நேரலை, ‘தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்’- சிஎஸ்கே நிர்வாகம்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
‘தோனி 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார்’- சிஎஸ்கே நிர்வாகம்
பட மூலாதாரம், CSK /X
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன்று (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, முதல் இரண்டு வாரங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனிக்கு ஏற்பட்டுள்ள கால் தசைப்பிடிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தள பதிவு மூலம் தெரிவித்துள்ளது.
"எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் விளைவாக, அவர் ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளது. அவர் விரைவில் குணமடைய விரும்புகிறோம்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூறியுள்ளது.
2026 ஐபிஎல் தொடரில், சென்னை அணி மார்ச் 30ஆம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வணக்கம் நேயர்களே!
இன்று (28-03-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது சிராஜ்.
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்தியா
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, இரான் போருக்கு நடுவே இந்தியாவுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு எரிபொருள் எடுத்து வந்த நந்தாதேவி கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தியாவினால் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இதன்படி, எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று நாளைய தினம் (மார்ச் 28) கொழும்பை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையம் அறிவித்துள்ளது.20000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18000 மெட்ரிக் டன் பெட்ரோல் என 38000 மெட்ரிக் டன் எடையுடைய எரிபொருளுடன் இந்த கப்பல் மார்ச் 28-ஆம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது.
இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த போரால், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து ஏற்பட்ட நெரிசலை குறைப்பதற்காக இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வாராந்திர கோட்டா அடிப்படையில் கியூஆர் (QR) முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த செவ்வாய்கிழமை தொலைபேசி வழியே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையை அடுத்தே, இலங்கையின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் குறிப்பிடுகின்றது.
போர் காரணமாக வளைகுடாவிலிருந்து எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த நீரிணை வழியே எரிபொருள் போக்குவரத்தை அனுமதிப்பதாக இரான் கூறியுள்ளது.
நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேன் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோதி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நேபாள பிரதமர் பாலேன் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோதி
நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேன் ஷாவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேன் ஷாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
"உங்களது நியமனம், நேபாள நாட்டு மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நமது இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உங்களுடன் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவின் மேயராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஷா தேசிய சுதந்திரக் கட்சியுடன் (National Independent Party) கைகோர்த்து, இம்மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையில் 3 கப்பல்களை திருப்பி அனுப்பிய இரான்
பட மூலாதாரம், Getty Images
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாக இரான் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கப்பல்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு வழித்தடம் வழியாக, இன்று காலை மூன்று கப்பல்கள் செல்ல முயன்றதாக இரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது. "வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று சரக்குக் கப்பல்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஐஆர்ஜிசி கடற்படை அவற்றுக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவை திருப்பி அனுப்பப்பட்டன," என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அதை மீறி ஏதேனும் கப்பல் உள்ளே நுழைந்தால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டிருந்தது.
"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளிலுள்ள துறைமுகங்களிலிருந்து வரும் அல்லது அங்கு செல்லும் எந்தவொரு கப்பலும்,அனுமதிக்கப்படாது," என்று ஐஆர்ஜிசி கூறியுள்ளது.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இராக் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களை இதுவரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்துள்ளதாக, இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு அந்நாட்டுத் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.
இரானின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த நீரிணை முழுமையாக மூடப்படவில்லை என்றும், மாறாக அது "எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் - ஓ.பன்னீர் செல்வத்தின் போடி தொகுதி யாருக்கு?
பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMY
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்னர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஜேகே (2), தமமுக (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் 25 வெளியிடப்பட்ட நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) அறிவித்துள்ளார்.
அதிமுகவின் இந்த இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி நாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமியும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வி.பி. பிரபுவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவிலும், செங்கோட்டையன் த.வெ.கவிலும் உள்ளனர்.
இந்த அறிவிப்பில் இருந்து, சில முக்கிய தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.
