காரைக்குடியில் ப.சிதம்பரம் அலுவலகம் மீது பாட்டில் குண்டு வீச்சு

காரைக்குடியில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அலுவலகம் மீது நள்ளிரவில் பாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் ப.சிதம்பரம் எம்.பி மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். காலையில் காவலாளி பார்த்தபோது, பாட்டில்கள் சிதறி கிடந்துள்ளன.
இது குறித்து எம்.பி., அலுவலக உதவியாளர் செந்தில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை ஆய்வில் ப.சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் தெரு பகுதியில் அவரது அலுவலகத்தை நோக்கியிருந்த ஒரு சி.சி.டி.வி., கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அப்பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தகவல் அறிந்த சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சமீபத்தில் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க.- காங்கிரஸ் இடையே சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு இறுதியானதில் ப.சிதம்பரம் முக்கிய பங்கு வகித்தார். இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி மோதல் எதிரொலியாக நடந்திருக்குமா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
அத்துடன்,அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் உச்ச தலைவர் காமனெயி குறித்த கார்த்தி சிதம்பரம் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. காரைக்குடியில் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















