இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியா குறித்து தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் கூறியது என்ன?

    தாரிக் ரஹ்மான்

    பட மூலாதாரம், Getty Images

    வங்கதேச பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர், இந்தியாவுடனான உறவுகள் குறித்து ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    "இந்தியாவுடனான தனது உறவை வங்கதேசம் சரிசெய்ய விரும்புகிறது. மாற்றப்பட்ட யதார்த்தத்தை அங்கீகரிப்பது இந்தியாவின் பொறுப்பு" என்று ஹுமாயூன் கபீர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவரின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர், 'ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவரது அவாமி லீக் கட்சி ஆட்சியில் இல்லாததால், வங்கதேசம் இந்தியாவுடனான உறவை மீண்டும் உருவாக்க விரும்புகிறது' என்று கூறியுள்ளார்.

    "பரஸ்பர நன்மைக்காக" இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்ற பிறகு தனது முதல் செய்தியாளர் சந்திப்பில், வங்கதேசம் மற்றும் வங்கதேச மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தனது வெளியுறவுக் கொள்கை முடிவு செய்யப்படும் என்று தாரிக் ரஹ்மான் சனிக்கிழமை கூறியிருந்தார்.

  2. இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

    பாகிஸ்தான்

    பட மூலாதாரம், @CMShehbaz

    இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தனது நாட்டு அணிக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

    "இன்று கொழும்பில் களமிறங்கும் பச்சை பாகிஸ்தான் வீரர்களுக்கு நல்வாழ்த்துக்கள். நம்பிக்கையுடன் விளையாடுங்கள், உங்கள் சிறந்ததை வழங்குங்கள்" என்று ஷாபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தள பதிவில் எழுதினார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கொழும்பில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. போட்டியில், பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

  3. முதல் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

    முதல் டி20 கிரிக்கெட்

    பட மூலாதாரம், Getty Images

    மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

    சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மழை காரணமாக டிஎல்எஸ் முறையை அமல்படுத்த வேண்டியிருந்தது, இதன் பின்னர் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 18 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பாக அருந்ததி ரெட்டி நான்கு விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் மற்றும் ஸ்ரீ சரணி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    பதிலுக்கு, மழை காரணமாக போட்டி நிறுத்தப்படுவதற்கு முன்பு இந்திய அணி 5.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு இன்னிங்ஸை முடித்தது. அந்த நேரத்தில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்தியாவைப் பொறுத்தவரை, ஸ்மிருதி மந்தனா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ஷஃபாலி வர்மா 21 ரன்கள் எடுத்தார்.

  4. 'ஆட்சியில் பங்கு' - காங்கிரஸ் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

    மாணிக்கம் தாகூர்

    பட மூலாதாரம், Manickam Tagore / Facebook

    படக்குறிப்பு, மாணிக்கம் தாகூர்

    ஆட்சியில் பங்கு கோரி மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு, சட்டமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவிகித விழுக்காடு இடங்கள் தரப்பட வேண்டும் என்று, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், “கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் குழு அமைத்து 70 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போது வரை காத்திருக்கிறோம். பிப்ரவரி 22-ம் தேதி குழு அமைப்பதாக திமுக கூறியிருக்கிறது. அதுவரை நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

    “நாம் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான். நாங்கள் எதை கொடுக்கிறோமோ அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.”

    “காங்கிரசுக்கு வாக்குச்சாவடியில் ஆட்கள் இருக்கின்றனரா, காங்கிரஸ் கட்சிக்கு 3,000 வாக்குகள் தான் இருப்பதாக, திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அதேபோன்று, அமைச்சர்களும் அலட்சியமாக பேசியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதுவரை எடுக்கவில்லை. அதனால் எல்லா மாவட்ட செயலாளர்களும் இதுபோன்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்.” என்றார் மாணிக்கம் தாகூர்.

    பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ‘திமுக செய்த தவறுகளுக்காக நாங்கள் பழிசுமந்திருக்கிறோம். நான் மீண்டும் எம்.பியாவதற்காக இப்படி பேசுவதாக கூறுகின்றனர். நான் திரும்பி எம்.பியாக நிற்கப் போவதில்லை. எனக்கு கட்சிதான் முக்கியம். காங்கிரஸ் மதுரை வடக்கு தொகுதியில் நிச்சயமாக போட்டியிட வேண்டும். அத்தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

  5. ரஷ்ய அதிபர் புதின் பற்றி யுக்ரேன் அதிபர் விமர்சனம்

    ஸெலன்ஸ்கி

    பட மூலாதாரம், Johannes Simon/Getty

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை "போரை தூண்டுபவர்" என்று யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி விமர்சித்துள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் ஸெலென்ஸ்கி இவ்வாறு பேசியுள்ளார்.

    புதினால் அதிகாரம் இல்லாமல் வாழ முடியாது என்றும், அவரது முழு கவனமும் தற்போது யுக்ரேனில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

    "புதின் ஒரு சாதாரண மனிதனைப் போல வாழவில்லை," என்று ஸெலென்ஸ்கி கூறினார். "அவர் தெருக்களில் நடப்பதில்லை, நீங்கள் அவரை ஒரு கஃபேவில் பார்க்க முடியாது..."

    "அவரால் அதிகாரம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவருக்கு சாதாரண விஷயங்களில் ஆர்வம் இல்லை" என்று அவர் கூறினார்.

    "போர் என்ற கருத்தை புதினால் கைவிட முடியாது. அவர் தன்னை ஒரு பேரரசர் என்று கருதலாம், ஆனால் உண்மையில் அவர் போருக்கு அடிமை" என்று அவர் விமர்சித்தார்.

  6. இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றி சல்மான் குர்ஷித் கருத்து

    டி20 உலகக் கோப்பை, இந்தியா-பாகிஸ்தான்

    பட மூலாதாரம், ANI

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், விளையாட்டுகளில் அரசியல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    "நாட்டின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கண்களை மூடிக்கொண்டு, மூளையைப் பயன்படுத்தாமல் அதைச் செய்ய முடியாது" என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

    "ஒரு தலைமையின் வேலை சரியான பாதையைக் காட்டுவதாகும். தலைமையின் வேலை மக்களுக்கு வழி காட்டுவதுடன் மட்டுமல்ல. மக்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் பொறுப்பு."

    "சரியான பாதை எது என்பதை மக்களுக்குக் காட்டி, அந்த சரியான பாதையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது."

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு நகரில் மாலை 7 மணிக்குத் தொடங்கும்.

  7. இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கங்குலி கூறியது என்ன?

    டி20 உலகக் கோப்பை, இந்தியா-பாகிஸ்தான் போட்டி

    பட மூலாதாரம், Shubhajit Roy Karmakar/NurPhoto via Getty

    டி20 உலகக் கோப்பையில் இன்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, இந்த போட்டியில் மிகுந்த உற்சாகம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய சௌரவ் கங்குலி, "போட்டி கடைசி வரையிலும் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத பரபரப்பானதாக இருக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இது நடக்கவில்லை. இந்த போட்டி சிறப்பானதாக இருக்க வேண்டும்" என்றார்.

    இந்திய அணியைப் பாராட்டிய அவர், "இந்திய அணி மிகவும் சிறப்பாக உள்ளது, மிகவும் வலிமையானது. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, உலகக் கோப்பை முழுவதுமாக அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

    உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவை சௌரவ் கங்குலி விமர்சித்தார். அவர், "அவர்களது முடிவு தவறு. கிரிக்கெட் விளையாட வேண்டும். உலகக் கோப்பையை எப்படித் தவறவிட முடியும்? அவர்கள் விளையாடுவது நல்லது. உலகக் கோப்பையில் புள்ளிகளை இழப்பது சரியல்ல என்பதால் அவர்களுக்கும் இது நல்லது."

