 40 வயதில் அரபெல்லா காலமானதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஜூலியன் ஜேம்ஸ் காட்டனின் 'மெட்ராஸில் உள்ள கல்லறைகள் அல்லது நினைவுச்சின்னங்களில் உள்ள கல்வெட்டுகளின் பட்டியல் - தொகுதி 2' என்ற புத்தகம் அவர் இறந்த தேதியை உறுதிப்படுத்துகிறது. இந்தத் தகவல் அரபெல்லாவின் கல்லறையிலும் காணப்படுகிறது.

"பாரம்பரியக் கட்டுப்பாடுகளை மீறி, பேட்டரின் மனைவியாக அனைவர் முன்னிலையிலும் நின்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அரபெல்லாவின் விருப்பமாக இருந்தது. அங்கீகாரத்துடன் தனது குடும்ப வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவள் கனவு கண்டாள்," என்று டி.வி. ராகவ ராவ் 'மச்சிலிப்பட்டண சரித்ரா' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இறுதியில், அந்தக் கனவு நனவாகும் முன்பே அரபெல்லா இறந்துவிட்டார்.

ஜூலியன் ஜேம்ஸ் காட்டனின் 'மெட்ராஸில் உள்ள கல்லறைகள் அல்லது நினைவுச்சின்னங்களில் உள்ள கல்வெட்டுகளின் பட்டியல் - தொகுதி 2' என்ற புத்தகம் அவர் இறந்த தேதியை உறுதிப்படுத்துகிறது.

கண்ணாடிப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட அரபெல்லாவின் உடல்

அரபெல்லாவின் மரணத்திற்குப் பிறகு, ரோமன் கத்தோலிக்க திருச்சபையோ அல்லது ஆங்கிலிக்கன் திருச்சபையோ அவரை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.

இதனை அடுத்து, ஜான் பேட்டர் மச்சிலிப்பட்டினத்தின் புறநகரில் ஆறரை ஏக்கர் நிலத்தை வாங்கி, அங்கு அரபெல்லாவிற்காக ஒரு கல்லறையைக் கட்டினார்.

அரபெல்லாவின் சவப்பெட்டியைத் தரையிலிருந்து மேலே உயர்த்தும் வகையில் இந்தக் கல்லறைக்கு ஒரு சிறப்பு பூட்டு அமைப்பு நிறுவப்பட்டது.

"தாஜ்மஹாலை மாதிரியாகக் கொண்டு தனது காதலியின் நினைவாக அவர் ஒரு தேவாலயத்தைக் கட்டினார். அக்காலத்தில் 18,000 ரூபாய் செலவில் இந்தத் தேவாலயத்தை அவர் கட்டினார்," என்று 'மச்சிலிப்பட்டினம் வரலாறு' புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

"ஜான் பேட்டர், அரபெல்லாவின் உடலை ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்தார். அது சிதையாமல் இருப்பதற்காக எகிப்திய மம்மிகளின் பாணியில் நறுமணப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி அடக்கம் செய்தார்," என்று வரலாற்றாசிரியர் முகமது சிலார் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜான் பேட்டர் இதைச் செய்ததற்கு ஒரு வலுவான காரணம் இருப்பதாக சிலார் கூறுகிறார்.

ஜான் பேட்டர் எப்போது விரும்பினாலும், கல்லறைக்கு வந்து, சவப்பெட்டியை வெளியே எடுத்து, அவரது உடலின் முன் அமர்ந்து பேசி, தனது துக்கங்களைப் பகிர்ந்து கொள்வார் என்று சிலார் விளக்கினார்.

"அப்போது சவப்பெட்டியை வெளியே எடுப்பதற்காக ஒரு சிறப்பு பூட்டு அமைப்பு பயன்படுத்தப்பட்டது. கல்லறைக்கு அருகிலுள்ள சுவரில் ஒரு லீவர் பொருத்தப்பட்டிருந்தது. பூட்டை திறந்து கைப்பிடியை சுழற்றும்போது, சவப்பெட்டி (கண்ணாடிப் பெட்டி) வெளியே வரும். அப்போது ஜான் பேட்டர் அரபெல்லாவின் உடலுக்கு முன்னால் அமர்ந்து பேசுவார்," என்று முகமது சிலார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து மச்சிலிப்பட்டினம் வரலாற்றுப் புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது.

"அரபெல்லாவின் உடல் ஒரு அழகான கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. அவர் (ஜான் பேட்டர்) அதைப் பார்க்க விரும்பும்போது, அந்தப் பெட்டி மேலே வரும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டிருந்தது" என்று எழுதப்பட்டுள்ளது.

ஜான் எர்னஸ்ட்
படக்குறிப்பு, ஜான் எர்னஸ்ட், நோபல் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர்

மெட்ராஸுக்கு மாற்றம்

சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜான் பேட்டர் மெட்ராஸிற்கு மாற்றப்பட்டார்.

"அவர் மெட்ராஸிற்குச் சென்றபோது, அரபெல்லா தேவாலயத்தின் நிர்வாகத்தை ஆங்கிலிக்கன் திருச்சபையிடம் ஒப்படைக்காமல், கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தார்," என்று ஜான் எர்னஸ்ட் கூறுகிறார்.

1816-இல் அரபெல்லா தேவாலயம் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், 1842-இல் அது ஆங்கிலிக்கன் சமூகத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தபோது அதன் பெயர் 'புனித மேரி தேவாலயம்' என மாற்றப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

"மெட்ராஸிற்கு மாற்றப்பட்ட பிறகு, 1817-இல் ஜான் பேட்டர் அங்கேயே காலமானார்," என்று முகமது சிலார் கூறுகிறார்.

 விரிவுரையாளர் ஜோசுவா
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற வரலாற்று விரிவுரையாளர் ஜோசுவா

அரபெல்லாவின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை வெளியே எடுக்கப்படாமல் இருக்க அது முற்றிலும் சீல் வைக்கப்பட்டதாக முகமது சிலார் கூறினார்.

"பிரிட்டிஷ் காலத்தில், கிறிஸ்மஸ் பண்டிகைக்காக தேவாலயத்திற்கு வண்ணம் பூசும்போது, ஒரு தொழிலாளி தற்செயலாக கல்லறையின் கைப்பிடியைத் திருப்பினார். திடீரென்று அரபெல்லாவின் சவப்பெட்டி வெளியே வந்தது, அதைக் கண்ட அவர் மாரடைப்பால் காலமானார்," என்று அவர் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் கோல்டன்ஹாம் அரபெல்லாவின் விவரங்களைக் கல்லறையில் எழுதி, பளிங்குக்கல்லால் நிரந்தரமாக மூடினார்.

அதன்பிறகு அரபெல்லாவின் கல்லறை ஒருபோதும் திறக்கப்படவில்லை என்கிறார் நோபல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜான் எர்னஸ்ட்.

பளிங்குக்கல்லால் மூடப்பட்ட அரபெல்லாவின் கல்லறையை இன்றும் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் காணலாம்.

திருமணத்தில் முடியாமல் போன ஜான் பேட்டர் மற்றும் அரபெல்லாவின் காதல் கதை இவ்வாறு முடிவுக்கு வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு