விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று பகலில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அருகாமையில் உள்ள பகுதிகளில் அதிர்வுகளை உணர முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரான் உடனான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தான் டிரம்பை இழுத்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
"அவர் (டிரம்ப்) போருக்குச் சென்றார், நெதன்யாகு அவரை உள்ளே இழுத்துவிட்டார். அமெரிக்க மக்கள் விரும்பாத ஒரு போருக்கு அவர் சென்றுள்ளார். இது அமெரிக்க வீரர்களின் உயிரை ஆபத்தில் வைத்துள்ளது," என சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.
கமலா ஹாரிஸின் கருத்துக்கு டிரம்ப் நேரடியாக எதிர்வினை ஆற்றவில்லை என்றாலும் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் இஸ்ரேலை சிறந்த கூட்டாளி எனத் தெரிவித்திருந்தார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவ வீரர் பலி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் ஏற்பட்ட மோதல்களின்போது மற்றுமொரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் 9 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளார்.
நேற்று ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. ஏப்ரல் 17-ஆம் தேதி அமெரிக்காவால் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
ஏ.எஃப்.பி செய்தி முகமை வழங்கும் தரவுகளின்படி, இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையேயான ஆறு வார கால போரில் உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே லெபனானில் அமைதிப்படையினர் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு தவெக ஆதரவு
பட மூலாதாரம், X/TVK Vijay
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் சுயேச்சை ஒருவருக்கு அக்கட்சி தெரிவித்துள்ளது.
அங்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பிரேக்குமார் என்பவரை தவெக ஆதரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் தள பதிவில், "பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவில், "எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
"தைரியமானவர்கள், பயமற்றவர்கள்" - இஸ்ரேலை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலைப் புகழ்ந்து பேசிய டிரம்ப், அவர்கள் எப்படி வெல்ல வேண்டும் என்பதை அறிந்த சிறந்த கூட்டாளி என்றும் குறிப்பிட்டார்.
"மக்களுக்கு இஸ்ரேலைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்கள் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளனர்," என தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
மேலும் அந்தப் பதிவில், "அவர்கள் தைரியமானவர்கள், பயமற்றவர்கள், விசுவாசமானவர்கள் மற்றும் புத்திசாலிகள். கடினமான நேரத்தில் தங்களின் உண்மையான நிறத்தைக் காட்டிய சிலரைப் போல அல்லாமல், இஸ்ரேல் கடுமையாக போராடி எப்படி வெல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
யுரேனியம் விவகாரத்தில் இரானுக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவிப்பு
பட மூலாதாரம், Getty Images
இரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எடுத்துச் செல்ல ரஷ்யா உதவ முடியும் என ரஷ்ய அரசின் அணு சக்தி நிறுவனமான ரோசடாம் தலைவர் அலெக்ஸி லிகாசேவ் தெரிவித்துள்ளார்.
பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, இந்த தகவல் தொழில்துறை இதழான "ஸ்ட்ரனா ரோசடாமின்" டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான எந்த ஒப்பந்தத்திலும் நம்பிக்கை தான் முக்கியமான பிரச்னையாக உள்ளது," என அலெக்ஸி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இரான் உடன் நல்ல ஒத்துழைப்பு கொண்ட அனுபவம் ரஷ்யாவுக்கு மட்டுமே உள்ளதாக கூறும் அவர், "நாங்கள் ஏற்கெனவே 2015-இல் இரானின் கோரிக்கையை ஏற்று செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எடுத்துள்ளோம். தற்போதும் கூட இதில் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்." என்று தெரிவித்தார்.
இரான் உடனான ஒப்பந்தம் 'மிகவும் நெருக்கத்தில்" இருப்பதாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்க இரான் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறினார். ஆனால் இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அந்தக் கூற்றை மறுத்துவிட்டார்.
"அமெரிக்காவுடன் நேரடி பேச்சுக்கு தயார் இல்லை" - இரான் அமைச்சர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்ஸாதே
அமெரிக்கா உடன் புதிய நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என இரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்ஸாதே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதன் கடுமையான நிபந்தனைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்றும் கதிப்ஸாதே கூறினார்.
இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் கொடுக்காது என ஏ.பி. செய்தி முகமையிடம் அவர் தெரிவித்தார்.