    இது தவிர, பாகிஸ்தானுடனான இந்தப் போட்டி அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

    அபிஷேக் சர்மாவைப் பொருத்தவரை, "அபிஷேக் சர்மா உடல் தகுதியுடன் இருக்கிறார், இது இந்தியாவிற்கு மிகவும் நல்ல செய்தி... இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, பாண்டியா, துபே, அனைவரும் சிக்ஸர்கள் அடிக்கக் கூடியவர்கள்" என்றார் சௌரவ் கங்குலி.

  8. வணக்கம் நேயர்களே!

    இன்று (பிப்ரவரி 15) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி

  9. ரஷ்ய முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸெ நவால்னி விஷம் ஏற்றிக் கொல்லப்பட்டார் - பிரிட்டன் குற்றச்சாட்டு

    ரஷ்யா, புதின்,

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அலெக்ஸே நவால்னி (கோப்புப் படம்)

    ரஷ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி விஷம் ஏற்றிக் கொல்லப்பட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

    டார்ட் தவளைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட விஷம் மூலம் நவால்னி கொல்லப்பட்டதாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    நவால்னியின் உடலில் காணப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளன.

    அலெக்ஸி நவால்னி 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி ரஷ்ய சிறையில் இருந்தபோது தனது 47வது வயதில் உயிரிழந்தார்.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பிரிட்டன் வெளியுறவு செயலர் யவெட் கூப்பர், "ரஷ்யாவில் சிறைவாசத்தில் இருந்தபோது இந்த கொடிய விஷத்தை நவால்னிக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கான வழி, நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசாங்கத்துக்கு மட்டுமே இருந்தது." எனத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் உடன் இணைந்து ஸ்வீடன், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியும் ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளது.

    இந்த அறிவிப்புக்கு எதிர்வினை ஆற்றியுள்ள நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா, "எனது கணவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என முதல் நாளில் இருந்தே நான் உறுதியாக இருந்தேன். தற்போது அதற்கான ஆதாரம் உள்ளது." எனத் தெரிவித்தார்.

    இந்தக் குற்றச்சாட்டு ரஷ்யா தற்போது வரை கருத்து தெரிவிக்கவில்லை.

  10. "வலிமையற்றவர் மீதான தாக்குதல்கள் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது" - தாரிக் ரஹ்மான் கூறியது என்ன?

    வங்கதேசம், தாரிக் ரஹ்மான்

    பட மூலாதாரம், BNP

    வங்கதேச பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் தாரிக் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு சவால்களை அவர் குறிப்பிட்டு பேசினார்.

    வங்கதேசம் மற்றும் வங்கதேச மக்களின் நலன்களைக் மனதில் கொண்டு நாட்டின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும் என தாரிக் ரஹ்மான் தெரிவித்தார்.

    பிபிசி வங்க மொழி சேவையின்படி, வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, "நாட்டு மக்களின் நலன்கள் முதன்மையானது, அவர்களின் நலன்களைத் தீவிரமாக மனதில் வைத்துக் கொண்டு வெளியுறவு கொள்கையை முடிவெடுப்போம்," என தாரிக் ரஹ்மான் தெரிவித்தார்.

    அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவருடன் இருந்த கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் அமிர் காஸ்ரூ மஹ்முத் சௌத்ரி, "வங்கதேசத்தின் வெளியுறவு கொள்கை என்பது எந்த ஒரு நாட்டிற்கான விசுவாசத்தின் அடிப்படையில் இல்லாமல் பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கும்." எனக் கூறினார்.

    "நலிவடைந்த பொருளாதாரம், செயலிழந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட நிறுவனங்கள் மற்றும் வலுவிழந்த சட்ட ஒழுங்கு சூழ்நிலை என ஃபாசிஸ்டுகள் விட்டுச் சென்ற நிலையில் நமது பயணத்தை தொடங்க உள்ளோம்," என தாரிக் ரஹ்மான் கூறினார்.