மாதவரம்- வி. மூர்த்தி, முன்னாள் அமைச்சர்
காஞ்சிபுரம்- வி. சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர்
ஓசூர்- பி. பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் அமைச்சர்
கீழ்பென்னாத்தூர்- எஸ். இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்
செய்யார்- முக்கூர் என். சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்
திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம். ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்
கிணத்துக்கடவு- செ. தாமோதரன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்
பொள்ளாச்சி- பொள்ளாச்சி வி. ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர்
கடலூர்- எம்.சி. சம்பத், முன்னாள் அமைச்சர்
விளாத்திகுளம்- ஆர். சத்யா
தூத்துக்குடி- சி.த. செல்லப்பாண்டியன், முன்னாள் அமைச்சர்
அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர்
‘நேட்டோவிடமிருந்து அமெரிக்காவிற்கு எதுவும் தேவையில்லை’: டொனால்ட் டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை திறக்க உதவுவதற்காகத் தங்களது கடற்படைகளை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவின் மூலம் நேட்டோ அமைப்பை (NATO) விமர்சித்துள்ளார்.
அவர் அந்தப் பதிவில், "தற்போது ராணுவ ரீதியாக முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள ஒரு 'பித்துப்பிடித்த நாடான' இரானின் விஷயத்தில் நேட்டோ நாடுகள் நமக்கு சிறிதும் உதவவில்லை. அமெரிக்காவிற்கு நேட்டோவிடமிருந்து எதுவும் தேவையில்லை, ஆனால் இந்த முக்கியமான விஷயத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
'ஹோர்மூஸ் நீரிணையை' திறக்க கடற்படையை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
டொனால்ட் டிரம்ப் மார்ச் 14 அன்று ட்ரூத் சோஷியலில், "சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளும் இப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன், இதன் மூலம் முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரு நாட்டினால் ஹோர்மூஸ் நீரிணைக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது. எவ்வாறாயினும், நாம் விரைவில் ஹோர்மூஸ் நீரிணையை பாதுகாப்பானதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவோம்" என்று தெரிவித்தார்.
இரானின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்
பட மூலாதாரம், Tasnim
படக்குறிப்பு, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "ஹோர்மூஸ் நீரிணையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் நீரிணையைத் தடுத்தது போன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு டங்சிரி நேரடியாகப் பொறுப்பானவர்" என்றும், “டங்சிரி, குண்டு வீசி கொல்லப்பட்டார்" என்றும் தெரிவித்தார்.
மேலும், இரானின் பல மூத்த கடற்படைத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.
இரான் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அலிரேசா டங்சிரி 2018ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் 2010 முதல் ஐஆர்ஜிசி கடற்படையின் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு எக்ஸ் தள கணக்கு இந்த ஆண்டு மார்ச் 10 முதல் செயல்பாட்டில் உள்ளது, அதில் உள்ள பதிவுகளை இரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டி வருகின்றன.
அந்தப் பதிவுகளில், அவர் ஹோர்மூஸ் நீரிணை பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார். "இரானுக்கு எதிராக போர் புரியும் நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலுக்கும் இதைக் கடந்து செல்ல உரிமை இல்லை" என்று அந்த கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டங்சிரி, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஓர் இரானிய தளபதி ஆவார். கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில், இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல சுங்க கட்டணம் வசூலிக்குமா இரான்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இரான் எவ்வளவு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இரான் சுங்க வரி வசூலிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இரானிய ஊடகங்களின்படி, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிப்பதற்கான சட்டத்தை அங்கீகரிப்பது குறித்து இரானிய நாடாளுமன்றம் (மஜ்லிஸ்) பரிசீலித்து வருகிறது.
இதன் பொருள், இந்த நீர்வழிப் பாதை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இரான் இனி கட்டணம் வசூலிக்கக்கூடும்.
இரானிய நாடாளுமன்றத்தின் கட்டுமானக் குழுவின் தலைவர், "ஒரு வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அது இன்னும் மசோதாவாக மாறவில்லை" என்றார். இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே இந்த முன்மொழிவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், எவ்வளவு சுங்க வரி வசூலிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு தொலைக்காட்சியின் நேர்காணலில் பேசுகையில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இராக் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கப்பல்களை இரான் இதுவரை கடந்து செல்ல அனுமதித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இரானின் கண்ணோட்டத்தில், ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை, ஆனால் ‘எதிரிகளுக்கு மூடப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்களால் இருவர் உயிரிழப்பு
பட மூலாதாரம், Issam Rimawi/Anadolu via Getty Images
படக்குறிப்பு, புதன்கிழமை இரவு மேற்குக் கரைக்கு மேலே காணப்பட்ட ஒரு இரானிய ஏவுகணை. பல வளைகுடா நாடுகள், இரானின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்துத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வானத்திலிருந்து விழுந்த பாகங்களால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுதாபி ஊடக அலுவலகத்தின்படி, வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல கார்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரான் தரப்பிலிருந்து புதிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்திருந்ததுடன், இந்தத் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கூறியிருந்தது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (மார்ச் 25) இரவு முதல் தற்போது வரை, நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குறைந்தது மூன்று முறை தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டது.