இரு தரப்புக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்தது என்று கூறிய அவர், நேரடி பேச்சுவார்த்தைக்கு முன்பு "செயல்முறை ஒப்பந்தம்" இறுதி செய்யப்பட வேண்டும் என இரான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
"இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் உட்பட எங்களின் அடிப்படை கவலைகளை அமெரிக்கா புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக சனிக்கிழமை பேசிய டிரம்ப், இரான் உடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 19) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் மோகன்.
"கழுத்து நெரிக்கப்பட்டது" - மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி உரை
பட மூலாதாரம், Narendra Modi
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கான முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தம் நிறைவேறாதது குறித்து பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமையன்று வருத்தம் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வாய்ப்பு நழுவிவிட்டதாக அவர் இதனை விவரித்தார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவின் "தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம்" நேரடியாகப் பேசுவதற்காகவே தான் முன்வந்திருப்பதாக பிரதமர் கூறினார். அவர்களின் எதிர்பார்ப்புகளையும், இந்தத் பின்னடைவால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
"எங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், எங்களால் வெற்றிபெற முடியவில்லை," என்று கூறிய அவர், நாட்டின் பெண்களுக்குத் தனது "மனமார்ந்த வருத்தத்தைத்" தெரிவித்தார். முன்மொழியப்பட்ட "நாரி சக்தி வந்தன் சட்டத்திருத்தம்" (பெண்கள் சக்தி வணக்கத் திருத்தம்), மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று மோதி வலியுறுத்தினார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தச் சட்டத்திருத்தம் 2029 மக்களவைத் தேர்தல்களில் தொடங்கி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வலுவான குரலை வழங்குவதன் மூலம், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது.
எனினும், இந்தச் சட்டத்திருத்தத்தைத் தடுத்த எதிர்க்கட்சிகளை மோதி கடுமையாக விமர்சித்தார்; அவர்கள் தேசிய நலனை விட அரசியல் நலன்களுக்கே முன்னுரிமை அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் , அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளை குறிப்பிட்ட அவர், அவர்களின் எதிர்ப்பு இறுதியில் பெண்களின் நலன்களையே பாதித்ததாகக் குற்றம் சாட்டினார்.
"நாட்டின் நலனை விடக் கட்சி நலன்களே முதன்மையானதாக மாறும்போது, பாதிக்கப்படுவது நாடே ஆகும்—குறிப்பாக, பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்," என்று அவர் கூறினார். “இந்த நேர்மையான முயற்சிக்குக் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டுமொத்த தேசத்தின் கண் முன்னாலேயே, அது வடிவம் பெறுவதற்கு முன்பாகவே அதனைச் செயலளவில் கழுத்தை நெரித்துவிட்டன,” என்று பிரதமர் குற்றம் சாட்டினார்.
இந்த பின்னடைவு ஏற்பட்டபோதிலும், பெண்களின் அதிகாரமளித்தலே இந்தியாவின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் தூண் என்று வர்ணித்த பிரதமர், அத்துறையில் தனது அரசாங்கத்திற்குள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கு உரிய இடம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
‘தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்’- திமுக மீது நிர்மலா சீதாராமன் விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) மக்களவையில் தோல்வியடைந்தது.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவை மேற்கோள்காட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் தலைமையிலான வெறுப்பு நிறைந்த எதிர்க்கட்சிகளால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவ வாய்ப்பைத் தமிழகம் இழந்துள்ளது என்பதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கண்மூடித்தனமான வெறுப்பு, மாநிலத்திற்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தொகுதிப்பங்கீட்டையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது’ என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழகம் ஆதாயமடைவதற்குப் பதிலாக இழப்புகளைச் சந்திக்க உள்ளது. பிரதமர் மோதி உறுதியளித்த இருதரப்புக்கும் பலனளிக்கும் திட்டத்தில் நீங்கள் பங்கெடுக்க மறுத்து, தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்” என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்த இரான்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை குறித்த அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான சர்ச்சை இன்னும் முடிவடையவில்லை.