    வங்கதேசத்தில் எந்த விதமான சட்டவிரோத செயல்களும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தாரிக் ரஹ்மான் குறிப்பிட்டார்.

    மேலும் அவர், "அரசியல் கட்சி சார்பு, மதம், சாதி அல்லது வேறுபாடுகளுக்கு அப்பால் எந்த காரணங்களுக்காகவும் வலிமையற்றவர் மீது வலிமையானவர் தாக்குதல் நடத்துவது சகித்துக்கொள்ளபட மாட்டாது." என்று தெரிவித்தார்.

  11. தாரிக் ரஹ்மான் பதவியேற்பில் கலந்துகொள்ள பிரதமர் மோதிக்கு அழைப்பு

    இந்தியா, வங்கதேசம்

    பட மூலாதாரம், @narendramodi

    வங்கதேசத்தில் நடைபெற உள்ள தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய பிரதமருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாக வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் அலுவலகம் பிபிசி செய்தியாளர் சுப்ஜோதி கோஷிடம் தகவல் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோதி அழைக்கப்படுவதை பி.என்.பி கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவு கொள்கை ஆலோசகரான ஹுமாயுன் கபிர் உறுதி செய்துள்ளார்.

    வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பி.என்.பி கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் அடுத்த பிரதமராக உள்ளார்.

    வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தாரிக் ரஹ்மானை அழைத்து அவரது வெற்றிக்காக பிரதமர் மோதி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு பி.என்.பி கட்சியும் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்திருந்தது.

  12. வணக்கம் நேயர்களே!

    இன்று (பிப்ரவரி 14) இரவு வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை தொகுத்து அளிப்பது மோகன்.

  13. ‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்…பிரதமர் பொய் சொல்கிறார்’- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    ‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்…பிரதமர் பொய் சொல்கிறார்’- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    பட மூலாதாரம், X/@RahulGandhi

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு ஏமாற்றி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    பிரதமரும் அவரது அமைச்சரவையும் பொய் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    "வங்கதேசத்திற்கு, அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வதற்கு 0% வரிச் சலுகை வழங்கப்படுகிறது. அதற்கான ஒரே நிபந்தனை, அது அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுதான். இந்திய ஆடைகள் மீது 18% வரி அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது, மோதி அரசின் அமைச்சர், 'நமக்கும் இந்தச் சலுகை வேண்டுமென்றால், நாமும் அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்’ என பதிலளித்தார்” என ராகுல் காந்தி கூறினார்.

    "நாம் அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்தால், நம்முடைய சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். அதை நாம் இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில்துறை சீரழிந்துவிடும். இப்போது வங்கதேசம், இந்தியாவிலிருந்து பருத்தி இறக்குமதியைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது."

    “ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி விவசாயம், இந்தியாவில் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இவற்றைச் சார்ந்துள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

    பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் என இரு தரப்பினரின் நலன்களையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கூறிய ராகுல் காந்தி, “இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இந்த இரு துறைகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் குறிப்பிட்டார்.

  14. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா

    யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு

    உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) டிரம்ப் இதை உறுதிப்படுத்தினார். “விமானம் தாங்கி கப்பல் மிக விரைவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும். இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு தேவைப்படும்” என்று அவர் கூறினார்.

    பிபிசி பாரசீக சேவையின்படி, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

    இரானில் அதிகார மாற்றம் குறித்தும் டிரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

    ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகார மாற்றம் 'இரானில் நடக்கக்கூடிய சிறந்த விஷயம்' என்று கூறினார்.

    டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கிற்கு வந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் பணிக்குழுவுடன் இணையும்.

    ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் அணு உலை மூலம் இயங்குகிறது மற்றும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் மற்றும் A-2 ஹாக் ஐ விமானங்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அக்கப்பலால் சுமந்து செல்ல முடியும்.

    விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வழிசெலுத்தலுக்கான மேம்பட்ட ரேடார்களையும் கொண்டுள்ளது.

