ஜெ.வுக்கு கனவிலும் துரோகம் நினைத்ததில்லை: சசி. விளக்கம்

ஜெயலலிதாவுடன் சசிகலா

பட மூலாதாரம், BBC World Service

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தனது உறவினர்கள் சிலர் சதிசெய்ய முயன்றதை அறிந்து தான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக கூறியுள்ள சசிகலா, முதல்வருக்கு எதிராக தான் எந்த துரோகமும் செய்யவில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை ஜெயா டிவியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவால் தன் உடன் பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட சசிகலா 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்களை ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேற்றினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்.

அதன் பிறகு பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியம் அளித்த சசிகலா, பல்வேறு சொத்துப் பரிவர்த்தனைகளில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் முதல்வரின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து, அவர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் சசிகலாவின் கணவர் உள்ளிட்ட பல உறவினர்கள் தமிழகக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருப்பதால், தான் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.

முதல்வருக்கு எதிரானவர்கள் தனக்கும் எதிரிகள்தான் என்று கூறியுள்ள சசிகலா, தன்னுடைய உறவினர்கள் சிலர் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களை செய்தது தனக்கு தற்போதுதான் தெரியவந்தது என்றும், அவர்களில் சிலர் ஜெயலலிதாவுக்கு எதிராகவே சதி செய்ததை அறிந்து தான் அதிர்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற விடயங்கள் தனக்குத் தெரியாமல் நடந்தவை என்றும், தனக்கு எவ்வித பதவி ஆசையும் இல்லை என்றும், ஜெயலலிதாவுக்கு உதவ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை அடுத்து சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் இல்லம் திரும்புவாரா என ஊடகங்களில் ஊகங்கள் அடிபடுகின்றன.