‘ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் இரானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது’ என அந்நாட்டு ராணுவம் கூறியதாக, இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரானின் பல ஊடகங்கள் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) அறிக்கையை மேற்கோள் காட்டி, ஹோர்மூஸ் நீரிணை அதன் முந்தைய நிலைக்கு திரும்பும் என்றும், ஆயுதப்படைகள் அந்தப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
இந்தச் செய்தியை ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை, இரானிய மாணவர்கள் செய்தி முகமை மற்றும் அரசு ஒளிபரப்பான ஐஆர்ஐபி (IRIB) ஆகியவை வெளியிட்டன.
"இந்த நீர்வழிப் பாதை வழியாக சில கப்பல்கள் செல்வதை நாங்கள் இதற்கு முன்பு கவனித்தோம், ஆனால் இந்த முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாக எத்தனை கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று அவை தெரிவித்தன.
ஐஆர்ஜிசி-யின் அந்த அறிக்கை, “அமெரிக்கா கடற் கொள்ளையில் ஈடுபட்டதாக” குற்றம் சாட்டியதுடன், “அமெரிக்காவின் முற்றுகை என்று சொல்லப்படுவது கடற் கொள்ளைக்குச் சமமானது” என்றும் கூறியது.
அமெரிக்கா தனது துறைமுகங்களுக்கு விதித்துள்ள முற்றுகையைத் தொடர்ந்தால், ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று இரான் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அன்று, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தள பதிவில், எஞ்சிய போர்நிறுத்தக் காலத்திற்கு அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில், ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்ததற்காக இரானுக்கு நன்றி தெரிவித்தார்.
“இரான் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருப்பதாக இரான் இப்போதுதான் அறிவித்துள்ளது. நன்றி!" என்று டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மற்றொரு பதிவை வெளியிட்டார், அதில் ஹோர்மூஸ் நீரிணையில் 'அமெரிக்க முற்றுகை' தொடரும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் என் உணர்வு தமிழ் மண்ணுடன் ஒன்றியிருக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா மூலமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதை நாம் நேற்று தோற்கடித்துவிட்டோம். இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் குரலை பதிவு செய்வதற்கான உரிமை இருக்கிறது. பாஜக - ஆர்எஸ்ஸ் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். கடந்த காலங்களில் ராணுவம் மூலம் போர் புரிந்தனர். ஆனால், பாஜக ராணுவம் இல்லாமல் போர் நடத்துகிறது. தமிழ் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க நினைக்கின்றனர். அவர்களால் ஒருபோதும் அதை செய்ய முடியாது.” என்றார்.
மேலும், ஆர்எஸ்எஸ் - பாஜக மக்களை புறக்கணிப்பதாகவும் தமிழக மக்கள் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
“தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள்வதற்கு மோதி - அமித் ஷாவுக்கு ஒரு கூட்டாளி வேண்டும். டெல்லியிலிருந்து அமித் ஷாவிடமிருந்து உத்தரவுகளை பெற வேண்டிய முதலமைச்சர் வேண்டும். தமிழ் மொழி, தமிழ் மக்களை ஒருபோதும் தொட முடியாது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறோம்.” என்றார்.
மேலும், தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000, தகுதி வாய்ந்த உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி தன் பேச்சில் சுட்டிக்காட்டினார்.
மேலும், முதன்முறை சொத்துகளை பதிவு செய்யும் பெண்களுக்கு இலவசமாக பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.]
“தமிழ் மொழியை தொடுவதற்கு ஆற்றல் படைத்த சக்தி இங்கு இல்லை. டெல்லியிலிருந்து தமிழகத்தை ஆள மோதி விரும்புகிறார். அதிமுகவை பாஜக அழித்துவிட்டது. மோதியால் அதிமுக விழுங்கப்பட்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்-பாஜகவால் நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்” என ராகுல் பேசினார்.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து இரான் கூறியது என்ன?
பட மூலாதாரம், Foad Ashtari/SOPA Images/LightRocket via Getty Images
இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா தனது பொறுப்பில் எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு இரான் தற்போது பதிலளித்துள்ளது.
இரானியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கும் அனுப்பப்படாது என்று இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.
பிபிசி பாரசீக சேவையின் தகவலின்படி, "இரானின் செறிவூட்டப்பட்ட உலோகத்தை அமெரிக்காவுக்கு அனுப்புவது என்பது ஒருபோதும் பரிசீலிக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக இருந்ததில்லை," என்று பாகாய் திட்டவட்டமாகக் கூறினார்.