  15. வங்கதேச தேர்தல்கள் குறித்து ஷேக் ஹசீனா கூறியது என்ன?

    ஷேக் ஹசீனா

    பட மூலாதாரம், Peerapon Boonyakiat/SOPA Images/LightRocket via Getty

    படக்குறிப்பு, வங்கதேச அவாமி லீக் கட்சி, ஷேக் ஹசீனாவின் அறிக்கையை வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்)

    வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 'வஞ்சகம் மற்றும் போலித்தனத்தின் தேர்தல்' என்று கூறியுள்ளார்.

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, ஷேக் ஹசீனா தேர்தல்கள் குறித்து, "வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் யாரும் இல்லை, ஆனால் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் வாக்குகள் குவிந்தன" என்று கூறினார்.

    "பிப்ரவரி 12 அன்று, வங்கதேசம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, மோசடியான மற்றும் போலியான தேர்தலைக் கண்டது. இந்தத் தேர்தல் வங்கதேசத்தின் ஜனநாயக வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அத்தியாயமாகப் பதிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

    ஷேக் ஹசீனா தேர்தல் தரவுகள் குறித்து கேள்வி எழுப்பி "கடுமையான முறைகேடுகள்" நடந்ததாக குற்றம் சாட்டினார். பல புள்ளிவிவரங்கள் "சீரற்றதாகவும் பொய்யாகவும்" தோன்றியதாக அவர் கூறினார்.

    "வாக்களிப்பு விகிதம் பொதுவாக காலையில், குறிப்பாக காலை 11 மணிக்கு முன்பு மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், அந்த நேரத்தில் 14.96% வாக்குகள் மட்டுமே பதிவாகின, நண்பகலில் அது திடீரென 32.88% ஆக அதிகரித்தது. ஒரே மணி நேரத்தில் இந்த உயர்வு அசாதாரணமானது" என்று அவர் கூறினார்.

    "தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை நாட்டின் கள நிலவரத்துடன் பொருந்தவில்லை. காலியான வாக்குச் சாவடிகள், செயல்படாத பூத்கள் மற்றும் வாக்காளர்கள் வருகையின்மை ஆகியவை காணப்பட்டன" என்று ஷேக் ஹசீனா கூறினார்.

    இது தவிர, வாக்கெடுப்பு செயல்முறை மற்றும் அதன் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கேள்விகளை எழுப்பினார்.

  16. ‘அமெரிக்காவின் போர், ஐரோப்பாவின் போர் அல்ல’- ஜெர்மன் தலைவர் கூறியது என்ன?

    ஜெர்மன் அதிபர்

    பட மூலாதாரம், EPA/Shutterstock

    படக்குறிப்பு, ஃபிரீட்ரிச் மெர்ஸ்

    ஒரு முக்கியமான பாதுகாப்பு உச்சிமாநாட்டில், “விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு என்பது இனி இல்லை" என்று ஜெர்மன் தலைவர் எச்சரித்துள்ளார்.

    வருடாந்திர மியூனிக் பாதுகாப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய ஃபிரீட்ரிச் மெர்ஸ், பெரும் வல்லரசு அரசியலின் சகாப்தத்தில் "நமது சுதந்திரத்திற்கு உத்தரவாதம் இல்லை" என்றும், ஐரோப்பியர்கள் "தியாகம்" செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பிற உலகத் தலைவர்களிடம் கூறினார்.

    "ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

    ஆர்க்டிக் பகுதியை இணைப்பதாக உறுதியளிப்பதன் மூலம் கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் இறையாண்மையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்துவது மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிகள் மீதான அவரது வரிகள் ஆகிய பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மெர்ஸின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ சனிக்கிழமையன்று (பிப்ரவரி 14) தனது உரையை நிகழ்த்தவுள்ளார். முன்னதாக ‘புவிசார் அரசியலில் ஒரு புதிய சகாப்தம்’ பற்றி அவர் பேசியிருந்தார்.