அபுதாபியிலிருந்து பிபிசி தெற்காசிய செய்தியாளர் ஆசாதே மோஷிரி, “வளைகுடா பிராந்தியத்தில் இரான் 2,100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கிறார்.
பெரும்பாலான தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறினாலும், அரசாங்கம் இன்னும் தகவல்கள் பரிமாற்றம் மீது கடுமையான கட்டுப்பாட்டைப் பேணி வருகிறது.
ஆசாதே மோஷிரியின் கூற்றுப்படி, தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுத்ததால் ஏற்பட்ட சேதங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததற்காக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இரானுடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் நடந்தால், அதன் ஏவுகணை மற்றும் டிரோன் கையிருப்புகள் மீது நீண்டகால கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தொடர்பான விதிகள் வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்துக்கு வாழ்த்து கூறிய பாகிஸ்தான் பிரதமர் - 'இனப்படுகொலை நாள்' எனக்கூறிய வங்கதேசம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதன்கிழமையன்று தாரிக் ரஹ்மான் வெளியிட்ட ஒரு கருத்து, பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்பட்டது. (பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் கோப்புப் படம்)
வங்கதேசத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. முன்னதாக, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான், தனது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், 'இனப்படுகொலை தினம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், "வங்கதேசத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசும் மக்களும் வங்கதேச அரசுக்கும் மக்களுக்கும் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், "அவர்களுக்குத் தொடர்ச்சியான அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஏற்பட பாகிஸ்தான் வாழ்த்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவையும் ஒத்துழைப்பையும் மேலும் ஆழப்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசம் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) 1971 மார்ச் 26 அன்று பாகிஸ்தானிடமிருந்து தனது சுதந்திரத்தை அறிவித்தது.
முன்னதாக, 1971 மார்ச் 25 அன்று இரவு, பாகிஸ்தான் ராணுவம் 'ஆபரேஷன் சர்ச்லைட்' (Operation Searchlight) என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நாளில், பாகிஸ்தான் ராணுவம் டாக்காவில் பெரும் படுகொலைகளை நடத்தியது.
இதற்குப் பிறகு, 9 மாத நீண்ட போராட்டத்திற்குப் பின், 1971 டிசம்பர் 16 அன்று வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக ஒரு சுதந்திர நாடாக ஆனது.
முன்னதாக, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் சமூக ஊடகப் பதிவு ஒன்று விவாதப் பொருளாகியிருந்தது.
புதன்கிழமை 'இனப்படுகொலை தின' ஆண்டுவிழாவை முன்னிட்டு எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு பதிவில், பாகிஸ்தான் ராணுவத்தைக் கடுமையாகச் சாடினார்.
வரலாற்று ரீதியாக தாரிக் ரஹ்மானின் கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி (பி.என்.பி), பாகிஸ்தானிடம் மென்மையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்காக அறியப்பட்டிருப்பதால், இது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா: டிப்பர் லாரி - பேருந்து மோதி வாகனங்கள் எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பட மூலாதாரம், UGC
ஆந்திரப் பிரதேச மாநிலம், மார்க்காபுரம் மாவட்டத்தில் உள்ள ராயவரம் அருகே ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது.
வியாழக்கிழமை காலை, அப்பகுதியில் உள்ள கல் குவாரிகள் அருகே ஒரு தனியார் பேருந்தும் ஒரு டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன; இந்த மோதலின் விளைவாக இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பேருந்தும் டிப்பர் லாரியும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.
வாகனங்கள் மோதிக்கொண்ட சில கணங்களிலேயே தீ வேகமாகப் பரவியதாகப் பொறுப்பு எஸ்.பி. தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மார்க்காபுரம் பொறுப்பு எஸ்.பி. (காவல் கண்காணிப்பாளர்) ஹர்ஷவர்தன் ராஜு கூறினார்.
விபத்தில் சிக்கிய அந்தப் பேருந்து, தெலங்கானா மாநிலம் ஜக்தியாலில் இருந்து காளிகிரி நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும்; உயிரிழந்தவர்களில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் இருக்கலாம் என்றும் நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்திலிருந்து இதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மார்க்காபுரம் வருவாய் கோட்டாட்சியர் (RDO) பிரபாகர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட உடல்கள் முற்றிலுமாக எரிந்து கருகிய நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாக அவர் கூறினார்.