இஸ்மாயில் பாகாய் மேலும் கூறுகையில், "ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை, இரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த முற்றுகை தொடருமானால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்படக்கூடும். ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக இரான் நிச்சயமாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றார்.
ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகை தொடரும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையானது இரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறுகையில், "இரானுடனான நமது ஒப்பந்தம் 100 சதவிகிதம் முழுமையடையும் வரை, இந்த நடவடிக்கை இரானுக்கு மட்டுமே பொருந்தும்," என்றார்.
’நல்ல செய்தி கிடைத்துள்ளது’ - இரான் குறித்து டிரம்ப் கருத்து
பட மூலாதாரம், Win McNamee/Getty Images
படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு செய்தியைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இரானுடனான சூழல் மேம்பட்டு வருவதாகத் தெரிவதாக அவர் கூறினார்.
அந்தச் சிறந்த செய்தி என்னவென்று செய்தியாளர்கள் டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, "அது குறித்து நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்; அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். இவற்றில் பல விஷயங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன," என்று டிரம்ப் பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது. இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; மற்ற அனைத்தையும் விட இந்த விஷயமே மிகவும் முக்கியமானது," என்றார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் எட்டப்படாவிட்டால், இரானுடனான போர்நிறுத்தத்தை ரத்து செய்துவிடுவோம் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
இரான் - அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தையா? பாகிஸ்தான் புதிய தகவல்
பட மூலாதாரம், Osmancan Gurdogan/Anadolu via Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்
இரான் மற்றும் அமெரிக்கா இடையே சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற அன்டால்யா தூதரக மன்றத்தில் பேசிய இஷாக் தார், "இரு தரப்பினருக்கும் இடையில் சில பிரச்னைகளில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை, மேலும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம், ஏனெனில் அது ஒட்டுமொத்த உலகுக்கும் பயனளிக்கும்" என்று கூறினார்.
பிபிசி உருதுவின்படி, இஷாக் தார், "நிலுவையில் உள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை எட்டவும், கருத்து வேறுபாடுகளைக் களையவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். லெபனானில் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது, இப்போது ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இரான் எந்த நிபந்தனைகளும் இன்றி கப்பல்களுக்காக ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறந்துள்ளது" என்று கூறினார்.
இஷாக் தார் மேலும் கூறுகையில், "மீதமுள்ள பேச்சுவார்த்தைகளும் நிறைவு செய்யப்படும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றன.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 18) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தோல்வி - ஸ்டாலின் கூறியது என்ன?
வால்பாறையில் வேன் கவிழ்ந்து 6 பேர் பலி
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வேனில் பயணம் செய்த 16 நபர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தெரிவித்தார்.
லெபனானில் போர் நிறுத்தம் பற்றி இரான் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
லெபனானில் போர் நிறுத்தத்தை இரான் வரவேற்றுள்ளதுடன், இது ஒரு ராஜீய வெற்றி என்றும் ஹெஸ்பொலாவின் "எதிர்ப்பின்" விளைவு என்றும் கூறியுள்ளது.
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒரு பரந்த புரிந்துணர்வின் ஒரு பகுதியாகவே இந்த போர் நிறுத்தம் இருப்பதாக இரான் கருதுகிறது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.
பிராந்தியம் முழுவதும் ஒரு விரிவான போர் நிறுத்தத்திற்கு இரான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
லெபனானில் போர் நிறுத்தத்தை வரவேற்ற மக்ரோங் விடுத்த வேண்டுகோள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
பிரெஞ்சு அதிபர் மக்ரோங் லெபனானில் பத்து நாள் போர் நிறுத்தத்தை ஆதரித்திருந்தாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"ராணுவ நடவடிக்கைகள் தொடர்வது, ஏற்கனவே பலவீனமாக உள்ள இந்த போர் நிறுத்தத்தை மேலும் சீர்குலைத்துவிடும் என்ற எனது கவலையையும் நான் வெளிப்படுத்துகிறேன்," என்று மக்ரோங் கூறினார்.
''லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையின் இருபுறமும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஹெஸ்போலா தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இஸ்ரேல் லெபனானின் இறையாண்மையை மதித்து, போரை நிறுத்த வேண்டும்.'' எனவும் அவர் கூறினார்.