    இந்த ஆண்டு மாநாட்டில் சுமார் 50 உலகத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ‘டிரான்ஸ்அட்லான்டிக்’ (Transatlantic) உறவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும்.

    நேட்டோ (Nato) ராணுவக் கூட்டணியில் அமெரிக்காவின் உறுதிப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ள நேரத்தில் இது வருகிறது. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்பின் லட்சியம், பல ஐரோப்பிய தலைவர்களால் அவர்களது மிகப்பெரிய கூட்டாளியான அமெரிக்காவுடனான நம்பிக்கையைச் சிதைத்த ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "கிரீன்லாந்து எங்களை விரும்பப் போகிறது... நாங்கள் ஐரோப்பாவுடன் நன்றாகப் பழகுகிறோம். அது எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்போம். நாங்கள் இப்போது கிரீன்லாந்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்."

    ரஷ்யா-யுக்ரேன் போர், மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள் மற்றும் சாத்தியமான இரான்-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவையும் இந்த வருடாந்திர கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

    விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு சரிந்து வருவதாக விடுக்கப்பட்ட பல எச்சரிக்கைகளைக் குறிப்பிட்டு, மாநாட்டில் பேசிய மெர்ஸ், "ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு விரிசல், ஒரு ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு மியூனிக்கில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இதை மிக வெளிப்படையாகக் கூறினார்".

    "அவர் சொன்னது சரிதான். மகா (Make America Great Again) இயக்கத்தின் கலாசாரப் போர் நம்முடையது அல்ல. பேச்சு சுதந்திரம் என்பது மனித கண்ணியம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராகச் செல்லும்போது எங்களிடம் முடிவுக்கு வருகிறது. நாங்கள் வரிகள் மற்றும் பாதுகாப்புவாதத்தை நம்பவில்லை, மாறாக தடையற்ற வர்த்தகத்தை நம்புகிறோம்." என்று அவர் கூறினார்.

  17. வணக்கம் நேயர்களே!

    இன்று (பிப்ரவரி 14) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை தொகுத்து அளிப்பது சிராஜ்.

  18. பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோதி தொலைபேசியில் வாழ்த்து

    பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோதி தொலைபேசியில் வாழ்த்து

    பட மூலாதாரம், Getty Images

    பிரதமர் நரேந்திர மோதி, வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோதி சமூக வலைதளமான எக்ஸ்-ல் இது குறித்து தெரிவித்துள்ளார்.

    “தாரிக் ரஹ்மானுடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கதேசத் தேர்தலில் அவரது சிறப்பான வெற்றிக்காக நான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். வங்கதேச மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அவரது முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தேன்,” என அவர் கூறியுள்ளார்.

    வங்கதேசப் பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றுள்ளதுடன், 297 இடங்களில் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக வங்கதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  19. சேலம் தவெக கூட்டத்திற்கு வந்திருந்த நபர் மரணம்

    சேலம் தவெக கூட்டத்திற்கு வந்திருந்த நபர் மரணம்

    சேலத்தில் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தை காண வந்திருந்த சூரஜ் என்பவர் உயிரிழந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் சேலத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

    த.வெ.க கூட்டத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சூரஜ் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  20. வங்கதேச தேர்தல் முடிவுகள், பிஎன்பி-யின் வெற்றி குறித்து சீனா கூறியது என்ன?

    பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான்

    வங்கதேசத்தில் "அமைதியான மற்றும் வெற்றிகரமான" நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதற்காக அந்த நாட்டுக்கு அங்குள்ள சீன தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வங்கதேச தேசியவாதக் கட்சிக்கு (பிஎன்பி) சீனத் தூதரகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

    புதிய அரசுடன் இணைந்து பணியாற்றவும், "சீனா-வங்கதேச உறவுகளின் புதிய அத்தியாயத்தை எழுதுவதை" எதிர்நோக்கி இருப்பதாக பேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு பதிவில் தூதரகம் தெரிவித்துள்ளது.

Trending Now