இந்த விபத்து காலை சுமார் 5.30 மணியளவில் நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மார்க்காபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சாலை விபத்து குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார்.
தனியார் பேருந்து- டிப்பர் லாரி இடையே நிகழ்ந்த இந்த மோதலில், பேருந்தில் பயணித்த பல பயணிகள் 'உயிருடன் தீயில் கருகி' உயிரிழந்தது குறித்து அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ உதவிகள் குறித்த விவரங்கள் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டன.
விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தில் தாக்குதல் நடந்ததாக தகவல்
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ஒரு ட்ரோன் தாக்குதல் எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாகக் கூறப்படும் குவைத் சர்வதேச விமான நிலையப் பகுதியிலிருந்து, புதன்கிழமையன்று புகை எழுந்த காட்சி
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே சாத்தியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற செய்திகளுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் சமீபத்திய தாக்குதல் சம்பவம் ஒன்றை அறிவித்துள்ளன.
குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்பானது, தற்போது எதிரிகளின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக குவைத் ராணுவம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சத்தங்கள் ஏதேனும் கேட்க நேரிட்டால், அவை எதிரிகளின் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்பு முறியடிப்பதன் விளைவாகவே ஏற்படுகின்றன என்று ராணுவப் பொதுப் பணியாளர் பிரிவு கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு ராணுவம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இரானியத் தாக்குதலின் காரணமாக ஒரு அரசு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதேவேளையில், அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகமும் இரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைப்பு இந்தத் தாக்குதல்களை முறியடித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலின் போர் அமைச்சகத்தையும் அதன் தலைமையகத்தையும் தாக்கியதாக ஹெஸ்பொலா அமைப்பு உரிமை கோரியுள்ளது.
"இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணையை கடக்க அனுமதி" - இரான்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, எல்பிஜி (LPG) ஏற்றப்பட்ட இந்தியக் கப்பலான 'நந்தா தேவி', ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டது. (கோப்புப் படம்)
இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நட்பு நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதி அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
"சீனா, ரஷ்யா, இந்தியா, இராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனுமதியை நாங்கள் வழங்குகிறோம்," என்று அராக்சி கூறினார்.
அராக்சியின் இந்த அறிக்கை குறித்த தகவலை, மும்பையில் அமைந்துள்ள இரானியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
இரானின் கடற்கரைப் பகுதியையொட்டிச் செல்லும் ஹோர்மூஸ் நீரிணையானது, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கடல்வழிப் பாதையாகும்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இரான் இந்தப் பாதையை மூடியது; மேலும், இப்பாதை வழியாகச் சென்ற சில கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கடல்வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் காரணமாக, உலகின் பல நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன; மேலும், அவற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவி வரும் மோதல்களின் விளைவாக ஏற்பட்டுள்ள 'ஹோர்மூஸ் நீரிணைத் தடையை' (blockade), உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் கவலையுடன் நோக்குகின்றன.
பேச்சுவார்த்தைகள் குறித்து முரண்பட்ட தகவல்களை கூறும் இரான் - அமெரிக்கா
இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை குறித்து இதுவரை தெரியவந்த தகவல்கள்:
புதன்கிழமையன்று பேசிய வெள்ளை மாளிகைச் செய்திச் செயலாளர் கரோலின் லெவிட், கடந்த மூன்று நாட்களாக அதிபர் டிரம்ப் இரானுடன் "பயனுள்ள பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், அந்த நடவடிக்கை "திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு முன்னதாகவே" நடைபெற்று வருவதாகவும், இரானிய ஆட்சி ஒரு "வெளியேறும் வழியை" தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இரானுக்குத் ‘தற்போதைக்குப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஏதுமில்லை’ என்று பின்னர் கூறிய இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கருத்துக்கு முரண்பாடானதாக கரோலின் லெவிட்டின் கருத்து உள்ளது.
