ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க அழைப்பு விடுத்த டிரம்ப் - நாடுகளின் பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமையன்று 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வேண்டுகோளுக்குப் பல நாடுகள் பதிலளித்துள்ளன.
பிரிட்டன்: பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "நாங்கள் முன்பே கூறியது போல, இப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எங்கள் நட்பு நாடுகளுடனும் கூட்டாளிகளுடனும் பல்வேறு வழிமுறைகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.
சீனா: வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் CNN-இடம் பேசுகையில், மோதல் போக்குகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். டிரம்ப்பின் வேண்டுகோளை சீனா ஏற்றுக்கொண்டு செயல்படுமா என்பதை அந்தச் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை; இருப்பினும், நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஜப்பான்: அமெரிக்காவைத் தனது மிக நெருங்கிய நட்பு நாடாகக் கருதும் ஜப்பான், டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலை வெளியிடவில்லை. எனினும், புதன்கிழமை தொடங்கவுள்ள, பிரதமர் சனே தகாய்ச்சியின் (Sanae Takaichi) அமெரிக்கப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இப்பிரச்னையும் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பானிய ஊடகமான என்எச்கே-விடம் தெரிவித்தனர். டிரம்ப்பின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஜப்பான் உடனடியாகத் தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பாது என்று வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி தெரிவித்தார். அந்த அதிகாரி, "ஜப்பான் தனது நடவடிக்கைகளைத் தானே தீர்மானித்துக்கொள்கிறது; சுதந்திரமான முடிவுகளை எடுப்பதே எங்களின் அடிப்படை கொள்கையாகும்," என்று கூறினார்.
பிரான்ஸ்: பிரான்ஸ் அரசும் இதுவரை உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான பதிலையும் வெளியிடவில்லை. எனினும், சனிக்கிழமையன்று—டிரம்ப்பின் பதிவு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு—ஹோர்முஸ் நீரிணைக்கு பிரான்ஸ் தனது போர்க்கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்திகளை, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (முன்னாள் Twitter) கணக்கு மறுத்தது. அந்தப் பதிவில், "இல்லை; எங்கள் விமானந்தாங்கி கப்பலும், அதைச் சார்ந்த தாக்குதல் படைக் குழுவும் கிழக்கு மத்தியதரைக் கடலிலேயே தொடர்ந்து நிலைத்திருக்கும். தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே ஆகும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தென் கொரியா: தென் கொரியாவும் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை எந்தப் பதிலையும் வெளியிடவில்லை.

