செய்திகள் "நட்பு நாடுகள் வாயிலாகக் தெரிவிக்கப்பட்டதாக" அவர் கூறினார்; ஆனால், இந்த பரிமாற்றங்கள் "உரையாடலோ, பேச்சுவார்த்தையோ அல்லது அதுபோன்ற வேறெதுவோ அல்ல"
இரான் "பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்று டிரம்ப் கூறிவருகிறார்; "தங்கள் சொந்த மக்களாலேயே கொல்லப்பட்டுவிடுவோம் என்று கருதுவதால், அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் அஞ்சுகிறார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், "எங்களாலும் கொல்லப்பட்டுவிடுவோம் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகள் குறித்தும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமையன்று, போர்நிறுத்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவிடமிருந்து இரான் ஒரு 15 அம்சத் திட்டத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வந்தன.
இரானிய “மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரி” ஒருவர், போரை முடிவுக்குக் கொண்டுவர ஐந்து நிபந்தனைகள் இருப்பதாகக் கூறியதாக, அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவி மேற்கோள் காட்டியுள்ளது. அவற்றில், “போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடுகளை” செலுத்துதல் மற்றும் அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், சண்டை தொடர்கிறது - இரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மின் நிலையம் ஒன்றிலிருந்து புகை வெளியேறுவது காணப்பட்டது, அதே நேரத்தில் தெஹ்ரானில் இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளின் சத்தம் கேட்கப்பட்டது.
வணக்கம் நேயர்களே!
இன்று (26-03-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் எவை?
பட மூலாதாரம், ADMK
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக (27), பாமக (18), அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை அறிவித்தார்.
மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாக(5), ஐஜேகே (2), தமமுக (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளையும் அவர் வெளியிட்டார்.
தமாக:
ஒட்டன்சத்திரம்
ஈரோடு மேற்கு
ராணிப்பேட்டை
கிள்ளியூர்
கும்பக்கோணம்
இந்திய ஜனநாயகக் கட்சி:
பல்லாவரம்
குன்னம்
தமமுக:
ராஜபாளையம்
புரட்சி பாரதம்:
கீழ்வைத்தியனான் குப்பம்
பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறையா? - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்
பட மூலாதாரம், Vivek Prakash/Bloomberg via Getty
இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், நாட்டில் பெட்ரோல் அல்லது டீசலுக்கு 'எந்தப் பற்றாக்குறையும் இல்லை' என்று புதன்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் அல்லது டீசல் பற்றாக்குறை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அந்த வதந்திகளை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் அந்நிறுவனம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த எண்ணெய் நிறுவனம், "இணையத்தில் பரவி வரும் வதந்திகள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, இயல்பான விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கக்கூடும். இந்தியன் ஆயில் விற்பனை நிலையங்களில் அனைத்துப் பொருட்களும் முழுமையாக இருப்பு வைக்கப்பட்டு, அவை வழக்கம்போல செயல்படுகின்றன. மக்கள் பீதியுடன் வாங்க வேண்டாம் என்றும், சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்று கூறியுள்ளது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடும் இதேபோன்ற ஒரு வேண்டுகோளை விடுத்து அறிக்கையை வெளியிட்டிருந்தது.
மேலும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், "நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜிக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை. எரிபொருள் விநியோகம் இயல்பாக உள்ளது மற்றும் போதுமான கையிருப்பு உள்ளது," என்றும் கூறியுள்ளது.
தேர்தலில் வேல்முருகன் போட்டியில்லை - தவாக அறிவிப்பு
வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகியது.
'அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது' என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார். தங்கள் கட்சியை சேர்ந்த மற்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மூலம் இரானிடம் 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா அளித்ததா?
பட மூலாதாரம், Iranian Presidency/Anadolu via Getty
படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் போர் தொடர்பாக பாகிஸ்தான், துருக்கி, இராக், லெபனான், எகிப்து மற்றும் அரபு நாடுகளைக் குறிப்பிட்டு இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
"இன்று உலகின் பல நாடுகளில் மக்கள் விழித்தெழுவதை நாம் காண்கிறோம். பாகிஸ்தான், துருக்கி, இராக், லெபனான், எகிப்து மற்றும் அரபு நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் குற்றங்களுக்கு எதிராக வெளிப்படையாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்," என்று பெசெஷ்கியன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "உலகின் சுதந்திரமான மக்கள் சியோனிஸ்டுகளுடன் இல்லை. ஒத்துழைப்பு மற்றும் நாடுகளின் விருப்பத்தை மதிப்பதன் மூலமே பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை சாத்தியமாகும்." என்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ள நேரத்தில் இரான் அதிபர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஒரு உடன்படிக்கைக்காக அமெரிக்கா பாகிஸ்தான் மூலமாக இரானிடம் 15 அம்சத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.